உள்ளடக்கத்துக்குச் செல்

திரும்பி வந்த மான் குட்டி/வித்தைக் குரங்கு

விக்கிமூலம் இலிருந்து

வித்தைக்குரங்கு

சிவப்புத் துணியிலே மேல்சட்டை, நீலத் துணியிலே கால் சட்டை, பச்சைத் துணியிலே குல்லா-இப்படி வண்ண வண்ண உடையுடன் காட்சியளித்த அந்தக் குரங்கு, கோவிந்தசாமி சொன்னபடி யெல்லாம் செய்யும்.

கோலை நீட்டினால் தாவும், குட்டிக் கரணம் போடும்; மாடு மேய்ப்பவரைப் போலப் பிடரியிலே கோலை வைத்துக் கொண்டு நிற்கும்; தாத்தா மாதிரி தடியை ஊன்றித் தள்ளாடித் தள்ளாடி நடக்கும். பெரியவர்கள் சின்னவர்கள் எல்லோரும் சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பார்கள்.

வித்தை முடியப் போகிற சமயம், “ரங்கா, சுத்தி நிற்கிற புண்ணியவான்களெல்லாம் உன் வித்தையைப் பார்த்துட்டுச் சும்மா போக மாட்டாங்க. தாராளமாகக் காசு கொடுப்பாங்க, அவங்க தரதைச் சலாம் போட்டு வாங்குடா ரங்கா” என்பார் கோவிந்த சாமி.

உடனே ரங்கன் தகரக் குவளையை எடுத்துக் கொண்டு சலாம் போட்டபடி சுற்றிச் சுற்றி வரும். ‘ஆஹா! ஒஹோ’ என்று வேடிக்கை பார்த்தவர்களில் பலர், மெல்ல நழுவி விடுவார்கள்; சில பேர் தான் காசு போடுவார்கள். அதுவும் பெரும்பாலும் ஐந்து பைசாவாகத்தான் இருக்கும்.

ஒரு நாளைக்கு குவளையிலே விழுகிற சில்லறைகளையெல்லாம் சேர்த்து எண்ணிப் பார்த்தால், இரண்டு ரூபாய், மூன்று ரூபாய்தான் இருக்கும். ஒவ்வொரு நாளும் எவ்வளவு பணம் கிடைக்குமோ, அதிலே சரிபாதிக்குப் பொரி, கடலை, தேங்காய்க் கீற்று, வாழைப் பழம். இப்படி ரங்கனுக்குப் பிடித்ததாகப் பார்த்து வாங்கிக் கொடுத்திடுவார் கோவிந்தசாமி. இன்னொரு பாதிப் பணத்திலே அவருக்குத் தேவையான சோறு, பலகாரம், டீ, வெற்றிலை பாக்கு வாங்கிக் கொள்வார். தமக்கென்று அதிகமாக எடுத்துக்கொள்ளவே மாட்டார்!

ரங்கனை அவர் சொந்தப் பிள்ளை மாதிரியே வளர்த்து வந்தார். சில சமயம் அதை இடுப்பிலே தூக்கி வைத்துக்கொண்டு, “ரங்கா, இந்த வயசான காலத்திலே எனக்கு யாரு இருக்கிறாங்க? நீதான் நான் பெத்த பிள்ளை மாதிரி சம்பாதிச்சு என்னைக் காப்பாத்தறாய்” என்று பாசத்தோடு கூறுவார்.

ரங்கனுக்கும் கோவிந்தசாமியிடத்திலே மிகுந்த பிரியம்தான். ஆனாலும் நடுநடுவே அதற்கு ஓர் ஆசை வந்து விடும்!

தினமும் கடைவீதி வழியாகப் போகும்போது அங்கே கடைகளில் குவியல் குவியலாக இருக்கிற பொரி, பட்டாணிக் கடலை, பொட்டுக் கடலை, வேர்க்கடலை, தேங்காய், சீப்புச் சீப்பாகத் தொங்குகிற வாழைப்பழங்கள் முதலியவற்றையெல்லாம் பார்க்கும். உடனே நாக்கிலே எச்சில் ஊறும்.

‘சே, என்ன பொழைப்பு? நான் தினமும்தான் வித்தை செய்கிறேன். குவளை நிறையக் காசு விழுந்தாலும், நான் ஆசைப்படுகிற பொருளை நினைச்ச நேரத்திலே நினைச்ச அளவு தின்ன முடிகிறதா? இவருகிட்டே இருக்கிற வரை இப்படியே இருக்க வேண்டியதுதான். இஷ்டம் போலச் சாப்பிட முடியாது’ என்று அடிக்கடி நினைக்கும்.

அன்று அமாவாசை. நல்ல இருட்டு. கோவிந்த சாமி, பிள்ளையார் கோயில் மண்டபத்திலே குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தார். பக்கத்திலே படுத்திருந்த ரங்கனுக்குத் தூக்கம் வரவில்லை. மெதுவாக இடத்தை விட்டு எழுந்தது. சந்தடியில்லாமல் காலை எட்டிப் போட்டது. கொஞ்ச துரம் போனதும், குடுகுடு என்று ஓட்டம் பிடித்தது. அந்த ஊரைவிட்டே ஓடிவிட்டது!

நடுவிலே இருந்த சின்னச் சின்ன ஊர்களைத் தாண்டி ஒரு நகரத்துக்கு வந்தது. அப்போது விடிந்துவிட்டது. காலையிலேயே வெயில் மிகக் கடுமையாக இருந்ததால், கால் சட்டைப் பைக்குள் ளிருந்த குல்லாயை எடுத்துத் தலையிலே மாட்டிக் கொண்டது ரங்கன்.

நகரத்துக்குள்ளே நுழைகிற போது, அங்கே ஒரு பெரிய மாமரம் இருந்தது. அதிலே காய்களும், பழங்களும் ஏராளமாகத் தொங்கின. அத்துடன், அந்த மரத்திலே ஏழெட்டுக் குரங்குகள், குட்டிகளோடு இருந்தன. உடனே ரங்கனுக்குக் குஷி பிறந்து விட்டது.

ஒரே தாவாகத் தாவி, அந்த மரத்திலே ஏறியது. சட்டையும், குல்லாயுமாக வந்த ரங்கனைக் கண்டதும், அதை யாரோ என்று நினைத்துவிட்டன அந்தக் குரங்குகள்!‘உர். உர். உர்” என்று கத்தி, அதை அடித்து விரட்டி விட்டன.

‘நானும் குரங்கு. அதுகளும் குரங்குகள். என்னைப் பார்த்ததும் ஏன் இப்படிக் கத்தனும்? ஓட ஒட விரட்டனும்?. ஓ! புரியுது, புரியுது. என் உடையைப் பார்த்துத்தான் விரட்டியிருக்கணும் என்று நினைத்தது. உடனே குல்லா, மேல் சட்டை, கால் சட்டையெல்லாவற்றையும் கழற்றி அங்கேயிருந்த ஒரு கால்வாயிலே தூக்கி எறிந்தது.“இந்த உடுப்பும் வேண்டாம். நம்ம குரங்கு இனமும் வேண்டாம்” என்று சொல்லிவிட்டு ஊருக்குள்ளே ஓடியது.

வழியிலே ஒரு கடைவீதி இருந்தது. அங்கே ஒரு பொரிகடலைக்கடை இருந்தது. கடையிலே யாருமே இல்லை. போன வேகத்திலே, அந்தக் கடைக் குள்ளே புகுந்தது. அங்கே கோபுரம் போல், கொட்டி வைத்திருந்த பொரியை இரண்டு கைகளாலும் அள்ளி வாயிலே திணிக்கப் பார்த்தது. அப்போது, சற்றுத் தூரத்திலிருந்து குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த கடைக்காரர் பார்த்துவிட்டார். சும்மா இருப்பாரா? ‘பிடி! பிடி!’ என்று கத்திக் கொண்டே கடையை நோக்கிப்பாய்ந்தோடி வந்தார். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை! பொரியைக் கீழே எறிந்துவிட்டு ரங்கன் தலைதெறிக்க ஓடியது. கடைக்காரர். அப்போதும் சும்மா இருக்க வில்லை. தெருவிலே கிடந்த ஒரு கல்லை எடுத்துக் ரங்கனைக் குறிபார்த்து எறிந்தார். கல், ரங்கன் முதுகிலே பட்டதும், வலி தாங்காமல் ‘கீ, கீ’ என்று கதறிக்கொண்டே ஓடிவிட்டது.

அன்று முழுவதும் ரங்கன் வெளியில் தலை காட்டவே இல்லை. சிறிது தூரத்தில் இருந்த மரத்தில் ஏறி, இரண்டு கிளைகளுக்கு நடுவே உட்கார்ந்து முதுகைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தது. பாவம், அன்று முழுவதும் பட்டினி!

மறுநாள் காலையிலே மரத்துக்கு மரம் தாவி, சுவர்கள் மீது ஏறி அங்குமிங்கும் பார்த்துக் கொண்டே வந்தது. ஒரு கிழவி, ஒருமரப்பலகையில் தேங்காய்க் கீற்றுகளை அழகாக அடுக்கி வைத்து விற்றுக் கொண்டிருந்ததைக் கண்டது.

ரங்கன் சுவரிலிருந்து ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தது. தேங்காய்க் கீற்றை எட்டி எடுக்கப் போனது. மறுவிநாடிடங்கென்றுதலையில் பலமாக ஓர் அடி விழுந்தது! அந்தப் பொல்லாத கிழவிதான் காக்கை விரட்டுவதற்காகப் பக்கத்திலே வைத்திருந்த தடியாலே ஓங்கி அடித்து விட்டாள். வலி தாங்காமல், கத்திக்கொண்டே ரங்கன் வெறுங்கையோடு ஓடி மீண்டும் சுவரிலே ஏறிக் கொண்டது. அன்றைக்கும் பட்டினிதான்!

மூன்றாம் நாள் கோயில் பக்கமாகப் போய், மதில் சுவரிலே உட்கார்ந்து கூர்ந்து, கூர்ந்து பார்த்தது. கொஞ்சதுரத்திலே ஒரு பழக்கடை தெரிந்தது. அங்கே ஆப்பிள், ஆரஞ்சு, மாம்பழம் எல்லாம் இருந்தன. சிப்புச் சீப்பாய் வாழைப்பழங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. கடைக்காரர் அசந்த சமயம் பார்த்து ஒரு சீப்பு வாழைப்பழத்தைக் கொண்டு வந்து விடலாமென்று நினைத்தது ரங்கன்.

கடைக்காரர் பின்புறமாகத் திரும்பி, கூடையிலிருந்த பழங்களை எண்ணிக் கொண்டிருந்தார். அப்பொழுது பார்த்து ரங்கன் ஒரே தாவாகத் தாவிப் பழக்கடைக்குள் புகுந்தது. ஒரு சிப்பு வாழைப்பழத்தைப் பிடித்து இழுத்தது.

அந்தச் சமயம், தெருவிலே நடந்து போன ஒருவர் சும்மா போகக் கூடாதா? “ஐயோ! குரங்கு! குரங்கு!” என்று கத்தினார். உடனே பழக் கடைக்காரர் சட்டென்று திரும்பிப் பார்த்தார். ரங்கன் பழத்தைப் போட்டுவிட்டு ஓடியது, ஆத்திரத்திலே பக்கத்தில் கிடந்த பழம் நறுக்குகிற கத்தியை எடுத்து ரங்கனைப் பார்த்து எறிந்தார். ரங்கனின் வால் நுனியிலே கத்தி பட்டு, ஓர் அங்குல நீளம் துண்டிக்கப்பட்டது!

ரங்கன் கதறிக்கொண்டே, நாலுகால் பாய்ச்சலில் ஓடியது. வலி பொறுக்காமல் துடியாய்த் துடித்தது. வெகு தூரம் சென்று ஓர் ஆலமரத்தில் ஏறி வாலைப் பார்த்தது. வால் வெட்டுப்பட்டு இரத்தம் கொடகொட வென்று கொட்டுவதைக் கண்டு மிகவும் கலங்கி விட்டது. இரத்தம் மேலும் வழியாமல், வெட்டுப்பட்ட இடத்திலே கையை வைத்து, அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்தது. வெகு நேரம் சென்று பார்த்தது. இரத்தம் கசிவது நின்று விட்டது.

ஆலமரக் கிளையில் அமர்ந்திருந்த ரங்கனுக்கு அப்போதுதான் கோவிந்தசாமி நினைப்பு வந்தது.

‘அவர் என்னிடத்திலே எவ்வளவு பிரியமாயிருந்தாரு! எப்படிப் பாசத்தைக் காட்டினாரு நான் இந்த மூணு நாளாப் பட்டினி கிடக்கிறேன். அவர் ஒரு வேளையாவது என்னைப்பட்டினி கிடக்க விட்டிருப் பாரா? ஒருத்தர் என் முதுகிலே கல்லால் அடிச்சாரு. ஒரு பாட்டி என் தலையிலே தடியால அடிச்சாள். கடைசியிலே, பழக்கடைக்காரர் என் வாலையே வெட்டிட்டாரே! என் எஜமான் என்னை ஒரு நாளாவது அடிச்சிருப்பாரா? திட்டினதுகூட இல்லையே! பிள்ளை மாதிரி வளர்த்தாரே! அவருக்குத் தெரியாமல் ஓடிவந்திட்டேனே! என்னைக் காணாமே அவர் துடிதுடிச்சிருப்பாரே! இந்தத் தள்ளாத வயசிலே அவர் எப்படி இருக்கிறாரோ? இனி ஒரு நிமிஷம்கூட இங்கே இருக்கப்படாது.”

மறுவிநாடி ரங்கன் மரத்திலிருந்து கீழே குதித்தது. குடுகுடுவென்று ஓடியது. முன்பு இருந்த கொட்டாம் பட்டிக்கு வந்து, கோவிந்தசாமி வழக்க மாயிருக்கிற மண்டபத்திலே பார்த்தது. அங்கே கோவிந்தசாமியைக் காணோம்! ஊரெல்லாம் தேடிப் பார்த்தது.

ஊருக்குக் கடைசியிலேயிருந்த ஓர் அரச மரத்தடியிலே கோவிந்தசாமி தூங்குவதைப் பார்த்து விட்டது அதற்கு ஒரே ஆனந்தம்! மெதுவாக அவர் பக்கத்திலே போய் உட்கார்ந்தது.

‘பாவம், நல்லாத் தூங்கறாரு எழுப்பக் கூடாது’ என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டது.

அரைமணி நேரம் அவர் முகத்தைப் பார்த்துக் கொண்டே, அருகிலே அமைதியாக இருந்தது. படுத்திருந்த கோவிந்தசாமி "ரங்கா!ரங்கா" என்று கத்திக்கொண்டே எழுந்தார். எதிரிலே ரங்கனைக் கண்டதும், “ஆ! இப்பத்தானேடா உன்னைக் கனவிலே கண்டேன்! நேரிலே வந்துட்டியே!” என்று கூறி அதைக் கட்டிப்பிடித்து மடியிலே தூக்கி வைத்துக் கொண்டு இரு கன்னங்களிலும் மாறி மாறி முத்தம் கொடுத்தார்.

‘எங்கேடா போனாய். என்னைத் தனியா விட்டுட்டு? உன்னைக் காணாமே எங்கெங்கே தேடினேன்? யாரை, யாரையெல்லாம் விசாரிச்சேன்! நல்லவேளை, நீயே திரும்பி வந்...” கூறிக் கொண்டிருக்கும்போதே, ரங்கனின் வால் அவர் கண்களில் பட்டது.

“ஐயோ! இது என்ன? என் ரங்கனின் வாலை எந்தப்படுபாவியோ வெட்டிட்டான்?” என்று ஆத்திரமும், கோபமும் கலந்த குரலில் கூறி, வாலைப் பிடித்து மெல்லத் தடவிக் கொடுத்தார்.

பிறகு, ரங்கனைத் தூக்கிக்கொண்டு பக்கத்திலே இருந்த ஒரு கடைக்குப் போனார். இரண்டு நாளாக மூட்டை தூக்கிச் சம்பாதித்து வேட்டியிலே முடிந்து வைத்திருந்த பணத்தை எடுத்தார். ஒரு டஜன்

வாழைப்பழம் வாங்கி ரங்கனுக்கு அன்போடு ஊட்டி விட்டார். பக்கத்திலே கடலை விற்ற அம்மாளிடம், அரைப்படி கடலை வாங்கி ஆசையாகக் கொடுத்தார். ரங்கன் சாப்பிடுவதைப் பார்த்துப் பார்த்துப் பரவசப்பட்டார்.

மறுநாளே கோவிந்தசாமி ரங்கனைத் தனக்குத் தெரிந்த ஒரு தையற்காரரிடம் அழைத்துச் சென்றார். துண்டு துண்டாக வெட்டிப் போட்டிருந்த வண்ண வண்ணத் துணிகளிலே உடை தைத்து ரங்கனுக்குப் போட்டுவிட்டார் அந்தத் தையற்காரர். அழகாக ஒரு குல்லாயும் தைத்துத் தலையிலே மாட்டினார்.

இப்போது ரங்கன் முன்னைவிட அருமையாக வித்தைகளெல்லாம் காட்டுகிறது. கூட்டமும் நிறையக் கூடுகிறது. பணமும் அதிகம் சேருகிறது!