திருவிளையாடற் புராணம்/42
இறைவன் விறகு வெட்டியாக வந்து பாணபத்திரனுக்கு அருள் செய்தமையின் இறைவனையே பாடும் தொழிலை அவன் மேற்கொள்ளும்படி வரகுண பாண்டியன் அறிவுறுத்தினான். அதன்படி கோயிலுக்குச் சென்று முப்பொழுதும் அவன் புகழ் பாடுவதையே நியமமாகக் கொண்டான். அரசன் திருமுன் சென்று அவையில் பாடுவதை நிறுத்திக் கொண்டான். அதனால் வருவாய் இழந்தான்.
வருவாய் இன்மையால் வறுமை வந்து சேர்ந்தது. அவனுக்குப் பொருள் தந்து ஆதரிக்க இறைவன் திருவுளம் கொண்டார், அரசனின் பண்டாரத்தில் இருந்து ஆபரணங்களையும் பொருளையும் மணியையும் கொண்டு வந்து அவன் முன் வைத்தார். அதை ஆண்டவனால் அளித்த சன்மானம் என்று வீட்டுக்கு எடுத்துச் சென்று பொன்னையும் உயர் அணிகலன்களையும் விற்றுப் பொருளாக்கித் தானும் உண்டு. தன் சுற்றத்தாருக்கும் தந்து விருந்தினருக்கும் போட்டுச் சேர்த்து வைக்க வேண்டுமென்ற எண்ணமில்லாமல் வாழ்ந்து விட்டான்.
சில நாளில் அவனுக்குச் சோதனை தர இறைவன் பொருள் கொடுப்பதை நிறுத்திவிட்டார்; எனினும் அவன் கோயிலுக்கு வந்து பாடுவதை நிறுத்தவில்லை, நித் திரையில் வந்து அவன் மனத்திரையில் இறைவன் தோன்றி "இதுவரை பாண்டியனின் பொருளைக் கொண்டு வந்து கொடுத்தோம்; பொருள் இருந்த அறையையே காலி செய்து விட்டாய்; நிறைந்திருந்த பொருள் எங்கே என்று பாண்டியன் தேடுவான்; மனம் வாடுவான்; காவலரைச் சாடுவான்; இனி எடுப்பது உகந்தது அன்று.
என் அன்பன் சேரனுக்குத் திருமுகம் தந்து அவனுக்கு உன்னை அறிமுகம் செய்கிறேன்; அவன் உனக்கு வேண்டிய செல்வம் விரும்பித் தருவான்; அதனைப் பெற்று ஊர் திரும்புக" என்று சொல்லித் திருமுகப்பாசுர ஓலையை அவன் கையில் சேர்த்து மறைந்தருளினார்.
திருமூகம் எடுத்துக் கொண்டு மலைநாடு கடந்து திருவஞ்சைக் களத்தை அடைந்து அங்கே ஒரு தண்ணீர்ப் பந்தலில் காத்திருந்தான். சேரனின் கனவில் இவன் வருகையை இறைவன் அறிவித்திருந்தார்.
ஏவலரை அனுப்பி அவ்இசை வல்லவனைச் சேரன் யானை மீது ஏற்றி அழைத்து வந்தான். வந்த விருந்தினரை மாளிகையில் தங்கவைத்து உணவு தந்து உபசரித்தபின் பொன்னறையைத் திறந்து காட்டி "பாணபத்திரரே! செல்வம் முழுவதும் நீர் காண இங்கு வைத்திருக்கிறேன்; மேகம் நாணயாம் தரும் செல்வம் அனைத்தும் நீவிர் எடுத்துக் கொள்ளலாம்" என்றார். அவர் தமக்கு வேண்டியதை மட்டும் எடுத்துக் கொண்டு எஞ்சியதை அங்கு விட்டுவைத்து வீடு திரும்பினார். தம்மை நாடி வந்த புலவர்க்கும், கூடி மகிழும் சுற்றத்தவர்க்கும், வாடி வருந்தும் அறிஞர்க்கும், கேடு நீங்கிய நல்லோருக்கும் தந்து பங்கிட்டு வளமாக வாழ்ந்தான்.