திருவிளையாடற் புராணம்/24
சமய வெறுப்பின் அடிப்படையில் மிருகத்தனமாக நடந்து கொண்டதைக் கண்டு அவள் வருந்தினாள். குழந்தை விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டது; அதனைச் சமய அடிப்படையில் அவர்கள் வெறுத்ததை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
குழந்தையோடு வெளியே நடந்தாள். சோமசுந்தரக் கடவுளிடம் முறையிட்டு அழுதாள்; உமையாரிடத்து அதிக பக்தி இளமை முதல் கொண்டவளாயிற்று; மந்திரம் செபித்தாள்; அதற்கு மேல் அவளைச் சிவனார் சோதிக்க விரும்பவில்லை. அவள் காணும்போதே குழந்தை உருவம் மாறிப் பரம் பொருளாகிய சிவனார் பார்வதியோடு காட்சியளித்தார். இக்காட்சியைப் பாண்டிய நாட்டில் உள்ளவர்களும் கண்டு பேரானந்தம் அடைந்தனர்.
விக்கிரம பாண்டியனுக்குப் பின் அவன் மகன் இராசசேகர பாண்டியன் ஆட்சிக்கு வந்தான். அவன் கலைகள் அறுபத்தி நான்கினையும் கற்க வேண்டியவன்; பரதத்தை ஒழித்து ஏனையவற்றை மட்டும் கற்றவனாக விளங்கினான். இறைவன் திருக்கூத்துக் கண்டு அப்பரதத்தைக் கற்பது மரியாதைக் குறைவு என்று விட்டு விட்டான்; அக்கலை பரமனுக்கே உரியது; பாமரனாகிய தான் கற்பது தவறு என்று பரதம் ஒன்று மட்டும் பயிலாத வனாக இருந்தான்.
அவன் வாழ்ந்த காலத்தில் சோழ நாட்டு அரசன் கரிகாற் சோழன் பரதத்தையும் கற்றிருந்தான். அவன் நாட்டில் இருந்து வந்த புலவன் ஒருவன் அதை ஒரு குறையாகச் சுட்டிக் காட்டினான். "சோழன் அறுபத்து நான்கு கலைகளைக் கற்று இருக்கிறான். நீ ஒன்று குறைவாகக் கற்று இருக்கிறாய். பரதம் உனக்கு வராதா?" என்று தூண்டிவிட்டான்.
மானம் மிக்க அவன் அச்சொற்களைத் தாங்கிக் கொள்ளமுடியவில்லை; வயது ஆனபோதும் பொருட்படுத்தாமல் தக்க ஆசிரியர்களைக் கொண்டு உடம்பை வளைத்து அப்புதிய கலையைக் கற்கத் தொடங்கினான்; அந்த அற்புதக் கலை கற்க உடல் உழைப்பும் பயிற்சியும் தேவை என்பதை உணர்ந்தான்; அவன் உடம்பு களைத்து நோதலை அறிந்தான்; உடம்பெல்லாம் வலி எடுத்தது.
இறைவன் பரதம் ஆடும்போது வலக் காலில் நின்று ஆடுவதைக்கண்டு இவ்வாறே காலை மாற்றிச் கொள்ளாமல் ஆடினால் அவருக்கு எவ்வளவு வருத்தம் ஏற்படும் என்று நினைத்துப்பார்த்து இடக் காலைத் துக்கி ஆடும் நிலை மாறி வலதுக் காலைத் துாக்கி ஆட வேண்டும் என்று விரும்பினான்; கால் மாறி ஆட வேண்டும் என்று தீவிரமாக நினைத்தான் இறைவனிடம் வேண்டினான்.
அவ்வாறு மாற்றி ஆடாவிட்டால் தன் உயிரை மாய்த்துக் கொள்வதாக மருட்டினான். வாளைத் தயாராகக் கையகத்து வைத்துக் கொண்டான். அன்பன் தொடர்ந்து தரும் வேண்டுகோளைத் தள்ள முடியாமல் இறைவனும் கால்மாறி ஆடிக் காட்டினார். இவ்வாறு இந்த நிலையிலேயே அடியவர்க்குக் காட்சி அருள வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். அது முதல் இன்று வரையும் மாறியாடிய கோலத்திலேயே இறைவன் காட்சி தந்து கொண்டிருக்கிறார்.