உள்ளடக்கத்துக்குச் செல்

திருவிளையாடற் புராணம்/64

விக்கிமூலம் இலிருந்து

64. வன்னியும் கிணறும் லிங்கமும் அழைத்த படலம்

கடலோரக் கவிதை என்று சொல்லத்தக்க அழகுடைய கடற்கரைப் பட்டினத்தில் செல்வம்மிக்க வணிகன் ஒருவன் இருந்தான். அவனுக்கு ஒரு மகள் பிறந்தாள். அவள் கன்னிப் பருவம் அடைந்து தன்னிகரற்ற அழகியாக விளங்கினாள். தன் தங்கை மகனுக்கே மணம் முடிக்கக் கருதினர். அவன் ஏற்கனவே மணமானவனாக இருந்தும் உறவு கெடக் கூடாதே என்பதால் இந்த முடிவுக்கு வந்தனர். அவளும் அவனையே மணக்க உறுதி செய்து கொண்டாள்.

காலன் அவர்களுக்குக் காலம் தரவில்லை; அதற்குள் அவள் தந்தையின் முடிவு செய்யப்பட்டது; தொடர்ந்து அவன் மனைவியும் மரணம் அடைந்தாள். சாவதற்கு முன் இந்த விருப்பத்தை ஊரவர்க்கும் சுற்றத்தினருக்கும் அவர்கள் சொல்லிச் சென்றனர்.

அவன் தங்கையின் மகன் இச் செய்தி அறிந்து தனியவளாக இருந்த அவளைத் தனக்கு இனியவளாக ஆக்கிக் கொள்ள மதுரை வந்து சேர்ந்தான். அவளை அழைத்துக் கொண்டு தன் சொந்த ஊர் நோக்கிச் சென்றான். வந்த வழியில் அத்தமனம் ஆயிற்று. அதனால் காட்டுவழியிலேயே அன்று இரவு தங்குவது எனத் தீர் மானித்தனர்.

நள்ளிரவில் மெய்ம் மறந்து உறங்கும் போது உயிர் துறந்து போகும் ஒரு நிகழ்ச்சி ஏற்பட்டது. அரவு ஒன்று வந்து கரவு செய்தது; நஞ்சு தலைக்கேறி அவனைத் துஞ்ச வைத்தது.

வணிகனின் மகள் செய்வது அறியாது கதறினாள். அவன் உடலத்தைத் தழுவிக் கொண்டு அழுதான்; பொழுது விடிந்ததும் அவள் அழுது அரற்றிய செய்தி அருகில் தலம் ஒன்றில் தங்கியிருந்த ஞானசம்பந்தருக்கு எட்டியது. இந்த அநியாய இறப்பை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தெய்வத்தை வழிபட்டு அவளுக்கு உய்வகை காண வேண்டும் என்று அவள் இருந்த இடம் தேடி நடந்து வந்தார். கண்ணீரும் கம்பலையுமாகத் தன் சரித்திரத்தைச் சொல்லிய சோக கீதத்தைக் கேட்டு அவர் உள்ளம் உருகி நீர் தெளித்து நிமலனை வழிபட்டு வேண்டிக் கொண்டு அவனை எழுப்பி உதவினார்.

"உறங்குவது போலும் சாக்காடு" என்ற குறள் அடி அவனைப் பொறுத்தவரை உண்மையாகியது. உறங்கி விழித்தது போல உயிர் பெற்று எழுந்தான்; அவன் ஞான சம்பந்தரின் கால்களில் விழுந்தான்; திருவடிபோற்றி வணங்கினான்.

செல்லும் ஊர் கேட்டு, நல்லுரை தந்து, அவர்களுக்கு விடை தந்தார். அதற்கு முன் ஒல்லும் வகையால் அங்கே மணம் முடித்துக் கொண்டு செல்லுமாறு அறிவித்தார். சடங்கு செய்து முடிக்கச் சான்றுகள் இல்லையே என்று அவர்கள் அறிவித்தனர். வன்னிமரமும், கிணறும், சிவலிங்கமும் அவர்கள் தங்கியிருந்த இடத்தில் இருந்தன. "அன்னியர் யாரும் இல்லை என்று கவலை வேண்டாம்; கன்னி இவளை மணக்க வேண்டும் என்று உன் மாமன் சொன்ன வார்த்தைகள் உண்டு; அதை உன் சுற்றத்தவர் அறிவதும் உண்டு; சுற்றமும் நட்பும் இல்லை என்று கற்றறிந்த நீ கவல வேண்டாம்; இதோ வன்னி மரம் இருக்கிறது மங்கலமாக இருந்து நிழல் செய்ய, கிணறு இருக்கிறது மங்கல நீர் கொண்டு குளிக்க, வழிபட உண்டு இறைவன் சிவலிங்கம். அதனால் இம் மூன்றையும் சான்றாகக் கொண்டு நீ மணம்முடித்துக்கொள்" என்றார்.

தனக்கு உயிரும் வாழ்வும் கொடுத்த உயர்ந்தோர் ஆகிய ஞானசம்பந்தர் ஒளிதந்த வெளிச்சத்தைக் கொண்டு அவர்கள் மணத் தம்பதிகளாகச் செல்வது அவர்களுக்கும் பாதுகாப்பினைத் தந்தது.

அவர்கள் ஊர் சென்றதும் எதிர்ப்பு இன்றி அவள் ஏற்றுக் கொள்ளப்பட்டாள். தான் ஈட்டிய சொத்தும் மாமன் மகளை மணந்து பெற்ற சொத்தும் சேர்ந்து அவன் இரட்டிப்புச் சொத்துகளுக்கு உரியவன் ஆனான். வணிகனாக இருந்ததால் வாணிபம் செய்து வான் பொருள் ஈட்டினான். தனபாக்கியம் பெற்றவன் புத்திர பாக்கியமும் பெற்றிருந்தான்.

மூத்தவளின் பிள்ளைகள் முரடர்களாகவளர்ந்தார்கள். இளையவளுக்கு ஒரே பிள்ளை. அவன் மிகவும் நல்லவனாகவும் சாதுவாகவும் இருந்ததால் தெருவில் விளையாடச் சென்றவர்கள் விளையாட்டில் வினையை வருவித்துக் கொண்டார்கள். மூத்தவளின் பிள்ளைகள் இளையவனை அடித்துவிட்டார்கள்.இளையவள் "அய்யோ குய்யோ என் மகனை அநியாயமாக அடித்துக் கொல்கிறார்களே" என்று ஒப்பாரி வைத்தாள். சிண்டு முடித்துக் கொண்டு இருவரும் சண்டைக்கு நின்றனர்.

"ஒண்ட வந்த பிடாரி நீ; இங்கே உனக்கு இங்கே அண்ட என்ன உரிமை இருக்கிறது. கட்டியவள் நான்; ஒட்டியவள் நீ; எங்கேயோ தெருவில் பொறுக்கிக் கொண்டிருந்த சிறுக்கி நீ; உனக்கு என்னடி இந்தக் கிறுக்கு, நாலுபேர் அறியத் தாலி கட்டிக் கொண்டு வந்தவள் நான்; நீ திருட்டுத் தாலி கட்டிக் கொண்டு மினுக்குகிறாய்; எனக்கு உரியவனை மயக்குகிறாய்.

கட்டியவளாக இருந்திால் நீ அதற்குச் சான்று காட்ட முடியுமா? எங்கே மணம் நடந்தது? எப்படி நடந்தது? சான்று உண்டா? மரியாதையாக நீயும் உன் மகனும் வீட்டை விட்டு வெளியேறிவிடுங்கள்; கழுத்தைப் பிடித்துத் தள்ளுவேன்" என்று அவள் வசை மாரி பொழிந்தாள்.

"திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை" என்ற பழமொழிக் கேற்ப மதுரைச் சொக்கரிடம் சென்று இளையவள் முறையிட்டாள்.

"நீ கவலைப்படாதே! மணம் செய்து கொண்ட போது சான்றாக நின்ற மூவரும் வருவர்" என்று இறைவன் வாக்குச் சாற்றியது.

அதை ஏற்றுக் கோயில் மூலவரின் ஈசானிய மூலையில் அவள் காத்து இருந்தாள். வன்னிமரமும் கிணறும் சிவலிங்கமும் அங்கு நிறுத்தப்பட்டன. எல்லாம் வல்ல இறைவன் திருவருள் கண்டு அவள் உள்ளம் உவந்தாள். ஓடிச் சென்று மூத்தவளை அழைத்து வந்து “வருக! இங்கே வந்து பார்; வன்னி மரமும், கிணறும், சிவலிங்கமும் சான்றாக மணம் முடித்தோம்; அவை வந்து நிற்கின்றன” என்றாள். இந்த அதிசயத்தைக் கண்டு அவள் அதிர்ந்து போனாள்.

இதற்குமுன் இம்மூன்றும் அங்கு இருந்தது இல்லை. இந்தப் புதுமையைக் கண்டு பதுமை போல அசையாமல் நின்றாள். சிவன் அருள் இளையவளுக்குச் சித்தித்து இருப்பது கண்டு அவள் வந்தித்து வணங்கித் தன்னை மன்னிக்குமாறு வேண்டினாள். ஒறுத்து வருத்திய அந்த மூத்தவளைக் கணவன் வெறுத்து ஒதுக்கி வைத்தான்.

வீடு சேர்ந்த இளையவள் தன் சகக்களத்தியை வெறுக்கவில்லை அவளைத் தன் மூத்த சகோதரியாக மதித்து அவளை ஏற்றுக் கொள்ளும்படி கணவனிடம் வேண்டினாள். மூத்தவளைத் தன் தாயெனப் போற்றி அன்பும் மரியாதையும் காட்டினாள்.

இளையவளின் சேர்க்கையில் அக்குடும்பம் நன்மைகனை அடைந்து அவர்கள் வணிகத்தில் உயர்ந்து தன்னிகரற்ற செல்வராய்த் திகழ்ந்தனர்.

முற்றும்



"https://ta.wikisource.org/w/index.php?title=திருவிளையாடற்_புராணம்/64&oldid=1124303" இலிருந்து மீள்விக்கப்பட்டது