உள்ளடக்கத்துக்குச் செல்

தென்னைமரத் தீவினிலே/வள்ளியம்மை வந்தடைந்தாள்

விக்கிமூலம் இலிருந்து
18
வள்ளியம்மை வந்தடைந்தாள்

ற்றும் எதிர்பாராமல் மேலே பாதி எரிந்து கொண்டிருந்த பெரிய உத்திரம் ஒன்று தடாலென்று லிஸியாவின் மேல் விழுந்து விட்டது.

அடியற்ற மரம் போல் அப்படியே சாய்ந்து விட்ட லிசியாவின் கையிலிருந்த குழந்தை எட்டச் சென்று விழுந்து ‘வீல்’ என்று அலறியது. பளிச் சென்று தாவி குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்ட அருணகிரி, ஒரு கையால் லிஸியாவின் மீது விழுந்துவிட்ட உத்திரத்தைப் பலம் கொண்ட மட்டும் நகர்த்திப் பார்த்தான்.

லிசியாவும் சுயமாக முன்று எழுத்திருக்க முடியாமல்; அவளது இரு கைகளுமே உத்திரத்தின் அடியில் சிக்கிக் கொண்டிருந்தன. தலையில் அடிபட்ட இடத்திலிருந்து ரத்தம் வழிந்தோடியது.

அருணகிரியின் போராட்டத்தைக் காணச் சகியாத லிஸியா முனகிய குரலில், “என்னை மறந்து விடு அருணகிரி. நான் போனால் போகிறேன். என் குழந்தை லீனாவை மட்டும் எப்படியாவது காப்பாற்றி வெளியே கொண்டு சென்று விடு. அவளைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பை உன்னிடம் ஒப்படைக்கிறேன். என் இறுதி ஆசையை நிறை வேற்றுவாயா அருணகிரி?” என்று அழுதாள்.

“சத்தியமாக உங்கள் குழந்தையை நான் காப்பாற்றுவேன். என்னை முற்றிலும் நம்புங்கள் லிசியா!” என்று அருணகிரியும் அழுதான்.

அவனது உறுதிமொழியில் நம்பிக்கை அடைந்து விட்டவளைப் போல் சில நொடிகளில் லிலியா இறந்து விட்டாள்.

லேசாக கீழ்வானம் சிவந்து கிழக்கு வெழுக்கத் துவங்கியிருந்தது. இரவு முழுவதும் மிகவும் பொறுப்புடன் கடமைகளைச் செய்து களைத்த சிங்கள ராணுவத்தினர் ஓய்வெடுக்கச் சென்று விட்டார்களோ என்னமோ கண்ணுக்கு எட்டிய துரம் வரை மனித நடமாட்டமே இல்லை.

நினைத்து நினைத்து அதிர்ச்சியில் அழும் குழந்தையை கையிலெடுத்துக் கொண்டு இரவு வந்த வழியை அரைகுறையாக நினைவிற்கு கொண்டு ஒரு வழியாக ஓட்டலை அடைந்தான் அருணகிரி.

துறைமுகப் பகுதியாதலால் அந்த அதிகாலை ஆறு மணிக்கே ஓட்டல் சுறு சுறுப்பாக இயங்கத் துவங்கியிருந்தது.

அருணகிரி வேகமாக லிப்டில் ஏறி தங்கள் அறை அழைப்பு மணியை அழுத்தினான்.

கதவைத் திறந்த லட்சுமி அம்மாளுக்கு எதிரே கையில் குழந்தையுடன் அருணகிரி நிற்பதைக் கண்டு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை. ஆயினும் அதைப் பற்றி உடனே ஏதும் கேளாமல், “உள்ளே வா அருணா,” என்று அழைத்தாள்.

அருணகிரி வந்து விட்டதை அறிந்த கல்யாணியும் காந்திமதியும் முன் ரூமிற்கு வந்தனர். பேப்பர் படித்துக் கொண்டிருந்த பரமகுரு அதை மடித்து விட்டு உள்ளே வந்தார்.

எல்லாருடைய பார்வையும் அருணகிரியின் கையிலிருந்த குழந்தையின் மீதே படிந்திருந்தது.

ஆயினும் அருணகிரியாகக் கூறும் வரை அதைப் பற்றிக் கேட்க வேண்டாமென்று எண்ணினார்கள்.

இரவு முழுவதும் அவனை காணாமல், அனைவரும் உறங்காமல் இருந்து கவலைப்பட்டுக் கொண்டிருந்ததை கூறிய லட்சுமி அம்மாள், “எங்கேடா போயிருந்தே அருணகிரி ராத்திரி ஏன் வரவில்லை?” என்று கேட்டாள்,

அருணகிரி முதல்நாள் இரவு தந்தையுடன் புறப்பட்டதிலிருந்து லிஸியாவிற்கு சத்தியம்செய்து கொடுத்து விட்டு வந்தது வரை ஒன்று விடாமல் கூறிவிட்டு பரமகுருவையும், காந்திமதியையும் பார்த்தான்.

சட்டென்று குழந்தையை காந்திமதியிடம் நீட்டினான்.

சோபாவில் உட்காாந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த பரமகுருவிற்கு, ‘பகீர்’ என்றது. அதில் கண்ட செய்தியை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை.

மாமாவினுடைய மூன்று கம்பெனிகளையும் குண்டர்கள் தரைமட்டமாக்கி விட்டனர். எவ்வளவு பெரிய நிறுவனங்கள் நிமிட நேரத்தில் ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டன. வருத்தத்தை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இந்த விஷயத்தை அம்மாவிடமும், கல்யாணியிடமும் எப்படித் தெரிவிப்பது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தபோது டெலிபோன் மணி அலறியது. பரமகுரு அவசரமாக போனை எடுத்து ‘ஹலோ!’ என்றார்.

எதிர் முனையிலிருந்து குணரத்னா குட் மார்னிங் கூறிவிட்டு, “பேப்பர் படித்தீர்களா?” என்று கேட்டார்.

“இப்போதுதான் பார்த்தேன் என்னால் நம்பவே முடியவில்லை. மிஸ்டர் குணரத்னா,” என்றார் பரமகுரு தழுதழுத்த குரலில்.

“என்னாலும் இந்த அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.” எனக்கு விடியற்காலை மூன்று மணிக்கே தகவல் வந்து விட்டது. நேற்று மாலை ஐந்து மணி வரை எல்லா கம்பெனியிலும் ஷிப்ட் வேலை முடிந்து போன பிறகு திட்டமிட்டது போல இந்த சதி நடந்திருக்கிறது. பல நிறுவனங்கள் நம்முடையதைவிட பெரியவை பிரபலமானவை. நேற்று வேலை முடிந்து வந்தது; இன்று காலை டிரஸ் செய்து கொண்டு வேலைக்குப் போக, நிறுவனமே இல்லை.

எல்லாரும் சாப்பிட்ட பிறகு, பரமகுரு அவர்களிடம் பேப்பரில் வந்துள்ள செய்தியைப் படித்துக் காட்டினார்.

அதைக் கெட்ட கல்யாணி வெகுநேரம் கற்சிலை போல் அப்படியே இடிந்து போய் உட்கார்ந்து விட்டாள்.

"ஐயோ இந்த வயதான காலத்தில் பொன்னம்பலத்திற்கு இப்படியொரு சோதனையா?” என்று லட்சுமி கண்ணீர் விட்டாள்.

கல்யாணி சிறிது நிதானத்திற்குப் பிறகு “மாமாவிற்கு நான் என்ன பதில் சொல்ல மாமி?” என்று பரமகுரு கேட்டார்.

கல்யாணி சட்டென்று தன்னை சமாளித்துக் கொண்டு, “இது என்ன பொய்யா; அல்லது மறைக்கிற காரியமா? பேப்பரிலேயே, அழித்து நிர்மூலமாக்கப்பட்ட கம்பெனிகளின் விபரம் என்று பட்டியல் போட்டு பிரசுரித்திருக்கிறான். சிக்கிரமாகவே சொல்லி விடுவதுதான் நல்லது. உங்க மாமா இதையெல்லாம் கேட்டு ஒன்றும் கவலைப்பட மாட்டார்!”

சுமார் பன்னிரண்டு மணி இருக்கும். எல்லாரும் சாப்பிட்டு முடித்த பிறகு மாமாவிடமிருந்து டிரங்கால் வந்தது. பரமகுரு அதை எடுத்தார்.

“பரமு! குணரத்னா எல்லா விஷயத்தையும் எனக்கு சொன்னார். பேப்பர் படித்திருப்பீர்கள். சரி! இனிமேல் உன் புரோகிராம் என்ன? எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. யார் செய்த புண்ணியமோ ஒரு எஸ்டேட் வாங்கினேன் அறுபது லட்சமாவது இங்கே தங்கிச்சு. அதுவரைக்கும் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.”

“சரி! நீ உன் கூடவே, கல்யாணி, தங்கமணி இருவரையும் சென்னைக்கு அழைத்துக் கொண்டு போய்விடு. நான் இங்கிருந்து நேராக அங்கே வருகிறேன். அங்கே போன பிறகு என்ன செய்ய வேண்டுமென்று சேர்ந்து யோசிக்கலாம். கொஞ்சம் கல்யாணியைக் கூப்பிடு,” என்றார் மாமா.

பரமகுரு கல்யாணியைக் கூப்பிட்டு கையில் போனை கொடுத்தார்

மாமாவைப் போலவே எவ்வித சலனமும் இல்லாமல், கல்யாணியும் மாமாவிடம் பேசிவிட்டு, “சரி நான் இவர்களுடன் சென்னைப் புறப்படுகிறேன். அங்கே சீக்கிரமா வந்து சேருங்கள். வீட்டை என்ன செய்ய? ஒரு தடவை போய் வேலைக்காரர்களிடம் நேரில் பார்த்து சொல்லி விட்டு வரவேண்டாமா?

“சென்னையிலிருந்து அதையெல்லாம் நான் சொல்லிக் கொள்கிறேன் சென்னை போனதும். மாப்பிள்ளைக்கும், பெண்ணிற்கும் லெட்டர் எழுது. தங்கமணியை, அவள் அம்மா, அப்பா. அழைத்துக் கொண்டு போகட்டும். நான் இந்தியா வந்து உன்னை அழைத்துக்கொண்டு சிங்கப்பூர் வரும் வரையிலும் நீ சென்னையில் பரமகுருவின் வீட்டிலேயே தங்கியிரு. முதலில் ஊருக்குப் போக எத்தனை டிக்கட் வேண்டுமோ அதை குணரத்னா மூலம் வாங்க ஏற்பாடு பண்ணிக் கொள்,” என்று போனை கீழே வைத்தார்.

அவர்களை ஏற்றி வந்த கார் விமான நிலையத்தை வந்தடைந்ததும், எல்லாரும் இறங்கினார்கள்.

கையில் குழந்தையுடன் காரிலிருந்து இறங்கிய அருணகிரி, அந்த விமான நிலையத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

உள்ளத்தில் மூண்டெழுந்த துக்கத்தை அவனால் அடக்கிக் கொள்ள முடியவில்லை. சென்ற வாரம் இதே விமானநிலையத்திற்கு தன் தாயோடு வரும்போது எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தான்.

இந்த வாரம் அதே விமான நிலையத்தில் தாயை இழந்து அனாதையாக நிற்கிறான்.

உண்மையில் தாயை மட்டும்தானா?

லிஸியோ வீட்டோடு, தந்தையையும் இழந்து விட்டான்.

மரணக் கூண்டினுள் நுழைபனைப் போல் அன்று தன் தந்தை தன்னிடம் பிரியா விடை பெற்றுச் சென்ற காட்சியை இப்போது நினைத்தாலும் அவன் உடல் நடுங்குகிறது.

அன்று இதே விமான நிலையத்தில் செல்வந்தர்கள் மத்தியில் ஓர் ஏழையாய் தன் தாய் ஒதுங்கி நின்றாள்.

இன்று-

பல லட்சங்களுக்கு அதிபதியாக இதே இடத்தில் தன்னோடு நிற்பதற்கு அந்தத் தாய் இல்லை; அவள் அன்பு இல்லை!

அன்று ஏழையாக இருந்தாலும், தந்தை பாசமும், தாயன்பும் அவனுக்குப் பஞ்சமில்லாமல் வற்றாமல் கிடைத்து வந்தன.

இன்று அந்த ஜீவநதிகள் இரண்டுமே அவன் வரை வற்றி விட்டன. ஒரே காலகட்டத்தில், தாயையும், தந்தையையும் இழந்து நிற்கும் அவன் ஒர் அனாதை... அனாதை... அவனால் அதற்கு மேல் சிந்திக்க முடியாமல் தலையே சுழல்வது போலிருந்தது. துயரம் பெரும் உருண்டையாகத் தொண்டையை அடைத்தது, “அம்மா...அம்மா...” என்று உள்ளம் கதறியது.

அந்தக் கதறலைக்கேட்டு ஆறுதல் கூறுவதைப் போல், “அருணகிரி நீ அனாதை இல்லை, உன்னை விட்டு நான் எங்குமே போய் விடவில்லை . என்னால் போகவும் முடியாது. நான்தான் ஒரு குழந்தையாக உன் கையில் தஞ்சம் அடைந்திருக்கிறேனே. இனி நீ வருந்தலாமா? இந்தப் பரிசுத்தமான அழகில், கபடமில்லாத உள்ளத்தில், கள்ளமில்லாத சிரிப்பில் நான் உன் கண்களுக்குத் தெரிய வில்லையா? என்னைப் பார்,” என்று அவனுள் யாரோ கூறும் குரல் கேட்டது,

கையில் இருக்கும் குழந்தை சிணுங்கியது.

அருணகிரி அந்தக் குழந்தையை மார்போடு அனைத்துக் கொண்டபடி, “வள்ளியம்மா!” என்று தன்னை மறந்து கத்தி விட்டான்.

அவன் குரலைக் கேட்டு, பரமகுரு, லட்சுமி அம்மாள், காந்திமதி கல்யாணி, பாபு, ராதா, தங்கமணி எல்லாரும் திரும்பிப் பார்த்தனர்.

ஆனால் அவன், யாரையும் பாராமல் குழந்தையையே பார்த்தபடி, “வள்ளி... வள்ளி...” என்று கொஞ்சிக் கொண்டிருந்தான். அப்போது அவனது கண்களில் வழிந்தோடும் கண்ணிரைக் கண்டு யாருமே கவலைப்படவில்லை. ஆம்! அது ஆனந்தக்கண்ணிர் அல்லவா?



ஆசிரியரின் சிறுவர் நூல்கள்

1. அன்பு பணிக்கு ஓர் அன்னை தெரசா
2. பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்
3. கப்பு கான்வென்ட்டுக்குப் போகிறாள்
4. ஜேம்ஸ்பாண்ட் சங்கர்
5. காப்டன் குமார் - அகதி
6. மாஸ்டர் ராஜா
7. மங்காபுரி வீரன்
8. நாடோடி இளவரசன்
9. கவிமணியின் கதை
10. பிள்ளையார் சிரித்தார்