திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/மாற்கு நற்செய்தி/அதிகாரங்கள் 11 முதல் 13 வரை

விக்கிமூலம் இலிருந்து

எருசலேமில் மானிடமகன் வெற்றி ஆர்ப்பரிப்போடு இயேசு எருசலேமில் நுழைதல் (மத் 21:1 - 11; லூக் 19:28 - 40; யோவா 12:12 - 19) 1 இயேசு தம் சீடரோடு ஒலிவமலை அருகிலுள்ள பெத்பகு, பெத்தானியா என்னும் ஊர்களுக்கு வந்து, எருசலேமை நெருங்கியபொழுது இரு சீடர்களை அனுப்பி,2 ″ உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குள் போங்கள்; அதில் நுழைந்தவுடன், இதுவரை யாரும் அமராத ஒரு கழுதைக்குட்டி கட்டி வைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள்.3 யாராவது உங்களிடம், ' ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? ' என்று கேட்டால், ' இது ஆண்டவருக்குத் தேவை, இதை அவர் உடனே திருப்பி இங்கு அனுப்பிவிடுவார் ' எனச் சொல்லுங்கள் ″ என்றார்.4 அவர்கள் சென்று ஒரு வீட்டுவாயிலுக்கு வெளியே, தெருவில் ஒரு கழுதைக் குட்டியைக் கட்டி வைத்திருப்பதைக் கண்டு அதை அவிழ்த்துக் கொண்டிருக்கையில்5 அங்கே நின்றுகொண்டிருந்த சிலர் அவர்களிடம், ' என்ன செய்கிறீர்கள்? கழுதைக் குட்டியையா அவிழ்க்கிறீர்கள்? ' என்று கேட்டனர்.6 அவர்கள் இயேசு தங்களுக்குக் கூறியபடியே சொல்ல, அங்கு நின்றவர்களும் போகவிட்டனர்.7 பிறகு அக்கழுதைக்குட்டியை இயேசுவிடம் கொண்டு வந்து, அதன் மேல் தங்கள் மேலுடைகளைப் போட, அவர் அதன் மீது அமர்ந்தார்.8 பலர் தங்கள் மேலுடைகளையும், வேறு சிலர் வயல் வெளிகளில் வெட்டிய இலைதழைகளையும் வழியில் பரப்பினர்.9 முன்னேயும் பின்னேயும் சென்றவர்கள், 'ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக!'ஓசன்னா' என்னும் எபிரேயச் சொல்லுக்கு 'விடுவித்தருளும்' என்பதே பொருள். ஆனால் எபிரேய வழக்கில் வாழ்த்தைத் தெரிவிக்கும் சொல்லாகவும் அது அமைந்தது 10 வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா! ' என்று ஆர்ப்பரித்தனர்.11 அவர் எருசலேமுக்குள் சென்று கோவிலில் நுழைந்தார். அவர் அனைத்தையும் சுற்றிப் பார்த்துவிட்டு, ஏற்கெனவே மாலை வேளையாகி விட்டதால், பன்னிருவருடன் பெத்தானியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

அத்தி மரத்தை சபித்தல் (மத் 21:18 - 19) 12 மறுநாள் பெத்தானியாவை விட்டு அவர்கள் திரும்பிய பொழுது இயேசுவுக்குப் பசி உண்டாயிற்று.13 இலையடர்ந்த ஓர் அத்திமரத்தை அவர் தொலையிலிருந்து கண்டு, அதில் ஏதாவது கிடைக்குமா என்று அதன் அருகில் சென்றார். சென்றபோது இலைகளைத்தவிர வேறு எதையும் அவர் காணவில்லை. ஏனெனில் அது அத்திப் பழக்காலம் அல்ல.14 அவர் அதைப் பார்த்து, ' இனி உன் கனியை யாரும் உண்ணவே கூடாது ' என்றார். அவருடைய சீடர்கள் இதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

இயேசு கோவிலைத் தூய்மையாக்குதல் (மத் 21:12 - 17; லூக் 19:45 - 48; யோவா 2:13 - 22) 15 அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். கோவிலுக்குள் சென்றதும் இயேசு அங்கு விற்பவர்களையும் வாங்குபவர்களையும் வெளியே துரத்தத் தொடங்கினார்; நாணயம் மாற்றுவோரின் மேசைகளையும் புறா விற்பவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்துப்போட்டார்.16 கோவில் வழியாக எந்தப் பொருளையும் எடுத்துச் செல்ல அவர் விடவில்லை.17 ″ ' என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைவேண்டலின் வீடு என அழைக்கப்படும் ' என்று மறைநூலில் எழுதியுள்ளது ″ என்று அவர்களுக்குக் கற்பித்தார்; ' ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கிவிட்டீர்கள் ' என்றார்.18 தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் இதைக் கேட்டு, அவரை எப்படி ஒழித்துவிடலாம் என்று வழிதேடினார்கள். எனினும் கூட்டத்தினர் அனைவரும் அவரது போதனையில் ஆழ்ந்து வியந்திருந்ததால் அவர்கள் அவருக்கு அஞ்சினார்கள்.19 மாலை வேளை ஆனதும் இயேசுவும் சீடர்களும் நகரத்திலிருந்து வெளியேறினார்கள்.

பட்டுப்போன அத்தி மரம் தரும் பாடம் (மத் 21:20 - 22) 20 காலையில் அவர்கள் அவ்வழியே சென்றபோது அந்த அத்தி மரம் வேரோடு பட்டுப்போயிருந்ததைக் கண்டார்கள்.21 அப்போது பேதுரு நடந்ததை நினைவுகூர்ந்து அவரை நோக்கி, ' ரபி, அதோ நீர் சபித்த அத்திமரம் பட்டுப்போயிற்று ' என்றார்.22 அதற்கு இயேசு அவர்களைப் பார்த்து, ' கடவுள்மீது நம்பிக்கை கொள்ளுங்கள்.23 உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; எவராவது இந்த மலையைப் பார்த்து, ' பெயர்ந்து கடலில் விழு ' எனத் தம் உள்ளத்தில் ஐயம் எதுவுமின்றி நம்பிக்கையுடன் கூறினால், அவர் சொன்னவாறே நடக்கும்.24 ஆகவே உங்களுக்குச் சொல்கிறேன்; நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது எவற்றையெல்லாம் கேட்பீர்களோ அவற்றைப் பெற்று விட்டீர்கள் என நம்புங்கள்; நீங்கள் கேட்டபடியே நடக்கும்.25 நீங்கள் வேண்டுதல் செய்ய நிற்கும்போது யார் மேலாவது நீங்கள் மனத்தாங்கல் கொண்டிருந்தால், மன்னித்துவிடுங்கள்.26 அப்போது உங்கள் விண்ணகத் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிப்பார்' என்று கூறினார்.'நீங்கள் மன்னிக்காவிட்டால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்கமாட்டார்' என்னும் இவ்வசனம் சில முக்கியமல்லாத கையெழுத்துப் படிகளில் மட்டுமே காணப்படுகிறது.

இயேசுவின் அதிகாரத்திற்குச் சவால் (மத் 21:23 - 27; லூக் 20:1 - 8) 27 அவர்கள் மீண்டும் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு கோவிலில் நடந்து கொண்டிருந்தபோது தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள், மூப்பர்கள் ஆகியோர் அவரிடம் வந்து,28 ' எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இவற்றைச் செய்ய உமக்கு அதிகாரம் கொடுத்தவர் யார்? ' என்று கேட்டனர்.29 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, ' நானும், உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்; நீங்கள் மறுமொழி கூறுங்கள். அப்போது எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என நான் உங்களுக்குச் சொல்வேன்.30 திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் யோவானுக்கு விண்ணகத்திலிருந்து வந்ததா? அல்லது மனிதரிடமிருந்து வந்ததா? எனக்குப் பதில் சொல்லுங்கள் ' என்றார்.31 அவர்கள், ″ ' விண்ணகத்திலிருந்து வந்தது ' என்போமானால், ' பின் ஏன் அவரை நம்பவில்லை ' எனக் கேட்பார். எனவே ' மனிதரிடமிருந்து வந்தது ' என்போமா? ″ என்று தங்களிடையே பேசிக் கொண்டிருந்தார்கள்.32 ஆனால் மக்கள் அனைவரும் யோவானை ஓர் இறைவாக்கினராகக் கருதியதால் அவர்கள் அவர்களுக்கு அஞ்சினார்கள்.33 எனவே, அவர்கள் இயேசுவிடம், ' எங்களுக்குத் தெரியாது ' என்று பதிலுரைத்தார்கள். இயேசுவும் அவர்களிடம், ' எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குச் கூறமாட்டேன் ' என்றார். அதிகாரம் 12

கொடிய குத்தகைக்காரர் உவமை (மத் 21:33 - 46; லூக் 20:9 - 19) 1 இயேசு அவர்களிடம் உவமைகள் வாயிலாகப் பேசத் தொடங்கினார்: 'ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டுச் சுற்றிலும் வேலியடைத்து, பிழிவுக்குழி வெட்டி, ஒரு காவல் மாடமும் கட்டினார். பிறகு தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டுவிட்டு நெடும்பயணம் மேற்கொண்டார்.'பிழிவுக்குழி' என்பது திராட்சைப் பழங்களை மிதித்து சாறு பிழிவதற்க்காகப் பாறைப்பகுதியில் வெட்டப்படுவது. 2 பருவகாலம் வந்ததும் அத்தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து திராட்சைப் பழங்களைப் பெற்று வருமாறு ஒரு பணியாளரை அவர் அனுப்பினார்.3 ஆனால் அவர்கள் அவரைப் பிடித்து நையப்புடைத்து வெறுங்கையராய் அனுப்பினார்கள்.4 மீண்டும் அவர் வேறொரு பணியாளரை அவர்களிடம் அனுப்ப, அவரையும் அவர்கள் தலையில் அடித்து அவமதித்தார்கள்.5 அவர் மேலும் ஒருவரை அனுப்ப, அவரையும் கொலை செய்தார்கள்; அவர் வேறு பலரையும் அனுப்பினார். அவர்களுள் சிலரை நையப்புடைத்தார்கள்; சிலரைக் கொன்றார்கள்.6 இன்னும் எஞ்சியிருந்தவர் ஒருவரே. அவர் அவருடைய அன்பு மகன், தம்மகனை அவர்கள் மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக்கொண்டு இறுதியாக அவரை அவர்களிடம் அனுப்பினார்.7 அப்பொழுது அத்தோட்டத் தொழிலாளர்கள், ' இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள் நாம் இவனைக் கொன்றுபோடுவோம். அப்போது சொத்து நமக்கு உரியதாகும் ' என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.8 அவ்வாறே அவரைப் பிடித்துக் கொன்று திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே எறிந்துவிட்டார்கள்.9 திராட்சைத் தோட்ட உரிமையாளர் என்ன செய்வார்? அவர் வந்து அத்தொழிலாளர்களை ஒழித்துவிட்டுத் திராட்சைத் தோட்டத்தை வேறு ஆள்களிடம் ஒப்படைப்பார்.10 ' கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று.11 ஆண்டவரால் நிகழ்ந்துள்ள இது நம் கண்களுக்கு வியப்பாயிற்று ' என்னும் மறைநூல் வாக்கை நீங்கள் வாசித்தது இல்லையா? ' என்று அவர் கேட்டார்.12 தங்களைக் குறித்தே அவர் இந்த உவமையைச் சொன்னார் என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டு அவரைப் பிடிக்க வழிதேடினார்கள்; ஆனால் மக்கள் கூட்டத்துக்கு அஞ்சினார்கள்; ஆகவே அவரை விட்டு அகன்றார்கள்.

சீசருக்கு வரி செலுத்துதல் (மத் 22:15 - 22; லூக் 20:20 - 26) 13 பரிசேயர் இயேசுவை அவருடைய பேச்சில் சிக்கவைக்க ஏரோதியர் சிலரை அவரிடம் அனுப்பி வைத்தனர்.14 அவர்கள் அவரிடம் வந்து, ' போதகரே, நீர் உண்மையுள்ளவர்; ஆள் பார்த்துச் செயல்படாதவர்; எவரையும் பொருட்படுத்தாமல் கடவுளின் நெறியை உண்மைக்கு ஏற்பக் கற்பிப்பவர் என்பது எங்களுக்குத் தெரியும். சீசருக்கு வரிசெலுத்துவது முறையா, இல்லையா? நாங்கள் செலுத்தவா, வேண்டாமா? ' என்று கேட்டார்கள்.15 அவர் அவர்களுடைய வெளிவேடத்தைப் புரிந்து கொண்டு, 'ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? என்னிடம் ஒரு தெனாரியம் கொண்டுவாருங்கள். நான் பார்க்க வேண்டும்' என்றார்.ஒரு தெனாரியம் என்பது ஒரு தொழிலாளரின் ஒருநாள் கூலிக்கு இனையான உரோமை வெள்ளி நாணயம். 16 அவர்கள் அதைக் கொண்டு வந்தார்கள். இயேசு அவர்களிடம், ' இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை? ' என்று கேட்டார். அவர்கள் அவரிடம், ' சீசருடையவை ' என்றார்கள்.17 அதற்கு இயேசு அவர்களை நோக்கி, ' சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள் ' என்றார். அவர்கள் அவரைக் குறித்து வியப்படைந்தார்கள்.

உயிர்த்தெழுதலைப் பற்றிய கேள்வி (மத் 22:23 - 33; லூக் 20:27 - 40) 18 உயிர்த்தெழுதல் இல்லை என்னும் கருத்துடைய சதுசேயர் இயேசுவை அணுகி,19 ' போதகரே, ஒருவர் மகப் பேறின்றித் தம் மனைவியை விட்டுவிட்டு இறந்துபோனால், அவரைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக்கொண்டு சகோதரருக்கு வழிமரபு உருவாக்கவேண்டும் என்று மோசே நமக்கு எழுதி வைத்துள்ளார்.20 சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்தார்.21 இரண்டாமவர் அவரை மணந்து அவரும் மகப்பேறின்றி இறந்ததார். மூன்றாமவருக்கும் அவ்வாறே நிகழ்ந்தது.22 ஏழு பேருக்கும் மகப்பேறு இல்லாமற்போயிற்று. அனைவருக்கும் கடைசியாக அப்பெண்ணும் இறந்தார்.23 அவர்கள் உயிர்த்தெழும் போது, அவர் அவர்களுள் யாருக்கு மனைவியாக இருப்பார்? ஏனெனில் எழுவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே! ' என்று கேட்டனர்.24 அதற்கு இயேசு அவர்களிடம், ' உங்களுக்கு மறைநூலும் தெரியாது, கடவுளின் வல்லமையும் தெரியாது. இதனால்தான் தவறான கருத்தைக் கொண்டிருக்கிறீர்கள்.25 இறந்து உயிர்த்தெழும்போது யாரும் திருமணம் செய்து கொள்வதில்லை. மாறாக அவர்கள் விண்ணகத் தூதரைப்போல் இருப்பார்கள்.26 இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசேயின் நூலில் முட்புதர் பற்றிய நிகழ்ச்சியில் இவ்வாறு வாசித்ததில்லையா? ' ஆபிரகாமின் கடவுள் ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் நானே ' என்று கடவுள் அவரிடம் சொன்னாரே!27 அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள். நீங்கள் தவறான கருத்துக் கொண்டிருக்கிறீர்கள் ' என்று கூறினார்.

முதன்மையான கட்டளை (மத் 22:34 - 40; லூக் 10:25 - 28) 28 அவர்கள் வாதாடிக்கொண்டிருப்பதைக் கேட்டுக்கொண்டிருந்த மறைநூல் அறிஞருள் ஒருவர், இயேசு அவர்களுக்கு நன்கு பதில் கூறிக்கொண்டிருந்ததைக் கண்டு அவரை அணுகி வந்து, ' அனைத்திலும் முதன்மையான கட்டளை எது? ' என்று கேட்டார்.29 அதற்கு இயேசு, ' இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர்.30 உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழுமனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக ' என்பது முதன்மையான கட்டளை.31 ' உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக ' என்பது இரண்டாவது கட்டளை. இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை ' என்றார்.32 அதற்கு மறைநூல் அறிஞர் அவரிடம், ' நன்று போதகரே, ' கடவுள் ஒருவரே; அவரைத் தவிர வேறு ஒரு கடவுள் இல்லை ' என்று நீர் கூறியது உண்மையே.33 அவரிடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்புகொள்வது போல் அடுத்திருப்பவரிடம் அன்பு செலுத்தவதும் எரிபலிகளையும் வேறுபலிகளையும்விட மேலானது ' என்று கூறினார்.34 அவர் அறிவுத்திறனோடு பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம், ' நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை ' என்றார். அதன்பின் எவரும் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.

தாவீதின் மகன் பற்றிய விளக்கம் (மத் 22:41 - 46; லூக் 10:41 - 44) 35 இயேசு கோவிலில் கற்பித்துக் கொண்டிருக்கும்போது, ' மெசியா தாவீதின் மகன் என்று மறைநூல் அறிஞர் கூறுவது எப்படி?36 தூய ஆவியின் தூண்டுதலால், ' ஆண்டவர் என் தலைவரிடம், ″ நான் உம் பகைவரை உமக்கு அடிபணியவைக்கும்வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும் ″ என்று உரைத்தார் ' எனத் தாவீதே கூறியுள்ளார் அல்லவா!37 தாவீது அவரைத் தலைவர் எனக் குறிப்பிடுவதால் அவர் அவருக்கு மகனாக இருப்பது எப்படி? ' என்று கேட்டார். அப்போது பெருந்திரளான மக்கள் இயேசு கூறியவற்றை மனமுவந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

மறைநூல் அறிஞரைக் குறித்து எச்சரிக்கை (மத் 23:1 - 36; லூக் 20:45 - 47) 38 இயேசு கற்பித்துக்கொண்டிருந்தபோது, ' மறைநூல் அறிஞர்களைக் குறித்துக் கவனமாய் இருங்கள். அவர்கள் தொங்கல் ஆடை அணிந்து நடமாடுவதையும் சந்தை வெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறார்கள்;39 தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விருந்துகளில் முதன்மையான இடங்களையும் பெற விரும்புகிறார்கள்;40 கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக்கொள்கிறார்கள்; நீண்ட நேரம் இறைவனிடம் வேண்டுவதாக நடிக்கிறார்கள். கடுந்தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகவிருப்பவர்கள் இவர்களே ' என்று கூறினார்.

ஏழைக் கைம்பெண்ணின் காணிக்கை (லூக் 21:1 - 4) 41 இயேசு காணிக்கைப் பெட்டிக்கு எதிராக அமர்ந்துகொண்டு மக்கள் அதில் செப்புக்காசு போடுவதை உற்று நோக்கிக் கொண்டிருந்தார். செல்வர் பலர் அதில் மிகுதியாகப் போட்டனர்.42 அங்கு வந்த ஓர் ஏழைக் கைம்பெண் ஒரு கொதிராந்துக்கு இணையான இரண்டு காசுகளைப் போட்டார்.ஒரு கொசிராந்து என்பது தெனாரியத்தில் அறுபத்து நான்கில் ஒரு பகுதி மதிப்புடைய காசு. 43 அப்பொழுது, அவர் தம் சீடரை வரவழைத்து, ' இந்த ஏழைக் கைம்பெண், காணிக்கைப் பெட்டியில் காசு போட்ட மற்ற எல்லாரையும் விட மிகுதியாகப் போட்டிருக்கிறார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.44 ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம்மிடம் இருந்த அனைத்தையுமே, ஏன் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார் ' என்று அவர்களிடம் கூறினார். அதிகாரம் 13

எருசலேம் கோவிலின் அழிவு பற்றி முன்னறிவித்தல் (மத் 24:1 - 2; லூக் 21:5 - 6) 1 இயேசு கோவிலைவிட்டு வெளியே வந்தபோது அவருடைய சீடருள் ஒருவர், \' போதகரே, எத்தகைய கற்கள்! எத்தகைய கட்டடங்கள்! பாரும் \' என்று அவரிடம் சொல்ல, 2 இயேசு அவரை நோக்கி, ' இந்த மாபெரும் கட்டடங்களைப் பார்க்கிறீர் அல்லவா! இங்குக் கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி எல்லாம் இடிக்கப்படும் ' என்றார்.

'வரப்போகும் கேடு பற்றி அறிவித்தல்'தடித்த எழுத்துக்கள் (மத் 24:3 - 14; லூக் 21:7 - 19) 3 இயேசு கோவிலுக்கு எதிராக உள்ள ஒலிவ மலைமீது அமர்ந்திருந்த போது பேதுரு, யாக்கோபு, யோவான், அந்திரேயா ஆகியோர் அவரிடம் தனியாக வந்து,4 ' நீர் கூறியவை எப்போது நிகழும்? இவையனைத்தும் நிறைவேறப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன? எங்களுக்குச் சொல்லும் ' என்று கேட்டனர்.5 அதற்கு இயேசு அவர்களிடம் கூறியது: ' உங்களை யாரும் நெறிதவறச் செய்யாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.6 ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, ' நானே அவர் ' என்று சொல்லிப் பலரை நெறிதவறச் செய்வர்.7 போர் முழக்கங்களையும் போர்களைப்பற்றிய செய்திகளையும் கேட்கும் பொழுது நீங்கள் திடுக்கிடாதீர்கள். இவை நிகழத்தான் வேண்டும். ஆனால் இவையே முடிவாகா.8 நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும்; பல இடங்களில் நில நடுக்கங்கள் ஏற்படும்; பஞ்சமும் உண்டாகும். இவை கொடும் வேதனைகளின் தொடக்கமே.9 நீங்கள் கவனமாயிருங்கள்; உங்களை யூதச் சங்கங்களிடம் ஒப்புவிப்பார்கள்; தொழுகைக்கூடங்களில் உங்களை நையப்புடைப்பார்கள்; என் பொருட்டு ஆளுநர் முன்னும் அரசர் முன்னும் நிறுத்தப்பட்டு அவர்கள் முன் எனக்குச் சான்று பகர்வீர்கள்.10 ஆனால் எல்லா மக்களினத்தவர்க்கும் முதலில் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும்.11 அவர்கள் உங்களைக் கைதுசெய்து கொண்டு செல்லும்போது என்ன பேசுவது என நீங்கள் முன்னதாகவே கவலைப்பட வேண்டாம்; அந்த நேரத்தில் உங்களுக்கு அருளப்படுவதையே பேசுங்கள். ஏனெனில் பேசுவோர் நீங்கள் அல்ல. மாறாக, தூய ஆவியாரே.12 மேலும் சகோதரர் சகோதரிகள் தம் உடன் சகோதரர் சகோதரிகளையும் தந்தை பிள்ளையையும் கொல்வதற்கு என ஒப்புவிப்பர்; பிள்ளைகள் பெற்றோர்க்கு எதிராக எழும்பி அவர்களைக் கொல்வார்கள்.13 எனது பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பர். ஆனால் இறுதிவரை மன உறுதியுடன் இருப்பவரே மீட்புப் பெறுவர்.

வரப்போகும் கொடும் வேதனை (மத் 24:15 - 28; லூக் 21:20 - 24) 14 'நடுங்க வைக்கும் தீட்டு' நிற்கக்கூடாத இடத்தில் நிற்பதை நீங்கள் காண்பீர்கள். படிப்பவர் இதைப் புரிந்து கொள்ளட்டும். அப்போது யூதேயாவில் உள்ளவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும்.'நடுங்கவைக்கும் தீட்டு' என்பது மக்கபேயர் காலத்தில் எருசலேம் கோவிலில் அந்தியோக்கு எப்பிப்பானசு நிறுவிய சிலையைக் குறிக்கும். இதனைப்பற்றித் தானி 9:27 11:31 12:11 1 மக் 1:54 ஆகிய வசனங்களில் காணலாம். 15 வீட்டின் மேல்தளத்தில் இருப்பவர் கீழே இறங்க வேண்டாம்; தம் வீட்டினின்று எதையும் எடுக்க அதில் நுழையவும் வேண்டாம்.16 வயலில் இருப்பவர் தம் மேலுடையை எடுக்கத் திரும்பி வர வேண்டாம்.17 அந்நாள்களில் கருவுற்றிருப்போர், பாலூட்டுவோர் ஆகியோர் நிலைமை அந்தோ பரிதாபம்!18 இவை குளிர்காலத்தில் நிகழாதபடி இறைவனிடம் வேண்டுங்கள்.19 ஏனெனில் இவை துன்பம்தரும் நாள்களாய் இருக்கும். கடவுள் படைக்கத் தொடங்கிய காலத்திலிருந்து இந்நாள்வரை இத்தகைய வேதனை உண்டானதில்லை; இனிமேலும் உண்டாகப் போவதில்லை.20 ஆண்டவர் அந்நாள்களைக் குறைக்காவிடில் எவரும் தப்பிப் பிழைக்க முடியாது. ஆனால் தாம் தேர்ந்து கொண்டவர்களின் பொருட்டு அவர் அந்நாள்களைக் குறைத்திருக்கிறார் ″ .21 ' அப்பொழுது யாராவது உங்களிடம், ' இதோ, மெசியா இங்கே இருக்கிறார்; அதோ, அங்கே இருக்கிறார் ' எனச் சொன்னால் நீங்கள் நம்ப வேண்டாம்.22 ஏனெனில் போலி மெசியாக்களும் போலி இறைவாக்கினர்களும் தோன்றி, முடியுமானால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்களையே நெறிதவறச் செய்ய அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் செய்து காட்டுவர்.23 நீங்களோ கவனமாயிருங்கள். அனைத்தையும் முன்னதாகவே உங்களுக்குச் சொல்லிவிட்டேன்.

மானிடமகன் வருகை (மத் 24:32 - 35; லூக் 21:25 - 26) 24 ' அந்நாள்களில் அவ்வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டுவிடும்; நிலா ஒளிகொடாது.25 விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமிருக்கும்; வான்வெளிக் கோள்கள் அதிரும்.26 அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதைக் காண்பார்கள்.27 பின்பு அவர் வானதூதரை அனுப்பி, அவர்கள் மண்ணுலகில் ஒரு கோடியிலிருந்து விண்ணுலகில் மறுகோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்.

அத்தி மர உவமை (மத் 24:32 - 35; லூக் 21:29 - 33) 28 ' அத்தி மரத்திலிருந்து ஓர் உண்மையைக் கற்றுக் கொள்ளுங்கள். அதன் கிளைகள் தளிர்த்து இலைகள் தோன்றும்போது கோடைக்காலம் நெருங்கி வந்துவிட்டது என நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள்.29 அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.30 இவையனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.31 விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்; ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா.

மானிடமகன் வரும் நாளும் வேளையும் (மத் 24:36 - 44; லூக் 17:26 - 30, 34 - 36) 32 ' ஆனால் அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது; விண்ணகத்திலுள்ள தூதருக்கோ மகனுக்கோ கூடத் தெரியாது.33 கவனமாயிருங்கள், விழிப்பாயிருங்கள். ஏனெனில் அந்நேரம் எப்போது வரும் என உங்களுக்குத் தெரியாது.34 நெடும்பயணம் செல்லவிருக்கும் ஒருவர் தம் வீட்டைவிட்டு வெளியேறும்போது தம் பணியாளர் ஒவ்வொருவரையும் அவரவர் பணிக்குப் பொறுப்பாளராக்கி, விழிப்பாயிருக்கும்படி வாயில் காவலருக்குக் கட்டளையிடுவார்.35 அதுபோலவே நீங்களும் விழிப்பாயிருங்கள். ஏனெனில் வீட்டுத் தலைவர் மாலையிலோ, நள்ளிரவிலோ, சேவல் கூவும் வேளையிலோ, காலையிலோ எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது.36 அவர் திடீரென்று வந்து நீங்கள் தூங்குவதைக் காணக்கூடாது.37 நான் உங்களுக்குச் சொல்லுவதை எல்லாருக்குமே சொல்கிறேன்; விழிப்பாயிருங்கள். '