திருமூல நாயனார் ஞானம்
நூல் 19
திருமூல நாயனார் ஞானம்
நூல் பக்கம் 308
1-2
[தொகு]1
அடியாகி அண்டர் அண்டத்து அப்பால் ஆகி
- அகாரம் எனும் எழுத்ததுவே பாதமாகி
முடியாகி நடுவாகி மூலம் தன்னில்
- முப்பொருளும் தானாகி முதலுமாகிப்
படியாய் முப்பாழற்றுப் படிக்கும் அப்பால்
- படி கடந்த பரஞ்சோதிப் பதியும் ஆகி
அடியாகும் மூலம் அதே அகாரமாகி
- அவன் அவளாய் நின்ற நிலை அணுவதாமே
2
அதுவாகி அவன் அவளாய் எல்லாம் ஆகி
- அடி நடுவு முடிவாகி அகண்டமாகிப்
பொதுவாகிப் பல்லுயிர்கள் அனைத்துக் கெல்லாம்
- புகலிடமாய் எப்பொருட்கும் மூலம் ஆகி
மதுவாகி வண்டாகிச் சுவையுமாகி
- மலராகி மணமாகி மதிக்க ஒண்ணா
அதுவாகும் அகாரமதே மூலமாகி
- அண்டம் எல்லாம் தாங்கி நின்ற அம் மூலம்மே
3-4
[தொகு]3
மூலமெனும் ஆதார வட்டம் தானே
- முச்சுடரும் முக்கோண மூன்று நாடிச்
சீலமெனும் சிவலிவ்க பாத தீர்த்தம்
- திருவடியும் திருமேனி நடமும் ஆகும்
கோலமுடன் அண்டம் எல்லாம் தாங்கிக் கொண்டு
- கொழுந்து விட்ட கம்பமதாய் மேலே நோக்கி
ஆலமுண்ட கண்டம் எலாம் தானாய் நின்ற
- அகார முதல் அவ்வெழுத்தை அறிந்து பாரே
4
அறிந்ததுவும் தற்பரமே அகாரம் ஆகும்
- அறிவுடைய உகாரம் சிற்பரம தாகும்
பிறந்ததுவும் மூலகம் எலாம் சமயம் தானாம்
- பேதமெனும் கருவிவகை எல்லாம் ஆகும்
அறிந்ததுவும் அகாரமெனும் பாதம் தன்னை
- அடிமுடி என்று அனுதினமும் அறிந்து நோக்கே
5-6
[தொகு]5
நோக்கமுடன் மூலமெனும் பாதம் தன்னை
- நுண்பொருளாம் சிற்பரத்தினூடே நோக்கும்
தீர்க்கமுடன் ஆதார வகையும் தாண்டிச்
- திருநயனம் நாசி நெற்றி நடுவே பார்த்துப்
போக்கறிந்து இங்கு இந்த நிலை நோக்க வல்லார்
- புரிசடையோன் தன்னுடைய புதல்வர் ஆவார்
ஆக்கமுடன் அருட்சுடர் போல் குருவைத் தானே
- அனுதினமும் நோக்கி நிற்பார் ஆசானாமே
6
ஆசானும் ஈசானும் ஒன்றே ஆகும்
- அவன் அவளும் ஒன்றாகும் அதுதானாகும்
பேசாத மந்திரமும் இதுவே யாகும்
- பேரொளியின் வடிவாகும் பேரும் ஆகும்
நேசாரும் கலைகள் எல்லாம் தானே யாகும்
- நிலையான ஓங்கார பீடமாகும்
ஈசானை ஆசானாய்க் காணும் போக்கிங்கு
- இன்பமுடன் கைலாசம் எய்தலாமே
7-8
[தொகு]7
எய்திய பரசிவத்தின் மூலம் தன்னில்
- இருசுடரும் உதித்து ஒடுங்கும் இடமேயென்று
மெய்தொழியும் சுழுமுனையே கம்பமாகி
- மெய்ப்பொருளாம் சோதியென மேவி நிற்கும்
இவ்வகையே மூலமெனும் பாதம் தன்னை
- இருநேர மற்றிடத்தே இறைஞ்சிக் காணே
காண்பது தான் பேரொளியின் காட்சியாகும்
- காணரிய பொருளாகும் காட்டும் போதே
8
ஆண் பெண்ணாய் அலியாகி அடியுமாகி
- அப்பாலைக்கு அப்பாலாய் அமர்ந்த சோதி
வீண் பயிலும் வேதம் எல்லாம் தேடிக்காணா
- வெறும் பாழதாகியே மேவி நின்றார்
சேண் பயிலும் செக சோதி மூலம் தன்னைத்
- தேடரிய பாதம் என்றே தெளிந்து நோக்கே
9-10
[தொகு]9
தேளிவரிய பாதமது அகாரம் ஆகிச்
- சிற்பரமும் தற்பரமும் தானேயாகி
அழிவரிய சோதியது தானே ஆகி
- அடி நடுவு முடியாகி அமர்ந்து நின்று
மொழிவரிய முதலாகி மூலமாகி
- முச்சுடரும் தானாகி மிடிந்த சோதி
சுழியினிலே மெனையாகிக் கோபமாகிச்
- சொல்லரிய எழுத்தொன்றே தொகுத்துப் பாரீர்
10
தொகுப்பது தாம் மந்திரங்கள் கருவி நூல்கள்
- சொல்லரிய தத்துவங்கள் தம்மை எல்லாம்
வகுத்துடனே இவற்றை எலாம் கண்டு நீங்கி
- வாகான உடல் உயிரை வகையார் கண்டு
பகுப்புடனே சேராமல் பாதம் தன்னை
- பரகதிக்கு வழியெனவே பற்றிக் கொண்டு
விகற்பம் இலா மூலமதில் நின்ற சோதி
- மேலான பாதம் என்றே மேவி நில்லே
11
[தொகு]11
மேவியதோர் சற்குருவின் பாதம் தன்னை
- மெய்ஞானம் என்றதனை மேவிக்கொண்டு
ஆவியுடல் காயம் எல்லாம் அறியது பார்த்தே
- அத்தனார் வடிவம் என்றே அறிந்து கொண்டு
பாவனையுள் ஆனவெல்லாம் விட்டு நீங்கிப்
- பகலிரவு மற்றிடத்தே கருத்தை வைத்துச்
சீவனையும் சிவந்தனையும் ஒன்றாய்த் தானே
- திருமூலர் பாதம் ஒன்றித் திடமாய்க் காணே
- முற்றும்