தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு/நான்காண்டு காலம் “பி.இ.” கல்வியை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
11. நான்காண்டு “பி.இ.” கல்வியை
நாயுடு ஆறு வாரமாக்கினார்!

“தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலிற் தோன்றாமை நன்று”

என்று கூறுகின்றது தமிழர் மறையான பொய்யா மொழி எனப்படும் திருக்குறள் நூல்!

“மக்களாய் பிறந்தால் புகழுடன் பிறக்கக் கடவர், அந்தப் புகழ் இல்லாதவர் பிறத்தலினும் பிறவாமை நல்லது”. இந்தக் குறளுக்கு திருக்குறளார் முனுசாமி உரை கூறும்போது, “மக்களாய்ப் பிறந்தால் புகழ் உண்டாவதற்கான குணங்களோடு பிறத்தல் வேண்டும். அக் குணம் இல்லாதவர்கள் மக்களாகப் பிறப்பிதை விட பிறவா திருத்தலே நல்லதாகும்” என்கிறார்.

மக்களாகப் பிறப்பவர்கள் புகழ் உண்டாவதற்கான குணங்களோடு எப்படிப் பிறக்க முடியும்? பிறந்த பிறகுதானே அந்தக் குணங்களைப் பெற முடியும்? பரிமேலழகர் உரையை அடிப்படையாகப் பற்றுபவர்கள் திருக்குறளாரைப் போல குறளைப் பரப்பிக் கொண்டிருப்பதை விட, பேராசிரியர் சாலமன் பாப்பையா உரையே மேலானது. என்ன கூறுகிறார் திரு. பாப்பையா?

“பிறர் அறியுமாறு அறிமுகமானால், புகழ் மிக்கவராய் அறிமுகம் ஆகுக. புகழ் இல்லாதவர் உலகு காணக் காட்சி தருவதிலும், தராமல் இருப்பதே நல்லது” என்கிறார்.

எனவே, திரு. ஜி.டி. நாயுடு அவர்கள், ஒவ்வொரு துறையிலும் மற்றவர்கள் அறியுமாறு அறிமுகமாகும்போது, தனது செயற்கரிய செயல்களால், பெறற்கரிய அறிவுத் திறனைப் பெற்றுப் புகழ் மிக்கவராக அறிமுகம் ஆனார். இதுதான் உண்மை.

கல்வி அறிவு அற்றக் காலத்தில் அவர் தொழில் துறையில் புகுந்தார். ஒரே ஒரு பேருந்தை விலைக்கு வாங்கிய அவர், தானே முதலாளி, தானே தொழிலாளி, எல்லாம் தானே என்று அயராது அரும்பாடு பட்டு, தனது பேருந்துவுக்குப் புகழ்தேடி, யு.எம்.எஸ். என்ற 200 பேருந்துகளின் கூட்டுறவு அமைப்பை உருவாக்கி, மக்கள் மதிக்குமளவுக்குச் செல்வாக்குப் பெற்று. செல்வச் சீமானாகி, புகழ் துறையை தனக்கு அடிமையாக்கிக் கொண்டார்.

திருக்குறள் மறைக்கு
நாயுடு எடுத்துக் காட்டு!

மேல் நாடு சென்று, தொழிலியல் மாணவராகக் கல்வி கற்று, ஓய்வு நேரங்களில் தமிழ், ஆங்கில மொழிகள் அறிவைப் பெற்று, உலகை எழு முறை வலம் வந்து, ஈடில தொழிலியல் துறை விஞ்ஞானியாக வர் விளங்கினார். “ரேசண்ட் பிளேடு” விஞ்ஞானத்தால், பிரிட்டிஷ், அமெரிக்க விஞ்ஞானம் இன்றுவரை அவரிடம் தோற்று விட்டது.

ஈதல்லவோ பிறர் அறியுமாறு அறிமுகமான புகழ் அறிமுகம்? இதை விடுத்து. திரு. ஜி.டி.நாயுடு உலகு காணக் காட்சி தருபவராக விளங்க வில்லையே! அது புகழ் ஆகாதே - என்றுணர்தற்குச் சான்றாகத் தானே உலகுக்கு அவர் அறிமுகம் ஆனார்!

எனவே, மக்களாய்ப் பிறக்கும் யாரும் - புகழ் உண்டாவதற்கான குணங்களோடு பிறக்க இயலாது. பிறந்த பின்பு சேரும் குணங்கள், சுபாவங்கள், மன வளங்கள், கல்வியின் வித்தகங்கள், அனுபவ ஆற்றல்கள், வளர்நிலை சூழல்கள்தான் ஒருவனைப் புகழ் ஏணியில் ஏற்றுமே தவிர, பிறக்கும் போதே புகழ்க் குணங்களோடு பிறத்தல் என்பது இயலாதல்லவா?

எனவே, திரு. சாலமன் பாப்பையா கூறும் குழப்பமற்ற, முன் ஜென்மம் - பின் பிறப்பற்ற, தெளிவான உரையாகும். அதற்கு எடுத்துக் காட்டாகவே திரு. ஜி.டி. நாயுடு அவர்களது புகழ் இன்றும் திகழ்கின்றது எனலாம்.

இத்தகைய புகழேணியின் சிகரத்திலே நின்ற திரு. ஜி.டி.நாயுடு அவர்கள், தொழிலியல் விஞ்ஞானியாக மட்டுமே இயங்கவில்லை. மாறாக, ஈடிணையிலா இலட்சியங்களை வளர்க்கும் ஒரு நாட்டின் ஒப்பற்றக் கல்விமனாகவும், அதாவது - Educationist டாகவும் சிறந்தார்!

கற்றது கை மண்ணளவுதான் என்று கருதிய திரு. ஜி.டி.நாயுடு அவர்கள், கல்லாதது உலகளவு என்பதை உணர்ந்து. ஒவ்வொரு துறையிலும் ஊடுருவி உண்மை அறிவைக் கண்டு - அனுபவ அறிவைப் பெற்றார். இல்லையானால், தனது 47-வது வயதிலே எவனாவது அமெரிக்காவிலே போய் மாணவனாகச் சேர்ந்து கைத் தொழில் அறிவு பெறுவானா? பெற்றாரே திரு. நாயுடு!

திரு. ஜி.டி.நாயுடு வறுமையிலே வாடி வாடி வருந்தி, உணவு விடுதியிலே பணியாளராகச் சேர்ந்து பசிப் பிணி நீக்கிக் கொண்டு, ஊர் சுற்றிச் சுற்றி வணிக ஊக்கம் பெற்று முன்னேறும் வாய்ப்பு வெள்ளையர் ஒருவரால் வந்ததும் - ஒரே ஒரு பேருந்தை விலைக்கு வாங்கி உழைத்ததின் பயன்தான், தனக்கென ஒரு வழியை வகுத்துக் கொண்டு பணியாற்றியதின் பலன்தான், அவரை தேடி, நாடி, ஒடி வந்து புகழ் அரவணைத்துக் கொண்டு, உலக நெஞ்ச ஊஞ்சலில் ஆராரோ பாடி ஆடி அமர வைத்து, அழகு பார்த்தது எனலாம் அல்லவா? எண்ணிப் பாருங்கள் சரிதானா என்று?

எனவேதான், தொழிலியல் துறையில் தனக்கென ஓர் அடையாளச் சின்னத்தை உருவாக்கிக் கொண்ட திரு. நாயுடு, கல்வித் துறையிலும் தனது காலடிகளை எண்ணி எண்ணிப் பதித்தார்.

கல்வி உலகில் -
ஒரு மறுமலர்ச்சியாளர்!

கல்வி உலகிலே ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கினார்! அதனால் உண்டான எதிர்ப்புகளை ஏறுபோல எதிர்த்துச் சமாளித்தார்: தொழிற் கல்லூரிகளை ஏற்படுத்தினார். தொழில் நுட்ப ஆசிரியராகத் தொண்டு புரிந்தார்! தொண்டு என்றால் வளைவு என்ற ஒரு பொருளுண்டல்லவா?

அதற்கேற்ப, திரு. நாயுடு கல்விக்காக உழைத்த உழைப்புகளும், முயற்சிகளும், நடத்திய போராட்டங்களும், வழங்கிய நன்கொடைகளும் - அதனதன் தகுதிக்கேற்றவாறு வளைந்து கொடுத்து, நாட்டுப் பணியாற்றினார்! கல்வியால் நாடும் முன்னேறும் தானே! அதனால், தேச பக்தியோடு மக்கள் சேவைகளைச் செய்தார் திரு. ஜி.டி.நாயுடு.

சர். ஹார்தர் ஹோப்
தொழிற் பள்ளி!

சென்னை மாகாண கவர்னராக அப்போது பணியாற்றியவர் 'சர்.ஹார்தர் ஹோப்' எனும் வெள்ளைக்காரர். அவர் திரு. ஜி.டி. நாயுடு அவர்களின் நண்பர்.

தமிழ் நாட்டைத் தொழில் மயமாக்க வேண்டும், அதற்குப் பொறியியல் கல்லூரிகள் தோன்ற வேண்டும் என்று எண்ணிய திரு. நாயுடு, கவர்னரைச் சந்தித்து தனது விருப்பத்தை அவரிடம் மனுக்களாகக் கொடுத்து, கோயம்புத்தூர் நகரில் தனது சொந்த பெரும் பொருட் செலவில் 1945-ஆம் ஆண்டில் ஒரு தொழில் நுட்பப் பள்ளியைத் திறந்தார்.

அந்த தொழில் நுனுக்கப் பள்ளிக்குரிய அரசு ஆதரவுகளைப் பெருமளவில் செய்து கொடுத்தவர் சென்னை கவர்னர் என்பதால், அதற்கான நன்றியாக அந்தப் பள்ளிக்கு சர்.ஆர்தர் ஹோப் பாலி டெக்னிக் என்று பெயரிட்டார் திரு. நாயுடு.

அது சரி, கலைக் கல்லூரியைத் திறவாமல், நாயுடு ஏன் தொழில் பள்ளியைத் துவக்கினார்? ஏனென்றால், கலைக் கல்லூரிகள் தோன்றுவதால் பட்டங்கள் பெறலாமே தவிர, நாட்டிலுள்ள வேலை இல்லாத் திண்டாட்டம் ஒழியாது என்பதால்தான். தொழில் நுட்பங் களைப் போதிக்கும் பாலிடெக்னிக் பள்ளியைத் துவக்கினார் நாயுடு.

மேற்கண்ட காரணம் மட்டுமே அன்று - தொழில் நுணுக்கப் பள்ளி தோன்றிட அந்த நேரம் வரை கோவை நகரிலும் சரி, அந்த மாவட்டத்திலும் சரி, கலைக் கல்லூரிகள் இருந்ததே தவிர, தொழிற் கல்லூரிகள் ஒன்றும் தோன்றவில்லை.

அதனால் திரு. நாயுடு, இரண்டு தொழில் கல்லூரிகளைத் திறக்கத் திட்டமிட்டு, முதலாவதாக சர்.ஹார்தர் ஹோப் தொழில் நுட்பப் பாலிடெக்னிக்கைத் துவக்கினார். அந்தக் கல்லூரியில், வானொலி, மோட்டார் தொழில்களின் பயிற்சிகள் முதலில் கற்பிக்கப்பட்டன.

வேறு தொழிற் பயிற்சிகளைக் கற்பிக்கக் கூடிய போதிய திறமை வாய்ந்த ஆசிரியர்கள் அப்போது கிடைக்காத காரணத்தால், முதலில் மோட்டார், வானொலி தொழில்களுக்குரிய பயிற்சிகள் போதிக்கப் பட்டன.

திரு. நாயுடுவை சர்.ஆர்தர் ஹோப் கேட்டுக் கொண்டதற் கேற்ப, அவரே அந்த பாலிடெக்னிக்கு கெளரவ இயக்குநராகவும், முதல்வராகவும் இருந்து - ஆசிரியராகவும், நிர்வாகியாகவும் பணியாற்றினார்.

ஆர்தர் ஹோப் -
பொறியியல் கல்லூரி :

சர்.ஹார்தர் ஹோப் பெயரால் தொழிற் நுட்பப் பாலிடெக்னிக் சிறப்பாக நடைபெற்று வந்தது. இரண்டாவதாக, கவர்னரது ஊக்கத்தையும் - ஆதரவையும் கண்ட திரு. ஜி.டி.நாயுடு அவர்கள், காற்றுள்ள போதே துற்றிக் கொண்டால் கோவை நகருக்கு நல்ல வளர்ச்சி உண்டாகும் என்ற எண்ணத்தில், கோவை நகரில் 1945-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9-ஆம் நாளன்று, அதாவது, பாலிடெக்னிக் துவக்கப்பட்ட ஆறு மாதங்களுக்கெல்லாம், மீண்டும் ஒரு பொறியியற் கல்லூரியைத் துவக்கினார். என்ன பெயர் தெரியுமா அக் கல்லூரிக்கு?

'சர்.ஹார்தர் ஹோப் பொறியியல் கல்லூரி' என்றே திரு. நாயுடு அதற்கும் நன்றிக் கடனாகப் பெயர் சூட்டினார். அக் கல்லூரிக்குப் பல லட்சம் ரூபாயில் கட்டிடங்களையும், நன்கொடை களையும் வழங்கிடத் தயாரானார். அரசாங்கமும் அவருக்கு மிக நன்றாக ஆதரவு வழங்கி ஊக்குவித்தது. துவங்கப்பட்ட பிறகு இக் கல்லூரியின் முழுப் பொறுப்பையும் திரு.நாயுடு அரசாங்கத்திடமே ஒப்படைத்து விட்டார்.

திரு. நாயுடு அவர்கள் எதையெதை எவ்வப்போது, எவரெவரைக் கொண்டு மக்களுக்கு நன்மைகளைச் செய்ய முடியுமோ, அவ்வப்போது அதையதை, அவரவரிடம் ஆதரவு பெற்றுச் செய்வதில் மிகவும் வல்லவர் என்பதால், சர்.ஹார்தர் ஹோப்பை பயன்படுத்தி அந்த இரு தொழிற் பள்ளிகளைத் துவக்கிப் புகழ்பெற்ற விந்தை மனிதராக விளங்கினார் திரு.நாயுடு அவர்களின் இந்த கல்வித் தொண்டு தொழிந் பரட்சிக்குரிய அடிப்படை செயலல்லவா?

இன்ஜினியரிங் படிப்பை
இரண்டாண்டாக்கினார்

எப்போதும், எதையாவது சிந்தித்துக் கொண்டே இருப்பவர் திரு. ஜி.டி.நாயுடு. காலத்தின் ஒரு நிமிடத் துளியைக் கூட வீணாக்க மாட்டார். அதனால்தான், பொறியியல் துறையில் கல்வி கற்றிடும் மாணவர்களது இன்சினியரிங் படிப்பை, திரு. நாயுடு முதல்வராக இருந்தபோது இரண்டாண்டாக மாற்றினார். ஓராண்டு கால உழைப்பை மாணவர்கள் வேறு எதற்காவது பயன்படுத்தி முன்னேற்றம் பெறட்டுமே என்ற நோக்கோடு அவர் அவ்வாறு குறைத்தார். ஆனால், அப் பள்ளி நிர்வாகம் அரசுவிடம் ஒப்படைக்கப் பட்ட பிறகு, மீண்டும் பொறியியல் படிப்பு மூன்றாண்டாக மாற்றப்பட்டு விட்டது.

ஆங்கில அரசு மீண்டும் மூன்றாண்டாக்கியதைக் கண்ட திரு. ஜி.டி. நாயுடு, இரண்டாண்டே பொறியியற் துறைக் கல்விக்கு அதிகமான காலம் ஆகும் என்று கருதி, நாட்டில் கல்விப் புரட்சியை உருவாக்க நினைத்த அவர், ஆறு வாரம் பயிற்சி வகுப்பு ஒன்றைத் துவக்கினார்.

என்ன அந்த
ஆறுவாரப் பயிற்சி?

'கோபால் பாக்' என்ற கட்டித்தில் திரு. ஜி. டி. நாயுடு தனது ஆறு வாரம் பயிற்சி வகுப்பை ஆரம்பித்தார். ஆறு வாரம் கூடத் தேவையில்லை என்ற அவர், முதலில் மூன்று வாரம் பயிற்சி வகுப்பு என்று அறிவித்துத் துவக்கினார். மறுபடியும் என்ன நினைத்தாரோ, மீண்டும் ஆறு வாரம் பயிற்சி வகுப்பையே நடத்த ஆரம்பித்தார்.

ஓர் இன்சினியர் படிப்புக்கு ஆறு வாரம், மூன்று வாரம் படிப்பு போதுமா 21 நாட்களிலும், 42 நாட்களிலும் இன்சீனியர் படிப்பைப் படிக்க இயலுமா? இந்தியா முழுவதும் பொறியியல் படிக்கும் மாணவர்கள், மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் படிக்கும்போது, திரு.நாயுடு 3 வாரம் 6 வாரம் என்கிறாரே என்று அறிஞர்களே வியந்த நேரமும் உண்டு.

ஆறு வாரம் பயிற்சி வகுப்புகள் கோபால் பாக்கில் நடந்த போது, அறிஞர்கள் சிலர், அடிக்கடி அங்கே சென்று என்னதான் நடக்கிறது என்று பார்ப்போமே என்று நாயுடு அனுமதியோடு போய்க் கவனித்தார்கள்.

ஆறே வார இன்சினியரிங் கல்வி அருமையாக நடப்பதை அந்த அறிஞர்கள் பார்த்தார்கள். இந்தியா முழுவதும் உள்ள கல்லூரிகளில் நடைபெறும் பொறியியற் கல்வியில், ஏட்டுப் படிப்புக்கே முதலிடம் கொடுக்கிறார்கள் அதாவது, Theoryக்கே வேலையில்லை, எல்லாம் நேரடிப் பயிற்சிக் கல்விதான். அதாவது, Practical படிப்புதான் இங்கே முக்கியமாகக் கற்பிக்கப்படுகிறது. நேரடிக் கல்வி என்றால் எப்படி?

பொறியியல் துறை மாணவர்கள் இங்கே இயந்திரங்களுக்கு இடையேதான் உலவவேண்டும். ஒவ்வொரு இயந்திரங்களின் செயல்கள் என்னென்ன? எப்படியெப்படி இயக்குவது? எதை யெதைச் செய்யலாம்? என்பதே அவர்களது. பொறியியல் படிப்பு ஆகும். மாணவர் காலை 7 மணிக்கு கோபால் பாக் வகுப்புக்கு வந்து விடுவார்கள். இரவு நேரங்களிலும் இயந்திரர் பயிற்சிகளைப் பெறுவார்கள்.

மோட்டார், வானொலி, கடிகாரம் பாக்டீரியாலஜி Bacteriology முதலிய துறைகளில் கோபால் பாக்கில் ஆறு வாரம் பயிற்சிகள் அதாவது Refresher course அளிக்கப் படுகின்றன.

பேராசிரியர் மட்டுமல்லர்
நாயுடுவும் வகுப்பு நடத்துவார்!

இந்தக் கல்வித் துறைப் பயிற்சியாளர்கள் யார் யார் தெரியுமா? பொறியியல் துறையில் மிகச் சிறந்த அனுபவம் பெற்ற பேராசிரியர்கள். விரிவுரையாளர்கள், தொழில் வல்லுநர்கள் போன்ற திறமை பெற்றவர்களே இங்கே பாடம் எடுக்கிறார்கள்.

இவர்கள் எல்லாரும் தொழில் கல்வி வளர பெரும்பாடு படும் பேரறிவாளர்களாகத் திகழ்கின்றார்கள். இந்த பெரும் கல்வி மான்களுக்கு இடையே திரு. ஜி.டி. நாயுடு அவர்களும் பயிற்சி வகுப்புக்களை நடத்துவார்.

இந்தியா முழுவதும் உள்ள கல்லூரிகளில் விடுமுறைக் காலம் வந்ததும் மாணவர்கள் அவரவர் வீடுகளுக்குச் சென்று விடுவார்கள். ஆனால், கோபால் பாக் நாயுடு பயிற்சிக் கூடத்தில், மாணவர்கள் விடுமுறைக் காலத்திலும் பயிற்சி வகுப்பில்தான் பாட அநுபவம் பெறுவார்கள். இந்த பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் மாதத்தில் ஆரம்பமாகும், ஜூன் மாதத்தில் முடிவடைந்து விடும்.

கோபால் பாக் பொறியியல் பயிற்சி வகுப்பில் சேர்க்கப்படும் மாணவர்களில் பலர், இந்திய நாட்டின் பொறியியல் கல்லூரிகளிலே பொறியியல் பட்டம் படிப்பவர்களாகவே இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு பொறியியல் துறையில் பணியாற்றுபவர்களும் சில நேரங்களில் இங்கே பயிற்சி பெறுவார்கள். எஸ். எஸ். எல்.சி. மாணவர் மாணவிகளில் நுண்ணறிவாளர்களும் இருந்தால், அவர்களையும் இந்தப் படிப்பில் சேர்த்துக் கொள்வதுண்டு.

தமிழ்நாடு, பஞ்சாப், மும்பை, கொல்கொத்தா, மத்திய பிரதேசம், தெலுங்கு தேசம், கேரளா, ஒரிசா என்று இந்நாளில் பெயர் மாற்றமடைந்திருக்கும் சில மாநிலங்களில் இருந்தெல்லாம் ஆண்டு தோறும் மனுக்கள் வந்து கொண்டிருக்கும். அவற்றில் 200 மாணவர்கள் மட்டுமே பயிற்சிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.

சர்.சி.வி. இராமன்
பேசுகிறார் :

தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும். முதல் மாணவராகத் தேர்வு செய்யப்படுபவர்க்கு பரிசுகள் கொடுக்கப்படும். இந்த ஆறுவாரம் பயிற்சி வகுப்புக்கள் ஆண்டுக்கு ஒரு முறை அல்லது இரண்டு மூன்று தடவைகள் நடத்தப்பட்டு வநதன.

இவ்வாறாக நடந்து வந்த ஆறாவது ஆறு வாரம் பயிற்சி வகுப்பு 1951 - ஆம் ஆண்டு ஜூன் மாதம் முடிந்தபோது, நோபல் பரிசு பெற்ற தமிழ் விஞ்ஞானியான சர். சி. வி. ராமன் அவர்கள் தலைமையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. சர். சி. வி. ராமன் அந்த விழாவிலே ஆற்றிய சொற்பொழிவை இந்தியக் கல்வி உலகம் பாராட்டியது. இதோ சர். சி.வி. ராமன்.பேசுகிறார் - கேளுங்கள்!

சர். சி.வி. இராமன்
பரிசளிப்பு உரை!

அன்பார்ந்த பொறியியல் துறை மாணவர்களே! சுருக்கமாக் கூறுவதானால், கல்வித் துறையில் கற்றுக் கொடுக்கும் பாடங்களை விட, அவற்றால் விளையும் பயன்கள்தான் முக்கியமானது சுருங்கிய காலத்தில் ஆழ்ந்து பயின்று. நிறையக் கற்க வேண்டும் என்று கூறுபவர் ஜி. டி. நாயுடு. அவருடைய கொள்கையை நான் மனதார வரவேற்கின்றேன்; ஆதரிக்கின்றேன்.

மாணர்வகளுக்கு நேரிடைப் பயிற்சி, அதாவது Practical ஒர்க்ஸ் மிக மிகத் தேவை. அந்த முறையில்தான் எதையும் சீராக, ஒழுங்காகக் கற்க முடியும். உதாரணமாக, தண்ணில் நீந்தும் நீய்ச்சலைப் பற்றி எத்தனை நூற்கள் படித்தாலும், நீய்ச்சல் வராது. நீருக்குள் குதித்துப் பயிற்சி பெற்றால்தான் நீய்ச்சல் கைகூடும்.

அதுபோல்தான் மோட்டார் தொழிலும்,- வானொலி போன்ற பொறியியற் கல்விகளும் அவற்றோடு எனது நண்பர் ஜி.டி. நாயுடு எல்லா நேரமும் போராடிக் கொண்டிருக்கிறார்! அவர்தான் உண்மையான பொறியியல் ஆசிரியர் அவருடைய கொள்கைதான் நடை முறைக்கு ஏற்றது, உகந்தது.

காலப் போக்கில் ஜி.டி.நாயுடுவின் கல்விக் கொள்கைகளை மக்கள் ஒப்புக் கொள்வார்கள். அவர் சொல்லுகின்ற நேரடிப் பயிற்சி முறை என்பது யாராலும் புறக்கணிக்கப்பட முடியாதது. ஆனால், நம் நாட்டில் இன்று பெரிதும் காணப்படுவது ஏட்டுக் கல்விதான். அது பயனற்றது என்று நாயுடு அவர்கள் கூறுகின்ற பொழுது, நான் அதை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

நான் ஒரு விஞ்ஞானி என்ற முறையிலும், பல்கலைக் கழகத்தில் படித்தவன் என்ற முறையிலும் கூறுகிறேன், நேரடிப் பயிற்சிதான் முதலில் தேவை. அதற்குப் பின்னர்தான் ஏட்டுக் கல்வி, என்பது எனது கருத்தாகும்.

நோபல் பரிசு பெற்ற தமிழ் நாட்டின் முதல் விஞ்ஞானியுமான திரு. சர். சி.வி. ராமன் மேற்கண்ட ஜி.டி. நாயுடு கருத்தை முழுக்க முழுக்க ஆதரித்து ஏற்றுக் கொண்ட பிறகும் கூட, இந்தியத் தேசிய ஆளும் கட்சியினர்களும், அவர்களைச் சேர்ந்த மாநில ஆட்சியினர் களும் அந்த மேதையின் விஞ்ஞான விளைவுகளை ஏற்க மறுத்து விட்டார்கள் என்பதை வரும் அத்தியாயங்களில் அதைச் சற்று விரிவாகவே படிப்பீர்கள்.

தொழிலியல் விஞ்ஞானியாக விளங்கிய திரு. ஜி. டி. நாயுடு அவர்கள், மாணவர்களிடம் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் விரும்புபவர். அவர் விதிக்கும் சட்ட திட்டங்களைப் புறக்கணிப்பது மாணவர்களுக்கு அழகல்ல என்றும், அதுபோலவே ஒரு நிறுவனத் தின் கட்டுப்பாடுகளை சீர்குலைக்கும் பணியாளர்கள் முன்னேற முடியாதவர்கள் என்றும் எண்ணுபவர். திரு. ஜி.டி.நாயுடு.

மாணவர்கள்
ஒழுங்குமுறை!

கல்வி கற்கும் மாணவர்கள் உடையார் முன் இல்லார் போல் ஏக்கற்றும் கற்றாரே கற்றார் என்ற குறட்பா போல, ஆசிரியர் முன்பும் ஏக்கற்றார் கற்றாராக கற்றார் என்ற கல்வி ஒழுக்கம் வளர வேண்டும் என்ற கருத்துடையவர் திரு. ஜி.டி. நாயுடு.

கல்வி பெறும் மாணவர்கள் கவனம்; பாட ஆசிரியரின் கருத்திலேயே வேரூன்ற வேண்டுமே தவிர, சிறு சிறு ஆசா பாசங்களிலோ, அல்லது வேறு எந்த கேலிக்கைகளிலோ திரும்பக் கூடாது என்று அடிக்கடி கூறுபவர் திரு. ஜி. டி. நாயுடு.

பள்ளி உணவு விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் ஊர் சுற்றவோ, திரைப்படம் பார்க்கவோ அல்லது அரசியல் சொற் பொழிவுகளைக் கேட்கவோ போகக்கூடாது என்பது நாயுடுவினுடைய கண்டிப்பான கட்டளை.

ஒரு வேளை மாணவர்கள் அதை மீறுவார்களானால், தயவு தாட்சண்யமின்றி, உடனே அத்தகைய மாணவர்கள் கல்விக் கோட்டத்தை விட்டு நீக்கப் படுவார்கள். பிறகு எந்த பரிந்துரை வந்தாலும் அவர்கள் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள்.

ஜி.டி. நாயுடு கல்விக் கோட்டத்தில் வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை உண்டு. அந்த நாளிலும் கூட மாணவர்கள் கல்விச் சிந்தனையோடுதான் தொடர்புடையவர்களாக இருக்க வேண்டுமே தவிர, ஆட்டம் பாட்டமோ, ஆடம்பர கேளிக்கைகளிலோ ஈடுபடக் கூடாது.

வாரம் ஒரு நாள் விடுமுறையைத் தவிர, மற்ற நாட்களில் மாணவர்கள் கல்விக் கோட்டத்திற்கு வந்தாக வேண்டும். எக் காரணத்தைக் கொண்டும் விடுமுறை வேண்டக் கூடாது.

மாணவர்கள் படிக்கக் கூடாத ஆபாசமான புத்தகங் களையோ, கதை, நாவல்களையோ, பத்திரிக்கைகளையோ படிக்கக் கூடாது. மீறிப் படித்தால் அவர்களுக்குக் கடும் தண்டனை விதிக்கப்படும்.

உணவு விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள், தங்கள் அறையையும், சுற்றுப் புறத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தவறினால், அன்று முழுவதும் உணவு விடுதியை அந்த மாணவர்கள் சுத்தம் செய்து கொண்டே இருக்கும் தண்டனையைப் பெறுவார்கள்.

உணவு உண்ணும் மாணவர்கள் இலையில் சோத்துப் பருக்கை ஒன்று கூட இருக்கக் கூடாது. மீதம் ஏதாவது இலையில் இருந்தால், அவர்கள் ஒரு நாள் முழுவதும் சமையல் வேலையைச் செய்தாக வேண்டும்.

கொடுத்த தண்டனையை நிறைவேற்றாத மாணவர்களுக்கு, மறுநாள் அந்தத் தண்டனை இரு மடங்கு தண்டனையாக்கப்படும். அதற்கும் அந்த மாணவர்கள் கட்டுப்படவில்லை என்றால், அவர்கள் அந்தப் பள்ளியை விட்டே நீக்கப்படுவார்கள் என்பது உறுதி.

மாணவர், சமையலர் எடை
குறைந்தால், அதிகமானால்....!

உணவு விடுதியில் உள்ள மாணவர்களது உடல் எடையும், விடுதியில் வேலை செய்பவர்களின் எடையும் வாரம் ஒரு முறை சோதித்துப் பார்க்கப்படும்.

இந்த எடை சோதனையை எதற்காகச் செய்கிறார். ஜி. டி. நாயுடு என்று கேட்கிறீர்களா? வேறொன்றுக்கும் இல்லை. எல்லாம் ஒழுக்கத்தை ஒழுங்காகக் காப்பாற்றுவதற்குத்தான்! என்ன புரிந்ததா?

உடல் எடை சோதனை போடப்பட்ட மாணவர்களில் யாருக்காவது ஒரு வாரத்தில் 5 பவுண்டு எடை காரணமில்லாமல் குறைந்தால், அந்த மாணவனுக்கும், அதே போல, எந்த வேலைக்காரனுக்காவது ஒரு வாரத்தில் 5 பவுண்டு எடை அதிகரித்திருக்குமானால் இந்த இரண்டு பேரும் உணவு விடுதியை விட்டு நீக்கப்பட்டு விடுவார்கள்.

விஞ்ஞானி சர். சி. வி.
இராமன் பேசுகிறார்!

கோபால் பாக்கில் படிக்க வரும் பொறியியல் மாணவர்களை ஜி. டி. நாயுடு இவ்வளவு கடுமையான விதிமுறைகளால் பாதுகாத்து வரும்.போக்கைக் கண்ட விஞ்ஞானி சர். சி. வி.ராமன், 9.6.1951- அன்று நடைபெற்ற மாணவர்களது பரிசளிப்பு விழாவில் பேசும்போது:

அருமை மாணவர்களே! நாயுடு அவர்கள் உங்களிடத்தில் ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் கண்டிப்பாக அமல் நடத்துகிறார். தவறான வழியில் நடப்பவர்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்குகிறார். அதன் மூலம் அவர் உங்களுக்கு ஒரு நல்ல பாடத்தைக் கற்றுக் கொடுக்கிறார்.

அந்தப் பாடமும், பயிற்சியும் இங்கே படிக்கும் ஆண்டுகள் வரைக்கும் மட்டும்தான் பயன்படும் என்று நினைக்காதீர்கள். உங்களுடைய வாழ்நாள் முழுவதுக்குமே பயன்படும் ஒழுக்கப் போதனையாகும்.

இன்று நாங்கள் கையெழுத்திட்டு உங்களுக்குத் தருகின்ற இந்த பட்டயத்தையும், நற்சான்றிதழையும் விட,நீங்கள் இங்கே பெற்றுக் கொண்ட ஒழுக்க விதி முறைப் பேனல்கள் பேராற்றலும்-பெருமதிப்பும் வாய்ந்ததாகும் என்பதை மறந்து விடாதீர்கள்.

மனிதப் புலியான இந்த நாயுடுவின் கொடுமை நிறைந்த குகைக்குள் சில வார காலம் பொறுமையோடு தங்கியிருந்து, சோதனையில் வெற்றி கண்ட உங்களை நான் பெரிதும் போற்றுகின்றேன்.

நாயுடு அவர்கள் உங்களிடத்தில் எவ்வளவு அன்போடு இருக்கிறார் என்பதை, அவர் உங்களை ஒரு பவுண்டு கூட எடை குறையாமல் பார்த்துக் கொள்கிறதிலிருந்தே தெரியவில்லையா? உங்களது பொருட்களை அவர் எவ்வளவு எச்சரிக்கையோடு கண்காணிக்கின்றார் என்று!

உங்களுடைய உணவு விடுதி பணியாட்களின் எடையைச் சோதித்துப் பார்ப்பதின் மூலம் தெரியவில்லையா? நண்பர் நாயுடுவை யாராலும் ஏமாற்ற முடியாது. அவர் ஓர் ஆண் சிங்கம். அவரைத் தவிர வேறு யாரும் மாணவர்களின் ஒழுக்கத்திலும், கட்டுப் பாட்டிலும் இவ்வளவு கவனம் செலுத்தி, விதி முறைகளைக் கண்டிப்பாக அமல் நடத்துவதாக எனக்குத் தெரியவில்லை!

நீங்கள் அவரிடம் பயிற்சி பெற்றதன் மூலம் யாருமே அடையாத இலாபத்தை அடைந்திருக்கிறீர்கள். அவருடைய உயர்ந்த பண்பு, உறுதியான உள்ளம், அஞ்சாத தன்மை, அசைக்க முடியாத குறிக்கோள் ஆகியவற்றை நீங்களும் பெற வேண்டும் என்பதே எனது தாழ்மையான ஆசை, என்றார்.

நாயுடுவின் கல்விக்
கொள்கைகள்!

திரு. நாயுடு அவர்களின் கல்விக் கொள்கைகள் சிலவற்றைக் காண்போம்:

'பாட திட்டத்தில் மாணவர்களுக்குத் தேவையற்ற பகுதிகள் எவ்வளவோ இருக்கின்றன. கலந்துள்ள அந்தப் பகுதிகளை நீக்கி விட்டுப் பாடங்களைச் சுருக்கமாகவும், இனிமையாகவும் இருக்கும்படிச் செய்ய வேண்டும்.

ஏட்டுப் படிப்பை எடுத்துவிட வேண்டும். நேரடிப் பயிற்சியாகவே எல்லா போதனைகளும் அமைய வேண்டும்.

தொழிற் கல்விதான் முதல் தேவை. அதுதான் நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கும். மக்களி டையே உள்ள வறுமைகளை நீக்கும். நாட்டை முன்னேற்று விக்கும், பலவிதத் தொழில் வளங்கள் நாட்டில் பெருக்கும்.

ஒவ்வொரு படிப்புக்கும் தேவையான காலத்தை ஆண்டுக் கணக்கிலிருந்து மாதக் கணக்கிற்குக் குறைத்து விட வேண்டும்.

கல்வித் துறையில் திரைப்படம் சக்தியைப் பெரு மளவில் பயன் படுத்தலாம். கல்விக் கோட்டங்களுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை விட வேண்டும். ஆண்டுக்கு 52 நாட்கள் விடுமுறை விடுத்தாலே போதுமானது.

அதிகப்படியான விடுமுறைகளை மாணவர்களுக்கு விடுத்தால், அவர்களது கல்வி நோக்கம், கவனம் சீர்குலையும் எனவே, அதிக நாட்கள் விடுமுறை தேவையற்றது.

மாணவர்களுக்கு காலையிலும் - மாலையிலும், இரவிலும் கல்வி வகுப்புகள் நடத்தப் படல் வேண்டும்; அதே நேரத்தில் இடையிடையே அவர்களுக்கு ஓய்வு வழங்கப்பட வேண்டும்.

மாணவர்கள் கட்டாய உணவு விடுதியிலேயே தங்க வேண்டும். அவர்கள் செலவுக்குத் தேவையான பணத்தைக் கல்வி நிலையத்தில் வேலை பார்த்தே வருவாய் பெறலாம். மாணவர்களது எண்ணங்கள், களியாட்டப் பொழுதுப் போக்குகளிலும், வீண் விதண்டா வாத சச்சரவுகளிலும் ஈடு படாதபடி வேலைகளை அதிகமாக வாங்கலாம், அது நல்லதும் கூட!

வேலையை அவ்வாறு அவர்களிடம் பெறுவதின் மூலம், அவ்வப்போது அவர்களிடம் கட்டுப்பாடு, நல்லொழுக்கம், பொறுப்புணர்ச்சிகள், அன்புப் பரிமாற்றங் கள். நன்மைகளைச் சிந்திக்கும் சிந்தனைகள் தோன்றும். தான் தோன்றித் தனம், ஒத்துழையாமை உணர்வுகள் ஓடி மறையும்.

இவை மட்டுமே போதா. ஆண்டாண்டு தோறும் ஒவ்வொரு பள்ளியிலும் அதனதன் திறமை, நன் நடத்தை, மாணவர்களது முற்போக்குச் சிந்தனைகளை நாட்டும் பொருட்காட்சிச் சாலைகளை நடத்துவது நல்லது.

அவற்றை நடத்துவதற்கு மாணவர்களுக்குப் போதிய அக்கறையையும், பொறுப்புணர்ச்சியையும் அந்த பள்ளிக் கல்வி உருவாக்க வேண்டும்.

கல்விக் கோட்டங்களில் ஆசிரியர்களை குறைவாகவே நியமிக்கப் படல் வேண்டும். அவர்கள் எல்லாத் துறைகளிலும் திறமைசாலிகளாக இருத்தல் வேண்டும். அவர்களுடைய பணி, மாணவர்கள் முன்னேற வழிகாட்டுவதே ஒழிய, பள்ளிகளுக்கு வந்து தமிழ்ப் பாடத்தை ஏற்றுப் பாட்டுகளைப் போல ஏற இறங்கப் பாடுவதும், மற்ற பாடங்களை மாணாக்கர், மாணாக்கியர்போல மனனம் செய்ததை சொற்பொழிவாற்றுவதுமே ஆசிரியர்கள் பணிகளல்ல!

கலைக் கல்லூரிகள் துவக்கப்படுவதை ஓரளவோடு நிறுத்திக் கொண்டு, தொழிற் கல்லூரிகளையும், பல்கலைக் கழகங்களையும் அரசாங்கமே அமைத்து நடத்தப் படல் வேண்டும்.

அவைதான் மாணவர்களுக்குரிய வாழ்க்கைப் பயிற்சியை அளிக்கும். மடி தவழ்ந்த மாணவர்களாக மாறார்!

ஏட்டுக் கல்விக்கு அங்கே முக்கியத்துவம் இல்லாமையால், மாணவர்களின் உடலும்-உள்ளமும் உருக்குலையா.

கண்விழித்து அவர்கள் நீண்ட நேரம் மனப் பாடம் செய்யவோ, படிக்கவோ ஒன்றுமில்லை.

வாழ்க்கையும்-கல்வியும் ஒன்றாக இணையும் இடம் பல்கலைக் கழகமாதலால், அங்கே கடமையும், பொறுப்பு உணர்ச்சியும் வளரும். என்பதே உண்மை.

தொழிலியல் துறை விஞ்ஞானியாக மட்டுமே விளங்கி வந்த ஜி. டி. நாயுடு அவர்கள், தோன்றிய துறையான கல்வித் துறையிலும் புகழ்மிக்க சிந்தனையாளராக அறிமுகமாகி, தனது புகழ்க் கொடியை கல்வித் துறையிலும் நாடளாவ, அறிவளாவ பறக்க விட்டுக் கொண்டிருந்தார். தனக்கென சில உயர்ந்தக் கொள்கைகளை வகுத்துக் கொண்ட கல்விக் கோமாக விளங்கியவர் திரு. ஜி.டி. நாயுடு அவர்கள்.

திரைப் படத் துறையை கல்விக்குப் பயன் படுத்தலாம் என்றும் அவர் யோசனை கூறினார். கல்விக்குரிய வளர்ச்சியை திரைப்படத்தின் மூலமும் ஆற்ற முடியும் என்றார் அவர்.

திரைப்படம் மூலம் :
கல்விப் பயிற்சி!

அறிஞர் அண்ணா அவர்கள் ஒரு முறை பேசும்போது, 'நான்கு திரைப் படங்களை சென்சார் செய்ய மாட்டேன் என்று மத்திய அரசும், மாநில அரசும், எனக்கு வாக்களிக்குமானால், நான் நிச்சயமாகத் திராவிட நாட்டைப் பெற்றுத் தருவேன்.'

"அந்த எனது எண்ணத்தை மக்கள் இடையே திரைப்படமாக்கிக் காட்டி நியாயங்களை உணர்த்துவேன். நிச்சயமாக மக்கள் ஆதரவு எனக்குக் கிடைக்கும்" என்று குறிப்பிட்டார்.

இந்த எண்ணம் திரு. ஜி. டி. நாயுடு அவர்களது கல்விக் கொள்கையைப் போல இருக்கின்றதல்லவா? எனவே, திரைப் படத்தின் மூலம் அறிவுப் பிரச்சாரம் செய்தால் அது உறுதியாக உள்ளத்தைத் துளைத்து ஊடுருவி மக்களைச் சிந்திக்க வைக்கும் தானே!

தனது ஆறுவாரம் பொறியியல் பயிற்சி வகுப்பை, திரு. ஜி. டி. நாயுடு அவர்கள், அப்படியே கட்டம் கட்டமாகத் திரைப்பட மாக்கிடத் திட்டமிட்டார்.

இந்தத் திரைப் படத்தை உலக அரங்குகளில் வெளியிட்டுக் காட்ட விரும்பினார். அதற்கு என்ன செலவாகும் என்று திரையுலகினருடன் கணக்கிட்டதில், அப்போதைய கால அளவுச் செலவிலே ஐந்து லட்சம் ரூபாயாகும் என்று கணக்கிடப்பட்டது.

பணத்துக்காக ஜி. டி. நாயுடு வருத்தபடவில்லை. செலவழிக்கத் தயாராகவே இருந்தார். ஆனால், அப்போது படம் எடுக்கும் கச்சா படச் சுருள் கிடைப்பது மிகவும் கஷ்டமாக இருந்தது. தேவையான படச் சுருள் நாயுடு அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அதனால், படமெடுக்கும் முயற்சியை திரு. ஜி. டி. நாயுடு கைவிட்டு, மேற் கொண்ட தொழிற் கல்வித்துறை பணிகளிலே ஈடுபட்டு உழைத்தார்.