திருவிளையாடற் புராணம்/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

58. திருவாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம்

ஊனைச் சுருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த வெள்ளத்தில் ஆழ்ந்தவர் மாணிக்க வாசகர். தேவாரம் பாடிய மூவருக்கும் பின் தோன்றியவர். மாணிக்க வாசகமும், தேவாரமும் இறைவனுக்குச்சூட்டப் படும் இசைப் பாமாலைகள் ஆகும். திருவாசகம் தத்துவக் கருத்துகளைக் கொண்டதாகும். உயிர்களின் இயல்பை விளக்கி அவை தழைக்க இறையருள் வேண்டும் என்று கூறியவர், அவரைச் சுற்றிய கதைகள் இங்குக் கூறப்படு கின்றன.

அவர் பிறந்த ஊர் திருவாதவூர் என்பதாகும். அது பாண்டிய நாட்டில் வைகைக் கரையில் உள்ளது. அவருடைய இயற்பெயர் அறிந்தலது; அவர் பாடிய நூலைக் கொண்டு மாணிக்க வாசகர் என்று அழைக்கப்படுகிறார். ஊர் பெயரைக் கொண்டு திருவாதவூரர் என்று அழைக்கப்படுகிறார்.

திருவாதவூரில் அமாத்தியப் பிராமண குலத்திலே சைவம் தழைக்கப் பிறந்தவர் என்று கூறப்படுகிறது. வேதியர் குலத்தில் பிறந்தும் அவர் படைக்கலப் பயிற்சியும் போர் பற்றிய கல்வியறிவும் வல்லவராக இருந்தார். புற உலகில் அவர் பேரறிஞர் எனப் பாராட்டப் பெற்றார். அமைச்சர்களுள் அவர் தலைமை பெற்று விளங்கினார்.

நாடகத்தில் நடிப்பது போல அவர் புற வாழ்வு இயங்கியது. அவர் மனம் இறைவனுக்குத் தொண்டு செய்வதையே விரும்பியது. அது வெறியாகவும் அவரிடம் செயல்பட்டது.

அரிமர்த்தன பாண்டியன் தான் பொருள் பெட்டகத்தை அவரிடமே தந்து அதன் பொறுப்பையும் அவருக்கே உரியது ஆக்கினான். போருக்குச் சீரமைப்புத் தேவைப்பட்டது, படைகள் குதிரைகள் இன்றி வலுவிழந்து இருந்தன. சேனைத் தலைவர்கள் அரசனிடம் குதிரைகள் வாங்க வேண்டிய தேவையையும் அவசரத்தையும் உரைத்தனர்.

திருப்பெருந்துறை என்ற கடற்கரைப் பட்டினம் சென்று அங்கே இறங்கும் வெளிநாட்டுக் குதிரைகளை வாங்கிவரத் தக்கவர் திருவாதவூரரே என்று முடிவு செய்யப்பட்டது.

அவர் மனமெல்லாம் திருப்பெருந்துறைக்குச் சென்று அங்கே கோயில் திருப்பணி செய்வதிலேயே சுழன்றது.

பொருட் பெட்டகத்தின் திறவு கோலைத் தந்து வேண்டிய பொன்னையும் பொருளையும் எடுத்துப் போகவும் என்று கூறி அரசன் அனுப்பினான்.

திருப்பெருந் துறையில் குருந்த மரத்து நிழலில் ஞானகுருவாக இறைவன் அமர்ந்திருந்தார். சீடர்களும் சுற்றி நின்று கொண்டிருந்தனர். வாதவூரர் ஞானகுருவாக வந்த மோனத் தவசியை வணங்கி மன இருள் நீங்கப் பெற்றார்; அவரைக் கண்டு ஞான உபதேசம் பெற்ற பின் அக்குருந்த மரத்தை நாடி மறுபடியும் சென்றார். தாம் கண்ட ஞானியரின் திருவுருவைக் காணமுடியவில்லை. காதலனிடம் நெஞ்சைப் பறி கொடுத்த காதலியின் நிலை அவருக்கு ஏற்பட்டது. ஞான தேசிகனைக் காணாமல் அவர் மனம் சுழன்றது. பித்தம் பிடித்தவர் போல் சுற்றிச் சுற்றி வந்தார்.

கொண்டு சென்ற பொருள் தெய்வத் தொண்டுக்குப் பயன்பட்டது; செலவழித்த பொருளுக்குக் கணக்கு வைக்கவில்லை. அரசனின் பொன்னும் பொருளும் ஆபரணங்களும் கல்லும் சிற்பமும் ஆக உருவெடுத்தன.

அரசன் தந்த காலக் கெடுவும் தீர்ந்தது; பணியாட்கள் அவரை நினைவுபடுத்தினர். குதிரைகள் வாங்காமல் எப்படித் திரும்புவது என்ற வினாவை எழுப்பினர்.

"நான் யார் என் உள்ளம் யார்" என்ற ஆய்வில் இருந்தவர்; தான் ஒரு அமைச்சர், குதிரை வாங்க வந்த பொருளைத் தொலைத்த குற்றவாளி என்பதை உணர ஆரம்பித்தார். அரசன் ஆணை அவரை அச்சுறுத்தியது. எனினும் இறைவன் கைவிடமாட்டான் என்ற நம்பிக்கை இருந்தது.

"திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவனிடம் முறையிட்டார். குதிரை வாங்குதற்குரிய பொருள் உனக்கே செலவிட்டேன்;நீ குதிரையைக் கொண்டு வருவது உன்கடமை" என்று விண்ணப்பித்தார். "குதிரை வரும்; நீ கவலைப் படாமல் மதுரை போ" என்று இறைவன் குரல் கேட்டது.

நகர் வந்ததும் அரசனிடம் உறுதியாகக் குதிரைகள் வரும் என்று உறுதி அளித்தார். அரசனும் ஆவலாகத் காத்திருந்தான்.எனினும்அவன் நெருங்கிய சுற்றத்தினருக்கு அந்த நம்பிக்கை அறவே இல்லாமல் இருந்தது.