திருவாசகம்/குழைத்த பத்து
(திருப்பெருந்துறையில் அருளியது - அறு சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்)
குழைத்தால் பண்டைக் கொடுவினைநோய்
காவாய் உடையாய் கொடுவினையேன்
உழைத்தா லுறுதியுண்டோ தான்
உமையாள் கணவா எனை ஆள்வாய்
பிழைத்தாற் பொறுக்க வேண்டாவோ
பிறைசேர் சடையாய் முறையோவென்
றழைத்தால் அருளா தொழிவதே
அம்மானே உன்னடியேற்கே. 496
அடியேன் அல்லல் எல்லாம்முன அகலஆண்டாய் என்றிருந்தேன்
கொடியே ரிடையாள் கூறாஎங்கோவே ஆவா என்றருளிச்
செடிசேர் உடலைச் சிதையாத தெத்துக் கெங்கள் சிவலோகா
உடையாய் கூவிப் பணிகொள்ளா தொறுத்தால் ஒன்றும் போதுமே. 497
ஒன்றும் போதா நாயேனை உய்யக் கொண்ட நின்கருணை
இன்றே இன்றிப் போய்த்தோதான் ஏழை பங்கா எங்கோவே
குன்றே அனைய குற்றங்கள் குணமா மென்றே நீகொண்டால்
என்றான் கெட்ட திரங்கிடாய் எண்தோள் முக்கண் எம்மானே. 498
மானேர் நோக்கி மணவாளா மன்னே நின்சீர் மறப்பித்திவ்
வூனே புகஎன்தனைநூக்கி உழலப் பண்ணு வித்திட்டாய்
ஆனால் அடியேன் அறியாமை அறிந்துநீயே அருள்செய்து
கோனே கூவிக் கொள்ளுநாள் என்றென் றுன்னைக் கூறுவதே. 499
கூறும் நாவே முதலாக் கூறுங் கரணம் எல்லாம்நீ
தேறும் வகைநீ திகைப்புநீ தீமைநன்மை முழுதும்நீ
வேறோர் பரிசிங் கொன்றில்லை மெய்ம்மை உன்னை விரித்துரைக்கில்
தேறும் வகைஎன் சிவலோகா திகைத்தால் தேற்ற வேண்டாவோ. 500
வேண்டத்தக்க தறிவோய்நீ வேண்டமுழுதுந் தருவோய்நீ
வேண்டும் அயன்மாற் கரியோய்நீ வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா தருள்செய்தாய் யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன் றுண்டென்னில் அதுவும் உன்றன் விருப்பன்றே. 501
அன்றே என்றன் ஆவியும் உடலும் எல்லாமுங்
குன்றே அனையாய் என்னைஆட் கொண்டபோதே கொண்டிலையோ
இன்றோர் இடையூ றெனக்குண்டோ எண்தோள் முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே. 502
நாயிற் கடையாம் நாயேனை நயந்துநீயே ஆட்கொண்டாய்
மாயப் பிறவி உன்வசமே வைத்திட்டிருக்கும் அதுவன்றி
ஆயக்கடவேன் நானோதான் என்ன தோஇங் கதிகாரங்
காயத் திடுவாய் உன்னுடைய கழற்கீழ் வைப்பாய் கண்ணுதலே. 503
கண்ணார் நுதலோய் கழலிணைகள் கண்டேன் கண்கள் களிகூர
எண்ணா திரவும் பகலும்நான் அவைவே எண்ணும் அதுவல்லால்
மண்மேல் யாக்கை விடுமாறும் வந்துன் கழற்கே புகுமாறும்
அண்ணா எண்ணக் கடவேனோ அடிமைசால அழகுடைத்தே. 504
அழகே புரிந்திட் டடிநாயேன் அரற்று கின்றேன் உடையானே
திகழா நின்ற திருமேனி காட்டி என்னைப் பணிகொண்டாய்
புகழே பெரிய பதம்எனக்குப் புராண நீதத் தருளாயே
குழகா கோல் மறையோனே கோனே என்னைக் குழைத்தாயே. 505
திருச்சிற்றம்பலம்