உள்ளடக்கத்துக்குச் செல்

தென்னாட்டு காந்தி/வெற்றி முரசம்!

விக்கிமூலம் இலிருந்து


◯ 1952 தேர்தலில்
◯ காங்கிரஸ்
◯ மகத்தான வெற்றி
◯ பெற்றது
◯ அந்நிலையினை
◯ இப்போது
◯ எண்ணிப் பார்த்தாலும்
◯ சுவைதரும்.

வெற்றி முரசம்

வெற்றி முரசம்!

இந்தியத் துணைக்கண்டத்தில் கடந்த சில வாரங்களாக மிகுந்த பரபரப்பை உண்டாக்கி விட்டிருந்த மூன்றாவது பொதுத்தேர்தல் முடிந்து, ஆளும் கட்சியான காங்கிரஸ் ஆட்சி, அனைவரும் எதிர்பார்த்தபடி மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது. இந்த வெற்றி பாரதத் திருநாட்டில் வாழுகின்ற நாற்பது கோடி மக்களின் வெற்றி, ஜன நாயகத்தின் வெற்றி. ஆம்; தங்களை ஆளும் காங்கிரஸ் கட்சியின்பால் இந்தியப் பொதுமக்கள் வைத்துள்ள நல்லெண்ணத்தையும் தம்பிக்கையையும் உலக நாடுகள் அனைத்தும் உய்த்துணர மீண்டும் ஒரு வாய்ப்பு உண்டாகியிருக்கின்றது. இதன் மூலம், இந்தியாவின் பெருமை உலக நாடுகளின் மத்தியில் மென்மேலும் சிறந்து விளங்கும்!

ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகாலமாக அடிமை வாழ்வு அகன்றிடாமல் வெள்ளையரின் ஆட்சிக்கு உட்பட்டுக்கிடந்த பாரததேசத்தை விடுதலை செய்ய மாபெரும் போராட்டம் நடந்தது! இந்த விடுதலை வேள்வியில் உடல், பொருள், ஆவி அனைத்தையுமே சர்வபரித்தியாகம் செய்ய வல்ல தேசத்தலைவர்கள் பலர் தோன்றினார்கள். மதிப்புக்குரிய அண்ணல் காந்தியடிகளின் மதிப்பிடற்கரிய தியாகப் பண்புகளால் உருவாகிப் பக்குவம் பெற்றார்கள் அத்தலைவர்கள், சுதந்திரப் போராட்டம் பல கட்டங்களில் உச்ச நிலை எய்தி, இறுதியில் வெற்றி பெற்றது. நம் தாய்த்திரு நாடு விடுதலை பெற்றது. நாம் விடுதலை பெற்றோம், இத்தகைய வரலாற்றுப் பெருமை கொண்ட- புனிதமிகு சரித்திரச் சிறப்பை உடைய காங்கிரஸ் மகா சபையின் வெற்றியில் பாரதமக்கள் அனைவருக்குமே பங்கு உண்டு. ஒரு நாட்டின் முன்னேற்றம், வாழ்வு, வளப்பம் போன்ற பெருமைகள் அந்நாட்டினை முன்னின்று நடத்தும் தலைவரைப் பொறுத்தது. இந்த அளவில், நாம் பாக்கியசாலிகள். ஏனெனில், ‘ஆசிய ஜோதி’ யெனப் புகழப்படும் நேருஜியின் பொறுப்பு நிறைந்த தலைமை நமக்குக் கிடைத்திருக்கிறது. நாட்டுப்பற்று, நாட்டின் முன்னேற்றம், நாட்டுமக்களின் நல்வாழ்வு போன்றவற் றையே தம்முடைய தலையாய குறிக்கோள்களாகக் கைக்கொண்டு, அல்லும் பகலும் உழைத்து வரும் நேருஜியின் தவம் மூன்றாம் முறையிலும் பலித்துவிட்டது. இது நம் பேறு அன்றோ !

டில்லி லோகசபையில் 353 இடங்களும் தமிழ்நாடு சட்டசபையில் 138 இடங்களும் காங்கிரஸுக்குக் கிடைத்துள்ளன இதே வெற்றி நிலை, இந்திய நாட்டின் ஏனைய மாநிலங்களிலும் ஏற்பட்டிருக்கிறது. இந்தியா முழுவதிலும் ராஜ்ய சட்டசபைக்குக் கிடைத்துள்ள இடங்கள்: 1768, “உலக நாடுகளிலேயே மிகப் பெரிதாக மதிக்கப்படும் இந்தியப் பொதுத்தேர்தல், உயிருள்ள ஜன நாயகத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு,” என்று அமரிக்கத் தலைவரின் ஆலோசகரான திரு செஸ்டர் பவல்ஸ் கூறியிருப்பதை காங்கிரஸ் மகாசபை மெய்ப்பித்துக் காட்டி விட்டது!

ஜன நாயக ஆட்சிமுறையில் கிடைத்த முதற் சாதனம், வாக்குரிமை. இவ்வுரிமைக்குச் சோதனையாக அமைவது தேர்தல். நாட்டில் நிலவுகின்ற பல்வேறு தரப்பட்ட, வெவ்வேறு மனப்பாங்கு பெற்ற கட்சிகள் போட்டியிடுவது மரபு, இம்மரபை ஒட்டி நடைபெறும் தேர்தலில் ஓட்டு வேட்டை நடத்த அந்தந்தக் கட்சியின் தலைவர்கள், அவரவர்களின் கொள்கை வழிப்படி சொல் மாரி பொழிவார்கள், எல்லாவற்றையும் - செவிசாய்த்து, பின்னர் சிந்தித்துச் சுதந்திரமாகச் செயற்படக் கடமைப் பட்ட பொதுமக்கள், தங்கள் கடமைவழி நின்று, தங்களுக்காக உண்மையான சேவை செய்த தலைவர்கள் பார் என்பதை நிதானமாக ஆராய்ந்து, அதன் பின்னரே, தங்களுடைய மதிப்பு வாய்ந்த வாக்குகளை அளிப்பார்கள், பொதுமக்களின் தனிப்பட்ட கருத்துக்களின் பொதுப்படையான பிரதிபலிப்பாக அமையும் வெற்றி-தோல்விகளின் மதிப்பீட்டின் வாயிலாகவே தேர் தலின் முடிவுகள் நிர்ணயிக்கப்படும். இது பொதுத் தேர்தல் பற்றிய ஒரு கணிப்பு.

இந்த முறை நடைபெற்ற பொதுத்தேர்தல் இந்தியத் துணைக் கண்டத்தை மட்டும் கவரவில்லை; அமரிக்கா, ருஷ்யா, பிரிட்டன், போன்ற நாடுகளின் கவனத்தையும் ஒருசேர ஈர்த்தது. இதற்குக் காரணங்கள் பலவுண்டு, ஆளும் கட்சியின்பால் அழுக்காறு பூண்டு அதைக் கவிழ்க்கச் சதிசெய்யும் நோக்கத்துடன் பழைய தலைவர்கள் புதுவேஷங்கள் பூண்டு, புதிய கூட்டுக்கள் அமைத்துச் செயற்பட்டார்கள். இதன் விளைவாக, பொதுத்தேர்தலில் போட்டிகள் வலுப்பெறலாயின. பாரதப் பிரதமர் நேருஜி, பாதுகாப்பு அமைச்சர் கிருஷ்ணமேனன் ஆகியோருக்கு எதிரிடையாக லோகியாவும் ஆச்சாரியா கிருபளானியும் போட்டியிட்டார்கள். நேருஜியின் வெற்றி குறித்து நாற்பதுகோடி மக்களுக்கும் ஒரு நிரந்தரமான நல்ல நம்பிக்கை இருந்தது. ஆனால் அந்த அளவுக்கு திரு மேனனின் நிலையைக் கணிக்க முடியாமல் இருந்தது. முற்போக்குச் சக்திக்கும் பிற்போக்குச் சக்திக்கும் நடை பெற்ற போராட்டமாக அமைந்த இப்போட்டியில், வடக்குப் பம்பாய் மக்களின் வாக்குப்பாதுகாப்பினால், நம் பாதுகாப்பு மந்திரி மாபெரும் வெற்றிபெற்றுவிட்டார்.

நம் அருமைத் தமிழ்நாட்டிலும் சில தொகுதிகளில் இதே போட்டி நிலை நிலவியது. காந்திஜி போதித்த புறத்தூய்மையைப் போல அகத்தூய்மையையும் பெற்றி லங்கும் தமிழகத்தின் முதல்மைச்சர் திரு காமராஜ் அவர்களுக்குக் கடும் போட்டி இருந்தது. நேருஜியின் வெற்றியை நாட்டுமக்கள் முன்கூட்டியே நிர்ணயம் செய்தாற்போன்று, காமராஜ் அவர்களின் கெலிப்பு குறித்தும் ஏகமனதான அபிப்பிராயம் கொண்டிருந் தார்கள். அவ்வாறே, காமராஜ் அவர்கள் மகத்தான வெற்றி பெற்றுவிட்டார்கள். இது தமிழகத்தின் வெற்றி. ‘உள்ளத்தில் ஒளி உண்டானால் வாக்கினிலே ஒளி உண்டாம்’ என்ற வாக்குக்கு ஏற்றபடி, நாளெல்லாம்-தம் வாழ் நாளெல்லாம் நாட்டுமக்களைப் பற்றியே சிந்தித்து அரும்பணி இயற்றிவரும் காமராஜ் அவர்கள் இம்முறையும் வெற்றி பெற்ற சுபச் செய்தி, தமிழகத்தின் வருங்காலச் சிறப்புக்கும் வளப்பமான வாழ்வுக்கும் அமைந்துள்ள ஒரு சுப சகுனமாகவே உருவாகியுள்ளது என்பதை நாம் எண்ணிப் பெருமைப்பட வேண்டுமல்வா? பொது நலத் துறைகளில், அஸ்திவாரக்கல் அமைத்து ஆரம்பித்து வைத்தும், திறப்பு விழா நடத்தித் துவக்கியும் வைத்த பெருமை, நமது மதிப்புக்குரிய முதலமைச்சரைப்போன்று, பாரதத்திலுள்ள பிறமாகாணத் தலைமை அமைச்சர்களுக்கு இருக்கமுடியாது, அந்த முறையில் பொதுமக்களுடன் இனைந்து தொண்டாற்றி, அசல் தொண்டராகவே மாறி விட்டிருக்கிறார், இத்தகைய தியாக சீலரை தமிழகம் பெற்றது பூர்வ புண்ணியமேயாகும்!

தி. மு. கழகம், இந்தத் தேர்தலில் தார்மீக அடிப்படையை மீறிய வழிகளில் சுவரொட்டிகள் அச்சடித்தும் அரசியல் நாகரிகம் கடந்த வகையில் ‘அதிகப்பிரசங்கித் தனமாக’ப் பேசியும் எழுதியும் வந்தார்கள். குருடனுக்குக் குருடனே வழிகாட்டியாக அமைந்த கதையாக, திராவிட முன்னேற்றக் கழகத்திற்குக் கைகொடுக்க முனைந்த சுதந்திரக்கட்சியின் அதிபர் ராஜாஜி, கடைசியில் தம் கட்சி மண்ணைக் கவ்விய பரிதாப நிலையைக் கண்டு புலம்பும் கட்டத்தில் நிற்பதை நாம் காணுகிறோம்: அதுமட்டுமா? காஞ்சித்தலைவரின் ‘மகத்தான தோல்வி’யையும் கண்டு விட்டோம்! தி. மு. கழகத் தலைவர் அண்ணாத்துரையின் தோல்வி தி. மு. க. வின் தோல்வி என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. ஏனெனில், ஒரு தலைவரின் வெற்றிதோல்விகள் தாம், அத்தலைவரைப் பின்பற்றுகிற மக்களுடைய மனங்களின் பிரதிபலிப்புகளாக அமைய முடியும், ஆகவே, தி. மு. கழகத்திடம் பொதுமக்களுக்குள்ள நல்லெண்ணம் சிதைந்து விட்டதென்பது தெள்ளத் தெளியப் புலனாகிவிட்டது. இத்தேர்தலில் அதிகப்படியான இடங்களைப் பிடித்துக்கொண்டதால் மட்டுமே அவர்கள் மார் தட்டிப் பேச வழியில்லாமல் போய்விட்டது. எதிர்க் கட்சியாக அமையும் இவர்கள் நாட்டுப் பிரிவினைக் கொள்கையுடையவர்கள்! முதலமைச்சர் - ஐயப்படுகிற மாதிரி, எந்த அளவுக்குப் பொறுப்புடனும் பண்புடனும் இந்தப் ‘புதுமுகங்கள்’ செயலில் இறங்கப் போகிறாகளோ ?

காந்திஜி ஒருமுறை குறிப்பிட்டார், “நான் ராஜரிஷி வேடம் புனைந்து கொண்டு ராஜதந்திரியாக உலவ ஒரு போதும் இணங்கேன்!” என்று. காந்திஜியின் பேரைச் சொல்லி, புதுப் புனைவடிவம் பெற்று உலவித் திரியும் முதுபெருங்கிழவர் ராஜாஜி சத்தியத்தைச் சோதிக்கத் தலைப்பட்டார். கடைசியில் சத்தியமே அவரைச் சோதித்து விட்டது. சத்தியத்தின் வடிவமாக அமைந்த பொதுமக்கள் ராஜாஜியை மண்ணைக் கவ்வச் செய்து விட்டார்கள். புறத் தூய்மையோ அகத்தூய்மையோ கடுகளவும் இல்லாதவர் ராஜாஜி என்பது அவரது கொள்கை மாற்றத்திலிருந்து புரிந்தது. இவ்வுண்மையை தற்சமயம் நன்கு புரிந்து கொண்டு விட்டார்கள் நாட்டு ஜனங்கள். பதவியிலிருக்கையில் ஒரு பேச்சும், பதவி போனவுடன் ஒரு பேச்சுமாகப் பேசி, அரசியல் கோமாளியாகவே ஆகி விட்ட ராஜாஜியின் முதற்தோல்விக்கு பிள்ளையார் சுழியிட்டார் பேராசிரியர் ரங்கா, ஆளும் காங்கிரஸாருக்கு மட்டும் ஓட்டுப் போடாதீர்கள். வேறு யாருக்கு வேண்டுமானாலும் போடுங்கள்!” என்று தம் கைப்பட எழுதி வெளியிட்டு நாடகமாடிய சுதந்திரக் கட்சியின் கதா நாயகன் இனிமேல் ‘பவுடர்’ பூசிக்கொள்ளும் வாய்ப்பே பெறாத அளவுக்குப் படுதோல்வி கண்டுவிட்டார் பாவம்!... இவரது அரசியல் சூட்சியின் வெறி உச்சக் கட்டத்தை அடையாதிருந்தால், தி. மு. கவுக்கு ‘முஸ்லீம் லீக்’கின் இணைப்போ, அல்லது, இந்த அளவு இடங்களோ கட்டாயம் கிட்டியிருக்கவே முடியாது! சென்னை நகரம் சுதந்திராக் கட்சியைக் கைவிட்டுவிட்டது! பெரும்பாலான அபேட்சகர்கள் ஜாமீன் தொகையை இழந்துள்ளனர்! சுதந்திராக் கட்சிக்குப் படுதோல்வி ஏற்பட்டுள்ளதென்பதை ஒப்புக்கொள்கிறேன்!” என்று. ராஜாஜியே கூறிவிட்டார், செல்லாக்காசு அதற்குறிய-அதற்குகந்த இடத்தை அடைந்து விட்டது!

கம்யூனிஸ்ட் கரைந்து தேய்ந்துவிட்டது! பி. சோ. முதலிய கட்சிகளின் நிலையும் சென்ற தேர்தலைவிட வருந்தத்தக்கதாகி விட்டது! புதிதாகத் தோன்றிய தமிழ்த் தேசியக் கட்சி பாவம், பலர் ஆதரித்தும்கூட, பொதுமக்கள் கண்களில் பட்டதாகவே தெரியவில்லை!

ஆம்: தேசிய விழிப்புப் பெற்ற பாரதம் சத்திய சோதனையில் வாகைமாலை புனைந்து வெற்றி முரசம் கொட்டி நிற்கிறது. இவ்வெற்றிக்குப் பெருந்துணை நின்ற பெருமை, வாக்காளப் பெருமக்களையே சார்ந்தது. குடு குடு கிழவிகளும் முதியவர்களும் தங்களது கடமையுணர்ந்து மாட்டுச் சின்னத்தில் முத்திரை பொறித்த நிகழ்ச்சிகளை நாட்டின் பல பகுதிகள் கண்டன. ஆளுங்கட்சிக்கு எதிராக வாக்குக் கேட்டவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த பெண் குலத்தின் தேசப்பற்றினையும் நாடு கண்டது.

கல்வி, தொழில், வாழ்வு, ஆராய்ச்சி, பாதுகாப்பு போன்ற சகல துறைகளிலும் முன்னேறி வருகிறது நம் ஆட்சி, இம்முன்னேற்றமோ, இங்கு நிலவும் அமைதியோ நம்முடன் விடுதலை பெற்ற ஏனைய நாடுகளிலே இல்லை அதற்குமாறாக, அங்கங்கே ராணுவ ஆட்சிகள் அச்சுறுத்தி வருவதையும் நாம் பார்க்கிறோம், “நான் பெறுவதற்கு பாடுபடுகிற இந்தியா ஏழையிலும் ஏழையரும் இந்நாடு தங்களுடையது என்று உணர்த்தக்க ஒரு இந்தியாவாக இருக்கும்,” என்று கூறிய அண்ணலின் வாக்கு படிப்படியாகப் பலிதமடைந்து வருகிறது.

காங்கிரஸ் ஆட்சியின் பத்தாண்டுச் சாதனைகளின் பணி அறிந்து, அப்பணியில் நம்பிக்கை வைத்து வாழ்த்துக்கூறி, ஒன்றுபட்ட தேசிய இன உணர்ச்சியுடன் தங்களது உயரிய வாக்குகளை அளித்த பொது மக்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறோம். வெற்றிமுகம் காட்டிய காங்கிரஸ் வேட்பாளர்கள் எல்லோருக்கும் நல் வாழ்த்துக் கூறுகின்றோம். அமையவிருக்கின்ற காங்கிரஸ் கட்சியின் புதிய அமைச்சரவையை ஆர்வத்துடன் வரவேக்கக் காத்திருக்கிறோம்.

வாழ்க நேருஜி! வாழ்க காமராஜ்! வாழ்க நம் பாரதத் தலைவர்கள்!