தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு/தொழிலியல் விஞ்ஞானி
ஜி.டி. நாயுடு மறைந்தார்!
தொழிலியல் துறையில் பற்பல அறிவியல் புதுமைகளை, விஞ்ஞானக் கருவிகளைக் கண்டுபிடித்து, அறிவியல் உலகுக்கு கொடையாகக் கொடுத்துப் புகழ் பெற்ற அறிவியல் வித்தகரான கோவை ஜி.டி. நாயுடு அவர்களை, உலக விஞ்ஞானிகள் எல்லாம் வியந்து பாராட்டிப் பெருமையோடு போற்றினார்கள். அவர்களுள் ஒருவர் நோபல் பரிசு பெற்ற அறிவியல் மேதை சர்.சி.வி. இராமன் ஆவார். அவர் என்ன பாராட்டுகிறாள் என்பதையும் கேட்போமே......!
சர்.சி.வி. இராமன்
பாராட்டுரைகள்!
தமிழ் நாட்டில் பிறந்த கோவை ஜி.டி. நாயுடு அவர்களின் பல்துறை அறிவை, உலகத்திலுள்ள அறிவியல் அறிஞர்கள் என்னிடமே பாராட்டியும், புகழ்ந்தும் கூறி இருக்கிறார்கள்.
விஞ்ஞானக் கண்டுபிடிப்புத் துறையில் குறிப்பிடத்தக்க மனிதரான திரு. ஜி.டி. நாயுடுவைப் பற்றியும் அவருடைய அருமையான பண்புகளைக் குறித்தும், அவரது அற்புதமான அறிவியல் கண்டுபிடிப்புக் கருவிகளைப் பாராட்டியும் எழுதும் திறமை எனது எழுதுகோலுக்கு இல்லை என்று நம்புகிறேன்.
போத்தனூர் நகரம் அருகே உள்ள நாயுடுவினுடைய விவசாயப் பண்ணையை நான் பார்த்தேன். அங்கே அவர் எண்ணற்ற அற்புதங்களைச் செய்திருப்பதையும் கண்டேன்.
ஜி.டி. நாயுடு சிறந்த ஒரு கல்விமான், பொறியியல் மேதை; தொழில் நுட்ப வல்லுநர்; அதே நேரத்தில் அவர் ஓர் அன்பான மனித நேயம் உடையவர், அப்படிப்பட்ட அவர், இந்திய மக்களின் வறுமைக் கண்ணிரைத் துடைத்திட அரும்பாடு பட்டுள்ளார். சுருக்கமாச் சொல்வதானால் நாயுடு அவர்கள், ஆயிரத்துள் ஒருவரல்லர், பத்து இலட்சத்துள் ஓர் அரிய மனிதர்!
நான் கூறுவதுகூட, அவரது திறமைக்கு பொருத்தமான, புகழுக்கு ஈடான கூற்றும் ஆகாது என்று 09.04.1950 - அன்று ஜி.டி. நாயுடுவைப் பற்றி பேசியுள்ளார்.
அதே சர்.சி.வி. இராமன் அவர்கள் வேறோர் நிகழ்ச்சியில் நாயுடுவுக்குப் புகழாரம் சூட்டும்போது :
'ஜி.டி. நாயுடு ஒர் அதிசயமான மனிதர். அவர் பள்ளிக்குச் சென்று, கல்வி கற்றவரல்லர். ஆனால், நாமெல்லாம் வியக்கத் தக்க அளவுக்கு அவரிடம் சாதனை அறிவு நிறைந்திருக்கின்றது.
எல்லாத் தொழில் நுட்பங்களையும் அவர் அறிந்திருக்கிறார். நான் அவருடைய கல்லூரி உணவு விடுதிக்கும் சென்று பார்த்தேன். அப்போது மாணவர்களில் ஒருவர் என்னிடம், "எப்படி ஐயா நீங்கள் வைரத்தில் துளை போடுகிறீர்கள்?" என்று கேட்டார்.
"அதைச் சரியாக அறிவிக்க எனக்கு நினைவு வரவில்லை. உடனே நாயுடு அவர்கள் அந்த முறையைப் பற்றி மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார். அதை நான் கேட்டதும் அயர்ந்து போனேன்".
"கோவை மக்கள் இப்படிப்பட்ட ஒரு மனிதரைத் தம்மிடையே பெற்றிருக்கப் பெரும் பேறு பெற்றிருக்க வேண்டும். நாயுடு அவர்கள் சிறந்த அறிஞர் மட்டுமல்லர் அமெரிக்கர்கள் கடைப்பிடிக்கும் "அறிவது எப்படி?" How to Know என்ற கொள்கையையும் உடையவர்".
ஏதாவது ஒரு பொருளை அவர் பார்த்துவிட்டால், அதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளும் அற்புத சுபாவம் உடையவர். நம் நாட்டு மக்கள் ஒரு வேலையை எப்படிச் செய்வது என்பதைப் பற்றி விளக்கமாகச் சொற்பொழிவு ஆற்றுவர். ஜி.டி. நாயுடு அதற்கு விதி விலக்கானவர்.
"நாயுடுவிடம் எடுத்த காரியத்தை தொடுத்து முடிப்பதற்கு ஏற்ற மன உறுதி, ஊக்கம், விட முயற்சி, அறிவது எப்படி? என்ற குறிக்கோள் அனைத்தும் அமைந்திருக்கின்றன".
இவருக்குப் பண்டைய சம்பிரதாயங்களில், பழக்க வழக்க நம்பிக்கைகளில், தற்காலத்தின் வாழ்க்கைக்கு எவை பொருத்தமோ, அவற்றை மட்டுமே ஏற்றுக் கொள்ளும் விருப்பமுள்ளவர்.
பெளதீகம், இரசாயனம், பொறியியல், மனையியல் ஆகிய வற்றுக்கான 50 விஞ்ஞானப் பிரிவுகளைப் பற்றிய கருத்தை திரைப்படம் மூலமாக எனக்கு ஜி.டி. நாயுடு தமிழில் கற்பித்தார்.
திரு. நாயுடு அவர்கள் நமது நாட்டு மக்களின் திறமைகளை நடைமுறையில் காட்டுவதில் வல்லவராகத் திகழ்கின்றார். அதனால் இவர் அதிசய மனிதராகவும் காட்சி தருகின்றார். எதிர்காலம் எப்படி அமையும் என்பதை அறிவதிலே அவர் திறமையுள்ளவராகவும் உள்ளார். மற்ற மக்களின் உயர்ந்த வாழ்க்கைக்கு நாயுடு நல்லதொரு எடுத்துக் காட்டாகப் பணிபுரிந்து வருகிறார்.
இந்தியாவின் -
முதல் நிதியமைச்சர்!
பாரத நாடு சுதந்திரம் பெற்ற பின்பு, இந்தியாவின் முதல் நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற பொருளாதார மேதை திரு. ஆர்.கே. சண்முகம் செட்டியார் அவர்கள், கோவை மாவட்டத்திலே பிறந்து வளர்ந்த சிறந்த வித்தகர். பண்டித நேரு போன்றவர்களால் பாராட்டப்பட்ட, வியப்புக்குரிய பொருளாதார அறிவுடையவர். அத்தகைய ஒரு மேதை ஜி.டி.நாயுடுவைப் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போமே!
"திரு. ஜி.டி. நாயுடு அவர்கள் ஓர் அமைச்சரை வரவேற்று அவருக்கு விருந்துபசாரம் செய்து, அரசாங்கத்தை எப்படி நடத்த வேண்டுமென்று விளக்குகிறார்”.
"ஒரு தொழில் வல்லுநரை அழைத்துப் பாராட்டி நம் நாட்டுத் தொழில் முறை பற்றிய வருணனைகளைச் செய்கிறார். ஜி.டி. நாயுடு அன்போடு தனது எண்ணத்தை எடுத்து விளக்கும் வகை, அவரது மிக உயர்ந்த நட்புணர்ச்சியையும், அறிவின் ஆழத்தையும், விடா முயற்சியையும் நமக்கு எடுத்துக் காட்டுகின்றது' என்று அவர் கூறியுள்ளார்.
சர். சி.பி. இராமசாமி
ஐயர் கண்டனம்!
'ஜி.டி. நாயுடு தனக்கே உரிய முறையில் சிந்தித்து செயலாற்றுகிறார். அவருடைய முறை புதிய முறை அதனால், மக்கள் போற்றுவதற்குரிய பல அரிய வெற்றிகளை அவர் கண்டிருக்கின்றார்.
"அவருடைய ஆர்வத்தையும், திறமையையும், தலைமையையும், இதுவரை மத்திய - மாநில அரசுகளால் பாராட்டப்படாதது கண்டனத்திற்குரிய செயலாகும். மக்களது துரதிருஷ்டமே! அவரது தனித்திறமையை நாமும் - நாடும் பெருமளவில் பயன்படுத்தி கொண்டிருக்க வேண்டும்".
தலைமை என்ஜினியர்
டாக்டர் பி.என்.டே..!
வங்காள நாட்டின் அரசு தலைமைப் பொறியாளராகப் பணியாற்றுபவர் டாக்டர் பி.என்.டே அவர் கூறுவதைக் கேட்போம்!
"ஜி.டி. நாயுடு ஒரு தனிப் பல்கலைக் கழகம். அவரது நிர்வாக அமைப்பு, கண்காட்சி, விவசாயப் பண்ணை ஆகியவை விந்தையானவை. நான் உலகம் முழுவதும் சென்றிருக்கிறேன். என்றாலும், இவற்றைப் போன்ற விந்தைகளை நான் வேறு எங்குமே கண்டதில்லை. ஜி.டி. நாயுடுவைப் பார்க்க வருவது ஒரு புனிதமான இடத்துக்கு யாத்திரை போவதற்குச் சமமாகும்.
ஜெர்மன் பத்திரிக்கையாளர்
வில்லி ஸ்டுவர் வால்ட் பாராட்டு!
ஜெர்மன் நாட்டிலே இருந்து வெளிவரும் ஸ்டட் கார்ட் செய்துங் பத்திரிக்கையின் நிருபர் வில்லி ஸ்டுவர் வால்ட் என்பவர் ஜி.டி. நாயுடுவைப் பாராட்டி எழுதியதாவது.
“எனது பத்திரிக்கை வாழ்வின் 25 ஆண்டுக் காலத்தில் நான் சந்தித்த மனிதர்களில் மிகவும் விந்தையானவர் ஜி.டி. நாயுடுதான். அவருடைய கண்கள் காந்த சக்தி படைத்தவை. அவரோடு தொடர்பு கொள்ளும் ஒவ்வொருவரையும் அவர் கவரக் கூடியவர். எந்தப் பொருளையும் அவர் கூர்மையாக உற்று நோக்குகிறார். அவரது கண்கள் குறிப்பின்றி அலைவதில்லை. அவர் ஓர் அதிசய மனிதர் ஆவார்.
அமெரிக்கத் தொழிலதிபர்
எப். டிரேப்பர் கூறுகிறார்!
அமெரிக்காவின் சிகாகோ நகரிலே உள்ள மின்-தொழில் அதிபரான எப். டிரேப்பர் எழுதுகிறார் :
"திரு. நாயுடு அவர்களே! தாங்கள் சிகாகோ நகருக்கு வருகை தந்ததைப் பெரிதும் மதித்துப் பாராட்டுகிறேன். தங்களோடு நான் அனுபவித்த சில மணி நேரங்களை என் வாழ்வின் பொன்னான நேரமாக எண்ணி மகிழ்கின்றேன். தங்களிடம் இருந்து எனக்குத் தேவையான அனுபவங்களை நான் ஏராளமாகக் கற்றுக் கொண்டேன். உங்களுடைய வாழ்க்கைப் பாதையை ஒரு குறிப்பிட்ட அளவிற்காவது பின்பற்றக் கூடிய ஆற்றலும், மன உறுதியும் எனக்கு ஏற்படும்” என்று நம்புகிறேன்.
ஒரிசா மாநிலத்தின் -
திட்டத் துறை செயலர்!
ஒரிசா மாநிலத்தின் அரசு திட்டத் துறை செயலாளார் கட்டாக் நகரிலே இருந்து நாயுடுவைப் பாராட்டி எழுதும்போது :
"நான் தங்களது கல்வி நிலையங்களைப் பார்வையிட்டு வந்தது முதல், தங்களிடம் மோட்டார், வானொலித் துறைகளில் ஆறு வாரம் பயிற்சி பெறுவதற்குச் சில மாணவர்களைக் கட்டாக் நகரிலே இருந்து அனுப்ப வேண்டும் என்று எங்கள் அரசாங்கத்தை வற்புறுத்தி வந்தேன். அரசு எனது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, மாணவர்கள் சிலருக்கு உதவிச் சம்பளம் வழங்க முன் வந்திருக்கின்றது.
அத்துடன், உங்களால் எத்தனை மாணவர்களுக்கு இந்த ஆண்டில், பயிற்சி தர முடியும் என்பதையும் விசாரிக்கச் சொல்லி இருக்கிறது. ஒவ்வொரு பாடத்திற்கும் மூன்று மாணவர்கள் வீதம் அனுப்ப வேண்டும் என்பது எங்களது ஆசை. ஆனால், நீங்கள் எத்தனை இடங்கள் ஒதுக்குவீர்களோ அத்துடன் திருப்தி அடைவோம்.
உங்களிடம் பெறுவதைப் போன்ற ஒரு பயிற்சியை எங்கள் மாணவர்கள் இந்தியாவில் வேறு எங்குமே பெற முடியாது என்பதை நான் அறிவேன். நான் இந்தியாவில் உள்ள பல்வேறு கல்வி நிலையங்களைப் பார்வையிட்டு இருக்கிறேன். ஆனால், தாங்கள் தரும் பயிற்சியும், பண்பாட்டு உணர்ச்சியும் அலாதியானவை என்பது எனது முடிவான கருத்து! அதனால்தான் எங்கள் மாணவர்களை உங்களிடம் அனுப்புகிறோம். நீங்கள் நிச்சயம் இடம் ஒதுக்கி ஆதரிப்பீர்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.
இந்தியக் கல்வி அமைச்சர்
டாக்டர் ஹுமாயூன் கபீர்!
இந்தியாவின் மத்திய அமைச்சர்களுள் ஒருவரான டாக்டர் ஹுமாயூன் கபீர் அவர்கள் எழுதியதாவது :
"திரு. ஜி.டி. நாயுடுவைப் பார்ப்பதும், அவரோடு தொடர்பு கொள்வதும் நமக்கு இன்பத்தையும், கல்வி அறிவையும் வழங்குகின்றன. அவர் ஓர் இயந்திர வல்லுநர் மட்டுமல்லர் - அவரே ஓர் இயந்திரமும் ஆவார். அவருடைய ஆற்றலும், ஆர்வமும் அழிவற்றவை. அவருடைய நிர்வாகத் திறமை நமக்கெல்லாம் ஓர் எடுத்துக்காட்டு அவர் பல துறைகளில் ஆராய்ச்சிகளும், சோதனை களும் செய்து, நாட்டிற்குப் பல வெற்றிகளைத் தந்துள்ளார். நாடு அவரைப் பெரிதும் நம்பி இருக்கிறது.
இத்தாலி நண்பர்களுள்
வெர்னர் ரியட்டர் விட்டேல்!
இத்தாலி நாட்டு நண்பர்களுள் ஒருவரான வெர்னர் ரியட்டர் விட்டேல் என்பவர் ஜி.டி. நாயுடுவால் கண்டுபிடிக்கப்பட்ட நீரிழிவு நோய் நீக்கும் மருந்தை உண்டு குணமானவர். அவர் 9.7.1955 - அன்று எழுதிய பாராட்டுரை :
"உங்களை நான் இத்தாலியில் முதன் முதலாகச் சந்தித்தபொழுது, உங்கள் நிறுவனத்திற்கு ஏதாகிலும் நன்கொடை அளிக்க விரும்பினேன். ஆனால், நீங்கள் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டீர்கள். பிறகு உங்களைப் பற்றி விசாரித்ததில், சில நண்பர்களிடம் இருந்து நீங்கள் மைக்கிரோஸ் கோப், மைக்ரோ புரொஜெக்டர் கார் முதலியவற்றை நன்கொடைகளாக வாங்கிக் கொண்டிருப்பதாக அறிந்தேன்.
"ஆகவே, நீங்கள் என்னிடமிருந்தும், எதையாவது பெற்றுக் கொண்டே தீர வேண்டும். நீங்கள், 'பிளாக் பாரஸ்ட் கடையில் வாங்கியுள்ள எல்லாக் கடிகாரங்களுக்கும் உரிய விலையை நானே கொடுத்து விடுகிறேன்".
'உங்களுடைய அதிசயமான மருந்தால் காப்பாற்றப்பட்ட ஓர் உயிருக்கு - இந்தத் தொகை சிறிதும் ஈடாகாது! உங்களுக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன்'.
நாயுடு நாட்டின்
தேசிய சொத்து!
ஜி.டி. நாயுடு அவர்களை மேற்கண்டவாறு, இந்தியாவும், உலக நாடுகளும் பாராட்டிப் போற்றிப் புகழ்ந்து இருக்கின்றன. அந்தப் பெருமகனை, செயற்கரிய செயல்களைச் செய்து காட்டி வெற்றி பெற்றிட்ட தமிழ்நாட்டுத் தொழிலியல் துறை விஞ்ஞானியை, கல்வியிலே புரட்சியைப் புகுத்திய சான்றோனை அவர் உயிரோடு வாழ்ந்திருந்த காலத்திலேயே நாம் நன்கு பயன்படுத்திக் கொண்டு பாராட்டியிருக்க வேண்டும். செய்தோமா? நன்றி காட்டினோமா?
திரு. ஜி.டி. நாயுடு அவர்கள் நம் நாட்டின் தேசீய சொத்து என்று நம்பினோமா? கள்ளம் கபடமற்ற அந்தப் பதுமையான விஞ்ஞானியை, கட்சிகளை எல்லாம் கடந்து நின்று அந்த தமிழ்ப் பொது மகனை, இந்தியப் பெரு நாடும், தமிழ்த் திருநாடும் பயன்படுத்திக் கொண்டு, இந்திய மக்கள் வாழ்வை முன்னேறச் செய்தோமா? நாம் என்ன கைம்மாறு செய்தோம் அவர் தம் தீர்க்க தரிசனமான அறிவுக்கு?
போனது போகட்டும். இனிமேலாவது, வரும் இளைய தலைமுறைகளும், அவர்களைச் சார்ந்த பொது மக்களும் நன்றாக, செம்மையான வாழ்வு வாழ வைக்க விரும்புவோமா?
அவ்வாறு விரும்பினால், நாம் நன்றியுடையவர்கள் தான் என்பது உண்மையானால், இனியாவது அவருடைய அற்புத அறிவை, மாணவர்களின் விஞ்ஞான பாட, போதனைகளில் அவரது முழு கண்டுபிடிப்புக்களைப் பாராட்டும் வகையிலே பாடங்களாகச் சேர்த்துப் படிக்க வைப்போமானால், அதன் மூலமாக ஒரு புதிய விஞ்ஞானப் பரம்பரையை நம் நாட்டில் தோற்றுவிக்க வழி வகுத்தவர்களாக ஆவோம்.
கோவை திரு. ஜி. துரைசாமி நாயுடு எனப்படும் ஜி.டி. நாயுடு என்று மக்களால் போற்றப்பட்ட அந்த மக்கட் குல மேதை. இந்த நாட்டுக்கு வழங்கியுள்ள விஞ்ஞானச் செல்வங்களும், இந்திய மக்கள் மீது அவர் காட்டியுள்ள வாழ்க்கை அக்கறை வழிகளும் எண்னற்றவை.
அவற்றை நாம் பயன்படுத்திக் கொண்டால், இந்திய நாடும், தமிழ் நாடும், மேல் நாடுகளைப் போல விஞ்ஞான வாழ்வை வாழ்ந்து காட்டுபவர்களாக, உலகத்தால் மதிக்கப்படுவோம் - போற்றப்படுவோம்.
குறிப்பாக, மாணவர் உலகம் திரு. ஜி.டி. நாயுடு அவர்களது அறிவைப் பின் தொடர்ந்து அழியப் புகழை மேலும் தேடித் தரும் ஒரு புதிய பரம்பரையாக வளருவதற்கான வழி உருவாகும் என்பதே கல்விமான்களது கருத்து. நிறைவேறுமா?
'மேம்பாலம்' பத்திரிக்கைக்கு
ஜி.டி. நாயுடு இறுதிப் பேட்டி!
திரு. ஜி.டி. நாயுடு அவர்கள் 1973-ஆம் ஆண்டில் 'மேம்பாலம்' என்ற ஒரு பத்திரிக்கை நிருபர் பா. இராமமூர்த்தி என்பவருக்கு, ஓர் இறுதிப் பேட்டி ஒன்றை வழங்கினார். அதை அப்படியே அவருடைய கருத்தாக நாம் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக அமைந்துள்ளது. இதோ அந்த பேட்டி உரை!
'நாம் வெளிநாட்டு நாகரிகத்தைப் பின்பற்றி நமது சொந்த பரம்பரைப் பண்பாட்டைத் தூக்கி எறிந்து விட்டோம். அயல் நாட்டார் மோகத்திலே மூழ்கி விட்டோம்.
ஆனால், மேலை நாட்டாரிடம் நாம் கற்க வேண்டியதை விட்டு விட்டு, நமது பண்பாட்டுக்கு ஒத்துவராத வகையில் அவர்கள் நாகரிகத்தை ஏற்று தீமை தரும் பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி விட்டோம். இது மிகவும் வருத்தப்படக்கூடிய வாழ்க்கை நிலை.
நான் மேல் நாடுகளுக்குச் சென்ற போதெல்லாம் ஒரு குறிப்பு எழுதி, அதைக் கவனமாக எனது கோட்டு அங்கியில் வைத்துக் கொள்வேன். No Women, No, Alcohol, No Meat என்று கொட்டை எழுத்துகளால் எழுதி வைத்திருப்பேன்.
நான் தினந்தோறும் படுக்கச் செல்லும்போது, கோட்டுப் பைக்குள்ளே வைத்திருக்கும் அந்த அறிவுரைக் குறிப்பை எடுத்து. பலமுறை அதை வாய்விட்டு அறவுரையாக எண்ணி முணுமுணுத்து, நானே சொல்லிக் கொள்வேன். இவ்வாறு நான் கூறிக் கொள்வதானது, எனக்கு மனவுறுதியை வெகுவாகப் பலப் படுத்தியது.
நான் ஒரு குறிக்கோளோடு வாழ்ந்தேன். எனது எண்ணங்களையும், சக்திகளையும் எதிலும் சிதறவிடாமல் என்னையே நான் தற்காத்துக் கொண்டேன்.
சுவையான, இனிமையான நிகழ்ச்சி ஒன்று எனது நினைவுள் தோன்றுகின்றது. சிகாகோ நகரத்தில் ஒரு நாள் என்னை மூன்று பெண்கள் சூழ்ந்து கொண்டு பலாத்காரம் செய்தார்கள். அந்த இடத்திலே எனது அறவுரைகளும், அறிவுரைகளும் பலன் தரவில்லை. அவர்களைப் பார்த்துப் பரிதாபப்பட்டேன்.
ஏன் தெரியுமா? அவர்கள் ஒவ்வொருவரும் அளவுக்கு மீறி மதுவைக் குடித்திருந்தார்கள். அதனால், அவர்களுக்குத் தாம் என்ன செய்கிறோம் என்றே புரியவில்லை; தெரியவில்லை. அறிவை இழந்த அந்த அழகிகளைச் சீர்படுத்தி அந்த இரவு முழுவதும் எனது அறையிலேயே தங்க வைத்தேன்.
மனதில் ஒழுக்க
உறுதி வேண்டும்!
மறுநாள் அந்த மங்கையர் மூவரும், தங்களது செயல்களுக்காக என்னிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு சென்றார்கள், ஏன் இங்கே இதை நினைவுப்படுத்துகிறேன் தெரியுமா? ஒரு முடிவை மனிதன் எடுத்துக்கொண்டால், எந்தச் சூழலிலும், எவ்வளவுதான் சபலங்கள் வந்தாலும், அதற்குச் சிறிதும் இடம் கொடுக்கக் கூடாது என்பதற்கு மட்டுமன்று: எதிர்நீய்ச்சலும் போட மன உறுதி வேண்டும் என்பதற்காகத்தான் கூறுகிறேன்.
இந்த மன உறுதி, மனவொழுக்கம், எல்லாச் செயல்களிலும், எல்லா நேரங்களிலும் ஒவ்வொரு மனிதனும் கடைப்பிடித்தாக வேண்டும். அதற்குத்தான் மனோதிடம் என்ற மாண்புமிகு பெயராகும். இது வாழ்க்கையில் நான் கற்றுக் கொண்ட பாடம். இந்தப் பாடம் எல்லாருக்கும் என்றும் தேவை.
இந்தியாவில் இருக்கும் மூடப் பழக்க வழக்கம், குறிப்பாகத் தமிழ் நாட்டைச் சூழ்ந்துள்ள மூடப் பழக்க வழக்கங்களுக்கு ஈடு இணையாக வேறு எதையுமே குறிப்பிட முடியாது. இதற்கு என்ன மூல காரணம்? அறியாமைதான்!
இத்தகைய மூடப் பழக்க வழக்கங்களை, மூட நம்பிக்கைகளை ஒழித்து, சீர்திருத்த எண்ணங்களைப் புகுத்தி வரும் தந்தை ஈ.வெ.ரா. பெரியார் மீது எனக்கு அளவு கடந்த அபிமானம், மரியாதை உண்டு. எனவே, தமிழ்நாட்டு மக்கள் தங்களது வாழ்க்கை யில் அறியாமையை ஒழித்து, அறிவியல் கண்ணோட்டத்துடன் வாழ்வதற்கு முன்னேற வேண்டும் என்பதே எனது விருப்பம் ஆகும்.
கடவுள் உண்டா என்ற
விவாதம் வேண்டாம்?
கடவுள் உண்டா? இல்லையா? என்று யாராலும் சொல்ல முடியாது. கடவுள் இருக்கிறாரா என்று விவாதம் செய்யக் கூடாது. அது அப்படியே இருந்துவிட்டுப் போகட்டுமே! கடவுள் இருந்தார் என்றாலும், இல்லை என்றாலும் ஒன்றும் செய்வதற்கு இல்லை. இருந்தால் இருக்கட்டும் இல்லாவிட்டால் போனால் போகட்டுமே! ஆனால் ஒன்று; கடவுள் இல்லை என்று யாராலும் சொல்ல முடியாது.
சமுதாயத்தில், புரோகிதர் வந்து திருமணம் நடத்தி வைப்பதையும் வெறுத்தேன். எனது இரண்டாவது மகள் சரோஜினியைச் செல்வன் பாலகிருஷ்ணன் என்பவருக்கு கோவையில், 1944-ஆம் ஆண்டில், அப்போது சென்னை மாகாண ஆளுநராக இருந்த சர். ஹார்தர் ஹோப் எனும் வெள்ளைக்காரர் தலைமையில் திருமணம் செய்து கொடுத்தேன்.
அந்தத் திருமணத்ற்கு புரோகிதரை அழைக்கவில்லை. சுயமரியாதைத் திருமணம்தான் நடத்தினேன். அந்தத் தம்பதிகள் ஊர் போற்றும் அளவிலே சீரோடும் - சிறப்போடும்தான் வாழ்ந்து வந்தார்கள். திருமணப் பொருத்தமோ, ஜாதகப் பொருத்தமோ, நாள், நட்சத்திரப் பலமோ எதையும் பாராமல் திருமணம் நடந்ததால், அந்த தம்பதிகள் வாழ்க்கை ஒன்றும் சீர்குலையவில்லை' என்று திரு. நாயுடு அந்தப் பத்திரிகையில் பேட்டிக் கொடுத்தார்.
திரு. ஜி.டி. நாயுடு
புகழில் மறைந்தார்!
ஒரு முறைக்குப் பலமுறை உலகமெலாம் கற்றிச் சுற்றி, தமிழ் நாட்டின் விவசாயத் தொழில், பொறியியல் தொழில், புரட்சிக் கல்வியியல், விஞ்ஞானக் கருவிகள் கண்டுபிடிப்புகள், மோட்டார் மன்னராக விளங்கி, உழைத்த உழைப்பியல், சித்த வைத்திய இயல் போன்ற பலவற்றுக்கும் மேதையாகத் திகழ்ந்த, செயற்கரிய செய்த செயல் வீரர் கோவை ஜி. துரைசாமி எனப்படும் திரு. ஜி.டி. நாயுடு அவர்கள் 4.1.1974 ஆம் ஆண்டன்று மறைந்து விட்டார் என்ற செய்தி உலக விஞ்ஞானிகள் இடையேயும், தமிழ்த் தொழிலியல் தோழர்கள் இடையேயும், அதிர்ச்சியை உருவாக்கி விட்டது.
1973-ஆம் ஆண்டின் இறுதி மாதங்களில் அவர் உடல் தளர்ந்து நோய் வாய்ப்பட்டிருந்தாலும், அவர் இறந்து விடுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், நாளுக்கு நாள் உடல் சோர்வும், மனத் தளர்வும் குன்றியதால், மேலே குறிப்பிட்ட நாளில் எந்தவித சிரமும் இல்லாமல் தமிழ் மண்ணில் கலந்தார்; காலத்தோடு காலம் ஆனார்! ஏறக்குன்றய 80 ஆண்டுகள் ஓயாது உழைத்த உலகம் சுற்றிய உடல் புகழுக்கு இரையானது.
கொடை வள்ளல் திரு. ஜி.டி. நாயுடு மரணமடைந்ததைக் கேட்ட அவரது அணுக்க நண்பர் திரு. இராமசாமி அய்யர், அழுது, புரண்டு, கதறி, I have Lost My Friend என்று பல முறைக் கத்திக் கதறிக் கீழே விழுந்தார்.
தொழிலியல் துறை, கல்வியியல் துறை, விவசாயவியல் துறை, பொறியியல் துறை, சித்த வைத்திய இயல் துறை, சமுதாயவியல் துறை, பொருளியல் துறைகளின் வித்தகராக, விஞ்ஞானியாக விளங்கிய கோவை கொடை வள்ளல் திரு. கோபால்சாமி துரைசாமி நாயுடு உடல் அலங்கார தேரில் சுடுகாடு சென்றது.
கோவை நகர் பிரமுகர்கள், கல்விமான்கள், தொழிலாளர், தோழர்கள், வணிக பெருமக்கள் அனைவரும் சூழ, திரு. நாயுடு உடல் சாம்பலாகி, கோவை மண்ணுக்கு உரமானது. ஆனால், அவரது ஆன்மா தொழிலியல் விஞ்ஞான உலகத்திலே பவனி வந்து கொண்டுதான் இருக்கின்றது!
என்று அவரது அந்த ஆன்மா பவனி, பேரின்பப் பேறு பெறும் என்றால், என்று ஜி.டி. நாயுடு அவர்களது தொழிலியல் விஞ்ஞானக் கனவுகள் - மக்கள் இடையே நனவாகி நடமாடு கின்றனவோ, அன்றுதான் - அவரது ஆன்மா மன நிறைவோடு பவனி வருவதை நிறுத்தி விண்ணில் விளங்கும். இந்த நன்றியைச் செய்யுமா தமிழ் இனம்?என்னுடைய நண்பர் திரு.என்.வி. கலைமணி அவர்கள், மிகச் சிறந்த எழுத்தாளர், மேடைப் பேச்சாளர் - நல்ல சிந்தனையாளர்.
இலக்கியத் துறைக்கும், மொழிக்கும், நாடகக்கலைக்கும், பத்திரிகைத் துறைக்கும், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், புரட்சித்தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் ஆகியவர்களால் பாராட்டப்படும் அளவிற்கு அரும்பணிகள் ஆற்றியவர் அவர்.
நான், சினிமாத் துறைக்கு வருவதற்கு முன்பே, எனக்குப் பழக்கப்பட்ட நண்பர்களிலே அவரும் ஒருவராவார்.
தமிழ்நாட்டில் உள்ள எல்லா அறிஞர் பெருமக்கட்கும் பழக்கமானவர்.
பழக்கமானவர் என்றால், அத்தனை பேரும் மதித்துப் பாராட்டுமளவிற்கு நேர்முகமாகவே பழக்கமான பண்பாளர்.
தமிழ்நாட்டின், அரசியலில் - இலக்கியத்தில், வரலாற்றில் மிகச் சிறந்த வேகமாக விரைவாக எழுதும் எழுத்தாளர்களை நான் அறிவேன்.கல்கி, தினசரி ஆசிரியர் டி.எஸ்.சொக்கலிங்கம், 'காண்டிபம்' ஆசிரியர் எஸ்.எஸ். மாரிசாமி ஆகியவர்கள் வரிசையில், நண்பர் புலவர் என்.வி. கலைமணி நான்காவது எழுத்தாளராக என்னால் மதிக்கப்படுவர்.
மனிதனுக்கு ஒரு கையில் ஐந்து விரல்கள் எப்படி இன்றியமையாததோ, அந்த விரல்களில் நண்பர் என்.வி.கலைமணி அவர்கள் பெருவிரலைப் போன்றவர்.
இத்தகைய நண்பர் எழுதிய தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு நூலைப் பற்றிக்கூற வேண்டுமோ! நீங்களே படித்து மகிழ வேண்டும் என்பதுதான் எனது அவா.
56அ, இலட்சுமணசாமி சாலை,அன்புடன்
கலைஞர் கருணாநிதி நகர், சுரதா
சென்னை - 600 078