திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/மாற்கு நற்செய்தி/அதிகாரங்கள் 1 முதல் 4 வரை

விக்கிமூலம் இலிருந்து

முன்னுரை ஆசிரியர்

மாற்கு நற்செய்தி நூலின் ஆசிரியர் யோவான் மாற்கு என்பது திருச்சபை மரபு, மாற்குவின் தாய் பெயர் மரியா. இவர்களுடைய வீட்டில் தொடக்கக் காலக் கிறிஸ்தவர்கள் வழிபட்டு வந்தனர் (திப 12:12) . மாற்கு 14:51, 52 - இல் குறிப்பிடப்பட்டிருக்கும் இளைஞர் இவராக இருக்கலாம். இவர் பர்னபாவின் உறவினர். தொடக்கத்தில் பவுலோடு பயணம் செய்தவர். பவுலுடைய வாழ்வின் இறுதிக் கட்டத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்தவர் (2 திமொ 4:11). இவர் திருத்தூதர் பேதுருவுக்கும் துணையாகத் திருத் தொண்டில் ஈடுபட்டிருந்தார். பேதுருவின் போதனைகளின் அடிப்படையில் தான் இந்நற்செய்தி எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது பலரது கருத்து. சூழல்

நற்செய்தி நூல்களுள் மாற்கு நற்செய்தி நூல்தான் முதலாவதாக எழுதப்பட்டது என்பது பெரும்பாலான அறிஞர்களின் கருத்து. கி.பி.64- ஆம் ஆண்டில் இருந்து 70-ஆம் ஆண்டுக்குள் இந்நூல் எழுதப்பட்டிருக்க வேணடும். எருசலேம் அழிக்கப்படவிருந்த சூழலில், உரோமையரால் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டக் காலத்தில், உரோமை நகரிலிருந்த மாற்கு இதனை எழுதியிருக்க வேண்டும். பேதுரு,பவுல் போனற பெருந்தலைவர்கள் கொல்லப்பட்டுவிட்ட காலக் கட்டத்தில், இயேசுவின் நற்செய்தியைத் தொகுத்து அதற்கு எழுத்து வடிவம் கொடுக்க வேண்டியது இன்றியமையாத தேவையாகத் தெரிந்திருக்க வேண்டும்.

இந்நற்செய்தி நூல் பிற இனத்துக் கிறிஸ்தவர்களைக் குறிப்பாகக் கண்முன் கொண்டு எழுதப்பட்டதாகக் தெரிகிறது. இந்நூலின் ஆசிரியர், இயேசு கிறிஸ்துவைப்பற்றிய மரபுகளை, சிறப்பாக அவருடைய வல்ல செயல்கள், உவமைகள், கூற்றுக்கள் ஆகியவற்றைத் தமக்கே உரிய பாணியில் விறுவிறுப்பாகத் தொகுத்து எழுதியுள்ளார். இவ்வாறு இயேசுவே மெசியா, இறைமகன் என்னும் உறுதியில் பிற இனத்துக் கிறிஸ்தவர்கள் வளர இந்நூல் பெரிதும் உதவியாக அமைகிறது. உள்ளடக்கம்

"கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தி" என்னும் தொடக்கச் சொற்களே நற்செய்தி நூலுக்கு நல்ல தலைப்பாக அமைகின்றன. இந்நூலின் முதல் பகுதியில் இயேசு கிறிஸ்து மாட்சிமை மிக்க இறைமகனாகிய மெசியா (1:1) என்பதையும் மனம் மாறும் மக்கள் பாவமன்னிபபுப் பெற்று, இறையாட்சியில் உரிமைக் குடிமக்களாகும் தகுதி பெறுகின்றனர் (1:15) என்பதையும் இவ்வாசிரியர் எடுத்துக்காட்டுகிறார். இவ்வாறு கலிலேயாவில் மக்கள் திரளுக்குப் பணிபுரியும் இயேசு, சீடர்களோடு இணைந்து செயல்பட்டு, பேய்கள் மற்றும் சமயத் தலைவர்களின் அதிகாரத்தை அடக்குகின்றார் என்பதை, மற்ற நற்செய்தி ஆசிரியர்களைவிட விளக்கமாக இவர் எடுத்துரைக்கிறார்.

இயேசு கிறிஸ்து மக்கள் அனைவருக்கும் மீட்பு வழங்கும் துன்புறும் மானிடமகன் (10:45) என்ற கருத்து, இரணடாம் பகுதியில் வலியுறுத்தப்படுகின்றது. "இயேசு கிறிஸ்து துன்பங்கள் பட்டு இறந்து உயிர்பெற்றெழுந்து மீட்பரானார்" என்னும் தொடக்கக் காலத் திருச்சபையின் மையப் போதனையை, இயேசுவின் வாழ்க்கை நிகழ்ச்சிகளின் அடிப்படையில் இந்நூல் ஆசிரியர் விரித்துக் கூறுகிறார். அமைப்பு

பகுதி 1 முன்னுரை 1:1 - 13 பகுதி 2. இயேசுவே மெசியா (1:14 - 8:30)

  1. இயேசுவும் மக்கள் கூட்டமும் 1:14 - 3:6
  2. இயேசுவும் சீடர்களும் 3:7 - 6:6அ
  3. இயேசு தம்மைச் சீடருக்கு வெளிப்படுத்தல் 6:6ஆ - 8:26
  4. இயேசு மெசியா என்னும் அறிக்கை 8:27 - 30 

பகுதி; 3. இயேசுவே மானிடமகன் ( 8:31 - 16:8)

  1. பயணம் செய்யும் மானிடமகன் 8:31 - 10:52
  2. எருசலேமில் மானிடமகன் 11:1 - 13:37
  3. மானிடமகன் முழுமையாய் வெளிப்படுத்தப்படல் 14:1 -16:8 

பகுதி; 4. முடிவுரை 16:9 - 20

அதிகாரம் 1

1. முன்னுரை திருமுழுக்கு யோவானின் உரை (மத் 3:1 - 12; லூக் 3:1 - 9, 15 - 17; யோவா 1:19 - 28) 1 கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்: 2 ' இதோ, என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன்; அவர் உமக்கு வழியை ஆயத்தம் செய்வார்.3 பாலை நிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது; ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள் ' என்று இறைவாக்கினர் எசாயாவின் நூலில் எழுதப்பட்டுள்ளது.4 இதன்படியே திருமுழுக்கு யோவான் பாலை நிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றி வந்தார்.5 யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்; தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தனர்.6 யோவான் ஒட்டகமுடி ஆடையை அணிந்திருந்தார்; தோல்கச்சையை இடையில் கட்டியிருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார்.7 அவர் தொடர்ந்து, ' என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக் கூட எனக்குத் தகுதியில்லை.8 நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்; அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார் ' எனப் பறைசாற்றினார்.

இயேசு திருமுழுக்குப் பெறுதல் (மத் 3:13 - 17; லூக் 3:21 - 22) 9 அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார்.10 அவர் ஆற்றிலிருந்து கரையேறிய உடனே வானம் பிளவுபடுவதையும் தூய ஆவி புறாவைப் போல் தம்மீது இறங்கிவருவதையும் கண்டார்.11 அப்பொழுது, ' என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன் ' என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.

இயேசு சோதிக்கப்படுதல் (மத் 4:1 - 11; லூக் 4:1 - 13) 12 உடனே தூய ஆவியால் அவர் பாலைநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.13 பாலை நிலத்தில் அவர் நாற்பது நாள் இருந்தார்; அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார்; அங்குக் காட்டு விலங்குகளிடையே இருந்தார். வானதூதர் அவருக்குப் பணிவிடை செய்தனர்.

2. இயேசுவே மெசியா இயேசுவும் மக்கள் கூட்டமும் இயேசு கலிலேயாவில் பணி தொடங்குதல் (மத் 4:12 - 17; லூக் 4:14 - 15) 14 யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார்.15 ' காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் ' என்று அவர் கூறினார்.

முதல் சீடர்களை அழைத்தல் (மத் 4:18 - 22; லூக் 5:1 - 11) 16 அவர் கலிலேயக் கடலோரமாய்ச் சென்றபோது சீமோனையும் அவர் சகோதரரான அந்திரேயாவையும் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள்.17 இயேசு அவர்களைப் பார்த்து, ' என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன் ' என்றார்.18 உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.19 பின்னர், சற்று அப்பால் சென்றபோது செபதேயுவின் மகன் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் இயேசு கண்டார். அவர்கள் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள்.20 உடனே இயேசு அவர்களையும் அழைத்தார். அவர்களும் தங்கள் தந்தை செபதேயுவைக் கூலியாள்களோடு படகில் விட்டுவிட்டு அவர் பின் சென்றார்கள்.

தீய ஆவி பிடித்தவரைக் குணப்படுத்துதல் (லூக் 4:31 - 37) 21 அவர்கள் கப்பர்நாகும் ஊரில் நுழைந்தார்கள். ஓய்வு நாள்களில் இயேசு தொழுகைக்கூடத்திற்குச் சென்று கற்பித்து வந்தார்.22 அவருடைய போதனையைக் குறித்து மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார்.23 அப்போது அவர்களுடைய தொழுகைக்கூடத்தில் தீய ஆவி பிடித்திருந்த ஒருவர் இருந்தார்.24 அவரைப் பிடித்திருந்த ஆவி, ' நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர் ' என்று கத்தியது.25 ' வாயை மூடு; இவரை விட்டு வெளியே போ ' என்று இயேசு அதனை அதட்டினார்.26 அப்பொழுது அத்தீய ஆவி அம்மனிதருக்கு வலிப்பு உண்டாக்கிப் பெருங்கூச்சலிட்டு அவரை விட்டு வெளியேறிற்று.27 அவர்கள் அனைவரும் திகைப்புற்று, ' இது என்ன? இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே! இவர் தீய ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்; அவையும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! ' என்று தங்களிடையே பேசிக் கொண்டனர்.28 அவரைப் பற்றிய செய்தி உடனே கலிலேயாவின் சுற்றுப்புறமெங்கும் பரவியது.

சீமோன் பேதுருவின் மாமியார் குணமடைதலும் இயேசு பலருக்குக் குணமளித்தலும் (மத் 8:14 - 17; லூக் 4:38 - 41) 29 பின்பு அவர்கள் தொழுகைக் கூடத்தை விட்டு வெளியே வந்து யாக்கோபு, யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள்.30 சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தார். உடனே அவர்கள் அதைப் பற்றி இயேசுவிடம் சொன்னார்கள்.31 இயேசு அவரருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார்.32 மாலை வேளையில், கதிரவன் மறையும் நேரத்தில் நோயாளர்கள், பேய்பிடித்தவர்கள் அனைவரையும் மக்கள் அவரிடம் கொண்டுவந்தார்கள்.33 நகர் முழுவதும் வீட்டு வாயில்முன் கூடியிருந்தது.34 பல்வேறு பிணிகளால் வருந்திய பலரை அவர் குணப்படுத்தினார். பல பேய்களையும் ஓட்டினார்; அந்தப் பேய்கள் அவரை அறிந்திருந்ததால் அவற்றை அவர் பேசவிடவில்லை.

ஊர்கள் தோறும் நற்செய்தி முழக்கம் ( லூக் 4:42 - 44) 35 இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார்.36 சீமோனும் அவருடன் இருந்தவர்களும் அவரைத் தேடிச் சென்றார்கள்.37 அவரைக் கண்டதும், ' எல்லாரும் உம்மைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் ' என்றார்கள்.38 அதற்கு அவர், ' நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள். அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்; ஏனெனில் இதற்காகவே நான் வந்திருக்கிறேன் ' என்று சொன்னார்.39 பின்பு அவர் கலிலேய நாடுமுழுவதும் சென்று அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றி பேய்களை ஓட்டி வந்தார்.

தொழுநோயாளர் நலமடைதல் (மத் 8:1 - 4; லூக் 5:12 - 16) 40 ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, ' நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும் ' என்று முழந்தாள் படியிட்டு வேண்டினார்.41 இயேசு அவர்மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், ' நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக! ' என்றார்.42 உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க, அவர் நலமடைந்தார்.43 பிறகு அவரிடம், ' இதை யாருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி, நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும்.44 நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும் ' என்று மிகக் கண்டிப்பாகக் கூறி உடனடியாக அவரை அனுப்பி விட்டார்.45 ஆனால் அவர் புறப்பட்டுச் சென்று இந்தச் செய்தியை எங்கும் அறிவித்துப் பரப்பிவந்தார். அதனால் இயேசு எந்த நகருக்குள்ளும் வெளிப்படையாய்ச் செல்ல முடியவில்லை; வெளியே தனிமையான இடங்களில் தங்கிவந்தார். எனினும் மக்கள் எல்லா இடங்களிலிருந்தும் அவரிடம் வந்து கொண்டிருந்தார்கள். அதிகாரம் 2

முடக்குவாதமுற்றவரைக் குணப்படுத்துதல் (மத் 9:1 - 8; லூக் 5:17 - 26) 1 சில நாள்களுக்குப்பின் இயேசு மீண்டும் கப்பர்நாகுமுக்குச் சென்றார். அவர் வீட்டில் இருக்கிறார் என்னும் செய்தி பரவிற்று.2 பலர் வந்து கூடவே, வீட்டு வாயிலருகிலும் இடமில்லாமல் போயிற்று. அவர் அவர்களுக்கு இறைவார்த்தையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்.3 அப்போது முடக்குவாதமுற்ற ஒருவரை நால்வர் சுமந்து அவரிடம் கொண்டுவந்தனர்.4 மக்கள் திரண்டிருந்த காரணத்தால் அவரை இயேசுவுக்கு முன் கொண்டுவர இயலவில்லை. எனவே அவர் இருந்த இடத்திற்கு மேலே வீட்டின் கூரையை உடைத்துத் திறப்பு உண்டாக்கி, முடக்குவாதமுற்றவரைப் படுக்கையோடு கீழே இறக்கினர்.5 இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு, முடக்குவாதமுற்றவரிடம், ' மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன ' என்றார்.6 அங்கே அமர்ந்திருந்த மறைநூல் அறிஞர் சிலர், ' இவன் ஏன் இப்படிப் பேசுகிறான்?7 இவன் கடவுளைப் பழிக்கிறான். கடவுள் ஒருவரே அன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்? ' என உள்ளத்தில் எண்ணிக் கொண்டிருந்தனர்.8 உடனே அவர்கள் தமக்குள் இவ்வாறு எண்ணுவதை இயேசு தம்முள் உணர்ந்து, அவர்களை நோக்கி, ' உங்கள் உள்ளங்களில் இவ்வாறு எண்ணுவது ஏன்?9 முடக்குவாதமுற்ற இவனிடம் ' உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன ' என்பதா? ' எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட, என்பதா? எது எளிது?10 மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் ' என்றார். எனவே அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி,11 ' நான் உனக்குச் சொல்கிறேன், நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு உனது வீட்டுக்குப் போ ' என்றார்.12 அவரும் எழுந்து உடனே தம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு எல்லாரும் காண வெளியே சென்றார். இதனால் அனைவரும் மலைத்துப்போய், ' இதைப்போல நாம் ஒருபோதும் கண்டதில்லையே ' என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.

லேவியை அழைத்தல் (மத் 9:9 - 13; லூக் 5:27 - 32) 13 இயேசு மீண்டும் கடலோரம் சென்றார். மக்கள் கூட்டத்தினர் எல்லாரும் அவரிடம் வரவே, அவர் அவர்களுக்குக் கற்பித்தார்.14 பின்பு அங்கிருந்து அவர் சென்றபோது அல்பேயுவின் மகன் லேவி சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்டார்; அவரிடம், ' என்னைப் பின்பற்றி வா ' என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்.15 பின்பு அவருடைய வீட்டில் பந்தி அமர்ந்திருந்தபோது வரிதண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர். ஏனெனில் இவர்களுள் பலர் இயேசுவைப் பின்பற்றியவர்கள்.16 அவர் பாவிகளோடும் வரிதண்டுபவர்களோடும் உண்பதைப் பரிசேயரைச் சார்ந்த மறைநூல் அறிஞர் கண்டு, அவருடைய சீடரிடம், ' இவர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பதேன்? ' என்று கேட்டனர்.17 இயேசு, இதைக் கேட்டவுடன் அவர்களை நோக்கி, ' நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன் ' என்றார்.

நோன்பு பற்றிய கேள்வி (மத் 9:14 - 17; லூக் 5:33 - 39) 18 யோவானுடைய சீடரும் பரிசேயரும் நோன்பு இருந்துவந்தனர். சிலர் இயேசுவிடம், ' யோவானுடைய சீடர்களும் பரிசேயருடைய சீடர்களும் நோன்பிருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பிருப்பதில்லை? ' என்று கேட்டனர்.19 அதற்கு இயேசு அவர்களை நோக்கி, ' மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் நோன்பு இருக்கமுடியுமா? மணமகன் அவர்களோடு இருக்கும் காலமெல்லாம் அவர்கள் நோன்பிருக்க முடியாது.20 ஆனால் மணமகன் அவர்களைவிட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்.21 எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப்போடுவதில்லை. அவ்வாறு ஒட்டுப்போட்டால், அந்த புதிய துணி பழையதிலிருந்து கிழியும்; கிழிசலும் பெரிதாகும்.22 அதுபோலப் பழைய தோற்பைகளில், எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை. ஊற்றிவைத்தால் மது தோற்பைகளை வெடிக்கச் செய்யும்; மதுவும் தோற்பைகளும் பாழாகும். புதிய மது புதுத் தோற்பைகளுக்கே ஏற்றது ' என்றார்.

ஓய்வு நாளில் கதிர் கொய்தல் (மத் 12:1 - 8; லூக் 6:1 - 5) 23 ஓய்வு நாளில் இயேசு வயல் வழியே செல்ல நேர்ந்தது. அவருடைய சீடர் கதிர்களைக் கொய்துகொண்டே வழி நடந்தனர்.24 அப்பொழுது பரிசேயர் இயேசுவிடம், ' பாரும், ஓய்வு நாளில் செய்யக்கூடாததை ஏன் இவர்கள் செய்கிறார்கள்? ' என்று கேட்டனர்.25 அதற்கு அவர் அவர்களிடம், ' தாமும் தம்முடன் இருந்தவர்களும் உணவின்றிப் பசியாய் இருந்தபோது தாவீது என்ன செய்தார் என்பதை நீங்கள் வாசித்ததே இல்லையா?26 அபியத்தார் தலைமைக் குருவாய் இருந்தபோது தாவீது இறைஇல்லத்திற்குள் சென்று, குருக்களைத் தவிர வேறு எவரும் உண்ணக்கூடாத அர்ப்பண அப்பங்களைத் தாம் உண்டதுமன்றித் தம்மோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தார் அல்லவா? ' என்றார்.27 மேலும் அவர் அவர்களை நோக்கி, ' ஓய்வுநாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது; மனிதர் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை.28 ஆதலால் ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே ' என்றார்.

அதிகாரம் 3

கை சூம்பியவர் ஓய்வு நாளில் நலமடைதல் (மத் 12:9 - 14; லூக் 6:6 - 11) 1 அவர் மீண்டும் தொழுகைக்கூடத்திற்குள் சென்றார். அங்கே கை சூம்பியவர் ஒருவர் இருந்தார்.2 சிலர் இயேசுமீது குற்றம் சுமத்தும் நோக்குடன், ஓய்வுநாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தனர்.3 இயேசு கை சூம்பிவரை நோக்கி, ' எழுந்து, நடுவே நில்லும் ' என்றார்.4 பின்பு அவர்களிடம், ' ஓய்வுநாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை? ' என்று அவர் கேட்டார். அவர்களோ பேசாதிருந்தார்கள்.5 அவர் சினத்துடன் அவர்களைச் சுற்றிலும் திரும்பிப் பார்த்து, அவர்களது பிடிவாத உள்ளத்தைக் கண்டு வருந்தி, கை சூம்பியவரை நோக்கி, ' கையை நீட்டும் ' என்றார். அவர் நீட்டினார். அவருடைய கை மீண்டும் நலமடைந்தது.6 உடனே பரிசேயர் வெளியேறி ஏரோதியரோடு சேர்ந்து இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர்.

இயேசுவும் சீடர்களும் திரளான மக்களுக்குப் பணி புரிதல் (மத் 4:23 - 25;லூக் 6:17 - 19) 7 இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தம் சீடருடன் கடலோரம் சென்றார். கலிலேயாவிலிருந்து பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். மேலும் யூதேயா,8 எருசலேம், இதுமேயா, யோர்தான் அக்கரைப்பகுதி, தீர், சீதோன் ஆகிய இடங்களிலிருந்தும் பெருந்திரளான மக்கள் அவர் செய்தவற்றையெல்லாம் கேள்வியுற்று அவரிடம் வந்தனர்.9 மக்கள் கூட்டம் தம்மை நெருக்கிவிடாதவாறு தமக்காகப் படகு ஒன்றை முன்னேற்பாடாக வைத்திருக்குமாறு அவர் சீடருக்குச் சொன்னார்.10 ஏனெனில், பலரை அவர் குணமாக்கியதால், நோயுற்றோர் அனைவரும் அவரைத் தொடவேண்டுமென்று வந்து அவர்மீது விழுந்து கொண்டிருந்தனர்.11 தீய ஆவிகளும் அவரைக் கண்டபோதே அவர்முன் விழுந்து, ' இறைமகன் நீரே ' என்று கத்தின.12 அவரோ, தம்மை வெளிப்படுத்த வேண்டாமென அவற்றிடம் மிகக் கண்டிப்பாய்ச் சொன்னார்.

பன்னிருவரை அழைத்தல் (மத் 10:1 - 4; லூக் 6:12 - 16) 13 அதன்பின்பு இயேசு மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்களும் அவரிடம் வந்தார்கள்.14 தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார்;15 அவர்களுக்குத் திருத்தூதர் என்றும் பெயரிட்டார்.16 அவர் ஏற்படுத்திய பன்னிருவர் முறையே, பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன்,17 செபதேயுவின் மகன் யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் - இவ்விருவருக்கும் ' இடியைப் போன்றோர் ' எனப் பொருள்படும் பொவனேர்க்கேசு என்று அவர் பெயரிட்டார். -18 அந்திரேயா, பிலிப்பு, பர்த்தலமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, தீவிரவாதியாய் இருந்த சீமோன்,19 இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து என்போர் ஆவர்.

இயேசுவும் பெயல்செபூலும் (மத் 12:22 - 32; லூக் 11:14 - 23; 12:10) 20 அதன்பின் இயேசு வீட்டிற்குச் சென்றார். மீண்டும் மக்கள் கூட்டம் வந்து கூடியதால் அவர்கள் உணவு அருந்தவும் முடியவில்லை.21 அவருடைய உறவினர் இதைக் கேள்விப்பட்டு, அவரைப் பிடித்துக்கொண்டுவரச் சென்றார்கள். ஏனெனில் அவர் மதிமயங்கி இருக்கிறார் என்று மக்கள் பேசிக் கொண்டனர்.22 மேலும், எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர், ' இவனைப் பெயல்செபூல் பிடித்திருக்கிறது ' என்றும் ' பேய்களின் தலைவனைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான் ' என்றும் சொல்லிக் கொண்டிருந்தனர்.23 ஆகவே அவர் அவர்களைத் தம்மிடம் வரவழைத்து அவர்களுக்கு உவமைகள் வாயிலாகக் கூறியது: ' சாத்தான் சாத்தானை எப்படி ஓட்ட முடியும்?24 தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் நிலைத்து நிற்க முடியாது.25 தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த வீடும் நிலைத்து நிற்க முடியாது.26 சாத்தான் தன்னையே எதிர்த்து நின்று பிளவுபட்டுப் போனால் அவன் நிலைத்து நிற்க முடியாது. அதுவே அவனது அழிவு.27 முதலில் வலியவரைக் கட்டினாலன்றி அவ்வலியவருடைய வீட்டுக்குள் நுழைந்து அவருடைய பொருள்களை எவராலும் கொள்ளையிட முடியாது; அவரைக் கட்டி வைத்த பிறகுதான் அவருடைய வீட்டைக் கொள்ளையிட முடியும்.28 உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தூய ஆவியாரைப் பழித்து உரைப்பவர் எவரும் எக்காலத்திலும் மன்னிப்புப்பெறார்; அவர் என்றென்றும் தீராத பாவத்திற்கு ஆளாவார்.29 ஆனால் மக்களுடைய மற்றப் பாவங்கள், அவர்கள் கூறும் பழிப்புரைகள் அனைத்தும் அவர்களுக்கு மன்னிக்கப்படும். ' 30 ' இவனைத் தீய ஆவி பிடித்திருக்கிறது ' என்று தம்மைப் பற்றி அவர்கள் சொல்லி வந்ததால் இயேசு இவ்வாறு கூறினார்.

இயேசுவின் உண்மையான உறவினர் (மத் 12:45 - 50; லூக் 8:19 - 21) 31 அப்பொழுது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து வெளியே நின்று கொண்டு அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள்.32 அவரைச் சூழ்ந்து மக்கள் கூட்டம் அமர்ந்திருந்தது. ' அதோ, உம் தாயும் சகோதரர்களும் சகோதரிகளும் வெளியே நின்று கொண்டு உம்மைத் தேடுகிறார்கள் ' என்று அவரிடம் சொன்னார்கள்.33 அவர் அவர்களைப் பார்த்து, ' என்தாயும் என் சகோதரர்களும் யார்? என்று கேட்டு,34 தம்மைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களைச் சுற்றிலும் பார்த்து, ' இதோ! என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே.35 கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார் ' என்றார். அதிகாரம் 4

விதைப்பவர் உவமை (மத் 13:1 - 9; லூக் 8:4 - 8) 1 அவர் மீண்டும் கடலோரத்தில் கற்பிக்கத் தொடங்கினார். மாபெரும் மக்கள் கூட்டம் அவரிடம் ஒன்றுகூடி வர, அவர் கடலில் நின்ற ஒரு படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற்கரையில் இருந்தனர்.2 அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றை அவர்களுக்குக் கற்பித்தார். அவர் அவர்களுக்குக் கற்பித்தது:3 ' இதோ, கேளுங்கள், விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார்.4 அவர் விதைக்கும் பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன.5 வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன.6 ஆனால் கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேர் இல்லாமையால் கருகிப் போயின.7 மற்றும் சில விதைகள் முட்செடிகளிடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கிவிடவே, அவை விளைச்சலைக் கொடுக்கவில்லை.8 ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்து வளர்ந்து, சில முப்பது மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில நூறு மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன.9 கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும். '

உவமைகளின் நோக்கம் (மத் 13:10 - 17; லூக் 8:9 - 10) 10 அவர் தனிமையான இடத்தில் இருந்தபோது அவரைச் சூழ்ந்து இருந்தவர்கள், பன்னிருவரோடு சேர்ந்து கொண்டு, உவமைகளைப்பற்றி அவரிடம் கேட்டார்கள்.11 அதற்கு இயேசு அவர்களிடம், ' இறையாட்சியின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது; புறம்பே இருக்கிறவர்களுக்கோ எல்லாம் உவமைகளாகவே இருக்கின்றன.12 எனவே அவர்கள் ' ஒருபோதும் மனம் மாறி மன்னிப்புப் பெறாதபடி கண்ணால் தொடர்ந்து பார்த்தும் கண்டு கொள்ளாமலும் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்ளாமலும் இருப்பார்கள் ' என்று கூறினார்.

விதைப்பவர் உவமையின் விளக்கம் (மத் 13:18 - 23; லூக் 8:11 - 15) 13 மேலும் அவர் அவர்களை நோக்கி, ' இந்த உவமை உங்களுக்குப் புரியவில்லையா? பின்பு எப்படி மற்ற உவமைகளையெல்லாம் நீங்கள் புரிந்துகொள்வீர்கள்?14 விதைப்பவர் இறைவார்த்தையை விதைக்கிறார்.15 வழியோரம் விழுந்த விதைகளுக்கு ஒப்பானவர்கள் வார்த்தையைக் கேட்பார்கள். ஆனால் அதைக் கேட்டவுடன் சாத்தான் வந்து அவர்களுள் விதைக்கப்பட்ட வார்த்தையை எடுத்துவிடுகிறான்.16 பாறைப் பகுதியில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வார்கள்.17 ஆனால் அவர்கள் வேரற்றவர்கள்; சிறிது காலமே நிலைத்திருப்பவர்கள். இறைவார்த்தையின் பொருட்டு இன்னலோ இடுக்கண்ணோ நேர்ந்த உடனே அவர்கள் தடுமாற்றம் அடைவார்கள்.18 முட்செடிகளுக்கு இடையில் விதைக்கபட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் 19 இறைவார்த்தையைக் கேட்டும் உலகக் கவலையும் செல்வ மாயையும் ஏனைய தீய ஆசைகளும் உட்புகுந்து அவ்வார்த்தையை நெருக்கி விடுவதால் பயன் அளிக்கமாட்டார்கள்.20 நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டு அதை ஏற்றுக் கொண்டு பயன் அளிப்பார்கள். இவர்களுள் சிலர் முப்பது மடங்காகவும் சிலர் அறுபது மடங்காகவும் சிலர் நூறு மடங்காகவும் பயன் அளிப்பர் ' என்றார்.

விளக்கு உவமை (லூக் 8:16 - 18) 21 இயேசு அவர்களிடம், ' விளக்கைக் கொண்டு வருவது எதற்காக? மரக்காலின் உள்ளேயோ கட்டிலின் கீழேயோ வைப்பதற்காகவா? விளக்குத் தண்டின் மீது வைப்பதற்காக அல்லவா?22 வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை. வெளியாகாமல் ஒளிந்திருப்பது ஒன்றுமில்லை.23 கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும் ' என்றார்.24 மேலும் அவர், ' நீங்கள் கேட்பதைக் குறித்துக் கவனமாயிருங்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்; இன்னும் கூடுதலாகவும் கொடுக்கப்படும்.25 ஏனெனில், உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும் ' என்று அவர்களிடம் கூறினார்.

முளைத்துத் தானாக வளரும் விதை உவமை 26 தொடர்ந்து இயேசு, ' இறையாட்சியைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்:27 நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவர் எதுவும் செய்யாமலே நாள்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளருகிறது.28 முதலில் தளிர், பின்பு கதிர், அதன் பின் கதிர் நிறைய தானியம் என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது.29 பயிர் விளைந்ததும் அவர் அரிவாளோடு புறப்படுகிறார்; ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது ' என்று கூறினார்.

கடுகு விதை உவமை (மத் 13:31 - 32; லூக் 13:18 - 19) 30 மேலும் அவர், ' இறையாட்சியை எதற்கு ஒப்பிடலாம்? அல்லது எந்த உவமையால் அதை எடுத்துச் சொல்லலாம்?31 அது கடுகு விதைக்கு ஒப்பாகும். அது நிலத்தில் விதைக்கப் படும்பொழுது உலகிலுள்ள எல்லா விதைகளையும்விடச் சிறியது.இங்கே குறிக்கப்படுவது பாலஸ்தீன நாட்டில் வளரும் ஒருவகை கடுகு மரம். 32 அது விதைக்கப்பட்டபின் முளைத்தெழுந்து எல்லாச் செடிகளையும் விடப் பெரிதாகி, வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக் கூடிய அளவுக்குப் பெருங்கிளைகள் விடும் ' என்று கூறினார்.

உவமைகள் வாயிலாகவே பேசும் இயேசு (மத் 13:34 - 35) 33 அவர்களது கேட்டறியும் திறமைக்கு ஏற்ப, அவர் இத்தகைய பல உவமைகளால் இறைவார்த்தையை அவர்களுக்கு எடுத்துரைத்து வந்தார்.34 உவமைகள் இன்றி அவர் அவர்களோடு பேசவில்லை. ஆனால் தனிமையாக இருந்தபோது தம் சீடருக்கு அனைத்தையும் விளக்கிச் சொன்னார்.

காற்றையும் கடலையும் அடக்குதல் (மத் 8:23 - 27; லூக் 8:22 - 25) 35 அன்றொரு நாள் மாலை நேரம். இயேசு சீடர்களை நோக்கி, ' அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள் ' என்றார்.36 அவர்கள் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டு, படகில் இருந்தவாறே அவரைக் கூட்டிச் சென்றார்கள். வேறு படகுகளும் அவருடன் சென்றன.37 அப்பொழுது ஒரு பெரும் புயல் அடித்தது. அலைகள் படகின் மேல் தொடர்ந்து மோத, அது தண்ணீரால் நிரம்பிக் கொண்டிருந்தது.38 அவரோ படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தார். அவர்கள், ' போதகரே, சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா? ' என்று சொல்லி அவரை எழுப்பினார்கள்.39 அவர் விழித்தெழுந்து காற்றைக் கடிந்து கொண்டார். கடலை நோக்கி, ' இரையாதே, அமைதியாயிரு ' என்றார். காற்று அடங்கியது; மிகுந்த அமைதி உண்டாயிற்று.40 பின் அவர் அவர்களை நோக்கி, ' ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா? ' என்று கேட்டார்.41 அவர்கள் பேரச்சம் கொண்டு, ' காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ! ' என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள்.