தென்னாட்டு காந்தி/வாழும் தமிழே, வாழி!

விக்கிமூலம் இலிருந்து


◯ வாவித் தடவயல்
◯ சூழ் திருத்தணிமாமலை
◯ வாழ் சேவற் கொடி
◯ யோனாம் தமிழ்த்
◯ தெய்வத்தை
◯ நினைபவர்கள் தணிகை
◯ கொண்ட தலைவர்
◯ ம. பொ. சி. அவர்களையும்
◯ நினைக்கக் கடப்பாடு
◯ கொண்டவர்கள்.
◯ இப்போது அவர்
◯ அறுபது கற்களைக்
◯ கடந்து விட்டார்.
◯ இது ஐம்பத்தாறாவது
◯ பிறந்த நாள்
◯ விழாவை
◯ நினைவூட்டும்!...

 
வாழும் தமிழே, வாழி!
 
வாழும் தமிழே, வாழி

பிறர் நலனுக்கெனத் தன்னைத் தானே தியாகம் செய்து கொள்ளும் பெரும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு வெற்றி காணும் போதுதான், மனிதன் பிறவிப் பயன் அடைகின்றான். அப்படி யென்றால், திரு. ம. பொ. சி அவர்கள் ஏறத்தாழ முப்பதாண்டுகளுக்கு முன்னரே பிறவிப் பயனை எய்தி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும், ஆம், அவர் தனக்கென வாழாப் பிறர்க்குரியாளர்.

“ஒழுக்கம், அறிவு, ஆற்றல், ஆண்மை, தியாக உணர்வு ஆகிய குண நலன்கள் அனைத்தும் ஒருங்கு பெற்றவரே தலைமை பதவிக்குப் பூரண தகுதியுடையவராவார். இத்தனை தகுதிகளையும் பெற்ற ஒரு தலைவரை நாம் நினைத்த மாத்திரத்தில் சிருஷ்டித்துவிட முடியாது. பல தலை முறைகளுக்கு ஒரு முறைதான் அத்தகைய தலைவர்கள் தோன்றுகின்றனர். கால சக்திதான் அவர்களை நமக்குத் தருகின்றது.”

தலைமைப் பதவிக்கு திரு. ம. பொ, சி. எல்லைகட்டும் பண்புகள் இவை, இத்தகைய லட்சியங்கள் ஒவ்வொன்றிலும் அவரை இன்றைத் தமிழகம் தரிசிக்கின்றது. நாம் பாக்கியம் செய்தவர்கள் - செயற்கரிய சாதனைகள் செய்த தலைவர் பெறற் கரிய பெருவாய்ப்பாக நம் தலைமுறைக்குக் கிடைத்திருக்கின்றார். கால சக்திக்கு நம்முடைய பணிவு மிக்க வணக்கமும், நன்றியும் உரியது.

“சிவம் - அன்பு; ஞானம் - வீரம். இப்பொழுது நாட்டிற்கு அன்பு வீரம் தேவை. அன்புள்ள இடத்தில் வீரம் உண்டு, வீரமுள்ள இடத்தில் அன்பு உண்டு. ‘ஈர நெஞ்சினர் யாதும் குறைவிலார், வீரமென்னால் விளம்புந் தகைய தோ’ என்பது சேக்கிழார் திருவாக்கு. வறுமையிற் செம்மை - அன்பு வீரம். தமிழ் முரசு - தமிழரசு சிவஞானம் பொலிக, பொலிக!” என்று தமிழ்த்தென்றல் திரு வி. க. அவர்கள் சிலம்புச் செல்வரைப் பற்றிக் கூறியுள்ளதில் ஒரு பகுதியை இப்பொழுது நினைவூட்டுகிறோம்.

வாழ்க்கைச் சதுரங்கத்திலே அரசியலைச் சூதாட்டக் காயாக்கி விளையாடும் அரசியல் வாதிகளுக்கு இலக்கியக் கடலில் மூழ்கித் திளைக்கும் ஆர்வம் ஒருபோதும் உண்டாவதில்லை. இவ்வுண்மைக்கு சரித்திரத்தின் பின் பகுதிகள் சான்றாகும். அரசியல், இலக்கியம் என்ற மாறுபட்ட இருதுருவங்களை இன்று ஒன்றாக்கி இணைத்துக் காட்டிய பெருமைக்குரிய தமிழ்ப் பெயர் ஒன்றே ஒன்று உண்டு - அதுதான் ம. பொ. சி!

“தலைவர் சிவஞானம் சிறந்த தமிழறிஞர்; சிலப்பதிகாரத் தமிழர்; வீறு பெற்ற பேச்சாளர்: சொல்லும் செயலும் ஒன்றான வினைத்திட்ப முடையார்; நாட்டிற்கே உயிர்வாழும் தியாகி: எல்லா விடுதலை போராட்டங்களிலும் சிறை சென்ற வீரர். விடுதலை பெற்ற தமிழரசை நிலை நாட்ட உணர்ச்சி கொண்டெழுந்த தனித் தமிழர்.” என்று புகழ்மாலைகள் சூட்டுகிறார் யோகி திரு சத்தானந்த பாரதியார்.

“தமிழினத்தின் உயர்வை அவற்றின் மூலம் மக்களுக்குப் புலப்படுத்துவதற்காகவே அவர் தமிழ் இலக்கியங்களைக் கற்கிறார்; இது மிகவும் பயன் தரும். செயல்,” என் பாராட்டியிருக்கிறார் கவிமணி அவர்கள் தேச விடுதலைக்காகச் சிறையிலே செக்கிழுத்த தவப்புதல்வனைப் பற்றி, நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் படைத்த இளங்கோ வடிகளைப் பற்றி, கயத்தாற்றில் தொங்கிய வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றி அந்நாளில் அறிந்தவர்கள் கொஞ்சம். ஆனால், இந்நாளிலே அவர்களைப் பற்றி அறியாதார் மிகமிகக் கொஞ்சம். தமிழ் இல்லங்களிலே இம் மூவரும் தனிப்பெருந் தியாகப் பிறவிகளாகச் சுடர் விடுதற்கு ஆதிகாரணமானவர் நம் தலைவரே என்பதை ஊர் அறியும்: ஏன் உலகமும் அரியுமே!

‘பணத்தைக் கடவுளாகக் கருதும் நாம், அந்தக் கட்டவுளைச் சிம்மாசனத்தை விட்டு வீழ்த்தி விட்டோம்’ என்று வருத்தப்படுகிறார் மகாத்மா, நம் அருமைத் தலைவர் அவர்களோ கடவுளைப்பற்றி எண்ணுவது உண்டு ஆனால் பணத்தைப் பற்றி எண்ணுவது கிடையாது. நேர்மையாளர்களைக் கடவுள் பரிசோதிப்பதாக எல்லா நூல்களிலும் சொல்லப்படுகிறது. திரு சிவஞானம் அதற்கு விலக்கல்ல. எதிர்த்து வந்த பயங்கரச் சூதுகள், தந்திரமாக நெருங்கிய அரசியல் சூழ்ச்சிகள், பொறாமை விளைவித்த இன்னல்கள் பல அடுக்குகள் - இவையெல்லா வற்றையும் சமாளித்து வந்திருப்பவர் அவர். ‘தமிழன் என்றொரு இனமுண்டு; தனியே அவர்க்கொரு குணமுண்டு என்று நம் நாமக்கல் கவிஞர் சித்திரிக்கும் ‘அந்தத் தமிழன்’தான் அவர்.

ஆங்கிலேயருக்கு அடுத்த படியாக ஆதிக்கம் வகிக்கும். வடவரின் பிடியிலே மயங்கி விழவிருந்த தேசியத் தமிழ் மக்களைத் தக்க சமயத்திலே தமிழ் உணர்ச்சி ஊட்டித் தட்டியெழுப்பியதையும், தமிழகத்தின் தலை நகரைப் பாதுகாத்துத் தந்தையும், சரித்திர்ப்பிரசித்தி பெற்ற கன்னியாகுமரிப் பகுதிகள் நம் தமிழகத்தில் வந்து சேர வகை செய்ததையும், நியாயமாக நமக்குக் கிடைக்க வேண்டிய வட எல்லை தெற்கெல்லைகளை மீட்டு வெற்றி காணப் பெரு முயற்சியோடு உழைத்து வருவதையும் தமிழினம் எப்படி மறக்க முடியும்? அவை மட்டுந்தானா?

நாட்டிலே அனாச்சாரக் கும்பல்கள் பெருகிக் கலாசாரத்தையே அழித்துக் கொண்டிருந்த இந்த நேரத்தில் சிலம்புச் செல்வரின் செந்தமிழ் முழக்கம் தெருவெல்லாம் எதிரொலித்துப் பண்டையப் பெருமையைப் பாதுகாத்து வருகின்றது.

தமிழ் கூறு நல்லுலகம் இலக்கியச் சிறப்புக் கொண்டது; அதைப் போலவே, தமிழினத்தன் தன்னே ரில்லாத் தலைவர் திரு ம. பொ. சி. அவர்களும் இலக்கியச் சிறப்புப் பெற்றவர், இலக்கியமும் அரசியலும் என்றென்றும் பொன் எழுத்துக்களிலே பொறித்துக் காட்டும் அளவுக்குச் சீரும் சிறப்பும் வாய்க்கப் பெற்ற செந்தமிழ்ச் செல்வரின் ஐம்பத்தாறாவது பிறந்த நாள் விழா ஜூன் 25-ஆம் நாளில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் மகாசபையின் உருவாக்கத்திற்குத் தம்மையே காணிக்கை வைத்த சிலம்புச் செல்வரின் விழா, தேனாம்பேட்டை - காங்கிரஸ் திடலில் நடைபெற்றது பொருத்தமுடையதும் ஆகும்.

தேசப்பற்றுக்கு ஓர் உறைவிடம் தேவையா? பொது நலப் பண்பிற்கு ஓர் உருவப்படம் வேண்டுமா? அறம் காத்து, அன்பு பேணி வாழ்க்கை நடத்தும் தத்துவத் துக்கு ஒரு விளக்கம் விரும்புகிறீர்களா? இவை அனைத் திற்கும் ஒருருவாகத் திகழ்கிறார் திரு ம. பொ. சி.

திருச்சி, அர்ச் சூசையப்பர் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் திரு ஐயன்பெருமாள் கோனார் அவைத் தலைமை ஏற்றுப் பேசுகையில், பண்டைத் தமிழ் இலக்கியச் சிறப்புப் பூண்ட ‘வெள்ளணி விழா’வை விவரித்து, ம. பொ. சி. அவர்களின் இப்பிறந்தநாள் விழா, அந் நாளைய வெள்ளணி விழாப்போல கோலாகலமாகக் கொண்டாடப் படுவதாகக் குறிப்பிட்டார். கடலுக்கு உவமை காட்டி ‘எங்கள் தமிழ்ச் சிவஞானம் வாழ்க!’ என்று நெஞ்சுருக வாழ்த்தினார் கவிஞர் கொத்தமங்கலம் சுப்பு. கொள்கைப் பிளவுகளைக் கடந்து ஏனைய கட்சித் தலைவர்களும் புகழ்மாலை சூட்டினார்கள். தலைவர் இராஜாஜி உள்ளிட்ட பல மேதைகள் வாழ்த்துதல்களைத் தெரிவித்திருந்தார்கள்.

ம. பொ. சி. அவர்களின் வாழ்வே ஒரு தனிக்கதை. வறுமைக் குடியில் அவதரித்தார்; இல்லத்தையே பள்ளியாகக் கொண்டார்; அன்னையையே ஆசிரியையாக ஏற்றார். சமயக் குரவர்களின் பக்திப் பாடல்கள் இவரது உள்ளத்தைப் பண்படுத்தின. அச்சகத் தொழிலாளியாக அலுவல் பார்த்து வந்த இவரது செவிகளில், ‘சுதந்திரம் எனது பிறப்புரிமை’ என்னும் தாரக மந்திரத்தின் எதிரொலி கேட்டது. 1927ல் காங்கிரஸில் சேர்ந்தார். உப்புச் சத்தியாக்கிரகம், சட்டமறுப்பு இயக்கம், தனி நபர் சத்தியாக்கிரகம், ஆகஸ்ட் புரட்சி, அரிஜன இயக்கம், மதுக்கடை மறியல் போன்ற சகலவிதமான போராட்டக் கட்டங்களிலும் இரண்டறக் கலந்தார்; பலமுறை சிறைத் தண்டனையையும் அனுபவித்தார். ‘சான்றோர்களுடைய செல்வமே குணச்சிறப்புத்தான்’ என்று கூறுகிறதல்லவா தமிழ் மறை? இதற்கு ஓர் இலக்கணம் நம் அருமைத் தலைவர். ஒழுக்கம், அறிவு, ஆற்றல், ஆண்மை, தியாக உணர்வு போன்ற குண நலன்களுடன் திகழும் இவரை நம் தமிழ்த் தாய்த் திருநாட்டுக்குத் தந்த காலசக்திக்கு நாம் அஞ்சலி செலுத்த வேண்டும்.

1946, நவம்பர் 21ல் தமிழரசுக் கழகம் பிறந்தது.

ஞானத் தமிழ்மொழி ஞாலமெல்லாம் பரவி வளர
தொல்லை வினை தரு தொல்லையகன்று'

தமிழகம் சிறக்க-சிவஞானத் தமிழர் இயற்றிய தொண்டுகளை, எல்லைப் போராட்டம் தொட்டு நேற்று நடந்து முடிந்த தமிழ்நாடு பெயர்ப் போராட்டம் வரை நடைபெற்ற நிகழ்ச்சிக் குறிப்புக்கள் எப்பொழுதும் நினைவூட்டிக் கொண்டே யிருக்கு மன்றோ!

‘ஐயா’ அவர்களின் பொன் விழா இன்றும் நம் மனக் குறிப்புப் புத்தகத்தில் பொன் வண்ணம் கொண்டு விளங்கின்றது. நமது மாண்புமிகு தலைவர் நன்றி தெரிவித்துப் பேசும்பொழுது, அறிவும் பண்பும் சேர்ந்த ஒன்றுக்குப் பெயர்-தமிழ். அந்தத் தமிழ் வழங்கும் நிலத்திற்குப் பெயர்தான்-தமிழ்நாடு. அந்தத் தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் பாடுபடும் தொண்டனுக்குப் பெயர்தான்-- சிவஞானம்!” என்று புலப்படுத்தினர்கள். ஆம்; வாழும் தமிழ் ம. பொ. சி!

‘அருமைமிகு தமிழகம் முழு சுயாட்சி உரிமை அடையும் வரையில் நான் ஓய்ந்திருக்கமாட்டேன்; உரிமைக்கு வேங்கடம்; உறவுக்கு இமயம்; நட்பிற்கு உலகம் என்ற வகையில் தமிழரசுக் கழகம் தொண்டாற்றும்; கழகம் ஈடுபட்டு எய்திய வெற்றிகளில் எல்லா அரசியல் அமைப்புகளுக்கும் பங்கு உண்டு,” என்று திரு ம. பொ. சி. தம் நன்றியுரையில் தெரிவித்த பான்மை பொது மக்கள் அனைவரையும் பெருமையுறச் செய்தது.