உள்ளடக்கத்துக்குச் செல்

திருவள்ளுவர் ஞானம்

விக்கிமூலம் இலிருந்து

சித்தர் பாடல்கள்
நூல் - 15
திருவள்ளுவர் ஞானம்
பக்கம் 278 முதல்

பாடல்கள்

[தொகு]

காப்பு

[தொகு]

எண்சீர் விருத்தம்

[தொகு]

அண்ட பிண்டம் நிறைந்து நின்ற அயன் மால் போற்றி

அகண்ட பரிபூரணத்தின் அருளே போற்றி

மண்டலம் சூழ் இரவிமதி சுடரே போற்றி

மதுர தமிழ் ஓதும் அகத்தியனே போற்றி

எண்டிசையும் புகழும் என்றன் குருவே போற்றி

இடைகலையின் சுழுமுனையின் கமலம் போற்றி

குண்டலிக்குள் அமர்ந்து நின்ற குகனே போற்றி

குருமுனியின் தாளிணை எப்போதும் போற்றி

நூல்

[தொகு]

கட்டளைக் கலித்துறை

[தொகு]

1

அன்னை எனும் கர்ப்பம் அதனில் வந்தும் அதிலே இருந்தும்
நன்னயமாய்ப் பத்துத் திங்களும் நானகத்தே இருந்தேன்
என்ன அதிசயம் காண் இவ்வுலகிலே அமைந்த
உன்னதம் எல்லாம் அமைத்தேன்உண்மையைக் காண்கிலரே

2

அம்புவி தன்னில் உதித்தாய் அறிபாடை தன்னை
வம்பு உலகத்தார் வசியமாய்க் கைப்பிடித்தே பிரிந்து
கும்பி தனிலே உழன்றும் அக்குண்டலி பொற்கமலம்
நம்பி இருந்தேன் சிலநாள் ரகசியம் காண்கிலனே

தரவு கொச்சகம்

[தொகு]

3

அண்டர் அண்ட வான் புவியும் ஆகமத்தின் உட்பொருளும்
கண்டிதமா யான் விளங்கும் காயமதிலே அறியும்
வண்டரெனை நீசன் என்றவாறு தனையே ஒழித்தேன்
விண்ட ரகசியம் தன்னை விளக்கமது காண்கிலரே

4

வையம் அதிலே உதிக்கும் மாண்பர்களே உங்கள் உயிர்
மெய்யென்று இருந்தசைவு வெளிப்படுவது என்னவிதம்
அய்யம் இல்லா வாழ்ந்துலகில் ஆன்மையாய்ப் பூண்டமதிப்
பொய் எனும் இவ்வாழ்க்கை அதுபோகும் சுடுகாடு உளதே

கட்டளைக் கலித்துறை

[தொகு]

5

வீடான மூலச் சுழிநாத வீட்டில் விளங்கும் விந்து
நீடாழி லோகம் தழைத்துப் பெருகியும் நின்றிலகுந்
தேடாது அழித்த பொருளான பொக்கிடம் தேடியென்ன
காடான நாடு சுடுகாடு சேர்வதும் கண்டிலரே

6

எழுவகைத் தோற்றமும் நால்வகை யோனியில் எய்திடினும்
பொழியச் சுரோணிதம் நாதவிந்துப் பொருள் போதகத்தால்
கழியக் கழியக் கடலுயிர் தேய்பிறை கண்டுமிருந்
தழியப் பெருந்தரை யெந்நாளிருந்தும் அனித்தியமே

7

எந்நாள் இருந்தென்ன முன்னாள் அனுப்படி இந்தவுடல்
தன்னால் அழிவதும் தான் அறியாதெனத் தந்தை விதி
உன்னால் அழிவது உடலுயிர் காயம் ஒழிவதுங்கண்டு
அந்நாள் அனுப்படி கண்டு இருந்தறியாதவரே

8

யோனிக்குள் ஆசை ஒழியாத னித்தியம் உங்களுயிர்
தேனிக்குள் இன்பம் சுகாதிதமோ வரைம் சிற்றின்பத்தில்
ஊன்றறுக் காயம் உடலற்றுப் போம்பொழுது ஒன்றறியா
ஈனக்குச் சொர்க்கம் சுடுகாடு ஒழிய இனியில்லையே

நேரிசை வெண்பா

[தொகு]

9

இந்தவுடல் காயம் இறந்து விடும் இவ்வுலகில்
வந்தவழி தான் அறியா வாழ்க்கையோ – இந்தவுடல்
அற்பக் குழியில் அரவம் இருப்பதெனும்
கற்பகத்தை ஆண்டிடுமோ காண்

10

ஞானம் அறிந்தோர்க்கு நமனில்லை நாள்தோறும்
பானமதை உண்டு பசியினால் – ஞானமது
கண்டால் உடல் உயிரும் காயம் வலுவாகும்
உண்டால் அமிர்த ரசம் ஊண்

11

சுழி அறியார்க்கு என்ன சுகம் அறியார்க்கு என்ன
வழி அறியார்க்கு என்ன எய்துமாறு – சுழியறியா
மூலமறிந்து அவ்வழியில் முத்தி அடையார்க்கு நமன்
காலன் அவர்க்கே மரணும் காண்

12

வேத மறைஞான மெய்யுணர்வு தான் ஆகில்
நாதன் அருளால் பதவி நாடுமே வேதமறை
நாலு பொருளுள் நற்பொருளின் ஆற்றியப்
பாலுமது நெய்யெனவும் பார்

13

முதலிருந்த ஊழ்வினையை முப்பாழைச் சுட்டுப்
பதறா மதிபாடு பட்டேன் – முதலிருந்த
நல்வினையும் தீவினையும் நாடாமலும் பிறந்த
வல்வினையில் போக்கி விட்டேன் வாழ்வு

14

காயசித்தியால் எனது கன்மவினை போக்கியபின்
மாயசித்தி மூலசுழி வாய்க்குமே – காயசித்தி
மூலப்புளியால் முதல் தீட்சை ஆச்சுது இனிக்
காலம் என்னிரண்டு ஆண்டில் காண்

15

கல்லுப்பின் வாரும் கருத்தறியா துண்டு மனு
வல்வினைக்கு உள்ளாகி மரணமார் – கல்லுப்பு
வெள்ளைக் கல்லுப்பு வெகு விதமாய் வந்தாலும்
உள்ளம் அதில் உண்டென்றே உன்

16

என்றும் இந்துப்பாகும் எண்சாண் உடலிருக்கக்
கண்டும் அறியாதது என்ன காரணமோ – என்றுமதி
வாரியம் உரியதை வன்னிவிட்டுக் காய்ச்சியபின்
விரியமாய் நானுணரும் எமய்

17

உப்பின் கசடு தான் ஊறலது மாறினதால்
மூப்பு சுன்னம் ஆவதற்கு முன்னமே – உப்பதனால்
தற்பாந்தம் கோடி காயமிது வலுத்துச்
செற்பாயும் வாசியில் தேகம்

18

அஞ்சுபஞ்ச பூதம் அறிந்தால் அனித்தியம் போம்
அஞ்சு வசப்படுவது ஆண்டதனில் – அஞ்சினையும்
கண்டறிவோர் ஞானக் காட்சி அதிநினைவு
விண்டறியல் ஆமே விதி

19

எண்சாணாம் தேகம் எடுத்தால் என்னாண்டையே
பெண்சாரல் நீக்கியே பேரின்பம் – கண்காணத்
தேகம் ஒழியாமல் சித்தி பெறுஞானம்
யோக சித்தி பூசை விதி உன்

முற்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=திருவள்ளுவர்_ஞானம்&oldid=969814" இலிருந்து மீள்விக்கப்பட்டது