திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/லூக்கா நற்செய்தி/அதிகாரங்கள் 3 முதல் 5 வரை

விக்கிமூலம் இலிருந்து

அதிகாரம் 3


3. திருப்பணிக்குத் தயார் செய்தல் திருமுழுக்கு யோவான் முழக்கமிடுதல்(மத் 3:1 - 12; மாற் 1:1 - 8, யோவா 1:19 - 28) 1 திபேரியு சீசர் ஆட்சி செய்துவந்த பதினைந்தாம் ஆண்டில், பொந்தியு பிலாத்து யூதேயாவின் ஆளுநராக இருந்தார். ஏரோது கலிலேயப் பகுதிக்கும் அவன் சகோதரராகிய பிலிப்பு, இத்துரேயா, திரக்கோனித்துப் பகுதிகளுக்கும் லிசானியா அபிலேன் பகுதிக்கும் குறுநில மன்னர்களாக இருந்தனர்.2 அன்னாவும் கயபாவும் தலைமைக் குருக்களாய் இருந்தனர். அக்காலத்தில் செக்கரியாவின் மகன் யோவான் பாலைநிலத்தில் வாழ்ந்து வந்தார். அவர் கடவுளின் வாக்கைப் பெற்றார்.3 ' பாவமன்னிப்பு அடைய மனம்மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் ' என்று யோர்தான் ஆற்றை அடுத்துள்ள பகுதிகள் அனைத்துக்கும் சென்று அவர் பறைசாற்றிவந்தார்.4 இதைப்பற்றி இறைவாக்கினர் எசாயாவின் உரைகள் அடங்கிய நூலில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: ' பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது; ' ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள்;5 பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும்; மலை, குன்றுயாவும் தாழ்த்தப்படும்; கோணலானவை நேராக்கப்படும்; கரடு முரடானவை சமதளமாக்கப்படும்.6 மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர் ″ . '7 தம்மிடம் திருமுழுக்குப் பெறப் புறப்பட்டு வந்த மக்கள் கூட்டத்தைக் கண்டு யோவான், ' விரியன் பாம்புக் குட்டிகளே, வரப்போகும் சினத்திலிருந்து தப்பிக்க இயலும் என உங்களிடம் சொன்னவர் யார்?8 மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள்; ஆபிரகாம் எங்களுக்குத் தந்தை என உள்ளத்தில் சொல்லத் தொடங்காதீர்கள். இக்கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளைத் தோன்றச் செய்யக் கடவுள் வல்லவர் என உங்களுக்குச் சொல்கிறேன்.9 ஏற்கெனவே மரங்களின் வேர் அருகே கோடரி வைத்தாயிற்று. நற்கனி தரா மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டுத் தீயில் போடப்படும் ' என்றார்.10 அப்போது, ' நாங்கள் என்ன செய்ய வேண்டும்? ' என்று கூட்டத்தினர் அவரிடம் கேட்டனர்.11 அதற்கு அவர் மறுமொழியாக, ' இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளட்டும்; உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும் ' என்றார்.12 வரி தண்டுவோரும் திருமுழுக்குப் பெற வந்து, ' போதகரே, நாங்கள் என்ன செய்யவேண்டும்? ' என்று அவரிடம் கேட்டனர்.13 அவர், ' உங்களுக்குக் குறிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக எதையும் தண்டாதீர்கள் ' என்றார்.14 படைவீரரும் அவரை நோக்கி, ' நாங்கள் என்ன செய்ய வேண்டும்? ' என்று கேட்டனர். அவர், ' நீங்கள் எவரையும் அச்சுறுத்திப் பணம் பறிக்காதீர்கள்; யார்மீதும் பொய்க் குற்றம் சுமத்தாதீர்கள்; உங்கள் ஊதியமே போதும் என்றிருங்கள் ' என்றார்.15 அக்காலத்தில் மக்கள் மீட்பரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை யோவான் மெசியாவாக இருப்பாரோ என்று எல்லாரும் தங்களுக்குள் எண்ணிக்கொண்டிருந்தார்கள்.16 யோவான் அவர்கள் அனைவரையும் பார்த்து, ' நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கிறேன்; ஆனால் என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்.17 அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார். கோதுமையைத் தம் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார் ' என்றார்.18 மேலும் பல அறிவுரைகள் கூறி மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார்.19 குறுநில மன்னன் ஏரோது தன் சகோதரன் மனைவியாகிய ஏரோதியாவை வைத்திருந்ததன் பொருட்டும் அவன் இழைத்த மற்ற எல்லாத் தீச்செயல்கள் பொருட்டும் யோவான் அவனைக் கண்டித்தார்.20 எனவே அவன் தான் செய்த தீச்செயல்கள் எல்லாம் போதாதென்று அவரைச் சிறையிலும் அடைத்தான்.


இயேசு திருமுழுக்குப் பெறுதல்(மத் 3:13 - 17; மாற் 1:9 - 11) 21 மக்களெல்லாரும் திருமுழுக்குப் பெறும் வேளையில் இயேசுவும் திருமுழுக்குப் பெற்று, இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது வானம் திறந்தது.22 தூய ஆவி புறா வடிவில் தோன்றி அவர்மீது இறங்கியது. அப்பொழுது, ' என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகிறேன் ' என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.


இயேசுவின் மூதாதையர் பட்டியல்(மத் 1:1 - 17) 23 இயேசு தம் பணியைத் தொடங்கியபோது, அவருக்கு வயது ஏறக்குறைய முப்பது; அவர் யோசேப்பின் மகன் என்று கருதப்பட்டார். யோசேப்பு ஏலியின் மகன்;24 ஏலி மாத்தாத்தின் மகன்; மாத்தாத்து லேவியின் மகன்; லேவி மெல்கியின் மகன்; மெல்கி யன்னாயின் மகன்; யன்னாய் யோசேப்பின் மகன்;25 யோசேப்பு மத்தத்தியாவின் மகன்; மத்தத்தியா ஆமோசின் மகன்; ஆமோசு நாகூமின் மகன்; நாகூம் எஸ்லியின் மகன்; எஸ்லி நாகாயின் மகன்;26 நாகாய் மாத்தின் மகன்; மாத்து மத்தத்தியாவின் மகன்; மத்தத்தியா செமேயின் மகன்; செமேய் யோசேக்கின் மகன்; யோசேக்கு யோதாவின் மகன்;27 யோதா யோவனானின் மகன்; யோவனான் இரேசாவின் மகன்; இரேசா செருபாபேலின் மகன்; செருபாபேல் செயல்தியேலின் மகன்;28 செயல்தியேல் நேரியின் மகன்; நேரி மெல்கியின் மகன்; மெல்கி அத்தியின் மகன்; அத்தி கோசாமின் மகன்; கோசாம் எல்மதாமின் மகன்; எல்மதாம் ஏரின் மகன்; ஏர் ஏசுவின் மகன்;29 ஏசு எலியேசரின் மகன்; எலியேசர் யோரிமின் மகன்; யோரிம் மாத்தாத்தின் மகன்; மாத்தாத்து லேவியின் மகன்;30 லேவி சிமியோனின் மகன்; சிமியோன் யூதாவின் மகன்; யூதா யோசேப்பின் மகன்; யோசேப்பு யோனாமின் மகன்; யோனாம் எலியாக்கிமின் மகன்; எலியாக்கிம் மெலேயாவின் மகன்;31 மெலேயா மென்னாவின் மகன்; மென்னா மத்தத்தாவின் மகன்; மத்தத்தா நாத்தானின் மகன்; நாத்தான் தாவீதின் மகன்;32 தாவீது ஈசாயின் மகன்; ஈசாய் ஓபேதின் மகன்; ஓபேது போவாசின் மகன்; போவாசு சாலாவின் மகன்; சாலா நகசோனின் மகன்; நகசோன் அம்மினதாபின் மகன்;33 அம்மினதாபு அத்மினின் மகன்; அத்மின் ஆர்னியின் மகன்; ஆர்னி எட்சரோனின் மகன்; எட்சரோன் பெரேட்சின் மகன்; பெரேட்சு யூதாவின் மகன்; யூதா யாக்கோபின் மகன்;34 யாக்கோபு ஈசாக்கின் மகன்; ஈசாக்கு ஆபிரகாமின் மகன்; ஆபிரகாம் தெராகின் மகன்; தெராகு நாகோரின் மகன்.35 நாகோர் செரூகின் மகன்; செரூகு இரகுவின் மகன்; இரகு பெலேகின் மகன்; பெலேகு ஏபேரின் மகன்; ஏபேர் சேலாவின் மகன்;36 சேலா காயனாமின் மகன்; காயனாம் அர்பகசாதின் மகன்; அர்பகசாது சேமின் மகன். சேம் நோவாவின் மகன்; நோவா இலாமேக்கின் மகன்;37 இலாமேக்கு மெத்துசேலாவின் மகன்; மெத்துசேலா ஏனோக்கின் மகன்; ஏனோக்கு எரேதின் மகன்; எரேது மகலலேலின் மகன்; மகலலேல் கேனானின் மகன்; கேனான் ஏனோசின் மகன்;38 ஏனோசு சேத்தின் மகன்; சேத்து ஆதாமின் மகன்; ஆதாம் கடவுளின் மகன்.


அதிகாரம் 4


இயேசு சோதிக்கப்படுதல்(மத் 4:1 - 11; மாற் 1:12 - 13) 1 இயேசு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு யோர்தான் ஆற்றை விட்டுத் திரும்பினார். பின்னர் அவர் அதே ஆவியால் பாலைநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.2 அவர் நாற்பது நாள் அலகையினால் சோதிக்கப்பட்டார். அந்நாள்களில் அவர் ஒன்றும் சாப்பிடவில்லை. அதன் பின் அவர் பசியுற்றார்.3 அப்பொழுது அலகை அவரிடம், ' நீர் இறைமகன் என்றால் இந்தக் கல் அப்பமாகும்படி கட்டளையிடும் ' என்றது.4 அதனிடம் இயேசு மறுமொழியாக, ' மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை ' என மறைநூலில் எழுதியுள்ளதே ' என்றார்.5 பின்பு அலகை அவரை அழைத்துச் சென்று உலகத்தின் அரசுகள் அனைத்தையும் ஒரு நொடிப்பொழுதில் அவருக்குக் காட்டி,6 அவரிடம், ' இவற்றின்மேல் முழு அதிகாரத்தையும் இவற்றின் மேன்மையையும் உமக்குக் கொடுப்பேன். இவை யாவும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன; நான் விரும்பியவருக்கு இவற்றைக் கொடுப்பேன்.7 நீர் என்னை வணங்கினால் அனைத்தும் உம்முடையவையாகும் ' என்றது.8 இயேசு அதனிடம் மறுமொழியாக, ' ″ உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி அவர் ஒருவருக்கே பணி செய்வாயாக ″ என்று மறைநூலில் எழுதியுள்ளது ' என்றார்.9 பின்னர் அது அவரை எருசலேமுக்கு அழைத்துச் சென்று கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, ' நீர் இறைமகன் என்றால் இங்கிருந்து கீழே குதியும்;10 ' உம்மைப் பாதுகாக்கும்படி கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார் ' என்றும்11 ' உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளால் உம்மைத் தாங்கிக்கொள்வார்கள் ' என்றும் மறைநூலில் எழுதியுள்ளது ' என்றது.12 இயேசு அதனிடம் மறுமொழியாக, ' ″ உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம் ″ என்றும் சொல்லியுள்ளதே ' என்றார்.13 அலகை சோதனைகள் அனைத்தையும் முடித்தபின்பு ஏற்ற காலம் வரும்வரை அவரைவிட்டு அகன்றது.


4. கலிலேயப் பணி கலிலேயப் பணியின் தொடக்கம்(மத் 4:12 - 17; மாற் 1:14 - 15) 14 பின்பு இயேசு தூய ஆவியின் வல்லமை உடையவராய்க் கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவரைப் பற்றிய பேச்சு சுற்றுப்புறம் எங்கும் பரவியது.15 அவர் அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்து வந்தார். எல்லாரும் அவரைப்பற்றிப் பெருமையாகப் பேசினர்.


நாசரேத்தில் இயேசு புறக்கணிக்கப்படுதல்(மத் 13:53 - 58; மாற் 6:1 - 6) 16 இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார்.17 இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது;18 ' ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும்19 ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார். '20 பின்னர் அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார். தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன.21 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, ' நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று ' என்றார்.22 அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, ' இவர் யோசேப்பின் மகன் அல்லவா? ' எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர்.23 அவர் அவர்களிடம், ' நீங்கள் என்னிடம், ' மருத்துவரே உம்மையே நீர் குணமாக்கிக்கொள்ளும் ' என்னும் பழமொழியைச் சொல்லி, ' கப்பர்நாகுமில் நீர் செய்ததாக நாங்கள் கேள்விப்பட்டவற்றை எல்லாம் உம் சொந்த ஊராகிய இவ்விடத்திலும் செய்யும் ' எனக் கண்டிப்பாய்க் கூறுவீர்கள்.24 ஆனால் நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.25 உண்மையாக நான் உங்களுக்குச் சொல்கிறேன்; எலியாவின் காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக வானம் பொய்த்தது; நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டானது. அக்காலத்தில் இஸ்ரயேலரிடையே கைம்பெண்கள் பலர் இருந்தனர்.26 ஆயினும் அவர்களுள் எவரிடமும் எலியா அனுப்பப்படவில்லை; சீதோனைச் சேர்ந்த சாரிபாத்தில் வாழ்ந்த ஒரு கைம்பெண்ணிடமே அனுப்பப்பட்டார்.27 மேலும், இறைவாக்கினர் எலிசாவின் காலத்தில் இஸ்ரயேலரிடையே தொழு நோயாளர்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவருக்கும் நோய் நீங்கவில்லை. சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது ' என்றார்.28 தொழுகைக்கூடத்தில் இருந்த யாவரும் இவற்றைக் கேட்டபோது, சீற்றங் கொண்டனர்;29 அவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர். 30 அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்.


பேய் பிடித்தவரைக் குணப்படுத்துதல்(மாற் 1:21 - 28) 31 பின்பு இயேசு கலிலேயாவிலுள்ள கப்பர்நாகும் ஊருக்குச் சென்று, ஓய்வு நாள்களில் மக்களுக்குக் கற்பித்து வந்தார்.32 அவருடைய போதனையைக் குறித்து அவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் அதிகாரத்தோடு கற்பித்தார்.33 தொழுகைக் கூடத்தில் தீய ஆவியான பேய் பிடித்திருந்த ஒருவர் இருந்தார்.34 அவரைப் பிடித்திருந்த பேய், ' ஐயோ! நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர் ' என்று உரத்த குரலில் கத்தியது.35 ' வாயை மூடு, இவரை விட்டு வெளியே போ ' என்று இயேசு அதனை அதட்டினார். அப்பொழுது பேய் பிடித்தவரை அவர்கள் நடுவே விழச்செய்து, அவருக்கு ஒரு தீங்கும் இழைக்காமல் பேய் அவரைவிட்டு வெளியேறிற்று.36 எல்லாரும் திகைப்படைந்து, ' எப்படிப் பேசுகிறார், பாருங்கள்! அதிகாரத்தோடும் வல்லமையோடும் தீய ஆவிகளுக்குக் கட்டளையிடுகிறார்; அவையும் போய்விடுகின்றனவே! ' என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டனர்.37 அவரைப்பற்றிய பேச்சு சுற்றுப்புறமெங்கும் பரவியது.


சீமோன் பேதுருவின் மாமியாரை இயேசு குணமாக்கலும் இயேசு பலருக்குக் குணமளித்தலும்(மத் 8:14 - 17; மாற் 1:29 - 34) 38 பின்பு இயேசு தொழுகைக் கூடத்தைவிட்டு, சீமோன் வீட்டிற்குள் சென்றார். சீமோனின் மாமியார் கடுங்காய்ச்சலால் துன்புற்ற நிலையில் இருந்தார். அவர்கள் அவருக்காக இயேசுவிடம் வேண்டினார்கள்.39 இயேசு அவரருகில் நின்று, காய்ச்சலைக் கடிந்துகொள்ள அது அவரைவிட்டு நீங்கிற்று. உடனே அவர் எழுந்து அவர்களுக்குப் பணிவிடை செய்தார்.40 கதிரவன் மறையும் நேரத்தில், எல்லாரும் தங்களிடையே பற்பல பிணிகளால் நலம் குன்றி இருந்தோரை அவரிடம் கூட்டிவந்தார்கள். அவர் ஒவ்வொருவர்மேலும் தம் கைகளை வைத்து அவர்களைக் குணமாக்கினார்.41 பேய்களும், ' நீர் இறைமகன் ' என்று கத்திக்கொண்டே பலரிடமிருந்து வெளியேறின. அவர் மெசியா என்று பேய்கள் அறிந்திருந்தபடியால், அவர் அவற்றை அதட்டி, பேசவிடாமல் தடுத்தார்.


ஊர்கள் தோறும் நற்செய்தி முழக்கம்( மாற் 1:35 - 39) 42 பொழுது விடியும் வேளையில் இயேசு தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். திரளான மக்கள் அவரைத் தேடிச் சென்றனர்; அவரிடம் வந்து சேர்ந்ததும் தங்களைவிட்டுப் போகாதவாறு அவரைத் தடுத்து நிறுத்தப் பார்த்தனர்.43 அவரோ அவர்களிடம், ' நான் மற்ற ஊர்களிலும் இறையாட்சியைப் பற்றி நற்செய்தி அறிவிக்க வேண்டும்; இதற்காகவே நான் அனுப்பப்பட்டிருக்கிறேன் ' என்று சொன்னார்.44 பின்பு அவர் யூதேயாவிலுள்ள தொழுகைக்கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றிவந்தார்.

அதிகாரம் 5


முதல் சீடரை அழைத்தல்(மத் 4:18 - 22; மாற் 1:16 - 20) 1 ஒரு நாள் அவர் கெனசரேத்து ஏரிக்கரையில் நின்றுகொண்டிருந்தார். திரளான மக்கள் இறைவார்த்தையைக் கேட்பதற்கு அவரை நெருக்கிக் கொண்டிருந்தனர்.2 அப்போது ஏரிக்கரையில் இரண்டு படகுகள் நிற்கக் கண்டார். மீனவர் படகைவிட்டு இறங்கி, வலைகளை அலசிக் கொண்டிருந்தனர்.3 அப்படகுகளுள் ஒன்று சீமோனுடையது. அதில் இயேசு ஏறினார். அவர் கரையிலிருந்து அதைச் சற்றே தள்ளும்படி அவரிடம் கேட்டுக் கொண்டு படகில் அமர்ந்தவாறே மக்கள் கூட்டத்துக்குக் கற்பித்தார்.4 அவர் பேசி முடித்த பின்பு சீமோனை நோக்கி, ' ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள் ' என்றார்.5 சீமோன் மறுமொழியாக, ' ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன் ' என்றார்.6 அப்படியே அவர்கள் செய்து பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள். வலைகள் கிழியத் தொடங்கவே,7 மற்றப் படகிலிருந்த தங்கள் கூட்டாளிகளுக்குச் சைகை காட்டித் துணைக்கு வருமாறு அழைத்தார்கள். அவர்களும் வந்து இரு படகுகளையும் மீன்களால் நிரப்பினார்கள். அவை மூழ்கும் நிலையிலிருந்தன.8 இதைக் கண்ட சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, ' ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும் ' என்றார்.9 அவரும் அவரோடு இருந்த அனைவரும் மிகுதியான மீன்பாட்டைக் கண்டு திகைப்புற்றனர்.10 சீமோனுடைய பங்காளிகளான செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவ்வாறே திகைத்தார்கள். இயேசு சீமோனை நோக்கி, ' அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய் ' என்று சொன்னார்.11 அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் கொண்டு போய்ச் சேர்த்தபின் அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.


தொழுநோயாளரின் நோயை நீக்குதல்(மத் 8:1 - 4; மாற் 1:40 - 45) 12 இயேசு ஓர் ஊரில் இருந்தபோது, உடலெல்லாம் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் வந்தார். அவர் இயேசுவைக் கண்டு அவர் காலில் விழுந்து, ' ஆண்டவரே, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும் ' என மன்றாடினார்.13 இயேசு கையை நீட்டி, அவரைத் தொட்டு, ' நான் விரும்புகிறேன் ' உமது நோய் நீங்குக! ' என்றார். உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்கிற்று.14 இயேசு அவரிடம், ' இதை யாருக்கும் சொல்ல வேண்டாம். நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும் ' என்று கட்டளையிட்டார்.15 ஆயினும் இயேசுவைப் பற்றிய செய்தி இன்னும் மிகுதியாகப் பரவிற்று. அவரது சொல்லைக் கேட்கவும் தங்கள் நோய்கள் நீங்கி நலம் பெறவும் பெருந்திரளான மக்கள் அவரிடம் கூடிவந்து கொண்டிருந்தார்கள்.16 அவரோ ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்குச் சென்று தனித்திருந்து இறைவனிடம் வேண்டிவந்தார்.


முடக்குவாதமுற்றவரைக் குணப்படுத்துதல்(மத் 9:1 - 8; மாற் 2:1 - 12) 17 ஒரு நாள் இயேசு கற்பித்துக் கொண்டிருந்தபோது. கலிலேய, யூதேயப் பகுதிகளிலுள்ள எல்லா ஊர்களிலிருந்தும் எருசலேமிலிருந்தும் வந்திருந்த பரிசேயரும் திருச்சட்ட ஆசிரியர்களும் அமர்ந்திருந்தார்கள். பிணி தீர்ப்பதற்கான ஆண்டவரின் வல்லமையை அவர் கொண்டிருந்தார்.18 அப்பொழுது சிலர் முடக்குவாதமுற்ற ஒருவரைக் கட்டிலோடு சுமந்துகொண்டு வந்து, அவரை உள்ளே கொண்டுபோய் இயேசுமுன் வைக்க வழி தேடினர்.19 மக்கள் திரண்டிருந்த காரணத்தால் அவரை உள்ளே கொண்டுபோக அவர்களால் முடியவில்லை. எனவே அவர்கள் கூரைமேல் ஏறி ஓடுகளைப் பிரித்து அவ்வழியாய் மக்கள் நடுவில் அவரைக் கட்டிலோடு இயேசுவுக்கு முன் இறக்கினார்கள்.20 அவர்களுடைய நம்பிக்கையைக் கண்ட இயேசு அந்த ஆளைப் பார்த்து, ' உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன ' என்றார்.21 இதனைக் கேட்ட மறைநூல் அறிஞரும் பரிசேயரும், ' கடவுளைப் பழித்துரைக்கும் இவன் யார்? கடவுள் மட்டுமன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்? ' என்று எண்ணிக்கொண்டனர்.22 அவர்களின் எண்ணங்களை உய்த்துணர்ந்த இயேசு அவர்களைப் பார்த்து, ' உங்கள் உள்ளங்களில் நீங்கள் எண்ணுகிறதென்ன?23 ' உம் பாவங்கள் உமக்கு மன்னிக்கப்பட்டன ' என்பதா, அல்லது ' எழுந்து நடக்கவும் ' என்பதா, எது எளிது?24 மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிடமகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் ' என்றார். எனவே அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, ' நான் உமக்குச் சொல்கிறேன்; நீர் எழுந்து உம்முடைய கட்டிலைத் தூக்கிக்கொண்டு உமது வீட்டுக்குப் போம்! ' என்றார்.25 உடனே அவர் அவர்கள் முன்பாக எழுந்து, தாம் படுத்திருந்த கட்டிலைத் தூக்கிக்கொண்டு, கடவுளைப் போற்றிப் புகழ்ந்தவாறே தமது வீட்டுக்குப் போனார்.26 இதைக் கண்ட யாவரும் மெய்மறந்தவராய்க் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர். அவர்கள் அச்சம் நிறைந்தவராய், ' இன்று புதுமையானவற்றைக் கண்டோம்! ' என்று பேசிக் கொண்டார்கள்.


லேவியை அழைத்தல்(மத் 9:9 - 13; மாற் 2:13 - 17) 27 அதன்பின் இயேசு வெளியே சென்று சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்த லேவி என்னும் பெயருடைய வரி தண்டுபவர் ஒருவரைக் கண்டார்; அவரிடம், ' என்னைப் பின்பற்றி வா! ' என்றார்.28 அவர் அனைத்தையும் விட்டுவிட்டு எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்.29 இந்த லேவி தம் வீட்டில் அவருக்கு ஒரு பெரியவிருந்து அளித்தார். வரி தண்டுபவர்களும் மற்றவர்களும் பெருந்திரளாய் அவர்களோடு பந்தியில் அமர்ந்தார்கள்.30 பரிசேயர்களும் அவர்களைச் சேர்ந்த மறைநூல் அறிஞர்களும் முணுமுணுத்து இயேசுவின் சீடரிடம், ' வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து நீங்கள் உண்பதும் குடிப்பதும் ஏன்? ' என்று கேட்டனர்.31 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, ' நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை.32 நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன் ' என்றார்.


நோன்பு பற்றிய கேள்வி(மத் 9:14 - 17; மாற் 2:18 - 22) 33 பின்பு அவர்கள் இயேசுவை நோக்கி, ' யோவானுடைய சீடர்கள் அடிக்கடி நோன்பிருந்து மன்றாடி வருகிறார்கள்; பரிசேயர்களின் சீடரும் அவ்வாறே செய்கின்றனர். உம்முடைய சீடரோ உண்பதும் குடிப்பதுமாக இருக்கின்றனரே! ' என்றார்கள்.34 இயேசு அவர்களை நோக்கி, ' மணமகன் மணவிருந்தினர்களோடு இருக்கும் வரை அவர்களை நோன்பு இருக்கச் செய்யலாமா?35 ஆனால் மணமகன் அவர்களைவிட்டுப் பிரியவேண்டிய காலம் வரும்; அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள் ' என்றார்.36 அவர் அவர்களுக்கு ஓர் உவமையையும் கூறினார்: ' எவரும் புதிய ஆடையிலிருந்து ஒரு துண்டைக் கிழித்து அதைப் பழைய ஆடையோடு ஒட்டுப் போடுவதில்லை. அவ்வாறு ஒட்டுப் போட்டால் புதிய ஆடையும் கிழியும்; புதிய துண்டும் பழையதோடு பொருந்தாது.37 ' அதுபோலப் பழைய தோற்பைகளில் எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை; ஊற்றி வைத்தால் புதிய மது தோற்பைகளை வெடிக்கச் செய்யும். மதுவும் சிந்திப் போகும்; தோற்பைகளும் பாழாகும்.38 புதிய மதுவைப் புதிய தோற்பைகளில்தான் ஊற்றி வைக்க வேண்டும்.39 பழைய திராட்சை மதுவைக் குடித்தவர் எவரும் புதியதை விரும்பமாட்டார்; ஏனெனில் ' பழையதே நல்லது ' என்பது அவர் கருத்து. '