திருவிளையாடற் புராணம்/16
முடிந்தது என்று கருதி ஆட்சியைத் தன் மகனின் கையில் ஒப்புவித்துப் பொறுப்புகளினின்று தப்புவித்துக் கொண்டான்; முதுமை தரும் ஓய்வு அவனுக்கு ஆறுதல் அளித்தது. உலக வாழ்லில் பற்று நீங்கி இறைத் திருவடிகளில் சேர்ந்து இறைவனோடு இரண்டறக் கலந்தான்.
வேதம் என்ற சொல் "வித்யா" என்ற பொருளுடையது. ஞானம் தரும் நூலே வேதம் எனப்படுகிறது. கிருதயுகமே இதன் தொடக்ககாலம் என்பர். அக் காலத்தில் சிவனின் வாக்கினின்று பிரணவம் தோன்றிற்று. அதனின்றே வேதங்கள் எல்லாம் தோன்றின என்று கூறப்படுகிறது. எனவே வேதம் என்பது இறைவன் அருளிச் செய்தது என்ற கருத்து நிலவியது.
நைமி சாரணியம் என்னும் வனத்தில் வசித்து வந்த கண்ணுகர் கர்க்கர் முதலிய முனிவர்கள் வேதங்களின் பொருளை அறியாமலேயே அவற்றை ஓதிக்கொண்டு வந்தனர். அரபத்தர் என்னும் பெயருடைய வேதியர் ஒருவர் அவர்களைச் சந்தித்தார். வேதத்தின் பொருளை அறியாத அந்த வித்தகர்கள் அவ்வேதியரை அணுகி வேதத்தின் பொருளை யாரிடம் சென்று கேட்டு அறியலாம் என்று வினவினர்.
சோமசுந்தரக் கடவுள் வீற்றிருக்கும் மதுரையில் இந்திர விமானத்துக்குத் தெற்கே தட்சிணாமூர்த்தி வடிவில் இறைவன் தங்கி இருக்கிறார். வழிபட்டு விளக்கம் கேட்டால் வேதத்தின் பொருளை அறிய முடியும்" என்று கூறி அவர்களுக்கு வழிகாட்டினார்.
அவர் கூறியபடியே அரபத்தர் என்ற அந்த வேதியரை அழைத்துக் கொண்டு மதுரைக்குச் சென்று தட்சிணா மூர்த்தியைத் தினந்தோறும் முறைப்படி வணங்கி வழி பட்டனர். தட்சிணாமூர்த்தி குருவடிவில் வந்து திருவாலவாய் உடையவராகிய சோமசுந்தரக் கடவுளின் சந்நிதியை அடைந்து அவர்களை அங்கே அமர வைத்து வேதத்தில் உட்பொருளை விளக்கிக் கூறினார்.
வேதம் உணர்த்தும் பொருள் கடவுள் என்பதாகும். அக்கடவுள் என்ற மெய்ப் பொருள் எல்லாமும் யாவையுமாகி எங்கும் நிறைந்து எல்லா உயிர்களிலும் பொருள்களிலும் நீக்கமற நிறைந்து சத்து சித்து ஆனந்தவடிவமாக நிற்பது என்று கூறப்பட்டது. சத்து என்பது உண்மை; சித்து என்பது அறிவு, ஆனந்தம் என்பது மகிழ்ச்சி. இம் மூன்றையும் அறிந்து உணர்வதே கடவுள் ஞானம் என்று உணர்த்தப்பட்டது. எனவே மானுடர்கள் நிலைத்த உண்மைகளை உணர முற்பட்டு ஒழுக்க மேம்பாட்டிற்கு வேண்டிய அறிவினைப் பெற்றுப் பேரின்ப வாழ்வு வாழ முற்படுவதே குறிக்கோளாகக் கொள்ள வேண்டும் என்பது உணர்த்தப்பட்டது.
வேதத்தின் உட்பொருளை விரித்துரைத்துத் தட்சிணா மூர்த்தியாக வந்த காட்சியைக் கண்டு அம்முனிவர்கள் தெளிவு பெற்றவராய் மதுரையை விட்டுத் தம் வனம் போய்ச் சேர்ந்தனர்.
வீர பாண்டியன் காமக்கிழத்தியர் சிலரோடு உறவு கொண்டான்; அவர்கள். வயிற்றில் பிறந்த புதல்வர்கள் ஒழுங்காக வளர்க்கப்படவில்லை; அவர்கள் தீய ஒழுக்கங்களில் பழகி நற்பண்பிழந்து வெறுக்கத் தக்கவர் ஆயினர்.