தென்னைமரத் தீவினிலே/மனைவியைத் தேடி

விக்கிமூலம் இலிருந்து

9
மனைவியைத் தேடி

பொதுக் கூட்டம் முடிந்ததும், கும்பலாக பலர் மேடை ஏறி வந்து விஜயனை வாழ்த்தினர். அன்றைய அவனது பேச்சு ஈழத் தமிழர்களின் சரித்திரத்தில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை என்று இளைஞர்கள் பலர் பாராட்டிச் சென்றனர்

பேச்சை முடித்ததிலிருந்தே விஜயனுடைய சிந்தனையெல்லாம் வீட்டிற்குப் போக வேண்டுமென்பதிலேயே இருந்தது விமான நிலையத்திற்கு போன மனைவியும், மகனும் இந்நேரம் வந்திருப்பார்கள். அண்ணனிடமிருந்து புதிது புதிதாக ஏதாவது சேதி கேட்டுக்கொண்டு வந்து மணிக் மணக்கில் அதைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பாள் வள்ளியம்மை. தன் தாயாரைப் பற்றிக் கூட பேசுவதில்லை, பரமகுருவினிடம் அவளுக்கு அப்படியொரு பாசம் ஏற்பட்டு விட்டது உண்மையில், பரமகுருவும் அப்படி ஒரு உன்னதமான மனிதன்தான் உறவு முறைகளைக் கடந்து, மனிதர்களை நேசிக்கத் தெரிந்தவர்.

வள்ளியம்மை பரமகுருவை வீட்டிற்கு வரும்படி அழைக்காமல் இருக்க மாட்டாள். இந்தத் தடவை பரமகுருவிடம் தன் செய்கைகளுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டு பரமகுருவின் அன்பிற்கும் நான் அடிமை என்பதை வள்ளிக்கு புரிய வைத்து அவளை மகிழ்ச்சியில் ஆழ்த்த வேண்டும்.

“விஜயன் அண்ணே.” என்று யாரோ பின்னால் இருந்து அழைக்கிற குரல்கேட்டு விஜயன் திருப்பிப் பார்த்தான். வந்தவன், வழியெல்லாம் ஒடி வந்த வன் போல் மூச்சிறைக்க, விஜயன் காதருகே குனிந்து ரகசியமாகக் கூறினான்.

“மனோகரனை கைது செய்து லாரியில் தூக்கிக்கொண்டு போய் விட்டார்களாம்! உங்களை உடனே அலுவலகத்துக்கு வரும்படி செல்லத்துரை அண்ணன் சொல்லி அனுப்பியிருக்காரு!”

“அப்படியா?” விஜயன் சிங்கத்தைப்போல் கர்ஜித்தான். மறு கணம் அவன் சிந்தனையிலிருந்து வீடு, வள்ளியம்மை, அருணகிரி, பரமகுரு அனைவருமே மறைந்து விட்டனர்.

உடனே விஜயன், அவனோடு கட்சி அலுவலகம் நோக்கி விரைந்து சென்றான்.

கட்சி அலுவலகத்திற்குள் விஜயன் சென்ற நேரம் அங்கே அவனுடைய நண்பர்கள் பலர் சோகமாக உட்கார்ந்திருந்தனர்.

மனோகரன் கைதானது அவர்களுக்கு மிகுந்த மனக் கலக்கத்தை உண்டு பண்ணியது. அவர்கள் கூட்டத்தில் மனோகரன் ஒரு மல்யுத்த வீரனைப் போல் விளங்கியவன். தனி ஒருவனாகவே, ஆயுதங்களின்றி பல பேரை சமாளிக்கும் வலிமை படைத்தவன். எப்போதும் எச்சரிகையாகவும் செயல்படக் கூடியவன், ஒரு கட்டிடத்தின் வலுவான தூண் ஒன்றை இழந்தது போலவே விஜயனும் உணர்ந்தான்.

போலீஸ் லாரியைத் தொடர்ந்து சில தொண்டர்கள் சென்றிருப்பதால், எப்படியும் அவனை மீட்டுக் கொண்டு வருவார்கள் என்று அனைவரும் நம்பி இருந்தனர்.

அந்த நீண்ட இரவும், காலைப் பொழுதில் பெரும் பகுதியும் கடந்து விட்டன. விஜயனுக்கு அதற்குமேல் அங்கு பொறுமையுடன் இருக்க முடியவில்லை. சொல்லிக் கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டான்.

கூட்டத்தில் பேசியதும்; இரவு தூக்கமின்மையம்; நீண்ட நடையும் விஜயனை தள்ளாடச் செய்தன. அப்படியும் வேகமாக அவன் வீட்டை அடைந்தபோது அவனை வரவேற்க யாருமே இல்லாமல் கதவில் அவன் பூட்டிய பூட்டு அப்படியே தொங்கிக் கொண்டிருந்தது.

இதை சற்றும் எதிர்பாராத விஜயன் வேகமாக மாரியம்மாள் வீட்டை நோக்கிச் சென்றான் அவள் வேலைக்குப் போயிருந்தாள். ஒரே ஓட்டமாக குமரேசன் வீட்டிற்கு சென்று விசாரித்தான். அவன் தன்னைத் தேடிக்கொண்டு சென்றிருப்பதாக குமரேசன் மனைவி கூறினாள்.

என்ன செய்வது என்று தோன்றாமல் நேரே தன் வீட்டுத் திண்ணையில் வந்து உட்கார்ந்தான். மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்த ஒரு பையன, “ஏன் மாமா அருணகிரி இன்னிக்கு ஸ்கூலுக்கு வரலே? டீச்சர் கேட்டாரு” என்று கூறிக் கொண்டே சென்றான்.

விமான நிலையத்திற்கு சென்ற அருணகிரி, வள்ளியம்மை இருவரும் ஏன் இன்னும் வீடு திரும்பவில்லை? எங்கே போனார்கள் இவர்கள். ஒரு வேளை பரமகுரு எல்லாரையும் தன்னோடு அழைத்துக்கொண்டு போய் விட்டாரோ? ஆனால், பொன்னம்பலம் வீட்டிற்கெல்லாம் வள்ளியம்மை போகக் கூடியவள் அல்லவே!

முதல் நாள் மீட்டிங் முடிந்ததிலிருந்து அவன் ஒன்றும் சாப்பிடவில்லை. நேரம் செல்லச் செல்ல அவன் கவலை அடைந்தான். அதற்கு மேலும் அர்த்தமில்லாமல் அந்தத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருக்க அவன் விரும்பவில்லை. பஸ்சை பிடித்து நேராக பொன்னம்பலம் வீட்டிற்கு வந்தான்.

உயரமான இரும்பு கேட்டிற்கு வெளியே நின்றபடி உள்ளே எட்டிப் பார்த்தான். யூனிபார்ம் அணிந்திருந்த சிங்கள கூர்க்கா அரைத் தூக்கத்தில் பீடி பிடித்துக் கொண்டிருந்தான்.

விஜயன் கேட்டை திறந்தபோது பட்டென்று விழித்துக்கொண்டு, “யாரு?” என்று வழி மறித்தான்.

“எஜமானைப் பார்க்கணும்”, என்றான் விஜயன்.

“ஊரில் இல்லை”, என்றான் கூர்க்கா.

“எஜமானி அம்மாளை பார்க்க வேண்டும். ஊரிலிருந்து உறவினர்கள் வந்திருக்கிறார்கள்,” என்றான் விஜயன்.

“யாரும் வீட்டில் இல்லை. அப்புறம் வா” என்று சிடுசிடுத்தான் அவன்.

திரும்பவும் கேட்டை மூடப் போன கூர்க்காவிடம், “எல்லாரும் எப்ப திரும்பி வருவாங்க தெரியுமா?” என்று விஜயன் கேட்டான்.

“சீக்கிரமா ஊர் சுற்றி முடிச்சிட்டா சீக்கிரமா வருவாங்க; மெல்ல ஊர் சுற்றிப் பார்த்தா மெல்ல வருவாங்க!” என்று கிண்டல் செய்தான் அவன்.

ஆனால் தொடர்ந்து விஜயனால் சமாதானமாக இருக்க முடியவில்லை. தன் மனைவியும், மகனும் நூற்றுக்கு ஒரு சதம்தான் இந்த வீட்டில் இருக்கக் கூடும் என்று எதிர்பார்த்தான். எனினும், மாலை வரை வெளியே சென்றவர்களுக்காக அங்கேயே காத்திருந்து பார்த்தான். அவர்கள் யாரும் வராமல் போகவே ஏமாற்றத்துடன் திரும்பவும் தன் வீட்டிற்கே பஸ் ஏறினான்.