தெய்வமணிமாலை
Appearance
தெய்வமணிமாலை
[தொகு]திருவருட்பா- ஐந்தாம் திருமுறை
[தொகு]திருச்சிற்றம்பலம்
பாடல்: 1 (திருவோங்கு)
[தொகு]- திருவோங்கு புண்ணியச் செயலோங்கி யன்பருட்
- டிறலோங்கு செல்வ மோங்கச்
- செறிவோங்க வறிவோங்கி நிறைவான வின்பந்
- திகழ்ந்தோங்க வருள் கொடுத்து
- மருவோங்கு செங்கமல மலரோங்கு வணமோங்க
- வளர்கருணை மயமோங்கி யோர்
- வரமோங்கு தெள்ளமுத வயமோங்கி யானந்த
- வடிவாகி யோங்கி ஞான
- உருவோங்கு முணர்வினிறை யொளியோங்கி யோங்குமயி
- லூர்ந்தோங்கி யெவ்வு யிர்க்கும்
- உறவோங்கு நின்பதமெ னுளமோங்கி வளமோங்க
- வுய்கின்ற நாளெந்த நாள்
- தருவோங்கு சென்னையிற் கந்தகோட் டத்துள்வளர்
- தலமோங்கு கந்த வேளே
- தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வ மணியே. (01)
பாடல்: 2 (பரமேது)
[தொகு]- பரமேது வினைசெயும் பயனேது பதியேது
- பசுவேது பாச மேது
- பக்தியே தடைகின்ற முத்தியே தருளேது
- பாவபுண் யங்க ளேது
- வரமேது தவமேது விரதமே தொன்றுமிலை
- மனம்விரும் புணவுண் டுநல்
- வத்திர மணிந்துமட மாதர்தமை நாடிநறு
- மலர்சூடி விளையாடி மேற்
- கரமேவ விட்டுமுலை தொட்டுவாழ்ந் தவரொடு
- கலந்துமகிழ் கின்ற சுகமே
- கண்கண்ட சுகமிதே கைகண்ட பலனெனுங்
- கயவரைக் கூடா தருள்
- தரமேவு சென்னையிற் கந்தகோட் டத்துள்வளர்
- தலமோங்கு கந்த வேளே
- தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வ மணியே. (02)
- தலமோங்கு கந்த வேளே