திருவிளையாடற் புராணம்/55
தமிழ்ச் சங்கம் முதற் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என மூன்று இருந்தன. கடைச் சங்கமே மதுரையில் நிலவியது; கபிலர், பரணர், நக்கீரர் இம்மூவரும் கடைச் சங்கப் புலவர்கள் எனக் கருதப்படுகின்றனர். முதற் சங்கப் இடைச் சங்க காலத்தில் எழுந்த நூல்கள் கிடைத்தில. அவற்றின் பெயர்களே அறியப்படுகின்றன. கடைச் சங்க காலத்து நூல்களே எட்டுத் தொகையும் பத்துப்பாட்டும் ஆகும்.
இப்புலவர்கள் தனித்தனியே பாடிய பாடல்கள் தரம் மிக்கவை; சில பொருள் சுவை சிறந்தவை; சில அணி நயம் சான்றவை; சில ஓசை நயம் கொண்டவை. புலவர்கள் படைத்த கவிதைகள் அவற்றைக் கேட்டுப் படிக்கும் சான்றோர்களின் நன் மதிப்பை ஒட்டிப் பாராட்டப் படுபவை ஆகும். அவர்களே தங்களுக்குள் தம் கவிதை தரம் சிறந்தவை என்று போட்டி போட்டுக் கொண்டு பேசுவது சரியன்று நாகரிகமும் ஆகாது; அவற்றின் தரம் அறிந்து மதிப்பீடு செய்யும் விமரிசகர்கள் அக்காலத்தில் இல்லை
புலவர்கள் அனைவரும் இறைவனிடம் வந்து முறையிட்டார்கள்; புலவர்கள் பலர் இருப்பினும் மதிக்கத்தக்க உயர் புலவர்கள் யார் என்று அறுதி இட்டுச் சொல்ல முடியவில்லை மெலும் மற்றவர்களின் தகுதியும் திறமையும் அறிய வாய்ப்பில்லை. தாமே எழுந்தருளி இதற்கு ஓர் முடிவு தர வேண்டும் என்று சடைமுடி தரித்த சுந்தரரை அழைத்தனர்.
கவிதையின் தரத்தை அறியக் கடவுள்கள் வர வேண்டும் என்றால் அவர்கள் மக்கட் கவிஞர் ஆகார்: மானுடன் மதிக்கத் தக்க கவிதைகளே மாண்புடையவை; இறைவன் வந்து இதில் இடம்பெறக் கூடாது என்பதை உணர்த்தச் செந்நிறம் மாறாத சிவனார் வழி கூறினார்.
"மதுரைநகரில் தனபதி என்ற வணிகன் இருக்கிறான், அவன் மனைவி குணசாலினி என்பவள்; அவர்களுக்குப் பிள்ளை இல்லாமல் தவம் செய்து ஒரு மகனைப் பெற்றிருக்கிறார்கள் உருத்திரசன்மன் என்பது அவன் பெயர்; ஐந்து வயதும் நிரம்பாத சிறுவன்; அவன் பிறவி ஊமை, பேச மாட்டான். அவனை அழைத்துச் செல்லுங்கள் அவன் உம்பாடலைக் கேட்டு முடிவு கூறுலான்" என்று சொல்லி அனுப்பினார்.
ஊமை எப்படி ரசிகனாக இருக்க முடியும் பேச முடியாதவன் எப்படி நா அசைப்பான் என்ற ஐயங்கள் எழுந்தன, எனினும் சுந்தரருக்கு மறுப்புச் சொல்லாமல் அவனைச் சங்கத்துக்கு அழைத்துச் சென்று அவரவர் தம் கவிதைகளைப் படித்தனர்.
உப்புச் சப்பு அற்ற உதவாக்கரைக் கவிதைகளைக் கேட்கும் போது அவன் எந்த வித மெய்ப்பாடும் காட்டவில்லை; சொற் சுவை உடையதாக மட்டும் இருந்தால் கண்களில் சுவையைக் காட்டினான். பொருட் சுவை இருந்தால் மெய்ம்மயிர் சிலிர்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்; அணி நயமும், இசையும் இணைந் திருந்தால் புளகித்துக் கண்களில் மகிழ்ச்சியில் நீர் அரும்ப முகமலர்ந்து அவற்றைப் பாராட்டினான்.
அவன் முன் பாடிய புலவர்களுள் கபிலர், பரணர், நக்கீரர், தலை சிறந்தவர். இம் மூவரே தலைமைக்கு உரியவர் ஆயினர்.
கவிதைப் போட்டிகளில் நடுவர்கள் அமைதியாக இருந்து தீர்ப்புக் கூறுவது போல இத்தீர்ப்பு அமைந்தது. மற்றவர்களும் அவரவர் தகுதிக்கு ஏற்பப் பாராட்டுதலைப் பெற்றனர். கவிதை எழுதுவதற்குப் புலமை திறனும் ஆற்றலும் அறிவுப் பெருமையும் கருவில் திருவும் அமைய வேண்டும் என்று கூறலாம்; அதைச் சுவைக்க ஒரு ஊமையே போதும்; ஐந்து வயதும் நிரம்பாத சிறுவனே முடிவு கூற முடியும் என்று இங்குச் கூறப்பட்டது.