தில்லைப் பெருங்கோயில் வரலாறு/தில்லைப் பெருங்கோயிவின் தொன்மை

விக்கிமூலம் இலிருந்து
சிவமயம்
திருச்சிற்றம்பலம்
1. தில்லைப் பெருங்கோயிலின் தொன்மை


"செல்வ நெடுமாடஞ் சென்று சேணோங்கிச்
செல்வ மதிதோயச் செல்வ முயர்கின்ற
செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே"

தமிழ்நாட்டிலுள்ள சைவசமயச் சான்றோர்களால் கோயில் என்னும் பொதுப் பெயராற் சிறப்பித்துப் போற்றப் பெறுவது பெரும்பற்றப் புலியூராகிய தில்லைப் பதியாகும். தில்லைத் திருக்கோயிலில் இறைவன் அருவுருவத் திருமேனி கொண்டு எழுந்தருளிய திருமூலட்டானமும், அப்பெருமான் உமையம்மை காண ஐந்தொழில் நாடகம் செய்தருளும் திருச்சிற்றம்பலமும் சைவத்திருமுறையாசிரியர் எல்லோராலும் போற்றி வழிபடப் பெற்ற அருள் நிலையங்களாகும்.

பெரும்பற்றப் புலியூராகிய தில்லைப்பதியில் எல்லார்க்கும் முன்னே தோன்றி, முளைத்த திருமூலட்டானத்திறைவரை வழிபாடு செய்தும், அப்பெருமான் திருவருளால் அம்முதல்வனது ஐந்தொழில் திருக்கூத்தைத் தில்லைச் சிற்றம்பலத்தில் கண்டு போற்றி, இத்திருக்கூத்து. எக்காலத்தும் இடையீடின்றி நிகழுமாறு இறைவனை வேண்டியும் இத்தலத்தில் தங்கி எல்லாம் வல்ல இறைவனை வழிபட்டவர்களில் புலிக்கால் முனிவராகிய வியாக்கிர பாதரும், ஆதிசேடன் அவதாரமாகிய பதஞ்சலி முனிவரும், கூத்தப் பெருமானை இனிய செந்தமிழ்ப் பாடல்களால் பாடிப் போற்றியும் திருத்தொண்டுகள் பல செய்தும் சிவானந்தப் பெரும் பேறெய்திய அடியார்களும் அவர்கள் அருளிய உரைவழி நின்று எண்ணிலாத் திருப்பணிகள் புரிந்த அரசர்களும் படைத் தலைவர்களும் பலராவர். திருமுறைக் காலந்தொட்டு இன்றுவரை தமிழ் மக்களால் சிறப்பு முறையில் வைத்து வழிபடப்பெற்று வருவது இத்திருக்கோயில், இதன் வரலாறுகளை அறிந்து கொள்வது சைவ சமய வளர்ச்சிக்குப் பெரிதும் இன்றியமையாததாகும்.

இவர்களை யடுத்துத் தில்லைக் கூத்தப் பெருமானை வணங்கித் திருவருள் பெற்றவர்கள் வியாக்கிரபாதர் மைந்தராகிய உபமன்யு முனிவரும் மனுவின் மைந்தனாகப் பிறந்து வியாக்கிர பாத முனிவரால் அன்பினால், வளர்க்கப் பெற்ற இரணியவர்மனும் ஆவார். இம் முனிவர்களுடன் ஒத்த காலத்தவரும் சிறந்த சிவயோகியாருமாகிய திருமூலதேவர் இம் முனிவர்களுடன் கூடித் தில்லைத் திருக்கூத்தினைக் காணும் பேறுபெற்றவர்.

கடற்கரைப் பகுதிகளில் வளரும் இயல்புடைய தில்லை யென்னும் தாவரம் அடர்ந்துள்ளமை பற்றி, தில்லைவனம் எனவும், வியாக்கிரபாத முனிவராகிய புலிமுனிவர் எல்லாப் பொருட்கும் சார்பாகிய இறைவனைப் பெரும்பற்றாகக் கொண்டு போற்றியமையால் பெரும்பற்றப்புலியூர் எனவும், எல்லாம் வல்ல இறைவன் நுண்ணிய ஞானமயமான அம்பலத்தில் ஆடல் புரிதலால் திருச்சிற்றம்பலம் எனவும் இத்தலம் அழைக்கப் பெறுவதாயிற்று. சிற்றம்பலம்-நுண்ணிய ஞான வெளி. சிற்றம்பலம் என்ற தமிழ்ச் சொல்லே வட மொழியில் சிதம்பரம் என்றாயிற்று.

எல்லாம் வல்ல இறைவன் புலிமுனியும் பதஞ்சலியும் போற்றத் தில்லைச் சிற்றம்பலத்திலே. திருக்கூத்து. இயற்றத் தொடங்கிய காலம் மிகவும் தொன்மையுடையதாகும். திருவாரூர்த் திருக்கோயிலின் தொன்மையைப் போற்றும் திருநாவுக்கரசர்,

"மாடமொடு மாளிகைகள் மல்குதில்லை
மணிதிகழும் அம்பலத்தே மன்னிக் கூத்தை
ஆடுவான் புகுவதற்கு முன்னோ பின்னோ
அணியாரூர் கோயிலாக் கொண்ட நாளே"
(6-34-3)

எனத் தில்லைச் சிற்றம்பலத்தின் தொன்மையினையும் உடன் இயைத்துப் போற்றியுள்ளமை காணலாம்.

பொற்பதியாசிய தில்லைத் தலமானது உலக புருடனின் இதய கமலமாய் இடைகலை, பிங்கலை, சுழுமுனை யென்னும் waadikaL மூன்றும் சந்திக்கும் இடமாய் இறைவனது ஆடல் நிகழும் திருவருள் நிலையமாகத் திகழ்கின்றது.

சிவபூமியெனப் போற்றப்படும் இப்பாரத நாட்டிலே சிவம் பெருக்கும் சிறப்புடையது தென்னாடாகிய தமிழ் நாடேயாகும். 'தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி' என வரும் திருவாசகத் தொடர், எண்ணற்ற சிவத் தலங்களைத் தன்பாற் கொண்டு விளங்கும் செந்தமிழ் நாடாகிய தென்னாட்டின் சிறப்பினை நன்கு புலப்படுத்துவதாகும். வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்தைத், தொல்காப்பியனார் 'வண்பொழில் மூலர் தண்பொழில் வரைப்பு' என்றார். அவர் காலத்தில் தமிழகம், சேரநாடு, பாண்டிய நாடு, சோழநாடு என மூவகையாகப் பகுக்கப்பெற்றிருந்தது. இம் மூன்று நாடுகளையும் முறையே குடபுலம் தென்புலம் குணபுலம் எனப் பத்துப் பாட்டுள் ஒன்றாகிய சிறுபாணாற்றுப் படை குறிப்பிடுகின்றது. சங்ககாலத்தில் சேரமண்டலம், பாண்டி மண்டலம், சோழமண்டலம் என முப்பெரும் பிரிவாக வகுக்கப்பெற்ற தமிழகம் திருமூலர் காலத்தில் ஐந்து மண்டலங்களாகப் பிரிந்தது. அவற்றுள் சேரநாடு மலைமண்டலம் கொங்குமண்டலம் என இரண்டாகவும், சோழ்நாடு சோழ மண்டலம் தொண்டைமண்டலம் என இரண்டாகவும் பகுக்கப் பெற்றன. சோழநாட்டிற்கும் தொண்டை நாட்டிற்கும் இடையே நடுநாடு என்றதொரு பகுப்பும் பிற்காலத்தில் ஏற்பட்டது. நடுநாட்டின் மேலைப்பகுதி மலயமானாடு எனவும், கீழைப்பகுதி திருமுனைப்பாடி நாடு எனவும் பகுத்துரைக்கப் பெறுவதாயிற்று. இந்நிலையில் சோழநாட்டின் தென்னெல்லையாகத் தென் வெள்ளாறும், வடவெல்லைகளாக மருதையாறும், வடவெள்ளாறும், மேலெல்லையாகக் குளிர் தண்டலையும் (குளித்தலையும்} கொள்ளப்பட்டன.

தமிழகத்தில் தேவார ஆசிரியர்களால் பாடப்பெற்ற சிவத் தலங்களில் மலைநாட்டில் ஒன்றும், கொங்குநாட்டில் ஏழும், பாண்டி நாட்டில் பதினான்கும், சோழநாட்டில் காவிரிக்கு வடகரையில் அறுபத்து மூன்றும், தென் கரையில் நூற்றிருபத்தேழும், ஈழநாட்டில் இரண்டும், நடுநாட்டில் இருபத்திரண்டும், தொண்டைநாட்டில் முப்பத்திரண்டும், துளுநாட்டில் ஒன்றும், வட நாட்டில் ஐந்தும் ஆக இருநூற்றெழுபத்திரண்டு தலங்கள் அமைந்துள்ளன. இங்குக் குறிக்கப்பெற்ற சிவத்தலங்கள் யாவும் உலகமக்கள் எல்லோரையும் தன்பால் ஈர்த்து உய்யும் நெறி காட்டியருளும் தெய்வத் திருத்தலங்களாகும். இத்தலங்கள் எல்லாவற்றுள்ளும் தலைமையும் சிறப்பும் வாய்ந்தது, பெரும் பற்றப்புலியூராகிய தில்லைப்பதியேயாகும். இதுபற்றியே "பெருமை நன்றுடைய தில்லை" {4-57-4) எனத் திருதாவுக்கரசுப் பெருமான் இத்திருத்தலத்தைச் சிறப்பித்துப் போற்றியுள்ளார்.

தில்லைத்தலமானது சோழநாட்டில் கொள்ளிடத்திற்கு வடக்கும், வடவெள்ளாற்றுக்குத் தெற்கும் ஆக அமைந்த இடப்பரப்பில் வங்கக்கடலுக்கு மேற்கே ஐந்துகல் தொலைவில் அமைந்துள்ளது. சிதம்பரம் என வழங்கப்பெறும் இத்தலம் தென்னார்க்காடு மாவட்டத்திலுள்ள சிதம்பரம் வட்டத்தின் தலைமை ஊராகும். பிற்காலச் சோழராட்சியில் இவ்வூர் ராஜாதிராஜ வளநாட்டுத் தனியூர் பெரும்பற்றப்புலியூர் எனக் கல்வெட்டுக்களிற் குறிக்கப் பெற்றுள்ளது. தில்லைநகராகிய இது குடிமக்களுக்குரிய ஊராகவோ அரசர்க்குரிய தலைமை நகராகவோ அரசர்களால் விடப்பட்ட பிரமதேயமாகவோ ஆகாமல் திருச்சிற்றம்பலமுடைய பெருமானாகிய, இறைவனுக்கேயுரிய தலைமையுடைய தெய்வத்தலமாகத் திகழ்தலின் தனியூர் பெரும் பற்றப்புலியூர் எனப் பெயர் பெறுவதாயிற்று எனக்கருத வேண்டியுள்ளது. பெரும்பற்றப்புலியூராகிய இத் தில்லை நகரையடுத்துக் குடிமக்கள் வாழும் எல்லைப்பிடாகைகளாகிய சிற்றூர்கள் சுற்றியமைத்துள்ளன.

இத்தலம் கிழக்கே திருவேட்களத்தையும், தெற்கே பழங் கொள்ளிடப் பேராற்றையும், மேற்கே. கண்ணங்குடியையும் வடக்கே மணலூரையும் தனக்கு எல்லைகளாகக் கொண்டுள்ளது. இங்குக்குறித்த எல்லைக்குள் ஒன்பது பிடாகைகள் (சிற்றூர்கள்) அமைந்துள்ளன. கிழக்கே சிதம்பரம் புகைவண்டி நிலையத்திற்கும் இவ்வூருக்கும் இடையே பாலமான் என்னும் சிற்றாறு இந்நகரத்தையொட்டி ஓடுகின்றது. இதனைக் கடந்தே நகருக்குள் நுழைதல் வேண்டும். இச்சிற்றாறு வீரநாராயணன் ஏரியிலிருந்து தில்லை நகரின் தெற்குப்பக்கமாக ஓடிவருகின்றது. இந்நகரின் மேற்கிலிருந்து வடக்குப் பக்கமாக ஓடி வரும் ஓடையொன்று இந்நகரத்தின் கிழக்கே வரும் இப்பாலமான் என்னும் சிற்றாறுடன் கலக்கின்றது. இந்நகரத்தின் மேற்றிசையிலும் ஆங்காங்கே ஓடைகள் உள்ளன. இவையனைத்தும் சேர்ந்து தில்லை நகரத்திற்கு அணியப்பெற்ற மாலைபோல் அமைத்துள்ளன. இவ்வோடைகளில் ஓடும்நீர் காவிரியாற்றிலிருந்து வரும் நன்னீராகும். இவ்வாறு பெரும்பற்றப்புலியூராகிய இத்தில்லைத் திருநகரம் காவிரியாற்றின் நன்னீரால் சூழப்பெற்றிருக்கும் அழகிய தோற்றத்தினை, 'பொன்னி வளைத்த புனல் சூழ் புலியூர்' (திருச்சிற்றம்பலக்கோவை) என வரும் தொடரில் மணிவாசகப் பெருமான் குறித்துள்ளமை காணலாம்.

இத்தில்லை நகரமாகிய இப்பதி இவ்விருபதாம் நூற்றாண்டில் தமிழகத்தில் கல்விப்பயிர் வளர்க்கும் கலை நிலையமாகத் திகழ்கின்றது. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தப்பிள்ளையார், தில்லைப்பெருமானைக் காலந்தோறும் வழிபட்டு வருபவர், தில்லையின் கிழக்கேயுள்ள திருவேட்களத்தைத் தாம் தங்குவதற்குரிய இடமாகக் கொண்டிருந்தார் எனப் பெரியபுராணம் கூறுகின்றது. ஞானத்தின் திருவுருவாகிய ஆளுடைய பிள்ளையார் தங்கியிருக்கும் பேறு பெற்ற திருவேட்களமானது, செட்டி நாட்டரசர் பெருங் கொடைவள்ளல் அண்ணாமலைச்செட்டியார் அவர்களால் நிறுவப்பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைத் தன்னகத்தே பெற்று விளங்குகின்றது. அவ்வாறே கி.பி, பதினான்காம் நூற்றாண்டில் தில்லைவாழந்தணர் மரபில் தோன்றிச் சைவசமயச் சந்தான ஆசிரியருள் மூன்றாமவரான மறைஞான சம்பந்தர்பால் உபதேசம் பெற்றுச் சைவசித்தாந்த சாத்திரங்களையும், கோயிற்புராணம், திருமுறை கண்ட புராணம், சேக்கிழார் புராணம் முதலிய இலக்கிய நூல்களையும் இயற்றியருளிய உமாபதி சிவாசாரியார் அவர்கள் தங்கியிருந்த இடம், சிதம்பரத்தின் கீழ்த்திசையிலேயுள்ள கொற்றங்குடி என்னும் பவித்திர மாணிக்க நல்லூராகும்.

தில்லைக்கூத்தப்பிரான் பாடிக் கொடுத்த சீட்டுக் கவியுடன் தன்னையடைந்த பெத்தான் சாம்பானுக்கு உமாபதிசிவம் சாதிவேறுபாடு கருதாது தீக்கை செய்தருளியதும், அவர் சிவ சமாதி கொண்டருளியதும் ஆகிய உமாபதி சிவாசாரியார் திருமடம் இங்கேதான் உள்ளது. மந்திரவழிச்செய்யும் சிவதீட்சையினைச் செயற்படுத்திக் காட்டிய இப்பதியிலே பொறியியற் கல்லூரியும், தொழில் நுட்பக்கல்லூரியும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

தில்லைநகரமாகிய சிதம்பரத்தில் காஞ்சிபுரம் பச்சையப்பர் பெயரால் அமைத்த பச்சையப்பன் மேனிலைப்பள்ளியும், சிதம்பரத்திற்குக் குடிநீர் வழங்கிய திவான்பகதூர் இராமசாமிச் செட்டியார் பெயராலமைந்த இராமசாமிச் செட்டியார் மேனிலைப்பள்ளியும், சைவமும் தமிழும் வளரப் புலமைத் தொண்டு புரிந்த ஆறுமுகநாவலர் பெயராலமைந்த ஆறுமுக நாவலர் மேனிலைப்பள்ளியும், தில்லைப் பெருங்கோயில் திருப்பணியில் பெரும்பங்கு கொண்ட தரும பூஷணம் இரத்தினசாமிச் செட்டியார் நிறுவிய இராமகிருஷ்ணா மேனிலைப் பள்ளியும், சுவாமி சகஜாநந்தர் நிறுவிய நந்தனார் அரசு ஆண், பெண் மேனிலைப்பள்ளிகளும், அரசினர் மகளிர் மேனிலைப் பள்ளியும் ஆக ஏழு கல்விநிலையங்களும் அரசினர் கலைக் கல்லூரி யொன்றும் சிறந்த முறையில் இயங்கிவருகின்றன. கலைக்கெலாம் பொருளாக நின்ற தில்லைச்சிற்றம்பலவர் எழுந்தருளிய இந்நகரத்திலே இத்தகைய கல்வி நிலையங்கள் கலை பயில மாணவர்களைச் செந்நெறியில் வளர்க்கும் செழுங்கலை நியமமாக நடைபெற்று வருதல் மகிழ்ச்சிக்குரிய நிகழ்ச்சியாகும்.