உள்ளடக்கத்துக்குச் செல்

தென்னாட்டு காந்தி/இரண்டாவது டாக்டர்

விக்கிமூலம் இலிருந்து

◯ பாரதத்தின்
◯ இரண்டாவது ஜனாதிபதி
◯ இந்தப் பாரத ரத்தினம்,
◯ சிந்தனைத்திறன்,
◯ மெஞ்ஞானப் பற்று,
◯ பேச்சுவன்மை,
◯ போன்ற
◯ நற்சிறப்புக்களால்
◯ ஆசியாவை
◯ அழகுபடுத்தும்
◯ மாமேதையான
◯ இந்த டாக்டர்,
◯ உலகப் பேரறிஞர்களுள்
◯ குறிக்கத்தக்கவர்!..

இரண்டாவது டாக்டர்
இரண்டாவது டாக்டர்

இங்கிலாந்து நாட்டின் அரசியார் எலிசபெத் அவர்கள் டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அண்மையில் கடிதமொன்றை அனுப்பினார், ருஷ்ய நாட்டின் தலைமை அமைச்சர் குருச்சாவ் அவர்களும், அமெரிக்கக் குடியரசுத் தலைவர் திரு கென்னடியும் தனித் தனியே டாக்டருக்குக் கடிதங்கள் எழுதினார்கள், உலகத்தின் வல்லரசுச் சக்திகளிடமிருந்தெல்லாம் ஒரே சமயத்தில் அறிஞர் எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களுக்குக் கடிதங்கள் வருவதென்றால், இந்நிகழ்ச்சி பெருமைக்குரிய செயலே அல்லவா? இத்தகைய பெருமைக்குரிய செயல் மூலம் தாங்கள் உயர்ந்து, உலக மேடையில் உயர்ந்து நிற்கும் தத்துவஞானியை மேலும் உயர்த்திப் பாராட்டிப் புகழ்ந்துரைத்து வாழ்த்துச் செய்திகள் அனுப்பிவைத்தார்கள் உலகத் தலைவர்கள்.

ஆம்; இப்படிப்பட்ட மங்களகரமான மங்கல ஒலிகளுக்கு மத்தியில் தான், நாம் நம்முடைய தெய்வத் தமிழகத்தினைச் சார்ந்த இராதா கிருஷ்ணன் அவர்களை இந்தியத் துணைக்கண்டத்தின் இரண்டாவது குடியரசுத் தலைவராகப் பெறும் பேறு பெற்றிருக்கின்றோம், தமிழ் நாட்டின் பெருமையை உலகமெனும் கலங்கரை வழியே திக்கெட்டும் பரப்பும் வகையில், இதோ, இந்த இரண்டாவது டாக்டர் நமக்குக் கிடைத்திருக்கிறார்!

சரித்திரத்தை மனிதன் எழுதுகிறான்.

அதேபோல, மனிதனைச் சரித்திரம் எழுதுகிறது.

சரித்திரமும் மனிதனும் உள்ளடங்கியதோர் ஆன்மீகத்தின் வடிவம் இன்றையக் குடியரசுத் தலைவர். முன்னையத் தலைவருக்குத் துணை நின்ற பத்து ஆண்டுப் பழக்கம் இப்பொழுதும் இவருக்குத் துணை நிற்கும், ஆசிரியர் ஒருவர் இப்பொழுது ஜனாதிபதி. தென்னகம் ஈன்ற குடிமகனது தத்துவச் சிந்தனை நயங்களைத் தொடர்ச்சியாகக் கேட்க மேலை நாடுகளிலே போட்டி, போட்டியும் பூசலும் மண்டிக்கிடக்கின்ற அரசியல் சகதியில் கால் பாவாமல், தேசீயப்பற்றும் ஒன்றுபட்ட ஐக்கிய உணர்ச்சியும் நெஞ்சில் காலூன்றி நின்ற நிலையிலே, டாக்டர் அவர்களைச் சுற்றி அடி நாட்கள் சுழன்றன. ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் தொட்டு, காசிப் பல்கலைக் கழகம் வரையிலும்; வரையிலாப் பணி இயற்றி மாமேதையாக விளங்கிய இவர், இன்று பண்பட்டுப் பக்குவம் பெற்ற தலைவராக அமைந்து - பண்பாட்டுப் பெருமையையும் நாட்டின் வளப்பத்தையும் நிலை நாட்டிச் செழிக்கச் செய்ய வெல்ல ஓர் ஒப்பற்ற தந்தையாக அமர்ந்து, ஜனாதிபதிய பீடத்தில் இருக்கை கொண்டுள்ள இவரை இதயம் ஒன்றிய பாசத்துடனும் பற்றுதலுடனும் வரவேற்றுக் கைகூப்பித் தொழுகின்றோம்.

“குண நலம், சான்றோர் நலனே!” என்கிறது தெய்வத் தமிழ்மறை, இக்குணநலம் தழுவிய சான்றோர் திலகம் டாக்டர் ராதாகிருஷ்ணன். அன்னாரது தூய நெஞ்சத்தை பிரியாவிடை பெற்றுச் சென்ற பாபு இராஜேந்திரபிரசாத்தைப் பற்றிப் புகழ்ந்துரைத்த பான்மை நமக்கு எடுத்தோதுகிறதல்லவா?

“தேசத் தொண்டு என்பதே மனித சமுதாயத்தின் தொண்டு என்பதே என் கருத்தாகும்,” என்பது காந்திஜியின் தத்துவம். இத்தத்துவம், மெஞ்ஞான மேதைக்கு மிகப் பொருந்தும்.

மெய்ஞ்ஞானத்தின் இலட்சனம் என்ன வென்றால், தன்னல மின்மையும் நாணயமுமே!” - அறிவாளி ரஸ்கினின் குறிக்கோள் இன்று செயற்பட்டு விட்டது. மாதந்தோறும் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் பெறவேண்டியவர், வரி முதலியன கழித்து ரூ 1,900 தான் பெறத் தீர்மானித்திருக்கிறார், ஜன நாயக நாட்டின் முதல்வர் என்றால், அவரே மக்களின் சார்பாளர் வரிசையிலும் முதல்வர் அல்லவா? இவ்வகையிலும், அவரது கடமை நாட்டம் புலனாகிறது. காட்சிக்கு எளியவராக நின்று, பொதுமக்களுடன் நேரிடைத் தொடர்பு கொள்ளும் வகையில் பேட்டிக்கான வழிவகைகளையும் வகுத்துள்ளார். சென்ற வாரத்தில் குடியரசு மாளிகையில் மூவாயிரம், நாலாயிரம் பேர் தலைவரைக் கண்டு பேசியிருக்கின்றனர்! “உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின், வாக்கினிலே ஒளியுண்டாகும்.” என்கிற பாரதி வாக்கை மெய்ப்படுத்த இதைவிட வேறென்ன திருட்டாந்தம் வேண்டும்?

“தலைசிறந்த அரசியல் மேதையும், பண்பாட்டுத் தலைவருமான தாங்கள் இந்தியக் குடியரசின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அறிந்து பெருமகிழ்வு அடைகிறேன், நாட்டின் சேவையில் வாழ்நாள் முழுவதையும் ஈடுபடுத்தியிருக்கும் தங்களுக்கு இந்த உயர்ந்த பதவி கிடைத்திருப்பது மிகவும் பொருத்தமானது ஆகும்,” என்று திரு கென்னடியின் வாழ்த்துத் தந்தி கூறுகிறது.

குடியரசுத்தலைவருக்குத் துணை நிற்க டாக்டர் ஜாகிர் உசையின் அவர்கள் கிடைத்திருக்கிறார். அனுபவ வழிகளில் அன்பைத் துணைகொண்டு வாழ்வின் தடத்தில் நடந்து முன்னேறிய மக்கள் தலைவர் அவர். மனிதர்கள் யாவரும் ஒரே சகோதரத்வ சமுதாயத்தினரே!” என்னும் ‘திருக்குர் ஆன்’ வாசகத்துக்கு இணங்கும் வண்ணம், துணைத் தலைவரின் பதவி கைகூடி வந்திருக்கிறது.

தமிழ்மண்ணுக்கு உடைத்தவரான புதிய குடியரசுத் தலைவருக்கு தமிழகத்திலிருந்து கோயில் பிரசாதம், ஏலக்காய் மாலை, பூமாலை முதலியன அனுப்பப்பட்டன. ஆம்; பொருத்தமுடைய நடப்பேயாகும்! டாக்டர் அவர்கள் பூவின் மணமாகப் புகழ் நிறுவி, ஏலக்காய் வாசனை போன்று ஆரோக்கியமான நல்ல வாசனையைத் திக்கெட்டும் பரப்பி, பெருமையும் பெருமிதமும் கொண்டிலங்க வேண்டு மென்பதே நம் பிரார்த்தனையாகும்!