திருமந்திரம்/ஏழாம் தந்திரம்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

ஏழாம் தந்திரம்[தொகு]

1.ஆறாதாரம்[தொகு]

1704.
நாலும் இருமூன்றும் ஈரைந்தும் ஈராறுங்
கோலிமேல் நின்ற குறிகள் பதினாறும்
மூலங்கண் டாங்கே முடிந்து முதல் இரண்டும்
காலங்கண் டானடி காணலு மாமே.

1705.
ஈராறு நாதத்தில் ஈரெட்டாம் அந்தத்தின்
மேதாத் நாதாந்த மீதாம் பராசத்தி
போதா லயத்த விகாரந் தனிற்போத
மேதாதி யாதார மீதான உண்மையே,

1706.
மேலென்று கீழென் றிரண்டறக் காணுங்கால்
தானென்னும் நானென்றுந் தன்மைகள் ஓராறும்
பாரெங்கு மாகிப் பரந்த பராபரங்
காரொன்று கற்பக மாகிநின் றானே.

1707.
ஆதார சோதனை யானாடி சுத்திகள்
மோததி யீரெண் கலர்ந்தத்து விண்ணொளி
போதா லயத்துப் புலன்கர ணம்புந்தி
சாதா ரணங்கெட்டான் றான்சக மார்க்கமே.

1708.
மேதாதி யாலே விடாதோ மெனத்தூண்டி
ஆதார சோதனை அத்துவ சோதனை
தாதார மாகவே தானெழச் சாதித்தால்
ஆதாரஞ் செய்போக மாவது காயமே.

1709.
ஆறந்த முங்கூடி யாகும் உடம்பினிற்
கூறிய வாதார மற்றுங் குறிக்கொண்மின்
ஆறிய வக்கர மைப்பதின் மேலாக
ஊறிய வாதாரத் தோரெழுத் தாமே.

1710.
ஆகும் உடம்பும் அழிகின்ற அவ்வுடல்
போகும் உடம்பும் பொருந்திய வாறுதான்
ஆகிய வக்கரம் ஐம்பது தத்துவம்
ஆகும் உடம்புக்கும் ஆறந்த மாமே.

1711.
ஆயு மலரின் அணிமலர் மேலது
வாய இதழும் பதினாறும் அங்குள
தூய அறிவு சிவானந்த மாகிப்போய்
மேய அறிவாய் விளைந்தது தானே.

2.அண்டலிங்கம்[தொகு]

1712.
இலிங்கம தாவ தியாரும் அறியார்
இலிங்கம தாவ தெண்டிசை யெல்லாம்
இலிங்கம தாவ தெண்ணெண் கலையும்
இலிங்கம தாக எடுத்த துலகே.

1713.
உலகில் எடுத்தது சத்தி முதலா
உலகில் எடுத்தது சத்தி வடிவாய்
உலகில் எடுத்தது சத்தி குணமாய்
உலகம் எடுத்த சதாசிவன் தானே.

1714.
போகமும் முத்தியும் புத்தியுஞ் சித்தியும்
ஆகமும் ஆறாறு தத்துவத் தப்பாலாம்
ஏகமும் நல்கி யிருக்குஞ் சதாசிவம்
ஆகம வத்துவா வாறுஞ் சிவமே.

1715.
ஏத்தினர் எண்ணிலி தேவரெம் ஈசனை
வாழ்த்தினர் வாசப் பசுந்தென்றல் வள்ளலென்
றார்த்தனர் அண்டங் கடந்தப் புறநின்று
காத்தனன் என்னுங் கருத்தறி யாரே.

1716.
ஒண்சுட ரோன் அயன் மால்பிர சாபதி
ஒண்சுட ரான இரவியோ டிந்திரன்
கண்சுட ராகிக் கலந்தெங்குந் தேவர்கள்
தண்சுட ராயெங்கும் தற்பர மாமே.

1717.
தாபரத் துண்ணின் றருளவல்லான் சிவன்
மாபரத் துண்மை வழிபடு வாரிலை
மாபரத் துண்மை வழிபடு வாளர்க்கு
பூவகத் துள்நின்ற பொற்கொடி யாகுமே.

1718.
தூய விமானமுந் தூலம தாகுமால்
ஆய சதாசிவ மாகுநற் சூக்குமம்
பாய பலிபீடம் பத்திர லிங்கமாம்
ஆய அரனிலை ஆய்ந்துகொள் வார்கட்கே.

1719.
முத்துடன் மாணிக்கம் மொய்த்த பவளமும்
கொத்துமக் கொம்பு சிலைநீறு கோமதம்
அத்தன்றன் னாகம மன்ன மரிசியாம்
உய்த்ததின் சாதனம் பூமண லிங்கமே.

1720.
துன்றுந் தயிர்நெய்பால் துய்ய மெழுகுடன்
கன்றிய செம்பு கனலிர தஞ்சலம்
வன்திறல் செங்கல் வடிவுடை வில்லம்பொன்
றென்றியங் கொன்றை தெளிசிவ லிங்கமே.

1721.
மறையவர் அர்ச்சனை வண்படி கந்தான்
இறையவர் அர்ச்சனை யேயபொன் னாகுங்
குறைவிலா வசியர்க்குக் கோமள மாகுந்
துறையுடைச் சூத்திரர் தொல்வாண லிங்கமே.

1722.
அதுவுணர்ந்த தோனொரு தன்மையை நாடி
எதுவுண ராவகை நின்றனன் ஈசன்
புதுவுணர் வான புவனங்கள் எட்டும்
இதுவுணர்ந் தென்னுடல் கோயில் கொண்டானே.

1723.
அகலிட மாயறி யாமல் அடங்கும்
உகலிட மாய்நின்ற வூனத னுள்ளே
பகலிட மாமுனம் பாவ விநாசன்
புகலிட மாய்நின்ற புண்ணியன் றானே.

1724.
போது புனைகழல் பூமிய தாவது
மாது புனைமுடி வானக மாவது
நீதியுள் ஈசன் உடல்விசும் பாய்நிற்கும்
ஆதி யுறநின்ற தப்பரி சாமே.

1725.
தரையுற்ற சத்தி தனிலிங்கம் விண்ணாந்
திரைபொரு நீரது மஞ்சனச் சாலை
வரைதவழ் மஞ்சுநீர் வானுடு மாலை
கரையற்ற நந்திக் கலையுந்திக் காமே.

3.பிண்டலிங்கம்[தொகு]

1726.
மானுட ராக்கை வடிவு சிவலிங்கம்
மானுட ராக்கை வடிவு சிதம்பரம்
மானுட ராக்கை வடிவு சதாசிவம்
மானுட ராக்கை வடிவு திருக்கூத்தே.

1727.
உலந்திலர் பின்னும் உளரென நிற்பீர்
நிலந்தரு நீர்தெளி யூனவை செய்யப்
புலந்தரு பூதங்கள் ஐந்தும்ஒன் றாக
வலந்தரு தேவரை வந்திசெய் யீரே.

1728.
கோயில்கொண் டன்றே குடிகொண்ட ஐவரும்
வாயில்கொண் டாங்கே வழிநின் றருளுவர்
தாயில்கொண் டாற்போல் தலைவனென் னுட்புக
வாயில்கொண் டீசனு மாளவந் தானே.

1729.
கோயில்கொண் டானடி கொல்லைப் பெருமறை
வாயில்கொண் டானடி நாடிகள் பத்துள
பூசைகொண் டான்புல னைந்தும் பிறகிட்டு
வாயில்கொண் டானெங்கள் மாநந்தி தானே.

4.சதாசிவலிங்கம்[தொகு]

1730.
கூடிய பாதம் இரண்டும் படிமிசை
பாடிய கையிரண் டெட்டும் பரந்தெழும்
தேடு முகம்ஐந்து செங்கணின் மூவைந்து
நாடுஞ் சதாசிவ நல்லொளி முத்தே.

1731.
வேதா நெடுமால் உருத்திரன் மேலீசன்
மீதான ஐம்முகன் விந்துவும் நாதமும்
ஆதார சத்தியு மந்தச் சிவனொடுஞ்
சாதா ரணமாஞ் சதாசிவந் தானே.

1732.
ஆகின்ற சத்தியின் உள்ளே கலைநிலை
ஆகின்ற சத்தியின் உள்ளே கதிரெழ
ஆகின்ற சத்தியின் உள்ளே அமர்ந்தபின்
ஆகின்ற சத்தியுள் அத்திசை பத்தே.

1733.
அத்திசைக் குள்ளே அமர்ந்தன ஆறங்கம்
அத்திசைக் குள்ளே அமர்ந்தன நால்வேதம்
அத்திசைக் குள்ளே அமர்ந்த சரியையோ(டு)
அத்திசைக் குள்ளே அமர்ந்த சமயமே.

1734.
சமயத் தெழுந்த அவத்தையீ ரைந்துள
சமயத் தெழுந்த இராசியீ ராறுள
சமயத் தெழுந்த சரீரமா றெட்டுள
சமயத் தெழுந்த சதாசிவந் தானே.

1735.
நடுவு கிழக்குத் தெற்குத் தரமேற்கு
நடுவு படிகநற் குங்கும வன்னம்
அடைவுள வஞ்சனஞ் செவ்வரத் தம்பால்
அடியேற் கருளிய முகமிவை அஞ்சே.

1736.
அஞ்சு முகமுள ஐம்மூன்று கண்ணுள
அஞ்சினொ டஞ்சு கரதலந் தானுள
அஞ்சுடன் அஞ்சா யுதமுள நம்பியென்
நெஞ்சு புகுந்து நிறைந்துநின் றானே.

1737.
சத்தி தராதல மண்டஞ் சதாசிவ
சத்தி சிவமிக்க தாபர சங்கமஞ்
சத்தி யுருவம் அருவஞ் சதாசிவஞ்
சத்தி சிவதத் துவமுப்பத் தாறே.

1738.
தத்துவ மாவ தருவஞ் சராசரந்
தத்துவ மாவ துருவஞ் சுகோதயந்
தத்துவம் எல்லாஞ் சகலமு மாய்நிற்குந்
தத்துவ மாகுஞ் சதாசிவன் தானே.

1739.
கூறுமி னூறு சதாசிவன் எம்மிறை
வேறோர் உரைசெய்து மிகைப்பொரு ளாய்நிற்கும்
ஏறுரை செய்தொழில் வானவர் தம்மொடு
மாறுசெய் வானென் மனம்புகுந் தானே.

1740.
இருளார்ந்த கண்டமும் ஏந்து மழுவுஞ்
சுருளார்ந்த செஞ்சடைச் சோதிப் பிறையும்
அருளார்ந்த சிந்தையெம் ஆதிப் பிரானைத்
தெருளார்ந்தென் உள்ளே தெளிந்திருந்தேனே.

1741.
சத்திதான் நிற்கின்ற ஐம்முகஞ் சாற்றிடில்
உத்தரம் வாமம் உரைத்திடும் சத்தி
பச்சிமம் பூருவம் தற்புரு டன்னுரை
தெற்கி லகோரம் வடகிழக் கீசனே.

1742.
நாணுநல் லீசான நடுவுச்சி தானாகுந்
தாணுவின் றன்முகந் தற்புருட மாகுங்
காணும் அகோரம் இருதயங் குய்யமாம்
மாணுற வாமமாஞ் சத்திநற் பாதமே.

1443.
நெஞ்சு சிரஞ்சிகை நீள்கவசங் கண்ணம்பு
வஞ்சமில் விந்து வளர்நிறம் பச்சையாஞ்
செஞ்சுறு செஞ்சுடர் சேகரி மின்னாகுஞ்
செஞ்சுடர் போலுந் தெசாயுதந் தானே.

1744.
எண்ணில் இதயம் இறைஞான சத்தியாம்
விண்ணிற் பரைசிர மிக்க சிகையாதி
வண்ணக் கவசம் வனப்புடை இச்சையாம்
பண்ணுங் கிரியை பரநேத் திரத்திலே.

1745.
சத்திநாற் கோணஞ் சலமுற்று நின்றிடுஞ்
சத்தி அறுகோணஞ் சயனத்தை யுற்றிடுஞ்
சத்திநல் வட்டஞ் சலமுற் றிருந்திடுஞ்
சத்தி யுருவாஞ் சதாசிவன் தானே.

1746.
மானந்தி எத்தனை காலம் அழைக்கினுந்
தானந்தி யஞ்சின் தனிச்சுட ராய்நிற்குங்
கானந்தி யுந்தி கடந்து கமலத்தின்
மேனந்தி ஒன்பதின் மேவிநின் றானே.

1747.
ஒன்றிய வாறும் உடலி னுடன்கிடந்
தென்றுமெம் மீச னடக்கும் இயல்பது
தென்றலைக் கேறத் திருந்து சிவனடி
நின்று தொழுதேனென் னெஞ்சத்தி னுள்ளே.

1748.
உணர்ந்தேன் உலகினில் ஒண்பொரு ளானைக்
கொணர்ந்தேன் குவலயங் கோயிலென் நெஞ்சம்
புணர்ந்தேன் புனிதனும் பொய்யல்ல மெய்யே
பணிந்தேன் பகலவன் பாட்டு மொலியே.

1749.
ஆங்கிவை மூன்றினும் ஆரழல் வீசிடத்
தாங்கிடும் ஈரேழு தானடு வானதில்
ஓங்கிய ஆதியும் அந்தமு மாமென
ஈங்கிவை தம்முடல் இந்துவு மாமே.

1750.
தன்மேனி தற்சிவ லிங்கமாய் நின்றிடுந்
தன்மேனி தானுஞ் சதாசிவ மாய்நிற்குந்
தன்மேனி தற்சிவன் தற்சிவா னந்தமாந்
தன்மேனி தானாகுந் தற்பரந் தானே.

1751.
ஆரும் அறியார் அகார மவனென்று
பாரு முகாரம் பரந்திட்ட நாயகி
தாரம் இரண்டுந் தரணி முழுதுமாய்
மாறி யெழுந்திடும் ஓசைய தாமே.

1952.
இலிங்கநற் பீடம் இசையும்ஓங் காரம்
இலிங்கநற் கண்ட நிறையும் மகாரம்
இலிங்கத்துள் வட்ட நிறையும் உகாரம்
இலிங்க மகார நிறைவிந்து நாதமே.

5.ஆத்மலிங்கம்[தொகு]

1753.
அகார முதலா யனைத்துமாய் நிற்கும்
உகார முதலா யுயிர்ப்பெய்து நிற்கும்
அகார வுகாரம் இரண்டு மறியில்
அகார வுகாரம் இலிங்கம தாமே.

1754.
ஆதார மாதேய மாகின்ற விந்துவும்
மேதாதி நாதமு மீதே விரிந்தன
ஆதார விந்து அதிபீட நாதமே
போதாவி லிங்கப் புணர்ச்சிய தாமே.

1755.
சத்தி சிவமாம் இலிங்கமே தாபரஞ்
சத்தி சிவமாம் இலிங்கமே சங்கமஞ்
சத்தி சிவமாம் இலிங்கஞ் சதாசிவஞ்
சத்தி சிவமாகுந் தாபரந் தானே.

1756.
தானே ரெழுகின்ற சோதியைக் காணலாம்
வானே ரெழுகின்ற ஐம்ப தமர்ந்திடம்
பூதே ரெழுகின்ற பொற்கொடி தன்னுடன்
தானே ரெழுகின்ற வதாரம தாமே.

1757.
விந்துவும் நாதமும் மேவு மிலிங்கமாம்
விந்துவ தேபீட நாத மிலிங்கமாம்
அந்த இரண்டையும் ஆதார தெய்வமாய்
வந்த கருவைந்துஞ் செய்யு மவையைந்தே.

1758.
சத்திநற் பீடந் தகுநல்ல ஆன்மா
சத்திநற் கண்டந் தகுவித்தை தானாகுஞ்
சத்திநல் லிங்கந் தகும்சிவ தத்துவம்
சத்திநல் லான்மாச் சதாசிவந் தானே.

1759.
மனம்புகுந் தென்னுயிர் மன்னிய வாழ்க்கை
மனம்புகுந் தின்பம் பொழிகின்ற போது
நலம்புகுந் தென்னொடு நாதனை நாடும்
இலம்புகுந் தாதியு மேற்கொண்ட வாறே.

1760.
பராபரன் எந்தை பனிமதி சூடி
தராபரன் றன்னடி யார்மனக் கோயிற்
சிராபரன் தேவர்கள் சென்னியின் மன்னும்
அராமரன் மன்னி மனத்துறைந் தானே.

1761.
பிரானல்ல னாமெனிற் பேதை யுலகங்
குராலென்னு மென்மனங் கோயில்கொள் ஈசன்
அராநின்ற செஞ்சடை அங்கியும் நீரும்
பொராநின் றவர்செய்யப் புண்ணியன் தானே.

1762.
அன்றுநின் றான்கிடந் தானவன் என்று
சென்றுநின் றெண்டிசை ஏத்துவர் தேவர்கள்
என்றுநின் றேத்துவன் எம்பெரு மான்தன்னை
ஒன்றியென் உள்ளத்தின் உள்ளிருந் தானே.

6.ஞானலிங்கம்[தொகு]

1763.
உருவும் அருவும் உருவோ டருவும்
மருவு பரசிவன் மன்பல் லுயிர்க்குங்
குருவு மெனநிற்குங் கொள்கைய னாகுந்
தருவென நல்குஞ் சதாசிவன் தானே.

1764.
நாலான கீழ துருவ நடுநிற்க
மேலான நான்கு மருவு மிகநாப்பண்
நாலான ஒன்று மருவரு நண்ணலால்
பாலா மிவையாம் பரசிவன் தானே.

1765.
தேவர் பிரானைத் திசைமுக நாதனை
நால்வர் பிரானை நடுவுற்ற நந்தியை
ஏவர் பிரானென் றிறைஞ்சுவ ரவ்வழி
ஆவர் பிரானடி அண்ணலு மாமே.

1766.
வேண்டிநின் றேதொழு தேன்வினை போன்ற
ஆண்டொரு திங்களும் நாளும் அளக்கின்ற
காண்டகை யானொடுங் கன்னி யுணரினும்
மூண்டகை மாறினும் ஒன்றது வாமே.

1767.
ஆதி பரந்தெய்வம் அண்டத்து நற்றெய்வம்
சோதி யடியார் தொடரும் பெருந்தெய்வம்
நீதியுள் மாதெய்வம் நின்மலன் எம்மிறை
பாதியுள் மன்னும் பராசத்தி யாமே.

1768.
சத்திக்கு மேலே பராசத்தி தன்னுள்ளே
சுத்த சிவபதந் தோயாத தூவொளி
அத்தன் திருவடிக் கப்பாலைக் கப்பாலாம்
ஒத்தவு மாமீசன் தானான வுண்மையே.

1769.
கொழுந்தினைக் காணிற் குவலயந் தோன்றும்
எழுந்திடங் காணிற் இருக்கலு மாகும்
பரந்திடங் காணிற் பார்ப்பதி மேலே
திரண்டெழக் கண்டவன் சிந்தையுளானே.

1770.
எந்தை பரமனும் என்னம்மை கூட்டமும்
முந்த வுரைத்து முறைசொல்லின் ஞானமாம்
சந்தித் திருந்த விடம்பெருங் கண்ணியை உந்தியின் மேல்வைத் துகந்திருந் தானே.

1771.
சத்தி சிவன்விளை யாட்டாம் உயிராகி
ஒத்த இருமாயா கூட்டத் திடையூட்டிச்
சுத்தம தாகுந் துரியம் பிறிவித்துச்
சித்தம் புகுந்து சிவமக மாக்குமே.

1772.
சத்தி சிவன்றன் விளையாட்டுத் தாரணி
சத்தி சிவமுமாஞ் சிவன்சத் தியுமாகுஞ்
சத்தி சிவமன்றித் தாபரம் வேறில்லை
சத்திதான் என்றுஞ் சமைந்துரு வாகுமே.

7.சிவலிங்கம்[தொகு]

1773.
குரைக்கின்ற வாரிக் குவலய நீரும்
பரக்கின்ற காற்றுப் பயில்கின்ற தீயும்
நிரைக்கின்ற வாறிவை நீண்டகன் றானை
வரைத்து வலஞ்செயு மாறறி யேனே.

1774.
வரைத்து வலஞ்செய்யு மாறிங்கொன் றுண்டு
நிரைத்து வருகங்கை நீர்மல ரேந்தி
உரைத்தவன் நாமம் உணரவல் லார்க்குப்
புரைத்தெங்கும் போகான் புரிசடை யோனே.

1775.
ஒன்றெனக் கண்டேனெம் ஈசன் ஒருவனை
நன்றென் றடியிணை நானவ னைத்தொழ
வென்றைம் புலனும் மிகக்கிடந் தின்புற
அன்றென் றருள்செய்யும் ஆதிப் பிரானே.

1776.
மலர்ந்த அயன்மால் உருத்திரன் மகேசன்
பலந்தரும் ஐம்முகன் பரவிந்து நாதம்
நலந்தரு சத்தி சிவன்வடி வாகிப்
பலந்தரு லிங்கம் பராநந்தி யாமே.

1777.
மேவி யெழுகின்ற செஞ்சுட ரூடுசென்
றாவி எழுமள வன்றே உடலுற
மேவப் படுவதும் விட்டு நிகழ்வதும்
பாவித் தடக்கிற் பரகதி தானே.

8.சம்பிரதாயம்[தொகு]

1778.
உடல்பொருள் ஆவி உதகத்தால் கொண்டு
படர்வினை பற்றறப் பார்த்துக்கை வைத்து
நொடியின் அடிவைத்து நுண்ணுணர் வாக்கிக்
கடியப் பிறப்பறக் காட்டினன் நந்தியே.

1779.
உயிருஞ் சரீரமும் ஒண்பொரு ளான
வியவார் பரமும்பின் மேவும் பிராணன்
செயலார் சிவமுஞ் சிற்சத்தி யாதிக்கே.
உயலார் குருபரன் உய்யக்கொண் டானே.

1780.
பச்சிம திக்கிலே வைத்தஆ சாரியன்
நிச்சலும் என்னை நினையென்ற வப்பொருள்
உச்சிக்குங் கீழது வுண்ணாக்கு மேலது
வைச்ச பதமிது வாய்திற வாதே.

1781.
பெட்டடித் தெங்கும் பிதற்றித் திரிவேனை
யொட்டடித் துள்ளமர் மாசெலாம் வாங்கித்
தட்டொக்க மாறினன் தன்னையும் என்னையும்
வட்டம் தொத்தது வாணிபம் வாய்த்ததே.

1782.
தரிக்கின்ற பல்லுயிர்க் கெல்லாந் தலைவன்
இருக்கின்ற தன்மையை யேதும் உணரார்
பிரிக்கின்ற விந்து பிணக்கறுத் தெல்லாங்
கருக்கொண்ட ஈசனைக் கண்டுகொண் டேனே.

1783.
கூடும் உடல்பொருள் ஆவி குறிக்கொண்டு
நாடி யடிவைத் தருண்ஞான சத்தியால்
பாடல் உடலினிற் பற்றற நீக்கியே
கூடிய தானவ னாங்குளிக் கொண்டே.

1784.
கொண்டா னடியேன் அடிமை குறிக்கொள்ளக்
கொண்டான் உயிர்பொருள் காயக் குழாத்தினைக்
கொண்டான் பலமுற்றுந் தந்தவன் கோடலாற்
கொண்டா னெனலொன்றுங் கூறுகி லேனே.

1785.
குறிக்கின்ற தேகமுந் தேகியுங் கூடி
நெறிக்கும் பிராணன் நிலைபெற்ற சீவன்
பறிக்கின்ற காயத்தைப் பற்றிய நேர்மை
பிறக்க அறியாதார் பேயுடன் ஒப்பரே.

1786.
உணர்வுடை யார்கட் குலகமுந் தோன்றும்
உணர்வுடை யார்கட் குறுதுய ரில்லை
உணர்வுடை யார்கள் உணர்ந்தவக் காலம்
உணர்வுடை யார்கள் உணர்ந்துகண் டாரே

1787.
காயப் பரப்பில் அலைந்து துரியத்துச்
சால விரிந்து குவிந்து சகலத்தில்
ஆயவவ் வாறா றடைந்து திரிந்தோர்க்குத்
தூய அருள்தந்த நந்திக்கென் சொல்வதே.

1788.
நானென நீயென வேறில்லை நண்ணுதல்
ஊனென வூனுயிர் என்ன வுடனின்று
வானென வானவர் நின்று மனிதர்கள்
தேனென இன்பந் திளைக்கின்ற வாறே.

1789.
அவனும் அவனும் அவனை யறியார்
அவனை யறியில் அறிவானும் இல்லை
அவனும் அவனும் அவனை யறியில்
அவனும் அவனும் அவனிவ னாமே.

1790.
நானிது தானென நின்றவ னாடொறும்
ஊனிது தானுயிர் போலுணர் வானுளன்
வானிரு மாமுகில் போற்பொழி வானுளன்
நானிது வம்பர நாதனு மாமே.

1791.
பெருந்தன்மை தானென யானென வேறாய்
இருந்தது மில்லைய தீசன் அறியும்
பொருந்தும் உடலுயிர் போலுமை மெய்யே
திருந்தமுன் செய்கின்ற தேவர் பிரானே.

9.திருவருள்வைப்பு[தொகு]

1792.
இருபது மாவ திரவும் பகலும்
உருவது வாவ துயிரும் உடலும்
அருளது வாவ தறமுந் தவமும்
பொருளது வுள்நின்ற போகம தாமே.

1793.
காண்டற் கரியன் கருத்திலன் நந்தியுந்
தீண்டற்குஞ் சார்தற்குஞ் சேயனாத் தோன்றிடும்
வேண்டிக் கிடந்து விளக்கொளி யானெஞ்சம்
ஈண்டுக் கிடந்தங் கிருளறு மாமே.

1794.
குறிப்பினின் உள்ளே குவலயந் தோன்றும்
வெறுப்பிருள் நீங்கில் விகிர்தனும் நிற்குஞ்
செறிப்புறு சிந்தையைச் சிக்கென நாடில்
அறிப்புறு காட்சி அமரு மாமே.

1795.
தேர்ந்தறி யாமையின் சென்றன காலங்கள்
பேர்ந்தறி வானெங்கள் பிஞ்ஞகன் எம்மிறை
ஆர்ந்தறி வாரறி வேதுணை யாமெனச்
சார்ந்தறி வான்பெருந் தன்மைவல் லானே.

1796.
தானே யறியும் வினைகள் அழிந்தபின்
நானே யறிகிலன் நந்தி யறியுங்கொல்
ஊனே யுருகி யுணர்வை யுணர்ந்தபின்
தேனே யனையனந் தேவர் பிரானே.

1797.
யானறிந் தன்றே யிருக்கின்ற தீசனை
வானறிந் தாரறி யாது மயங்கினர்
ஊனறிந் துள்ளே யுயிர்க்கின்ற ஒண்சுடர்
தானறி யான்பின்னை யாரறி வாரே.

1798.
அருளெங்கு மான அளவை யறியார்
அருளை நுகரமு தானதுந் தேரார்
அருளைங் கருமத் ததிசூக்க முன்னார்
அருளெங்குங் கண்ணான தாரறி வாரே.

1799.
அறிவில் அணுக அறிவது நல்கிப்
பொறிவழி யாசை புகுத்திப் புணர்ந்திட்
டறிவது வாக்கி அடியருள் நல்குஞ்
செறிவொடு நின்றார் சிவமாயி னாரே.

1800.
அருளிற் பிறந்திட் டருளில் வளர்ந்திட்
டருளில் அழிந்திளைப் பாறி மறைந்திட்
டருளான ஆனந்தத் தாரமு தூட்டி
அருளால் என்நந்தி யகம்புகுந் தானே

1801.
அருளால் அமுதப் பெருங்கடல் ஆட்டி
அருளால் அடிபுனைந் தார்வமுந் தந்திட்
டருளான ஆனந்தத் தாரமு தூட்டி
அருளால் என்நந்தி யம்புகுந் தானே.

1802.
பாசத்தி லிட்ட தருளந்தப் பாசத்தின்
நேசத்தை விட்ட தருளந்த நேசத்திற்
கூசற்ற முத்தி யருளந்தக் கூட்டத்தின்
நேசத்துத் தோன்றா நிலையரு ளாமே.

1803.
பிறவா நெறிதந்த பேரரு ளாளன்
மறவா அருள்தந்த மாதவன் நந்தி
அறவாழி அந்தணன் ஆதிப் பராபரன்
உறவாகி வந்தென் உளம்புகுந் தானே.

1804.
அகம்புகுந் தானடி யேற்கரு ளாலே
அகம்புகுந் துந்தெரி யானரு ளில்லோர்க்
ககம்புகுந் தானந்த மாக்கிச் சிவமாய்
அகம்புகுந் தானந்தி யானந்தி யாமே.

1805.
ஆயும் அறிவோ டறியாத மாமாயை
ஆய கரணம் படைக்கும்ஐம் பூதமும்
ஆய பலவிந் திரிய மவற்றுடன்
ஆய வருளைந்து மாமருட் செய்கையே.

1806.
அருளே சகலமு மாய பவுதிகம்
அருளே சராசர மாய வகிலமே
இருளே வெளியே யெனுமெங்கும் ஈசன்
அருளே சகளத்த னன்றியின் றாமே.

1807.
சிவமொடு சத்தி திகழ்நாதம் விந்து
தவமான ஐம்முகன் ஈசன் அரனும்
பவமுறு மாலும் பதுமத்தோன் ஈறா
நவமவை யாகி நடிப்பவன் தானே.

1808.
அருட்கண் ணிலாதார்க் கரும்பொருள் தோன்றா
அருட்கண் ணுளோர்க்கெதிர் தோன்றும் அரனே
இருட்கண்ணி னோனர்க்கங் கிரவியுந் தோன்றாத்
தெருட்கண்ணி னோர்க்கெங்குஞ் சீரொளி யாமே.

1809.
தானே படைத்திடுந் தானே அளித்திடுந்
தானே துடைத்திடுந் தானே மறைத்திடுந்
தானே யிவை செய்து தான்முத்தி தந்திடுந்
தானே வியாபித் தலைவனு மாமே.

1810.
தலையான நான்குந் தனதரு வாகும்
மலையா வருவுரு வாகுஞ் சதாசிவம்
நிலையான கீழ்நான்கு நீடுரு வாகுந்
துலையா இவைமுற்று மாயல்ல தொன்றே.

1811.
ஒன்றது வாலே உலப்பிலி தானாகி
நின்றது தான்போல் உயிர்க்குயி ராய்நிலை
துன்னி யவையல்ல வாகுந் துணையென்ன
நின்றது தான்விளை யாட்டென்னுள் நேயமே.

1812.
நேயத்தே நின்றிடும் நின்மலன் சத்தியோ
டாய்க் குடிலையுள் நாம் அடைந்திட்டுப்
போயக் கலைபல வாகப் புணர்ந்திட்டு வீயத் தகாவிந்து வாக விளையுமே.

1813.
விளையும் பரவிந்து தானே வியாபி
விளையுந் தனிமாயை மிக்கமாமாயை
கிளையொன்று தேவர் கிளர்மனு வேதம்
அளவொன் றிலாவண்ட கோடிக ளாமே.

10.அருளொளி[தொகு]

1814.
அருளிற் றலைநின் றறிந்தழுந் தாதார்
அருளிற் றலைநில்லார் ஐம்பாச நீங்கார்
அருளிற் பெருமை யறியார் செறியார்
அருளிற் பிறந்திட் டறிந்தறி வாரே.

1815.
வாரா வழிதந்த மாநந்தி பேர்நந்தி
ஆரா அமுதளித் தானந்தி பேர்நந்தி
பேரா யிரமுடைப் பெம்மான்பே ரொன்றினில்
ஆரா அருட்கடல் ஆடுகென் றானே.

1816.
ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியுந்
தேடியுங் கண்டேன் சிவன்பெருந் தன்மையைக்
கூடிய வாறே குறியாக் குறிதந்தென்
ஊடுநின் றானவன் தன்னரு ளுற்றே.

1817.
உற்ற பிறப்பும் உறுமல மானதும்
பற்றிய மாயாப் படல மெனப் பண்ணி
அத்தனை நீயென் றடிவைத்தான் பேர்நந்தி
கற்றன விட்டேன் கழல்பணிந் தேனே.

1818.
விளக்கினை யேற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே.

1819.
ஒளியும் இருளும் ஒருகாலந் தீர
ஒளியுளோர்க் கன்றோ ஒழியா தொளியும்
ஒளியிருள் கண்டகண் போலவே றாயுள்
ஒளியிருள் நீங்க வுயிர்சிவ மாமே.

1820.
புறமே திரிந்தேனைப் பொற்கழல் சூட்டி
நிறமே புகுந்தென்னை நின்மல னாக்கி
அறமே புகுந்தெனக் காரமு தீந்த
திறமேதென் றெண்ணித் திகைத்திருந் தேனே.

1821.
அருளது வென்ற அகலிடம் ஒன்றும்
பொருளது வென்ற புகலிடம் ஒன்றும்
மருளது வென்ற மனம்புகுந் தானைத்
தெருளுறும் பின்னைச் சிவகதி யாமே.

1822.
கூறுமின் னீர்முன் பிறந்திங் கிறந்தமை
வேறொரு தெய்வத்தின் மெய்ப்பொருள் நீங்கிடும்
பாறணி யும்முடல் வீழவிட் டாருயிர்
தேறணி யோமிது செப்பவல் லீரே.

11.சிவபூசை[தொகு]

1823.
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானாற்கு வாயிகோ புரவாசல்
தெள்ளத் தெளிவார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்துங் காளா மணிவிளக்கே.

1824.
வேட்டவி யுண்ணும் விரிசடை நந்திக்குக்
காட்டவும் நாமிலங் காலையும் மாலையும்
ஊட்டவி யாவன வுள்ளங் குளிர்விக்கும்
பாட்டவி காட்டுதும் பாலவி யாமே.

1825.
பான்மொழி பாகன் பராபரன் தானாகு
மான சதாசிவன் தன்னையா வாகித்து
மேன்முகம் ஈசான மாகவே கைக்கொண்டு
சீன்முகஞ் செய்யச் சிவனவ னாகுமே.

1826.
நினைவதும் வாய்மை மொழிவது மல்லாற்
கனைகழல் ஈசனைக் காண வரிதாங்
கனைகழல் ஈசனைக் காண்குற வல்லார்
புனைமலர் நீர்கொண்டு போற்றவல் லாரே.

1827.
மஞ்சன மாலை நிலாவிய வானவர்
நெஞ்சினுள் ஈசன் நிலைபெறு காரணம்
அஞ்சமு தாம்உப சாரம்எட் டெட்டொடும்
அஞ்சலி யோடுங் கலந்தர்ச்சித் தார்களே.

1828.
புண்ணியஞ் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு
அண்ணல் அதுகண் டருள்புரி யாநிற்கும்
எண்ணிலி பாவிகள் எம்மிறை யீசனை
நண்ணறி யாமல் நழுவுகின் றாரே.

1829.
அத்த னவதீர்த்த மாடும் பரிசுகேள் ஒத்தமெய்ஞ் ஞானத் துயர்ந்தார் பதத்தைச் சுத்தம தாக விளக்கித் தெளிக்கவே முத்தியா மென்றுநம் மூலன் மொழிந்ததே.

1830.
மறுப்புற்று விவ்வழி மன்னிநின் றாலுஞ்
சிறப்பொடு பூநீர் திருந்தமுள் ஏந்தி
மறப்பின்றி யுன்னை வழிபடும் வண்ணம்
அறப்பெற வேண்டும் அமரர் பிரானே.

1831.
ஆரா தனையும் அமரர் குழாங்களுந்
தீராக் கடலும் நிலத்தும தாய்நிற்கும்
பேரா யிரமும் பிரான்திரு நாமமும்
ஆரா வழியெங்கள் ஆதிப் பிரானே.

1832.
ஆனைந்தும் ஆட்டி அமரர் கணந்தொழத்
தானந்த மில்லாத் தலைவன் அருளது
தேனுந்து மாமலர் உள்ளே தெளிந்ததோர்
பாரையுங் குணமும் படைத்துநின் றானே.

1833.
உழைக்கொண்ட பூநீர் ஒருங்குடன் ஏந்தி
மழைக்கொண்ட மாமுகின் மேற்சென்று வானோர்
தழைக்கொண்ட பாசந் தயங்கிநின் றேத்தப்
பிழைப்பின்றி எம்பெரு மானரு ளாமே.

1834.
வெள்ளக் கடலுள் விரிசடை நந்திக்கு
உள்ளக் கடற்புக்கு வார்சுமை பூக்கொண்டு
கள்ளக் கடல்விட்டுக் கைதொழ மாட்டாதார்
அள்ளற் கடலுள் அழுந்துகின் றாரே.

1835.
கழிப்படுந் தண்கடற் கௌவை யுடைத்து
வழிப்படு வார்மலர் மொட்டறி யார்கள்
பழிப்படு வார்பல ரும்பழி வீழ
வெளிப்படு வோருச்சி மேவிநின் றானே.

1836.
பயனறி வொன்றுண்டு பன்மலர் தூவிப்
பயனறி வார்க்கரன் தானே பயிலும்
நயனங்கள் மூன்றுடை யானடி சேர
வயனங்க ளாலென்றும் வந்துநின் றானே.

1837.
ஏத்துவர் மாமலர் தூவித் தொழுதுநின்
றார்த்தெம தீசன் அருட்சே வடியென்றன்
மூர்த்தியை மூவா முதலுரு வாய்நின்ற
தூர்த்தனை யாருந் துதித்துண ராரே.

1838.
தேவர்க ளோடிசை வந்துமண் ணோடுறும்
பூவொடு நீர்சுமந் தேத்திப் புனிதனை
மூவரிற் பன்மை முதல்வனாய் நின்றருள்
நீர்மையை யாவர் நினைக்கவல் லாரே.

1839.
உழைக்கவல் லோர்நடு நீர்மல ரேந்திப்
பிழைப்பின்றி யீசன் பெருந்தவம் பேணி
இழைக்கொண்ட பாதத் தினமலர் தூவி
மழைக்கொண்டல் போலவே மன்னிநில் லீரே.

1840.
வென்று விரைந்து விரைப்பணி யென்றனர்
நின்று பொருந்த இறைபணி நேர்படத்
துன்று சலமலர் தூவித் தொழுதிடிற்
கொண்டிடு நித்தலுங் கூறிய வன்றே.

1841.
சாத்தியும் வைத்தும் சயம்புவென் றேத்தியும்
ஏத்திய நாளும் இறையை யறிகிலார்
ஆத்தி மலக்கிட் டகத்தழுக் கற்றக்கான்
மாத்திக்கே செல்லும் வழியது வாமே.

1842.
ஆவிக் கமலத்தின் அப்புறத் தின்புற
மேவித் திரியும் விரிசடை நந்தியைக்
கூவிக் கருதிக் கொடுபோய்ச் சிவத்திடைத்
தாவிக்கு மந்திரந் தாமறி யாரே.

1843.
சாணாகத் துள்ளே அழுந்திய மாணிக்கம்
காணு மளவுங் கருத்தறி வாரில்லை
பேணிப் பெருக்கிப் பெருக்கி நினைவோர்க்கு
மாணிக்க மாலை மனம்புகுந் தானே.

1844.
பெருந்தன்மை நந்தி பிணங்கிருள் நேமி
இருந்தன்மை யாலுமென் நெஞ்சிடங் கொள்ள
வருந்தன்மை யாளனை வானவர் தேவர்
தருந்தன்மை யாளனைத் தாங்கிநின் றாரே.

1845.
சமைய மலசுத்தி தன்செயல் அற்றிடும்
அமையும் விசேடமு மானமந் திரசுத்தி
சமையநிர் வாணங் கலாசுத்தி யாகும்
அமைமன்னு ஞான மானார்க் கபிடேகமே.

1846.
ஊழிதோ றூழி யுணர்ந்தவர்க் கல்லது
ஊழில் உயிரை யுணரவுந் தானொட்டா
ஆழி யமரும் அரியயன் என்றுளோர்
ஊழி கடந்துமோ ருச்சியு ளானே.

12.குருபூசை[தொகு]

1847.
ஆகின்ற நந்தி யடித்தா மரைபற்றிப்
போகின்ற வுபதேசம் பூசிக்கும் பூசையும்
ஆகின்ற ஆதார மாறா றதன்மேற்
போகின்ற பொற்பையும் போற்றுவன் யானே.

1848.
கானுறு கோடி கடிகமழ் சந்தனம்
வானுற மாமல ரிட்டு வணங்கினும்
ஊனினை நீக்கி யுணர்பவர்க் கல்லது
தேனமர் பூங்கழல் சேரவொண் ணாதே.

1849.
மேவிய ஞானத்தின் மிக்கிடின் மெய்ப்பரன்
ஆவியின் ஞான நெறிநிற்றல் அர்ச்சனை
ஓவற வுட்பூ சனைசெய்யில் உத்தமஞ்
சேவடி சேரல் செயலறல் தானே.

1850.
உச்சியுங் காலையும் மாலையும் ஈசனை
நச்சுமின் நச்சி நமவென்று நாமத்தை
விச்சுமின் விச்சி விரிசுடர் மூன்றினும்
நச்சுமின் பேர்நந்தி நாயக னாகுமே.

1851.
புண்ணிய மண்டலம் பூசைநூ றாகுமாம்
பண்ணிய மேனியும் பத்துநூ றாகுமாம்
எண்ணிலிக் கைய மிடிற்கோடி யாகுமால்
பண்ணிடில் ஞானியூண் பார்க்கில் விசேடமே.

1852.
இந்துவும் பானுவும் இலங்குந் தலத்திடை
வந்தித்த தெல்லாம் அசுரர்க்கு வாரியாம்
இந்துவும் பானுவும் இலங்காத் தலத்திடை
வந்தித்தல் நந்திக்கு மாபூசை யாமே.

1853.
இந்துவும் பானுவு மென்றெழு கின்றதோர்
விந்துவும் நாதமு மாகிமீ தானத்தே
சிந்தனை சாக்கிரா தீதத்தே சென்றிட்டு
நந்தியைப் பூசிக்க நற்பூசை யாமே.

1854.
மனபவ னங்களை மூலத்தான் மாற்றி
அனித வுடற்பூத மாக்கி யகற்றிப்
புனிதன் அருள்தனிற் புக்கிருந் தின்பத் தனியுறு பூசை சதாசிவற் காமே.

1855.
பகலும் இரவும் பயில்கின்ற பூசை
இயல்புடை யீசர்க் கிணைமல ராகப்
பகலும் இரவும் பயிலாத பூசை
சகலமுந் தான் கொள்வன் தாழ்சடை யோனே.

1856.
இராப்பகல் அற்ற இடத்தே யிருந்து
பராக்கற ஆனந்தத் தேறல் பருகி
இராப்பக லற்ற இறையடி யின்பத்
திராப்பகல் மாயை இரண்டிடத் தேனே.

13.மாகேசுரபூசை[தொகு]

1857.
படமாடக் கோயிற் பகவற்கொன் றீயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கங் காகா
நடமாடக் கோயில் நம்பர்க்கொன் றீயில்
படமாடக் கோயிற் பகவற்க தாமே.

1858.
தண்டறு சிந்தை தபோதனர் தாமகிழ்ந்
துண்டது மூன்று புவனமும் உண்டது
கொண்டது மூன்று புவனமுங் கொண்டதென்
றெண்டிசை நந்தி எடுத்துரைத் தானே.

1859.
மாத்திரை யொன்றினின் மன்னி யமர்ந்துறை
யாத்தனுக் கீந்த அரும்பொரு ளானது
மூர்த்திகள் மூவர்க்கு மூவெழு குரவர்க்குந்
தீர்த்தம தாமது தேர்ந்துகொள் வீரே.

1860.
அகரம் ஆயிரம் அந்தணர்க் கீயிலென்
சிகரம் ஆயிரஞ் செய்து முடிக்கிலென்
பகரு ஞானி பகலூண் பலத்துக்கு
நிகரிலை என்பது நிச்சயந் தானே.

1861.
ஆறிகும் வேள்வி அருமறை நூலவர்
கூறிடும் அந்தணர் கோடிபே ருண்பதில்
நீறிடுந் தொண்டர் நினைவின் பயனிலை
பேறெனில் ஓர்பிடி பேறது வாகுமே.

1862.
ஏறுடை யாயிறை வாஎம்பி ரானென்று
நீறிடு வாரடி யார்நிகழ் தேவர்கள்
ஆறணி செஞ்சடை யண்ண லிவரென்று
வேறணி வார்க்கு வினையில்லை தானே.

1863.
சீர்நந்தி கொண்டு திருமுக மாய்விட்ட
பேர்நந்தி யென்னும் பிறங்கு சடையனை
நானொந்து நொந்து வருமள வுஞ்சொல்லப்
பேர்நந்தி யென்னும் பிதற்றொழி யேனே.

1864.
அழிதக வில்லா அரனடி யாரைத்
தொழுதகை ஞாலத்துத் தூங்கிருள் நீங்கும்
பழுது படாவணம் பண்பனை நாடித்
தொழுதெழ வையகத் தோரின்ப மாமே.

1865.
பகவற்கே தாகிலும் பண்பில ராகிப்
புகுமத்த ராய்நின்று பூசனை செய்யும்
முகமத்தோ டொத்துநின் றூழிதோ றூழி
அகமத்த ராகிநின் றாய்ந்தொழிந் தாரே.

1866.
வித்தக மாகிய வேடத்தர் உண்டவூண்
அத்தன் அயன்மால் அருந்திய வண்ணமாஞ்
சித்தந் தெளிந்தவர் சேடம் பருகிடின்
முத்தியா மென்றுநம் மூலன் மொழிந்ததே.

1867.
தாழ்விலர் பின்னும் முயல்வ ரருந்தவம்
ஆழ்வினை யாழ் அவர்க்கே அறஞ்செய்யும்
ஆழ்வினை நீக்கி அருவினை தன்னொடும்
போழ்வினை தீர்க்கும்அப் பொன்னுல காமே.

14.அடியார் பெருமை[தொகு]

1868.
திகைக்குரி யானொரு தேவனை நாடும்
வகைக்குரி யானொரு வாதி யிருக்கிற்
பகைக்குரி யாரில்லைப் பார்மழை பெய்யும்
அகக்குறை கேடில்லை யவ்வுல குக்கே.

1869.
அவ்வுலக கத்தே பிறந்தவ் வுடலொடும்
அவ்வுல கத்தே அருந்தவ நாடுவர்
அவ்வுல கத்தே அரனடி கூடுவர்
அவ்வுல கத்தே அருள்பெறு வாரே.

1870.
கொண்ட குறியுங் குலவரை யுச்சியும்
அண்டமும் அண்டத் தமரரும் ஆதியும்
எண்டிசை யோரும்வந் தென்கைத் தலத்தினுள்
உண்டெனில் நாமினி உய்ந்தொழிந் தோமே.

1871.
அண்டங்கள் ஏழும் அகண்டமும் ஆவியுங்
கொண்ட சராசர முற்றுங் குணங்களும்
பண்டை மறையும் படைப்பளிப் பாதியுங்
கண்ட சிவனுமென் கண்ணன்றி யில்லையே.

1872.
பெண்ணல்ல ஆணல்ல பேடல்ல மூடத்துள்
உள்நின்ற சோதி ஒருவர்க் கறியொணாக்
கண்ணின்றிக் காணுஞ் செவியின்றிக் கேட்டிடும்
அண்ணல் பெருமையை ஆய்ந்தது மூப்பே.

1873.
இயங்கும் உலகினில் ஈசன் அடியார்
மயங்கா வழிச்செல்வர் வானுல காள்வர்
பயங்களு மெண்டிசை போதுபா தாள
மயங்காப் பகிரண்ட மாமுடி தானே.

1874.
அகம்படி கின்றதம் ஐயனை யோரும்
அகம்படி கண்டவர் அல்லலிற் சேரார்
அகம்படி யுட்புக் கறிகின்ற நெஞ்சம்
அகம்படி கண்டாம் அழிக்கலும் எட்டே.

1875.
கழிவு முதலுங் காதற் றுணையும்
அழிவும் தாய்நின்ற ஆதிப் பிரானைப்
பழியும் புகழும் படுபொருள் முற்றும்
ஒழியுமென் னாவி யுழவுகொண் டானே.

1876.
என்தாயோ டென்னப்பன் ஏழேழ் பிறவியும்
அன்றே சிவனுக் கெழுதிய ஆவணம்
ஒன்றா யுலகம் படைத்தான் எழுதினான்
நின்றான் முகில்வண்ணன் நேரெழுத் தாயே.

1877.
துணிந்தா ரகம்படி துன்னி உறையும்
பணிந்தா ரகம்படி பாற்பட் டொழுகும்
அணிந்தா ரகம்படி யாதிப் பிரானைக்
கணிந்தா ரொருவர்க்குக் கைவிட லாமே.

1878.
தலைமிசை வானவர் தாழ்சடை நந்தி
மிலைமிசை வைத்தனன் மெய்ப்பணி செய்யப்
புலைமிசை நீங்கிய பொன்னுல காளும்
பலமிசை செய்யும் படர்சடை யோனே.

1879.
அறியாப் பருவத் தரனடி யாரைக்
குறியால் அறிந்தின்பங் கொண்ட தடிமை
குறியார் சடைமுடி கட்டி நடப்பார்
மறியார் புனல்மூழ்க மாதவ மாமே.

1880.
அவன்பால் அணுகியே அன்புசெய் வார்கள்
சிவன்பால் அணுகுதல் செய்யவும் வல்லர்
அவன்பால் அணுகியே நாடு மடியார்
இவன்பாற் பெருமை இலயம தாமே.

1881.
முன்னிருந் தார்முழு தெண்கணத் தேவர்கள்
எண்ணிறந் தன்பால் வருவர் இருநிலத்
தெண்ணிரு நாலு திசையந் தரமொக்கப்
பன்னிரு காதம் பதஞ்செய்யும் பாரே.

1882.
சிவயோகி ஞானி செறிந்தஅத் தேசம்
அவயோகம் இன்றி அறிவோருண் டாகும்
நவயோகங் கைகூடு நல்லியல் காணும்
பவயோகம் இன்றிப் பரலோக மாமே.

1883.
மேலுணர் வான்மிகு ஞாலம் படைத்தவன்
மேலுணர் வான்மிகு ஞாலம் கடந்தவன்
மேலுணர் வார்மிகு ஞாலத் தமரர்கள்
மேலுணர் வார்சிவன் மெய்யடி யார்களே.

15.போசனவிதி[தொகு]

1884.
எட்டுத் திசையும் இறைவ னடியவர்க்
கட்ட அடிசில் அமுதென் றெதிர்கொள்வர்
ஒட்டி யொருநிலம் ஆள்பவர் அந்நிலம்
விட்டுக் கிடக்கில் விருப்பறி யாரே.

1885.
அச்சிவன் உள்நின்ற அருளை அறிந்தவர்
உச்சியம் போதாக வுள்ளமர் கோவிற்குப்
பிச்சை பிடித்துண்டு பேத மறநினைந்
தீச்சைவிட் டேகாந்தத் தேறி யிருப்பரே.

16.பிட்சாவிதி[தொகு]

1886.
விச்சுக் கலமுண்டு வேலிச்செய் ஒன்றுண்டு
உச்சிக்கு முன்னே யுழவு சமைந்தது
அச்சங்கெட் டச்செய் அறுத்துண்ண மாட்டாதார்
இச்சைக்குப் பிச்சை இரக்கின்ற வாறே.

1887.
பிச்சைய தேற்றான் பிரமன் தலைதன்னில்
பிச்சைய தேற்றான் பிரியா ளறஞ்செய்யப்
பிச்சைய தேற்றான் பிரமன் சிரங்காட்டிப்
பிச்சைய தேற்றான் பிரமன் பரமாகவே.

1888.
பரந்துல கேழும் படைத்த பிரானை
இரந்துணி என்பர்கள் எற்றுக் கிரக்கும்
நிரந்தர மாக நினையும் அடியார்
இரந்துண்டு தன்கழல் எட்டச்செய் தானே.

1889.
வரவிருந் தான்வழி நின்றிடும் ஈசன்
தரவிருந் தான்தன்னை நல்லவர்க் கின்பம்
பொரவிருந் தான்புக லேபுக லாக
வரவிருந் தாலறி யானென்ப தாமே.

1890.
அங்கார் பசியும் அவாவும் வெகுளியுந்
தங்கார் சிவனடி யார்சரீ ரத்திடைப்
பொங்கார் புவனத்த பொங்கார் புவனத்தும் புண்ணிய லோகத்துந்
தங்கார் சிவனைத் தலைப்படு வாரே.

1891.
மெய்யக ஞான மிகத்தெளிந் தார்களுங்
கையக நீண்டார் கடைத்தலைக் கேசெல்வர்
ஐயம் புகாமல் இருந்த தவசியார்
வையகம் எல்லாம் வரவிருந் தாரே.

17.முத்திரை பேதம்[தொகு]

1892.
நாலேழு மாறவே நண்ணிய முத்திரை
பாலான மோன மொழியிற் பதிவித்து
மேலான நந்தி திருவடி மீதுய்யக்
கோலா கலங்கெட்டுக் கூடுதன் முத்தியே.

1893.
துரியங்கண் மூன்றுஞ் சொருகிட னாகி
அரிய வுரைத்தார மங்கே யடக்கி
மருவிய சாம்பவி கேசரி யுண்மை
பெருகிய ஞானம் பிறழ்முத் திரையே.

1894.
சாம்பவி நந்தி தன்னருட் பார்வையாம்
ஆன்பவ மில்லா அருட்பாணி
முத்திரை ஓம்பயில் ஓங்கிய வுண்மைய கேசரி
நாம்பயில் நாதன் மெய்ஞ்ஞான முத்திரையே.

1895.
தானத்தி னுள்ளே சதாசிவ னாயிடும்
ஞானத்தி னுள்ளே நற்சிவ மாதலால்
ஏனைச் சிவமாஞ் சொரூப மறைந்திட்ட
மோனத்து முத்திரை முத்தாந்த முத்தியே.

1896.
வாக்கு மனமும் இரண்டு மவுனமாம்
வாக்கு மவுனத்து வந்தாலு மூங்கையாம்
வாக்கு மனமும் மவுனமாஞ் சுத்தரே
ஆக்குமச் சுத்தத்தை யாரறி வார்களே.

1897.
யோகத்தின் முத்திரை யோரட்ட சித்தியாம்
ஏகத்த ஞானத்து முத்திரை எண்ணுங்கால்
ஆகத் தகுவேத கேசரி சாம்பவி
யோகத்துக் கேசரி யோகமுத் திரையே.

1898.
யோகியெண் சித்தி அருளொலி வாதனை
போகிதண் புத்தி புருடார்த்த நன்னெறி
யாகுநன் சத்தியும் ஆதார சோதனை
ஏகமுங் கண்டொன்றில் எய்தநின் றானே.

1899.
துவாதச மார்க்கமென் சோடச மார்க்கமாம்
அவாவறு மீரை வகையங்க மாறுந்
தவாவறு வேதாந்த சித்தாந்தத் தன்மை
நவாவக மோடுன்ன னற்சுத்த சைவமே.

1900.
மோனத்து முத்திரை முத்தர்க்கு முத்திரை
ஞானத்து முத்திரை நாதர்க்கு முத்திரைை
தேனிக்கு முத்திரை சித்தாந்த முத்திரை
கானிக்கு முத்திரை கண்ட சமயமே.

1901.
தூநெறி கண்ட சுவடு நடுவெழும்
பூநெறி கண்டது பொன்னக மாய்நிற்கும்
மேனெறி கண்டது வெண்மதி மேதினி
நீனெறி கண்டுள நின்மல னாமே.

18.பூர்ணகுகைநெறிச் சமாதி[தொகு]

1902.வளர்பிறை யிற்றேவர் தம்பாலின் மன்னி
உளரொளி பானுவின் உள்ளே யொடுங்கித்
தளர்விற் பிதிர்பதந் தங்கிச் சசியுள்
உளதுறும் யோகி யுடல் விட்டாற் றானே.

1903.தானிவை யொக்குஞ் சமாதிகை கூடாது
போன வியோகி புகலிடம் போந்துபின்
ஆனவை தீர நிரந்தர மாயோகம்
ஆனவை சேர்வார் அருளின்சார் வாகியே.

1904.தானிவ் வகையே புவியோர் நெறிதங்கி
ஆன சிவயோகத் தாமாறா மவ்விந்து
தானதி லந்தச் சிவயோகி யாகுமுன்
ஊனத்தோர் சித்திவந் தோர்காய மாகுமே.

1905.சிவயோகி ஞானி சிதைந்துடல் விட்டால்
தவலோகஞ் சேர்ந்துபின் றான்வந்து கூடிச்
சிவயோக ஞானத்தாற் சேர்ந்தவர் நிற்பர்
புவலோகம் போற்றுநற் புண்ணியத் தோரே.

1906.ஊனமின் ஞானிநல் யோகி யுடல்விட்டால்
தானற மோனச் சமாதியுள் தங்கியே
தானவ னாகும் பரகாயஞ் சாராதே
ஊனமின் முத்தராய் மீளார் உணர்வுற்றே.

1907.செத்தார் பெறும்பய னாவது ஏதேனில்
செத்துநீர் சேர்வது சித்தினைக் கூடிடில்
செத்தா ரிருந்தார் செகத்தில் திரிமலஞ்
செத்தார் சிவமாகி யேசித்தர் தாமே.

1908.உன்னக் கருவிட் டுரவோ னரனருள்
பன்னப் பரனே யருட்குலம் பாலிப்பன்
என்னப் புதல்வர்க்கும் வேண்டி யிடுஞானி
தன்னிச்சைக் கீச னுருச்செய்யுந் தானே.

1909.எங்குஞ் சிவமா யருளா மிதயத்துத்
தங்குஞ் சிவஞானிக் கெங்குமாந் தற்பரம்
அங்காங் கெனநின்று சகமுண்ட வான்தோய்தல்
இங்கே யிறந்தெங்கு மாய்நிற்கும் ஈசனே.

19.சமாதிக் கிரியை[தொகு]

1910.
அந்தமின் ஞானிதன் னாகந் தீயினில்
வெந்திடி னாடெலாம் வெப்புத் தீயினில்
நொந்தது நாய்நரி நிகரி லுண்செரு
வந்துநாய் நரிக்குண வாகும்வை யகமே.

1911.
எண்ணிலா ஞானி யுடலெரி தாவிடில்
அண்ணல்தங் கோயில் அழலிட்ட தாங்கொக்கும்
மண்ணின் மழைவிழா வையகம் பஞ்சமாம்
எண்ணரு மன்னர் இழப்பார் அரசே.

1912.
புண்ணிய மாமவர் தம்மைப் புதைப்பது
நண்ணி யனல்கோக்கில் நாட்டில் அழிவாகும்
மண்ணி வழியில் அலங்கார பங்கமாம்
மண்ணுல கெல்லா மயங்குமனல் மண்டியே.

1913.
அந்தமில் ஞானி அருளை அடைந்தக்கால்
அந்த வுடல்தான் குகைசெய் திருத்திடில்
சுந்தர மன்னரும் தொல்புவி யுள்ளோரும்
அந்தமில் இன்ப அருள்பெறு வோரே.

1914.
நவமிகு சாணாலே நல்லாழஞ் செய்து
குவைமிகு சூழவைஞ் சாணாகக் கோட்டித்
தவமிகு குகைமுக் கோணமுச் சாணாக்கிப்
பவமறு நற்குகை பத்மா சனமே.

1915.
தன்மனை சாலை குளங்கரை யாற்றிடை
நன்மலர்ச் சோலை நகரினற் பூமி
உன்னருங் கானம் உயர்ந்த மலைச்சாரல்
இந்நிலந் தான்குகைக் கெய்தும் இடங்களே.

1916.
நற்குகை நால்வட்டம் பஞ்சாங்க பாதமாய்
நிற்கின்ற பாத நவபாத நேர்விழப்
பொற்பம ரோசமும் மூன்றுக்கு மூன்றணி
நிற்பவர் தாஞ்செய்யும் நேர்மைய தாமே.

1917.
பஞ்ச லோகங்கள் நவமணி பாரித்து
விஞ்சப் படுத்ததன் மேலா சனமிட்டு
முஞ்சி படுத்துவெண் ணீறிட்டதன்மேலே
பொன்செய்த நற்சுண்ணம் பொதிய லுமாமே.

1918.
நள்குகை நால்வட்டம் படுத்ததன் மேற்சாரக்
கள்ளவிழ் தாமங் களபங்கத் தூரியுந்
தெள்ளிய சார்ந்து புழுகுபன் னீர்சேர்த்து
ஒள்ளிய தூபம் உவந்திடு வீரே.

1919.
ஓதிடும் வெண்ணீற்றால் உத்தூளங் குப்பாய
மீதினி லிட்டா சனத்தினின் மேல்வைத்துப்
போதறு சுண்ணமும் நீறும் பொலிவித்து
மீதி லிருத்தி விரித்திடு வீரே.

1920.
விரித்தபின் னாற்சாரு மேவுதல் செய்து
பொரித்த கறிபோ னகமிள நீருங்
குருத்தலம் வைத்தோர் குழைமுகம் பார்வை
தரித்தபின் மேல்வட்டஞ் சாத்திடு வீரே.

1921.
மீது சொரிந்திடும் வெண்ணீறுஞ் சுண்ணமும்
போது பலகொண்டு தர்ப்பைப்புல் வில்வமும்
பாத வதகத்தான் மஞ்சனஞ் செய்துபார்
மீதுமூன் றுக்குமூன் றணிநிலஞ் செய்யுமே.

1922.
ஆதன மீதில் அரசு சிவலிங்கம்
போதும் இரண்டினில் ஒன்றைத்தா பித்து
மேதகு சந்திதி மேவுத் தரம்பூர்வங்
காதலிற் சோடசங் காணுப சாரமே.

20.விந்துற்பனம்[தொகு]

1923.
உதயத்தில் விந்துவில் ஓங்குகுண் டலியும்
உதயக் குடிலில் வயிந்தவம் ஒன்பான்
விதியிற் பிரமாதி கள்மிகு சத்தி
கதியிற் கரணங் கலைவை கரியே.

1924.
செய்திடும் விந்துபே தத்திறன் ஐயைந்துஞ்
செய்திடு நாதபே ததிற னாவாறுஞ்
செய்திடு மற்றவை யீரிரண் டிற்றிறஞ்
செய்திடு மாறாறு சேர்தத் துவங்களே.

1925.
வந்திடு பேத மெலாம்பர விந்து
தந்திடு மாமாயை வாகேசி தற்பரை
உந்து குடிலையோ டேமுறு குண்டலி
விந்துவில் இந்நான்கு மேவா விளங்குமே.

1926.
விளங்கு நிவிர்த்தாதி மேவக ராதி
வளங்கொள் உகார மகாரத் துள்விந்து
களங்கமில் நாதாந்தங் கண்ணினுன் நண்ணி
உளங்கொள் மனாதியுள் அந்தமு மாமே.

1927.
அந்தமும் ஆதியு மாகிப் பராபரன்
வந்த வியாபி யெனலாயு வந்நெறி
கந்தம தாகிய காரண காரியந்
தந்தைங் கருமமுந் தான்செய்யும் வீயமே.

1928.
வீயம தாகிய விந்துவின் சத்தியால்
ஆய வகண்டமும் அண்டமும் பாரிப்பக்
காயஜம் பூதமுங் / காரிய மாயையில்
ஆயிட விந்து அகம்புற மாகுமே.

1929.
புறமகம் எங்கும் புகுந்தொளிர் விந்து
நிறமது வெண்மை நிகழ்நாதஞ் செம்மை
உறமகிழ் சத்தி சிவபாத மாயுட்
டிறனொடு வீடளிக் குஞ்செயற் கொண்டே.

1930.
கொண்டஇவ் விந்து பரமம்போற் கோதற
நின்ற படங்கட மாய்நிலை நிற்றலிற்
கண்டக லாதியின் காரண காரியத்
தண்டம் அனைத்துமாய் மாமாயை யாகுமே.

1931.
அதுவித்தி லேநின்றங் கண்ணிக்கு நந்தி
இதுவித்தி லேயுள வாற்றை யுணரார்
மதுவித்தி லேமல ரன்னம தாகிப்
பொதுவித்தி லேநின்ற புண்ணியன் தானே.

1932.
வித்தினி லன்றி முளையில்லை அம்முளை
வித்தினி லன்றி வெளிப்படு மாறில்லை
வித்தும் முளையும் உடனன்றி வேறல்ல
அத்தன்மை யாகும் அரனெறி காணுமே.

1933.
அருந்திய வன்ன மவைமூன்று கூறாம்
பொருந்து முடன்மனம் போமல மென்னத்
திருந்து முடன்மன மாங்கூறு சேர்ந்திட்
டிருந்தன முன்னாள் இரதம தாகுமே.

1934.
இரத முதலான ஏழ்தாது மூன்றின்
உரிய தினத்தின் ஒருபுற் பனிபோல்
அரிய துளிவிந்து வாகுமேழ் மூன்றின்
மருவிய விந்து வளருங்கா யத்திலே.

1935.
காயத்தி லேமூன்று நாளிற் கலந்திட்டுக்
காயத்துட் டன்மன மாகுங் கலாவிந்து
நேயத்தே நின்றோர்க்கு நீங்கா விடாமையின்
மாயத்தே செல்வோர் மனத்தோ டழியுமே.

1936.
அழிகின்ற விந்து அளவை யறியார்
கழிகின்ற தன்னையுட் காக்கலுந் தேரார்
அழிகின்ற காயத் தழிந்தயர் வுற்றோர்
அழிகின்ற தன்மை யறிந்தொழி யாரே.

21.விந்துஜயம் - போகசர வோட்டம்[தொகு]

1937.
பார்க்கின்ற மாதரைப் பாரா தகன்றுபோய்
ஓர்க்கின்ற வுள்ளம் உருக அழல்மூட்டிப்
பார்க்கின்ற கண்ணாசை பாழ்பட மூலத்தே சேர்க்கின்ற யோகி சிவயோகி தானே.

1938.
தானே யருளாற் சிவயோகந் தங்காது
தானேயக் காமாதி தங்குவோ னும்முட்குந்
தானே யதிகாரந் தங்கிற் சடங்கெடும்
ஊனே யவற்றுள் ளுயிரோம்பா மாயுமே.

1939.
மாயாள் வசத்தே சென்றிவர் வேண்டில்
ஓயா இருபக்கத் துள்வளர் பக்கத்துள்
தீயாவெண் ணாளின்ப மேற்பணி மூன்றிரண்
டாயா அபரத்து ளாதிநாள் ஆறாமே.

1940.
ஆறைந்து பன்னொன்று மன்றிச் சகமார்க்கம்
வேறன்பு வேண்டுவோர் பூவரிற் பின்னந்தோ
டேறும் இருபத் தொருநா ளிடைத்தோங்கும்
ஆறின் மிகுத்தோங்கும் அக்காலஞ் செய்யவே.

1941.
செய்யும் அளவிற் றிருணன் முகூர்த்தமே
எய்யுங் கலைகாலம் இந்து பருதிகால்
நையுமிடத் தோடி னன்காம நூல்நெறி
செய்க வலமிடந் தீர்ந்து விடுக்கவே.

1942.
விடுங்காண் முனைந்திந் திரியங்க ளைப்போல்
நடுங்கா திருப்பானும் ஐயைந்து நண்ணப்
படுங்காதன் மாதின்பாற் பற்றற விட்டுக்
கடுங்காற் கரணங் கருத்துறக் கொண்டே.

1943.
கொண்ட குணனே நலனேநற் கோமளம்
பண்டை யுருவே பகர்வாய் பவளமே
மிண்டு தனமே மிடையே விடும்போதிற்
கண்ட கரணமுட் செல்லக்கண் டேவிடே.

1944.
விட்டபின் கர்ப்பவுற் பத்தி விதியிலே
தொட்டுறுங் காலங்கள் தோன்றக் கருதிய
கட்டிய வாணாள்சா நாள்குணங் கீழ்மைசீர்ப்
பட்டநெறியிதென் றெண்ணியும் பார்க்கவே.

1945.
பார்த்திட்டு வையத்துப் பரப்பற் றுருப்பெற்று
வார்ச்செற்ற கொங்கை மடந்தையை நீக்கியே
சேர்த்துற் றிருதிங்கள் சேரா தகலினும்
மூப்புற்றே பின்னாளி லாமெல்லா முள்ளவே.

1946.
வித்திடு வோர்க்கன்றி மேலோர் விளைவில்லை
வித்திடு வோர்க்கன்றி மிக்கோ ரறிவில்லை
வித்தினில் வித்தை விதற வுணர்வரேல்
மத்தி லிருந்தோர் மாங்கனி யாமே.

1947.
கருத்தினில் அக்கர மாயுவு மியாவுங்
கருத்துளன் ஈசன் கருவுயி ரோடுங்
கருத்தது வித்தாய்க் காரண காரியங்
கருத்துறு மாறிவை கற்பனை தானே.

1948.
ஒழியாத விந்து வுடன்நிற்க நிற்கும்
அழியாப் பிராணன் அதிபலஞ் சத்தி
ஒழியாத புத்தி தபஞ்செப மோனம்
அழியாத சித்தியுண் டாம்விந்து வற்றிலே.

1949.
வற்ற அனலைக் கொளுவி மறித்தேற்றித்
துற்ற சுழியனல் சொருகிச் சுடருற்று
முற்று மதியத் தமுதை முறைமுறை
செற்றுண் பவரே சிவயோகி யாரே.

1950.
யோகியும் ஞானியும் உத்தம சித்தனும்
போகியும் ஞான புரந்தர னாவோனும்
மோக முறினு முதையமிர் துண்போனும்
ஆகிய விந்து அழியாத அண்ணலே.

1951.
அண்ணல் உடலாகி யவ்வனல் விந்துவும்
மண்ணிடை மாய்க்கும் பிராணனாம் விந்துவும்
கண்ணுங் கனலிடைக் கட்டிக் கலந்தெரித்
துண்ணில் அமிர்தாகி யோகிக் கறிவாமே.

1952.
அறியா தழிகின்ற வாதலால் நாளும்
பொறியால் அழிந்து புலம்புகின் றார்கள்
அறிவாய் நனவி லதீதம் புரியச்
செறிவா யிருந்து சேரவே மாயுமே.

1953.
மாதரை மாய வருங்கூற்ற மென்றுன்னக்
காதல தாகிய காமங் கழிந்திடுஞ்
சாதலு மில்லை சதகோடி யாண்டினுஞ்
சோதியி னுள்ளே துரிசறுங் காலமே.

1954.
காலங் கடந்தவன் காண்விந்து செற்றவன்
காலங் கடந்தழிந் தான்விந்து செற்றவன்
காலங் களின்விந்து செற்றுற்ற காரிகை
காலின்கண் வந்த கலப்பறி யாரே.

1955.
கலக்குநாள் முன்னாள் தன்னிடைக் காதல்
நலத்தக வேண்டிலந் நாரி யுதரக்
கலத்தின் மலத்தைத்தண் சீதத்தைப் பித்தை
விலக்கு வனசெய்து மேலணை வீரே.

1956.
மேலா நிலத்தெழு விந்துவும் நாதமுங்
கோலால் நடத்திக் குறிவழி யேசென்று
பாலாம் அமிர்துண்டு பற்றறப் பற்றினால்
மாலா னதுமாள மாளுமவ் விந்துவே.

1957.
விந்து விளைவும் விளைவின் பயன்முற்றும்
அந்த வழிவும் அடக்கத்தில் ஆக்கமும்
நந்திய நாதமும் நாதத்தாற் பேதமுந்
தந்துணர் வோர்க்குச் சயமாகும் விந்துவே.

1958.
விந்துவெண் வீசத்தை மேவிய மூலத்து
நந்திய அங்கியி னாலே நயந்தெரித்
தந்தமில் பானு அதிகண்ட மேலேற்றிச்
சந்திரன் சார்புறத் தண்ணமு தாமே.

1959.
அமுதச் சசிவிந்து வாம்விந்து மாள
அமுதப் புனலோடி அங்கியின் மாள
அமுதச் சிவபோகம் ஆதலாற் சித்தி
அமுதப் பிலாவன மாங்குறும் யோகிக்கே.

1960.
யோகமவ் விந்து ஒழியா வகைபுணர்ந்
தாகம் இரண்டுங் கலந்தாலு மாம்குறாப்
போகஞ் சிவபோகம் போகிநற் போகமா
மோகங் கெடமுயங் கார்மூடர் மாதர்க்கே.

1961.
மாத ரிடத்தே செலுத்தினும் அவ்விந்து
காதலி னால்விடார் யோகங் கலந்தவர்
மாதர் உயிராசை கைக்கொண்டே வாடுவர்
காதலர் போன்றங்ஙன் காலாஞ் சாற்றிலே.

1962.
சாற்றிய விந்து சயமாகுஞ் சத்தியால்
ஏற்றிய மூலத் தழலை யெழமூட்டி
நாற்றிசை யோடா நடுநாடி நாதத்தோ
டாற்றி யமுதம் அருந்தவிந் தாமே.

1963.
விந்துவும் நாதமும் மேவக் கனல்மூல
வந்த வனன்மயிர்க் கால்தோறும் மன்னிடச்
சிந்தனை மாறச் சிவமக மாகவே
விந்துவு மாளுமெய்க் காயத்தில் வித்திலே.

1964.
வித்துக்குற் றுண்பான் விளைவறி யாதவன்
வித்துக்குற் றுண்ணாமல் வித்துச்சுட் டுண்பவன்
வித்துக்குற் றுண்பானில் வேறல னீற்றவன்
வித்துக்குற் றுண்ணாமல் வித்துவித் தானன்றே.

1965.
அன்னத்தில் விந்து அடங்கும் படிகண்டு
மன்னப் பிராணனாம் விந்து மறித்திட்டு
மின்னொத்த விந்துநா தாந்தத்து விட்டிட
வன்னத் திருவிந்து மாயுங்கா யத்திலே.

1966.
அன்னப் பிராணனென் றார்க்கு மிருவிந்து
தன்னை யறிந்துண்டு சாதிக்க வல்லார்க்குச்
சொன்ன மாமுருத் தோன்றும்எண் சித்தியாம்
அன்னவ ரெல்லாம் அழிவற நின்றதே.

1967.
நின்ற சிகாரம் நினைக்கும் பிராணனாய்
ஒன்று மகாரம் ஒருமூன்றோ டொன்றவை
சென்று பராசத்தி விந்து சயந்தன்னை
ஒன்ற வுரைக்க வுவதேசந் தானே.

1968.
தானே யுபதேசந் தானல்லா தொன்றில்லை
வானே யுயர்விந்து வந்த பதினான்கு
மானே ரடங்க அதன்பின்பு புத்தியுந்
தானே சிவகதி தன்மையு மாமே.

1969.
விந்துவும் நாதமும் விளைய விளைந்தது
வந்தஇப் பல்லுயிர் மன்னுயி ருக்கெலாம்
அந்தமும் ஆதியு மாமந் திரங்களும்
விந்து அடங்க விளையுஞ் சிவோகமே.

1970.
வறுக்கின்ற வாறு மனத்துலா வெற்றி
நிறுக்கின்ற வாறுமந் நீள்வரை யொட்டிப்
பொறிக்கின்ற வாறுமப் பொல்லா வினையை
அறுக்கின்ற நாள்வரும் அத்திப் பழமே.

1971.
விந்துவும் நாதமும் மேவி யுடன்கூடிச்
சந்திர னோடே தலைப்படு மாயிடில்
அந்தர வானத் தமுதம்வந் தூறிடும்
அங்குதி மந்திரம் ஆகுதி யாகுமே.

1972.
மனத்தொடு சத்து மனஞ்செவி யென்ன
இனத்தெழு வார்கள் இசைந்தன நாடி
மனத்தில் எழுகின்ற வாக்கு வசனங்
கனத்த இரதமக் காமத்தை நாடிலே.

1973.
சத்தமுஞ் சத்த மனமும் மனக்கருத்
தொத்தறி கின்ற விடமும் அறிகிலர்
மெய்த்தெறி கின்ற விடமறி வாளர்க்கு
அத்தன் இருப்பிடம் அவ்விடந் தானே.

1974.
உரமடி மேதினி யுந்தியி லப்பாம்
விரவிய தன்முலை மேவியகீ ழங்கி
கருமுலை மீமிசை கைக்கீழிற் காலாம்
விரவிய கந்தர மேல்வெளி யாமே.

22.ஆதித்த நிலை - அண்டாதித்தன்[தொகு]

1975.
செஞ்சுட ரோன்முத லாகிய தேவர்கள்
மஞ்சுடை மேரு வலம்வரு காரணம்
எஞ்சுட ரீசன் இறைவன் இணையடி
தஞ்சுட ராக வணங்குந் தவமே.

1976.
பகலவன் மாலன் பல்லுயிர்க் கெல்லாம்
புகலவ னாய்நின்ற புண்ணிய நாதன்
இகலற ஏழுல கும்முற வோங்கும்
பகலவன் பல்லுயிர்க் காதியு மாமே.

1977.
ஆதித்தன் அன்பினோ/டாயிர நாமமுஞ்
சோதியி னுள்ளே சுடரொளி யாய்நிற்கும்
வேதியர் வேண்டினும் விண்ணவர் சொல்லினும்
ஆதியில் அன்பு பழுக்கின்ற வாறே.

1978.
தானே யுலகுக்குத் தத்துவ னாய்நிற்குந்
தானே யுலகுக்குத் தையலு மாய்நிற்குந்
தானே யுலகுக்குச் சம்புவு மாய்நிற்குந்
தானே யுலகுக்குத் தண்சுட ராகுமே.

1979.
வலையமுக் கோணம் வட்டம் அறுகோணந்
துலையிரு வட்டந் துய்ய விதமெட்டில்
அலையுற்ற வட்டத்தில் ஈரெட் டிதழா
மலைவற் றுதித்தனன் ஆதித்த னாமே.

1980.
ஆதித்த னுள்ளி லானமுக் கோணத்திற்
சோதித் திலங்குநற் சூரிய னாலாங்
கேத முறுங்கேணி சூரிய னெட்டிற்
சோதிதன் னீட்டிற் சோடசந் தானே.

1981.
ஆதித்த னோடே அவனி யிருண்டது
பேதித்த நாலும் பிதற்றிக் கழிந்தது
சோதிக்குள் நின்று துடியிடை செய்கின்ற
வேதப் பொருளை விளங்குகி லீரே.

1982.
பாருக்கும் கீழே பகலோன் வரும்வழி
யாருக்குங் காணவொண் ணாத அரும்பொருள்
நீருக்குந் தீக்கும் நடுவே யுதிப்பவன்
ஆருக்கும் எட்டாத ஆதித்தன் தானே.

1983.
மண்ணை யிடந்ததின் கீழோடும் ஆதித்தன்
விண்ணை யிடந்து வெளிசெய்து நின்றிடுங்
கண்ணை யிடந்து களிதந்த வானந்தம்
எண்ணுங் கிழமைக் கிசைந்துநின் றானே.

1984.
பாரை யிடந்து பகலோன் வரும்வழி
யாரும் அறியார் அருங்கடை நூலவர்
தீரன் இருந்த திருமலை சூழென்பர்
ஊரை யுணர்ந்தார் உணர்ந்திருந் தாரே.

23.பிண்டாதித்தன்[தொகு]

1985.
நின்றும் இருந்துங் கிடந்தும் நடந்தும்
கன்றாய நந்திக் கருத்துள் இருந்தனன்
கொன்று மலங்கள் குழல்வழி யோடிட
வென்று விளங்கும் விரிசுடர் காணுமே.

1986.
ஆதித்தன் ஓடி யடங்கும் இடங்கண்டு
சாதிக்க வல்லவர் தம்மை யுணர்ந்தவர்
பேதித் துலகம் பிதற்றும் பிதற்றெல்லாம்
ஆதித்த னோடே யடங்குகின் றாரே.

1987.
உருவிப் புறப்பட் டுலகை வலம்வந்து
சொருகிக் கிடக்குந் துறையறி வாரில்லை
சொருகிக் கிடக்குந் துறையறி வாளர்க்
குருகிக் கிடக்குமென் னுள்ளன்பு தானே.

24.மனவாதித்தன்[தொகு]

1988.
எறிகதிர் ஞாயிறு மின்பனி சோரும்
எறிகதிர் சோமன் எதிர்நின் றெறிப்ப
விரிகதி ருள்ளே வியங்குமென் ஆவி
ஒருகதி ராகில் உவாவது வாமே.

1989.
சந்திரன் சூரியன் தான்வரிற் பூசனை
முந்திய பானுவில் இந்துவந் தேய்முறை
அந்த இரண்டும் உபய நிலத்திற்
சிந்தை தெளிந்தார் சிவமாயி னாரே.

1990.
ஆகுங் கலையோ டருக்கன் அனல்மதி
ஆகுங் கலையிடை நான்கென லாமென்பார்
ஆகும் அருக்கன் அனல்மதி யோடொன்ற
ஆகுமப் பூரணை யாமென் றறியுமே.

1991.
ஈரண்டத் தப்பால் இயங்கிய வவ்வொளி
ஓரண்டத் தார்க்கும் உணரா வுணர்வது
பேரண்டத் தூடே பிறங்கொளி யாய்நின்ற
தாரண்டத் தக்கா ரறியத்தக் காரே.

1992.
ஒன்பதின் மேவி யுலகம் வலம்வரும்
ஒன்பது மீசன் இயலறி வாரில்லை
முன்பதின் மேவி முதல்வன் அருளிலார்
இன்ப மிலாரிருள் சூழநின் றாரே. றாரே.

25.ஞானாதித்தன்[தொகு]

1993.
விந்து அபரம் பரமிரண் டாய்விரித்
தந்த அபரம் பரநாத மாகியே
வந்தன தம்மிற் பரங்கலை யாதிவைத்
துந்தும் அருணோ தயமென்ன வுள்ளத்தே.

1994.
உள்ள அருணோ தயத்தெழும் ஓசைதான்
தெள்ளும் பரநாதத் தின்செய லென்பதால்
வள்ளல் பரவிந்து வைகரி யாதிவாக்
குள்ளன ஐங்கலைக் கொன்றாம் உதயமே.

1995.
தேவர் பிரான்திசை பத்துத யஞ்செய்யும்
மூவர் பிரானென முன்னொரு காலத்து
நால்வர் பிரானடு வாயுரை யாநிற்கும்
மேவு பிரான்என்பர் விண்ணவர் தாமே.

1996.
பொய்யிலன் மெய்யன் புவனா பதியெந்தை
மையிருள் நீக்கு மதியங்கி ஞாயிறு
செய்யிருள் நீக்குந் திருவுடை நந்தியென்
கையிருள் நீங்கக் கலந்தெழுந் தானே.

1997.
தனிச்சுட ரெற்றித் தயங்கிருள் நீங்க
அனித்திடு மேலை யருங்கனி யூறல்
கனிச்சுட ராய்நின்ற கயிலையில் ஈசன்
நனிச்சுடர் மேல்கொண்ட வண்ணமு மாமே.

1998.
நேரறி வாக நிரம்பிய பேரொளி
போரறி யாது புவனங்கள் போய்வருந்
தேரறி யாத திசையொளி யாயிடும்
ஆரறி வாரிது நாயக மாமே.

1999.
மண்டலத் துள்ளே மலர்ந்தெழும் ஆதித்தன்
கண்டிடத் துள்ளே கதிரொளி யாயிடுஞ்
சென்றிடத் தெட்டுத் திசையெங்கும் போய்வரும்
நின்றிடத் தேநிலை நேரறி வார்க்கே.

2000.
நாபிக்கண் ணாசி நயன நடுவினுந்
தூபியோ டைந்துஞ் சுடர்விடு சோதியைத்
தேவர்கள் ஈசன் திருமால் பிரமனும்
மூவரு மாக வுணர்ந்திருந் தாரே.

26.சிவாதித்தன்[தொகு]

2001.
அன்றிய பாச இருளுமஞ் ஞானமுஞ்
சென்றிடு ஞானச் சிவப்பிர காசத்தால்
ஒன்று மிருசுட ராம்அரு ணோதயந்
துன்றிருள் நீங்குதல் போலத் தொலைந்ததே.

2002.
கடங்கடந் தோறுங் கதிரவன் தோன்றில்
அடங்கிட மூடில் அவற்றில் அடங்கான்
விடங்கொண்ட கண்டனு மேவிய காயத்
தடங்கிட நின்றது அப்பரி சாமே.

2003.
தானே விரிசுடர் மூன்றுமொன் றாய்நிற்குந்
தானே யயன்மா லெனநின்று தாபிக்குந்
தானே யுடலுயிர் வேறன்றி நின்றுளன்
தானே வெளியொளி தானிருட் டாமே.

2004.
தெய்வச் சுடரங்கி ஞாயிறும் திங்களும்
வையம் புனல்அனல் மாருதம் வானகஞ்
சைவப் பெரும்பதி தாங்கிய பல்லுயிர்
ஐவர்க் கிடமிடை யாறங்க மாமே.

27.பசுவிலக்கணம் - பிராணன்[தொகு]

2005.
உன்னும் அளவில் உணரும் ஒருவனைப்
பன்னு மறைகள் பயிலும் பரமனை
என்னுள் இருக்கும் இளையா விளக்கினை
அன்மை யனென் றறிந்து கொண்டேனே.

2006.
அன்ன மிரண்டுள ஆற்றங் கரையினில்
துன்னி யிரண்டுந் துணைப்பிரி யாதன
தன்னிலை யன்னந் தனியொன்ற தென்றக்கால்
பின்ன மடவன்னம் பேறணு காதே.

28.புருடன்[தொகு]

2007.
வைகரி யாதியு மாயா மலாதியும்
பொய்கரி யான புருடாதி பேதமும்
மெய்கரி ஞானங் கிரியா விசேடத்துச்
செய்கரி யீசன் அனாதியே செய்ததே.

2008.
அணவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்
டணுவில் அணுவை அணுகவல் லார்கட்
கணுவில் அணுவை அணுகலு மாமே.

2009.
படர்கொண்ட ஆலதின் வித்தது போலச்
சுடர்கொண் டணுவினைத் தூவழி செய்ய
இடர்கொண்ட பாச இருளற வோட்டி
நடர்கொண்ட நல்வழி நாடலு மாமே.

2010.
அணுவுள் அவனும் அவனுள் அணுவுங்
கணுவுற நின்ற கலப்ப துணரார்
இணையிலி யீச னவனெங்கு மாகித்
தணிவற நின்றான் சராசரந் தானே

29.சீவன்[தொகு]

2011.
மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிர மாயினால்
ஆவியின் கூறுநூ றாயிரத் தொன்றே.

2012.
ஏனோர் பெருமைய னாயினும் எம்மிறை
ஊனே சிறுமையின் உட்கலந் தங்குளன்
வானோர் அறியு மளவல்லன் மாதேவன்
தானே யறியுந் தவத்தின் அளவே.

2013.
உண்டு தெளிவன் உரைக்க வியோகமே
கொண்டு பயிலுங் குணமில்லை யாயினும்
பண்டு பயிலும் பயில்சீவ னார்பின்னைக்
கண்டு சிவனுருக் கொள்வர் கருத்துளே.

2014.
மாயா வுபாதி வசத்தாகுஞ் சேதனத்
தாய குருவரு ளாலே யதில்தூண்ட
ஓயும் உபாதியோ டொன்றினொன் றுதுயிர்
ஆய துரியம் புகுந்தறி வாகவே.

30.பசு[தொகு]

2015.
கற்ற பசுக்கள் கதறித் திரியினுங்
கொற்ற பசுக்கள் குறிகட்டி மேயினு
முற்ற பசுக்கள் ஒருகுடம் பால்போது
மற்றைப் பசுக்கள் வறள்பசு தானே.

2016.
கொல்லையின் மேயும் பசுக்களைச் செய்வதென்
எல்லை கடப்பித் திறைவ னடிகூட்டி
வல்லசெய் தாற்ற மதித்தபின் அல்லது
கொல்லைசெய் நெஞ்சங் குறிப்பறி யாதே.

31.போதன்[தொகு]

2017.
சீவ னெனச்சிவ னென்னவே றில்லை
சீவ னார்சிவ னாரை யறிகிலர்
சீவ னார்சிவ னாரை யறிந்தபின்
சீவ னார்சிவ னாயிட் டிருப்பரே.

2018.
குணவிளக் காகிய கூத்தப் பிரானும்
மணவிளக் காகிய மன்னுயிர்க் கெல்லாம்
பணவிளக் காகிய பல்தலை நாகங்
கணவிளக் காகிய கண்காணி யாகுமே.

2019.
அறிவாய் அறியாமை நீங்கி யவனே
பொறிவாய் ஒழித்தெங்குந் தானான போதன்
அறிவா யவற்றினுட் டானா யறிவன்
செறிவாகி நின்றச் சீவனு மாமே.

2020.
ஆறாறின் தன்மை அறியா திருந்தேனுக்
காறாறின் தன்மை அறிவித்தான் பேர்நந்தி
ஆறாறின் தன்மை அருளால் அறிந்தபின்
ஆறாறுக் கப்புற மாகி நின்றானே.

2021.
சிவமா கியஅருள் நின்றறிந் தோரார்
அவமா மலமைந்து மாவ தறியார்
தவமான செய்து தலைப்பறி கின்றார்
நவமான தத்துவ நடகி லாரே.

2022.
நாடோறும் ஈசன் நடத்துந் தொழில்உன்னார்
நாடோறும் ஈசன் நயந்தூட்டல் நாடிடார்
நாடோறும் ஈசன்நல் லோர்க்கருள் நல்கலால்
நாடோறும் நாடார்கள் நாள்வினை யாளரே.

32.ஐந்திந்திரியம் அடக்கும் அருமை[தொகு]

2023.
ஆக மதத்தன ஐந்து களிறுள
ஆக மதத்தறி யோடணை கின்றில
பாகனு மெய்த்தவை தாமும் இளைத்தபின்
யோகு திருந்துதல் ஒன்றறி யோமே.

2024.
கருத்தினன் னூல்கற்றுக் கால்கொத்திப் பாகன்
திருத்தலும் பாய்மாத் திகைத்தன்றிப் பாயா
எருத்துற வேறி யிருக்கலு மாங்கே
வருத்தினும் அம்மா வழிநட வாதே.

2025.
புலமைந்து புள்ளைந்து புட்சென்று மேயும்
நிலமைந்து நீரைந்து நீர்மையும் ஐந்து
குலமொன்று கோல்கொண்டு மேய்ப்பான் ஒருவன்
உலமந்து போம்வழி யொன்பது தானே.

2026.
அஞ்சுள சிங்கம் அடவியில் வாழ்வன அஞ்சும்போய் மேய்ந்துதம் அஞ்சக மேபுகும் அஞ்சின் உகிரும் எயிறும் அறுத்திட்டால் எஞ்சா திறைவனை எய்தலு மாமே.

2027.
டஐவர் அமைச்சருள் தொண்ணூற் றறுவர்கள்
ஐவரு மைந்தரு மாளக் கருதுவர்
ஐவரு மைந்து சினத்தோடே நின்றிடில்
ஐவர்க் கிறையிறுத் தாற்றகி லோமே.

2028.
சொல்லகில் லேன்சுடர்ச் சோதியை நாடொறுஞ்
சொல்லகில் லேன்திரு மங்கையும் அங்குள
வெல்லகில் லேன்புலன் ஐந்துடன் தன்னையுங்
கொல்லநின் றோடுங் குதிரையொத் தேனே.

2029.
எண்ணிலி யில்லி யுடைத்தவ் விருட்டறை
எண்ணிலி யில்லியோ டேகிற் பிழைதரும்
எண்ணிலி யில்லியோ டேகாமை காக்குமேல்
கண்ணிலி யில்லதோர் இன்பம தாமே.

2030.
விதியின் பெருவலி வேலைசூழ் வையந்
துதியின் பெருவலி தொல்வான் உலகம்
மதியின் பெருவலி மானுடர் வாழ்க்கை
நிதியின் பெருவலி நீர்வலி தானே.

33.ஐந்திரியம் அடக்கும் முறைமை[தொகு]

2031.
குட்ட மொருமுழ முள்ள தரைமுழம்
வட்டம் அமைந்ததோர் வாவியுள் வாழ்வன
பட்டன மீன்பல பரவன் வலைகொணர்ந்
திட்டனன் யாமினி யேதமி லோமே.

2032.
கிடக்கும் உடலிற் கிளரிந் திரியம்
அடக்க லுறுமவன் தானே யமரன்
விடக்கிரண் டின்புற மேவுறு சிந்தை
நடக்கின் நடக்கும் நடக்கு மளவே.

2033.
அஞ்சு மடக்கடக் கென்பர் அறிவிலார்
அஞ்சு மடக்கும் அமரரும் அங்கிலை
அஞ்சு மடக்கில் அசேதன மாமென்றிட்
டஞ்சு மடக்கா அறிவறிந் தேனே.

2034.
முழக்கி எழுவன மும்மத வேழம்
அடக்க அறிவென்னுந் தோட்டியை வைத்தேன்
பிழைத்தன வோடிப் பெருங்கேடு மண்டிக்
கொழுத்தன வேழங் குலைக்கின்ற வாறே.

2035.
ஐந்தில் ஒடுங்கில் அகலிட மாவது
ஐந்தில் ஒடுங்கில் அருந்தவ மாவது
ஐந்தில் ஒடுங்கில் அரன்பத மாவது
ஐந்தில் ஒடுங்கில் அருளுடை யாரே.

3036.
பெருக்கப் பிதற்றிலென் பேய்த்தேர் நினைந்தென்
விரித்த பொருட்கெல்லாம் வித்தாவ துள்ளம்
பெருக்கிற் பெருக்குஞ் சுருக்கிற் சுருக்கும்
அருத்தமும் அத்தனை ஆய்ந்துகொள் வார்க்கே.

2037.
இளைக்கின்ற வாறறிந் தின்னுயிர் வைத்த
கிளைக்கொன்று மீசனைக் கேடில் புகழோன்
தளைக்கொன்ற் நாகமஞ் சாடல் ஒடுக்கத் துளைக்கொண்ட தவ்வழி தூங்கும் படைத்தே.

2038.
பாய்ந்தன பூதங்கள் ஐந்தும் படரொளி
சார்ந்திடு ஞானத் தறியினிற் பூட்டிட்டு
வாய்ந்துகொள் ஆனந்த மென்னும் அருள்செய்யில்
வேய்ந்துகொள் மேலை விதியது தானே.

2039.
நடக்கின்ற நந்தியை நாடொறு முன்னில்
படர்க்கின்ற சிந்தையைப் பைய வொடுக்கிக்
குறிக்கொண்ட சிந்தை குறிவழி நோக்கில்
வடக்கொடு தெற்கு மனக்கோயி லாமே.

2040.
சென்றன நாழிகை நாள்கள் சிலபல
நின்றது நீள்பொருள் நீர்மேல் எழுத்தொத்து
வென்று புலன்கள் விரைந்து விடுமின்கள்
குன்று விழவதில் தாங்கலு மாமே.

2041.
போற்றிசைத் துப்புனி தன்திரு மேனியைப்
போற்றிசெய் மீட்டே புலனைந்தும் புத்தியால்
நாற்றிசைக் கும்பின்னை யாருக்கு நாதனை
ஊற்றுகை யுள்ளத் தொருங்கலு மாமே.

2042.
தரிக்கின்ற நெஞ்சஞ் சகளத்தி னுள்ளே
அரிக்கின்ற ஐவரை யாரும் உணரார்
சிரிக்கின்ற வாறு சிலபல பேசில்
வரிக்கொண்ட மைசூழ் வரையது வாமே.

2043.
கைவிட லாவதொன் றில்லை கருத்தினுள்
எய்தி யவனை யிசையினால் ஏத்துமின்
ஐவ ருடைய அவாவினில் தோன்றிய
பொய்வ ருடைய புலன்களும் ஐந்தே.

34.அசற்குரு நெறி[தொகு]

2044.
உணர்வொன் றிலாமூடன் உண்மையோ ராதோன்
கணுவின்றி வேதா கமநெறி காணான்
பணிவொன் றிலாதோன் பரநிந்தை செய்வோன்
அணுவின் குணத்தோன் அசற்குரு வாமே.

2045.
மந்திர தந்திர மாயோக ஞானமும்
பந்தமும் வீடுந் தரிசித்துப் பார்ப்பவர்
பசு சிந்தனை செய்யாத் தெளிவியா தூண்பொருட்
டந்தக ராவோர் அசற்குரு வாமே.

2046.
ஆமா றறியாதோன் மூடன் அதிமூடன்
காமாதி நீங்காக் கலதி கலதிகட்
காமா றசத்தறி விப்போன் அறிவிலோன்
கோமா னலனசத் தாகுங் குரவனே.

2047.
கற்பாய கற்பங்கள் நீக்காமற் கற்பித்தால்
தற்பாவங் குன்றுந் தனக்கே பகையாகும்
நற்பால் அரசுக்கு நாட்டுக்கும் கேடென்றே
முற்பாலே நந்தி மொழிந்துவைத் தானே.

2048.
குருடர்க்குக் கோல்காட்டிச் செல்லுங் குருடர்
முரணும் பழங்குழி வீழ்வர்கள் முன்பின்
குருடனும் வீழ்வர்கள் முன்பின் னறவே
குருடரும் வீழ்வார் குருடரோ டாகியே.

35.சற்குரு நெறி[தொகு]

2049.
தாடந் தளிக்குந் தலைவனே சற்குரு
தாடந்து தன்னை யறியத் தரவல்லோன்
தாடந்து தத்துவா தீதத்துச் சார்சீவன்
தாடந்து பாசத் தணிக்குமவன் சத்தே.

2050.
தவிரவைத் தான்வினை தன்னடி யார்கோள்
தவிரவைத் தான்சிரத் தோடுதன் பாதந்
தவிரவைத் தான்நமன் தூதுவர் கூட்டந்
தவிரவைத் தான்பிற வித்துயர் தானே.

2051.
கறுத்த இரும்பே கனகம தானான்
மறித்திருடம் பாகா வகையது போலக்
குறித்தஅப் போதே குருவருள் பெற்றான்
மறித்துப் பிறவியில் வந்தணு கானே.

2052.
பாசத்தை நீக்கிப் பரனோடு தன்னையும்
நேசத்து நாடி மலமற நீக்குவோர்
ஆசற்ற சற்குரு வாவோர் அறிவற்றுப்
பூசற் கிரங்குவோர் போதக் குருவன்றே.

2053.
நேயத்தே நிற்கும் நிமலன் மலமற்ற
நேயத்தே நல்கவல் லோனித்தன் சுத்தனே
ஆயத்த வர்தத் துவமுணந் தாங்கற்ற
நேயர்க் களிப்பவன் நீடுங் குரவனே.

2054.
பரிசன வேதி பரிசித்த தெல்லாம்
வரிசை தரும்பொன் வகையாகு மாபோற்
குருபரி சித்த குவலயம் எல்லாந்
திரிமலந் தீர்ந்து சிவகதி யாமே.

2055.
தானே யெனநின்ற சற்குரு சந்நிதி
தானே யெனநின்ற தன்மை வெளிப்படில்
தானே தனைப்பெற வேண்டுஞ் சதுர்பெற
ஊனே யெனநினைந் தோர்ந்துகொள் உன்னிலே.

2056.
வரும்வழி மாயா வழியைக் போம்வழி
கருவழி கண்டவர் காணா வழியைப்
பெரும்வழி யாநந்தி பேசும் வழியைக்
குருவழி யேசென்று கூடலு மாமே.

2057.
குரு வென் பவனே வேதாக மங்கூறும்
பரவின்ப னாகிச் சிவயோகம் பாவித்
தொரு சிந்தை யின்றி உயர்பாச நீக்கி
வருநல் குரவன்பால் வைக்கலு மாமே.

2058.
சத்தும் அசத்துஞ் சதசத்துந் தான்காட்டிச்
சித்தும் அசித்துஞ் சிவபரத் தேசேர்த்துச்
சுத்த மசுத்த மறச்சுக மானசொல்
அத்தன் அருட்குரு வாமவன் கூறிலே.

2059.
உற்றிடும் ஐம்மலம் பாச வுணர்வினாற்
பற்றது நாதன் அடியிற் பணிதலாற்
சுற்றிய பேதந் துரியமூன் றால்வாட்டித்
தற்பர மேவுவேர் சாதக ராமே.

2060.
எல்லாம் இறைவன் இறைவி யுடனின்பம்
வல்லார் புலனும் வருங்கால் உயிர்தோன்றிச்
சொல்லா மலமைந் தடங்கியிட் டோங்கியே
சொல்லாச் சிவகதி சேர்தல் விளையாட்டே.

2061.
ஈனப் பிறவியில் இட்டது மீட்டூட்டித்
தானத்து ளிட்டுத் தனையூட்டித் தாழ்த்தலும்
ஞானத்தின் மீட்டலும் நாட்டலும் வீடுற்று
மோனத்துள் வைத்தலும் முத்தன்றன் செய்கையே.

2062.
அத்த னருளின் விளையாட் டிடஞ்சடஞ்
சித்தொ டசித்தறத் தெளிவித்துச் சீவனைச்
சுத்தனு மாக்கித் துடைத்து மலத்தினைச்
சத்துட னைங்கரு மத்திடுந் தன்மையே.

2063.
ஈசத்து வங்கடந் தில்லையென் றப்புறம்
பாசத்து ளேயென்றும் பாவியும் அண்ணலை
நேசத்து ளேநின்ற நின்மலன் எம்மிறை
தேசத்தை யெல்லாந் தெளியவைத் தானே.

3064.
மாணிக்க மாலை மலர்ந்தெழு மண்டலம்
ஆணிப்பொன் னின்றங் கமுதம் விளைந்தது
பேணிக்கொண் டுண்டார் பிறப்பற் றிருந்தார்
ஊணுக் கிருந்தார் உணராத மாக்களே.

3065.
அசத்தொடு சத்தும் அசத்சத்து நீங்க
இசைத்திடு பாசப்பற் றீங்கறு மாறே
அசைத்திரு மாயை அணுத்தானு மாங்கே
இசைத்தானு மொன்றறி விப்போன் இறையே.

2066.
ஏறு நெறியே மலத்தை எரித்தலால்
ஈறில் உரையால் இருளை யறுத்தலான்
மாறில் பசுபாசம் வாட்டலால் வீடுக
கூறு பரனே குருவாம் இயம்பிலே.

36.கூடாவொழுக்கம்[தொகு]

2067.
கண்காணி யில்லென்று கள்ளம் பலசெய்வார்
கண்காணி யில்லா விடமில்லை காணுங்கால்
கண்காணி யாகக் கலத்தெங்கு நின்றானைக்
கண்காணி கண்டார் களவொழிந் தாரே.

2068.
செய்தான் அறியுஞ் செழுங்கடல் வட்டத்துப்
பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள்
மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்வன்
மைதாழ்ந் திலங்கு மிடறுடை யோனே.

2069.
பத்திவிற் றுண்டு பகலைக் கழிவிடு
மத்தகர்க் கன்றோ மறுபிறப் புள்ளது
வித்துக்குற் றுண்டு விளைபுலம் பாழ்செய்யும்
பித்தர்கட் கென்றும் பிறப்பில்லை தானே.

2070.
வடக்கு வடக்கென்பர் வைத்ததொன் றில்லை
நடக்க வுறுவரே ஞானமி லாதார்
வடக்கில் அடங்கிய வையகம் எல்லாம்
அகத்தில் அடங்கும் அறிவுடை யோர்க்கே.

2071.
காயக் குழப்பனைக் காயநன் னாடனைக்
காயத்தி னுள்ளே கமழ்கின்ற நந்தியைத்
தேயத்து ளேயெங்குந் தேடித் திரிவர்கள்
காயத்துள் நின்ற கருத்தறி யாரே.

2072.
கண்காணி யாகவே கையகத் தேயெழுங்
கண்காணி யாகக் கருத்து ளிருந்திடுங்
கண்காணி யாகக் கலந்து வழிசெய்யுங்
கண்காணி யாகிய காதலன் தானே.

2073.
கன்னி யொருசிறை கற்றோர் ஒருசிறை
மன்னிய மாதவஞ் செய்வோர் ஒருசிறை
தன்னியல் புன்னி யுணர்ந்தோர் ஒருசிறை
என்னிது ஈசன் இயல்பறி யாரே.

2074.
காணாத கண்ணிற் படலமே கண்ணொளி
காணாத வர்கட்குங் காணாத வவ்வொளி
காணாத வர்கட்குங் கண்ணும் பெருங்கண்ணைக்
காணாது கண்டார் களவொழிந் தாரே.

2075.
பித்தன் மருந்தால் தெளிந்து பிரகிருதி
உய்த்தொன்று மாபோல் விழியுந்தன் கண்ணொளி
அத்தன்மை யாதல்போல் அந்தி அருள்தரச்
சித்தம் தெளிந்தேன் செயலொழிந் தேனே.

2076.
பிரான்மய மாகப் பெயர்ந்தன எட்டும்
பராமய மென்றெண்ணிப் பள்ளி யுணரார்
சுராமய முன்னிய சூழ்வினை யாளர்
நிராமய நினைப்பொழிந் தாரே.

2077.
ஒன்றிரண் டாகிநின் றொன்றியொன் றாயினோர்க்
கொன்றும் இரண்டும் ஒருகாலுங் கூடிடா
ஒன்றிரண் டென்றே யுரைதரு வோர்க்கெலாம்
ஒன்றிரண் டாய்நிற்கும் ஒன்றோடொன் றானதே.

2078.
உயிரது நின்றால் உணர்வெங்கு நிற்கும்
அயரறி வில்லையா லாருடல் வீழும்
உயிரும் உடலும் ஒருங்கிக் கிடக்கும்
பயிருங் கிடந்துள்ளப் பாங்கறி யாரே.

2079.
உயிரது வேறா யுணர்வெங்கு மாகும்
உயிரை யறியில் உணர்வறி வாகும்
உயிரன் றுடலை விழுங்கு முணர்வை
அயரும் பெரும்பொரு ளாங்கறி யாரே.

2080.
உலகாணி யொண்சுடர் உத்தம சித்தன்
நிலவாணி ஐந்தினுள் நேருற நிற்குஞ்
சிலவாணி யாகிய தேவர் பிரானைத்
தலைவாணி செய்வது தன்னை யறிவதே.

2081.
தானந்த மாமென நின்ற தனிச்சுடர்
ஊனந்த மாயுல காய்நின்ற வொண்சுடர்
தேனந்த மாய்நின்ற சிற்றின்ப நீயொழி
கோனந்த மில்லாக் குணத்தரு ளாமே.

2082.
உன்முத லாகிய வூனுயிர் உண்டெனுங்
கன்முத லீசன் கருத்தறி வாரில்லை
நன்முத லேறிய நாம மறநின்றால்
தன்முத லாகிய தத்துவ மாமே.

2083.
இந்தியம் அந்தக் கரண மிவையுயிர்
வந்தன சூக்க வுடலன்று மானன்று
தந்திடும் மவ்வியத்தத் தால்தற் புருடனு
முந்துள மன்னுமா றாறு முடிவிலே.

37.கேடுகண்டு இரங்கல்[தொகு]

2084.
வித்துப் பொதிவார் விதைவிட்டு நாற்றுவார்
அற்றதம் வாணாள் அறிகிலாப் பாவிகள்
உற்ற வினைத்துயர் ஒன்றும் அறிகிலார்
முற்றொளி தீமுன் னீநின்ற வாறே.

2085.
போது சடக்கெனப் போகின் றதுகண்டும்
வாதுசெய் தென்னோ மனிதர் பெறுவது
நீதியு ளேநின்று நின்மலன் தாள்பணிந்
தாதியை அன்பில் அறியகில் லார்களே.

2086.
கடன்கொண்டு நெற்குத்துக் கையரை யூட்டி
உடம்பினை யோம்பி உயிராத் திரிவார்
தடங்கொண்ட சாரல் தழல்முரு டேறி
இடங்கொண் டுடலார் கிடக்கின்ற வாறே.

2087.
விரைந்தன்று நால்வர்க்கு மெய்ப்பதி சூழ்ந்து
புரந்தகல் லால்நிழற் புண்ணியன் சொன்ன
பரந்தன்னை யோராப் பழிமொழி யாளர்
உரந்தன்மை யாக வொருங்கிநின் றார்களே.

2088.
நின்ற புகழும் நிறைதவத் துண்மையும்
என்றுமெம் மீசன் அடியவர்க் கேநல்கும்
அன்றி யுலக மதுவிது தேவென்று
குன்றுகை யாலே குறைப்பட்ட வாறே.

2089.
இன்பத்து ளேபிறந் தின்பத்து ளேவளர்ந்
தின்பத்து ளேநினைக் கின்ற திதுமறந்
துன்பத்து ளேசிலர் சோறொடு கூறையென்று
துன்பத்து ளேநின்று தூங்குகின் றார்களே.

2090.
பெறுதற் கரிய பிறவியைப் பெற்றும்
பெறுதற் கரிய பிரானடி பேணார்
பெறுதற் கரிய பிராணிகள் எல்லாம்
பெறுதற் கரியதோர் பேறிழந் தாரே.

2091.
ஆர்வ மனமும் அளவில் இளமையும்
ஈரமும் நல்லவென் றின்புறு காலத்துத்
தீர வருவதோர் காமத் தொழில்நின்று
மாதவன் இன்ப மறந்தெழிந் தார்களே.

2092.
இப்பரி சேயிள ஞாயிறு போலுரு
அப்பரி சங்கியின் உள்ளுறை யம்மானை
இப்பரி சேகம லத்துறை யீசனை
மெய்ப்பரி சேவின வாதிருந் தோமே.

2093.
கூடகில் லார்குரு வைத்த குறிகண்டு
நாடகில் லார்நயம் பேசித் திரிவர்கள்
பாடகில் லாரவன் செய்த பரிசறிந்
தாடவல் லாரவர் பேறெது வாமே.

2094.
நெஞ்சு நிறைந்தங் கிருந்த நெடுஞ்சுடர்
நஞ்செம் பிரானென்று நாதனை நாடொறுந்
துஞ்சு மளவுந் தொழுமின் தொழாவிடில்
அஞ்சற்று விட்டதோர் ஆனையு மாமே.

2095.
மிருக மனிதர் மிக்கோர் பறவை
ஒருவர்செய் தன்புவைத் துன்னாத தில்லை
பருகுவ ரோடுவர் பார்ப்பயன் கொள்வர்
திருமரு மாதவஞ் சேர்ந்துணர்ந் தாரே.

2096.
நீதியி லோர்பெற்ற பொன்போல் இறைவனைச்
சோதியி லாருந் தொடர்ந்தறி வாரில்லை
ஆதி பயனென் றமரர் பிரானென்று
நாதியே வைத்தது நாடுகின் றேனே.

2097.
இருந்தேன் மலரளைந் தின்புற வண்டு
பெருந்தேன் இழைக்கின்ற பெற்றிமை யோரார்
வருந்தேன் நுகராது வாய்புகு தேனை
அருந்தேனை யாரும் அறியகி லாரே.

2098.
கருத்தறி யாது கழிந்தன காலம்
அருத்தியுள் ளான்அம ராபதி நாதன்
ஒருத்தனுள் ளானுல கத்துயிர்க் கெல்லாம்
வருத்திநில் லாது வழுக்குகின் றாரே.

2099.
குதித்தோடிப் போகின்ற கூற்றமுஞ் சார்வாய்
விதித்தன நாட்களும் வீழ்ந்து கழிந்த
விதித்திருந் தென்செய்தீ ராறுதி ராகிற்
கொதிக்கின்ற கூழில் துடுப்பிட லாமே.

2100.
கரையரு காறாக் கழனி விளைந்த
திரையரு காமுன்னம் சேர்ந்தின்பம் எய்தும்
வரையரு கூறிய மாதவ நோக்கின்
நரையுரு வாச்செல்லு நாளில வாமே.

2101.
வரவறி வானை மயங்கிருண் ஞாலத்
திரவறி வானை யெழுஞ்சுடர்ச் சோதியை
அரவறி வார்முன் னொருதெய்வ மென்று
விரவறி யாமலே மேல்வைத்த வாறே.

38.இதோபதேசம்[தொகு]

2102.
மறந்தொழி மண்மிசை மன்னாப் பிறவி
இறந்தொழி காலத்தும் ஈசனை உள்கும்
பறந்தல மந்து படுதுயர் தீர்ப்பான்
சிறந்த சிவநெறி சிந்தைசெய் யீரே.

2103.
செல்லு மளவுஞ் செலுத்துமின் சிந்தையை
வல்ல பரிசால் உரைமின்கள் வாய்மையை
இல்லை யெனினும் பெரிதுளன் எம்மிறை
நல்ல வரனெறி நாடுமி னீரே.

2104.
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி யில்லைநஞ் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந் துய்மினே.

2105.
போற்றிசெ யந்தண் கயிலைப் பொருப்பனை
நாற்றிசைக் குந்நடு வாய்நின்ற நம்பனைக்
காற்றிசைக் குங்கமழ் ஆக்கையைக் கைக்கொண்டு
கூற்றுதைத் தான்றன்னைக் கூறிநின் றுய்மினே.

2106.
இக்காய நீக்கி யினியொரு காயத்திற்
புக்குப் பிறவாமற் போம்வழி நாடுமின்
எக்காலத் திவ்வுடல் வந்தெமக் கானதென்
றக்கால முன்ன அருள்பெற லாமே.

2107.
போகின்ற வாறே புகுகின்ற அப்பொருள்
ஆகின்ற போது மரனறி வானுளன்
சாகின்ற போதுந் தலைவனை நாடுமின்
ஆகின்ற அப்பொருள் அக்கரை யாகுமே.

2108.
பறக்கின்ற வொன்று பயனுற வேண்டின்
இறக்கின்ற காலத்தும் ஈசனை யுள்குஞ்
சிறப்பொடு சேரும் சிவகதி பின்னைப்
பிறப்பொன் றிலாமையும் பேருல காமே.

2109.
கூடியும் நின்றுந் தொழுதெம் மிறைவனைப்
பாடியு ளேநின்று பாதம் பணிமின்கள்
ஆடியு ளேநின் றறிவுசெய் வார்கட்கு
நீடிய வீற்றுப் பசுவது வாமே.

2110.
விடுகின்ற சீவனார் மேலெழும் போது
நடுநின்று நாடுமின் நாதன்தன் பாதங்
கெடுகின்ற வல்வினை கேடில் புகழோன்
இடுகின்றான் உம்மை இமயவ ரோடே.

2111.
ஏறுடை யாயிறை வாஎம்பி ரானென்று
நீறிடு வாரடி யார்நிகழ் தேவர்கள்
ஆறணி செஞ்சடை யண்ணல் திருவடி
வேறணி வார்க்கு வினையில்லை தானே.

2112.
இன்புறு வீர்அறிந் தேஎம் இறைவனை
அன்புறு வீர்தவஞ் செய்யுமெய்ஞ் ஞானத்துப்
பண்புறு வீர்பிற வித்தொழி லேநின்று
தல்குர துன்புறு பாசத் துழைத்தொழிந் தீரே. பு

2113.
மேற்கொள்ள லாவதோர் மெய்த்தவம் ஒன்றுண்டு
மேற்கொள்ள லாவதோர் மெய்த்தாளும் ஒன்றுண்டு
மேற்கொள்ள லாவதோர் மெய்ந்நெறி ஒன்றுண்டு
மேற்கொள்ள லாம்வண்ணம் வேண்டிநின் றோர்க்கே

2114. சார்ந்தவர்க் கின்பங் கொடுக்குந் தழல்வண்ணன்
பேர்ந்தவர்க் கின்னாப் பிறவி கொடுத்திடுந்
கூர்ந்தவர்க் கங்கே குரைகழல் காட்டிடுஞ்
சேர்ந்தவர் தேவரைச் சென்றுணர் வாரே.

2115.
முத்தியை ஞானத்து முத்தமிழ் ஓசையை
எத்தனை காலமும் ஏத்துவர் ஈசனை
நெய்த்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன்
அத்தகு சோதி யதுவிரும் பீரே.

2116.
நியமத்த னாகிய நின்மலன் வைத்த
உகமெத் தனையென் றொருவருந் தேறார்
பவமத்தி லேவந்து பாய்கின்ற தல்லாற்
சிவமத்தை யொன்றுந் தெளியகில் லாரே.

2117.
இங்கித்தை வாழ்வு மெனைத்தோ ரகிதமுந்
துஞ்சொத்த காலத்துத் தூய்மணி வண்ணனை
விஞ்சத் துறையும் விகிர்தா எனநின்னை
நஞ்சற் றவர்க்கன்றி நாடவொண் ணாதே.

2118.
பஞ்சமு மாம்புவி சற்குரு பால்முன்னி
வஞ்சக ரானவர் வைகில் அவர்தம்மை
அஞ்சுவன் நாதன் அருநர கத்திடுஞ்
செஞ்சநிற் போரைத் தெரிசிக்கச் சித்தியே.

2119.
சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர்
அவனை வழிபட்டங் காமாறொன் றில்லை
அவனை வழிபட்டங் காமாறு காட்டுங்
குருவை வழிபடிற் கூடலு மாமே.

2120.
நரருஞ் சுரரும் பசுபாச நண்ணிக்
கருமங்க ளாலே கழிதலிற் கண்டு
குருவென் பவன்ஞானி கோதில னானாற்
பரமென்றல் அன்றிப் பகர்வொன்று மின்றே.

2121.
ஆட்கொண் டவர்தனி நாயகன் அன்புற
மேற்கொண் டவர்வினை போயற நாடொறும்
நீர்க்கின்ற செஞ்சடை நீளன் உருவத்தின்
மேற்கொண்ட வாறலை வீவித்து ளானே.