திருப்புமுனை/9

விக்கிமூலம் இலிருந்து

9

வழக்கமாகக் கூடும் மரத்தடியில் தங்கதுரையும் கண்ணாயிரமும் கூடினர். மணியின் வருகைக்காக ஆவலோடு காத்திருந்தான். சிறிது நேரத்தில் மணியும் அங்கு வந்து சேர்ந்தான். அவனைக் கண்ட நண்பர்கள் இருவரும் மகிழ்ச்சி யோடு அவனை வரைவேற்கத் தயாராயினர். வெற்றிப் புன்னகையோடு வந்து சேர்ந்தான்.

“என்னடா மணி போன காரியம் என்னாச்சு?”

கண்ணாயிரம் பரபரப்புடன் கேட்டான்.

“அவன் சிரிச்சுக்கிட்டு வர்றதிலே இருந்து தெரியலே, நூத்துக்கு நூறு வெற்றி"ன்னு.” தன் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தினான் தங்கதுரை.

“இனியன் ரொம்ப நல்லவன்’டா. அவன் படிக்கிற அறையையே அறிவாலயமா வச்சிருக்கான்'டா. அவன்கூட கொஞ்ச நேரம் பேசினா நாமும் அவனைப் போல திறமையான மாணவனா மாறிடலாம்'டா.”

மணி இனியனைப் பற்றிப் புகழ்ந்து கூரிய வார்த்தைகள் கண்ணாயிரத்துக்குப் பிடிக்கவில்லை. இருப்பினும் அதை முழுமையாக வெளிப்படுத்த விரும்பாமல் சற்றே வெறுப்புடன்,

“போதும்'டா இனியன் துதி புராணம். புத்தகம் கிடைத்ததா? அவன் கட்டுரை எழுதிட்டானா? அதைச் சொல்லுடா முதல்லே.” துரிதப் படுத்தினான் கண்ணாயிரம்.

“இதோ பார்’டா, 'அறிவுச் சுடர்’ங்கிற புத்தகம். நம்ம ஆசிரியர் எழுதின இந்தப் புத்தகத்திலே ‘உழைப்பே செல்வம்’னு ஒரு கட்டுரை இருக்கு. அதைப் படிச்சிட்டு உழைப்பும் உயர்வும்'ங்கிற தலைப்பிலே போட்டிக் கட்டுரை எழுது'ன்னு அவனே கொடுத்தான் ”டா.” எனக் கூறி மணி புத்தகத்தைத் தன் நண்பர்களை நோக்கி நீட்டினான்.

“உண்மையிலேயே இனியனுக்கு ரொம்ப நல்ல மனசுடா!” புத்தகத்தை வாங்கிக் கொண்டே பாராட்டினான் தங்கதுரை.

“ஏன்'டா, இனியன் கட்டுரை எழுதலையா?” அவசரப்பட்டான் கண்ணாயிரம்.

“அவன் இதையெல்லாம் முன்பே படிச்சிட்டானாம். இன்னிக்கு இரவு எழுதி நாளைக்குக் கொடுக்கப் போறதாச் சொன்னான்.” என்று மணி கூறி முடித்ததும் கண்ணாயிரம் மெல்லிய குரலில் தனக்குத் தானே “நீ எழுது, நான் கொடுக்கிறேன்னு முனுமுணுத்தான். இவன் முணுமுணுத்தது மற்றவர்கட்குச் சரிவர கேட்க வில்லை. என்ன முணுமுணுக்கிறான் என்பதை அறிந்து கொள்ள ஆவல் கொண்டான் தங்கதுரை.

“கண்ணாயிரம்’ என்னடா முணுமுணுக்கிறே.” இக்கேள்விக்குக் கண்ணாயிரம் பதில் ஏதும் கூறவில்லை.

“இனியன் மேல் இருக்கும் பொறாமையை மென்று தின்கிறான்போல் இருக்கிறது.” என்று கூறி மணி கிண்டல் செய்தான். அதைக் கண்ணாயிரம் பொருட்படுத்தியதாகத் தெரிய வில்லை.

புத்தகத்தைப் பிரித்து உழைப்பே செல்வம்’ங்கிற கட்டுரையை அங்கொன்றும் இங்கொன்றுமாகப் படித்துப் பார்த்தான் தங்கதுரை. அவன் முகம் மகிழ்ச்சியாலும் நம்பிக்கையாலும் மலர்ந்து கொண்டிருந்தது. ஆழ்கடலில் தத்தளிக்கும் ஒருவனுக்குக் கரைசேர துடுப்புக் கிடைத்ததுபோல் அந்த நூலைக் கருதினான். அவனுள் நமபிக்கை பூத்து மணம் பரப்பத் தொடங்கியது.

“கட்டுரை ரொம்ப நல்லா இருக்குடா. இந்தப் புத்தகத்தை வச்சே முதற்பரிசு வாங்கிடலாம்’டா.” தன் நம்பிக்கையை வார்த்தைகளாக வெளிப்படுத்தினான் தங்கதுரை.

“காப்பியடிக்கிற கலைதான் உனக்குக் கை வந்த கலையாச்சே!” மணி கேலி செய்தான்.

இவர்களின் மனப்போக்கிலிருந்து வேறு பட்டவனாகக் கண்ணாயிரம் காணப்பட்டான். அவன் தனக்குள் ஏதோ ஒரு முடிவை எடுத்து விட்டவனாக நம்பிக்கையோடு பேசினான்:

“நீங்க எதைப் பார்த்தாவது எழுதுங்க. நான் புதுக் கட்டுரையே எழுதிப் போட்டிக்குக் கொடுத்துப் பரிசு வாங்கறேன்.”

கண்ணாயிரம் இவ்வாறு கூறியதை அவன் நண்பர்களால் நம்பவே முடியவில்லை. மணி கேட்டே விட்டான்.

“அதெப்படி'டா முடியும்? வகுப்பில் பயிற்சிக் கட்டுரை எழுதுறதே உனக்குத் தகராறு. நீயாவது போட்டிக் கட்டுரை எழுதி பரிசு வாங்குற தாவது?”

பொறுத்திருந்து பாருடா. கண்ணாயிரம் திறமையை...” நமுட்டுச் சிரிப்புச் சிரித்துக் கண்ணைச் சிமிட்டிக்கொண்டு நடக்கலானான்.

“என்னமோ விபரீதம் நடக்கப் போவுதுடா. நமக்கேன்’டா வம்பு. வாங்கடா நாம போவோம். மணி அபாயச் சங்கு ஊதிக்கொண்டே நடந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருப்புமுனை/9&oldid=489837" இலிருந்து மீள்விக்கப்பட்டது