தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு/மாணவர்களுக்கு ஜி.டி. நாயுடு

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
14. மாணவர்களுக்கு ஜி.டி.நாயுடு ஆற்றிய ஒழுக்க அறிவுரைகள்!
"சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்; அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது"

என்கிறது பொய்யில் புலவரின் தமிழர் மறை அதாவது, தான் எண்ணியதைப் பிறர் ஏற்கச் சொல்லும் ஆற்றல் உள்ளவன், கேட்பாரை நோக்கச் சொல்வது சிரமமானது என்றாலும், சோர்வு இல்லாதவன், கேட்பவர் பகைஞர் என்றாலும் அஞ்சாதவன். இவன்மீது பகை கொண்டு, இவனை வெல்வது எவர்க்கும் கடினமே!

மேற்கண்ட அறிவுரைக்கு ஏற்றவாறு,திரு.ஜி.டி.நாயுடு அவர்கள், ஒரு சிறந்த நாவன்மை உடையவராக, சொல்லாற்றல் பெற்றவராக விளங்கினார்.

அமெரிக்கா, ஜெர்மன், இங்கிலாந்து, இரழ்சியா, சுவிட்சர்லாந்து, போன்ற அயல் நாடுகளின் சுற்றுப் பயனங்களில் திரு.நாயுடு அவர்கள் பேசும் போதெல்லாம், அழகான இங்லிஷ் மொழியிலேயே கோர்வையாகவும், சுருக்கமாகவும், தெளிவாகவும் கேட்போர் வியக்கும் வகையில் அவர் பேசினார்.

சாதாரணமானவர்கள் முன்பு பேசும் ஆங்கிலத்துக்கும், புகழ்பெற்ற அறிவியலார், மருத்துவர், தொழிலதிபர், பொறியியல் நிபுணர், வணிகப் பெருமக்கள் ஆகியோர் முன்பு உரையாடுவதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு.

என்ன வித்தியாசம் என்கிறீர்களா? தான் சொல்ல வந்த கருத்துக்களைக் கோர்வையாகக் கூறும் திறன், மொழிப் புலமை யோடுமொழியும் திறன், கேட்போரை ஈர்க்கும் சொல் வளம், கருத்து வளம் திறன்,தட்டுத் தடுங்கல் ஏற்படாமல் பேசும் அவையச்சம் அற்றத் திறன், எதையும் ஆனித்தரமாக எடுத்துரைக்கும் வாதத் திறன், எவராலும் அவர் மூன்பு - "நா"வை அஞ்சவிடாமல் அடக்கத்தேடு "நா"வாடும் திறன், அறிவுரைகளில் உயர்ந்த இலட்சியங்களை உதயநிலபோல ஒளி படரவைக்கும் பாலொளித் திறன். பேச்சுக்களைக் கேட்காதவர்களும் பிறரிடம் கூறும் போது ஐயோ கேட்காமல் விட்டுவிட்டோமே என்று ஏக்கமுறும் திறன் ஆகிய அனைத்துத் திறன்களுக்கும் அவரது 'நா'பரதம் ஆடியதுண்டு.

சென்னை, மதுரை. திருச்சி, கோவை , தஞ்சை, காரைக்குடி, வானியம் பாடி, சிவகங்கை போன்ற நகர்களிலே உள்ள கல்லுரிகளின் அழைப்புக்களுக்குச் சென்று தனது நேர்மையான கருத்துக்களை முழக்கமிட்டவர் திரு.நாயுடு அவர்கள்.

என்ன நினைக்கிறாரோ திரு.நாயுடு மாணவர்களுக்கு அறிவுரைகள் கூறிட,அதை அப்படியே அஞ்சா நெஞ்சுடன் கூறவல்ல நாவலர் நாயுடு அவர்கள்!

சில நேரங்களில் மாணவர்கள் அவரது அறிவுரைகளது அருமைகள் புரியாமல், கல்லூரிக் கூச்சலைப் போடுவார்கள். அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல், இனிமையாக தந்தை ஒருவர் கூறும் அறிவுரைகள் போல, அமைதியாக நாயுடு அவர்கள் பேசிய மாநாடுகளும் - கூட்டங்களும் கூட உண்டு.

அத்தகைய ஓர் அறிஞரின் அறிவுரைகளை நாம் அறிந்து கொண்டால், வாழ்க்கைக்குப் புத்துணர்வு உண்டாகும் என்பதால் அவற்றில் சிலவற்றை வாசகர்கள் முன்பு படைக்கின்றோம்அறிவுரை விருந்துக்குரிய அறுசுவைகளாக:

மதுரை கல்லூரியில்
நாயுடு அறிவுரை!

மதுரைக் கல்லூரியின் கணித விஞ்ஞானக் கழகத்தில் 24.2.1953 - அன்று ஜி.டி.நாயுடு ஆற்றிய சொற்பொழிவு அறிவுரை இது :

அன்புள்ள மாணவ நண்பர்களே! இந்தக் கல்லூரியை விட்டு வெளியேறுவதற்கான தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில், உங்கள் முன்பு நான் உரையாற்றுகிறேன்.

கல்லூரியை விட்டு நீங்கள் வெளியேறிய பிறகு, எதை நீங்கள் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பதைப் பற்றிச் சில அறிவுரைக் குறிப்புக்களை உங்கள் முன்பு சிந்தனைக் காக வைத்திட விரும்புகிறேன்.

அவை, உங்களுடைய பேராசிரியர்கள் வகுப்புக்களிலே அடிக்கடி கூறி அலுத்துப் போனவைகளே! என்றாலும், நான் கூறும் அறிவுரைகளில் மிக முக்கியமானது எது தெரியுமா? திரைப் படத்தைப் பார்க்கக் கூடாது என்பதே ஆகும்.

ஏன் பார்க்கக் கூடாது திரைப்படங்களை என்றால், அவைதான் மாணவர்களின் இளம் உள்ளங்களை கெடுக்கும் கருவிகளாகும் என்பது மட்டுமல்ல, கண்ணையும் - உடலையும் கெடுப்பதோடு, மனத்தையும் பாழாக்கி விடுகின்றன. பாக்டீரியா கிருமிகள் செய்ய முடியாத தீமைகளை எல்லாம் சினிமா படத்தில் வரும் காட்சிகள் செய்கின்றன. அவை உங்களுடைய சக்திகளை எல்லாம் சீரழித்து விடுகின்றன. மனோ சக்திகளைச் சிதறடித்துக் கோழைகளாக்கி விடுகின்றன.

புகைப் பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டு விடுங்கள். மூன்றாவதாக, அரசியல் கட்சிகளின் கூட்டங்களிலே கலந்து கொள்ளாதீர்கள், அவர்கள் ஆற்றும் சொற்பொழிவுகளைக் கேட்காதீர்கள். நான் கூறும் இவற்றை எல்லாம் நீங்கள் கேட்டவை தான். என்றாலும், மீண்டும் திரும்பத் திரும்பச் சொல்வது என்போன்றோர் கடமை ஆகும்.

தீமை தரும் எந்தப் பழக்கங்களுக்கும் மாணவர்கள் அடிமையாகி விடக்கூடாது. தவறி நீங்கள் அடிமையாவிர்களே யானால், அவை உங்கள் வாழ்நாட்களை வீணாக்கி விடுவதோடு, மனித சமுதாயமும் நஞ்சேறிய உடலாகி விடும்.

மாணவர்களைச் சாதாரணமாக 15 வயது முதல் 25 வயதிற்குள்தான் தீய பழக்கங்கள் பற்றும் பருவமாகும். அவற்றை இளம் வயதிலேயே மாற்றாவிட்டால், பிறகு எப்பொழுதுமே மாற்ற முடியாது. மாணவப் பருவத்தில் இயற்கையாகக் காணப்படும் ஊக்கமும், தைரியமும் தீய பழக்கத்தைச் சுலபமாக ஒழித்துவிடும் பருவமாகும்.

இளைஞர்கள் படித்துப் பட்டம் பெறும் காலத்தில் அறிவு முதிர்ச்சி பெறுகிறார்கள். அப்பொழுது அவர்களுக்கு நன்மை, தீமைகள் எவை என்பதைப் பகுத்தறியும் ஆற்றல் உருவாக வேண்டும். தீயவற்றை நீக்கி நல்லனவற்றைப் பின்பற்றத் தெரிய வேண்டும்.

மாணவர்களாகிய நீங்கள் உங்களுடைய தேர்வில் முதல் வகுப்பிலோ அல்லது இரண்டாம் இடத்திலே தேறாவிட்டாலும், அல்லது தேர்ச்சியே பெறா விட்டாலும் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.

ஆனால், தீமை தரும் பழக்கங்களைக் கைவிட்டு விட்டோம் என்ற நம்பிக்கையோடும், துன்பங்களை எதிர்நோக்கக் கூடிய மனோ திடத்தோடும் - நேர்மையான செயல்கட்குப் போராடும் உள்ளத் தோடும், ஆழ்ந்து நோக்கிப் பிரச்சனைகளை ஆராயும் தன்மை யோடும் - நீங்கள் கல்லூரியை விட்டு வெளியேற வேண்டும். அப்போதுதான் நீங்கள் உங்களுடைய வாழ்நாட்கள் முழுவதும் எல்லாத் துறைகளிலும் வாகை சூடுவீர்கள்.

மாணவர்கள் பெறும் பட்டங்கள் மட்டும் உங்களுடைய வாழ்க்கையின் எல்லா நன்மைகளையும் வழங்கிவிடும் என்று எதிர்பார்க்காதீர்கள். இங்கே நீங்கள் முதுகலைப் பட்டம் எனப்படும் எம்.ஏ. பட்டம் பெற்றிருக்கலாம். அல்லது பெறலாம். இந்தப் பட்டம் உங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு ஓர் ஆரம்பப் பாடமே ஆகும்!

கல்லூரிக்கு வெளியே நீங்கள் கற்கவேண்டிய பாடங்கள் ஏராளமாக இருக்கின்றன. அந்தக் கல்விக்கு இந்தப் பட்டமும் படிப்பும் முதல் படியாகத்தான் அமையும்.

வெளியுலக வாழ்க்கை என்பது ஒரு மொழி போன்றதே. அந்த மொழியை உணர, நீங்கள் படித்தக் கல்லூரிப் படிப்பு உங்களுக்கு எமுத்துக்களாகவே பயன்படும். அந்த மொழியால் நீங்கள் வெற்றிகண்ட உங்களுடைய வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் உங்களைச் சார்ந்து, நம்பி இருப்போர் வாழ்க்கையையும் நீங்கள் மேம்படுத்த வேண்டும்.

மாணவர்கள் நிறையக் கற்பதற்கும், உங்களுடைய வாழ்க்கையை முன்னேற்றிக் கொள்வதற்கும், உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் இதுதான் தக்க பருவம் என்பதை நீங்கள் உணர வேண்டும்.

உலகில் வாழ்ந்த மிகப் பெரிய தலைவர்களுடைய வாழ்க்கையை, வரலாற்றை எல்லாம் நீங்கள் படிக்க வேண்டும். அவர்களில் கல்லூரிப் பட்டங்கள் பெற்றவர்களும் உண்டு, பெறாதவர்களும் இருப்பார்கள்.

ஆனால், அவர்கள் அறிவைத் தேடி உழைத்திட ஓடியவர்கள் என்பதை எவராலும் மறுக்க முடியாது. அத்தகையவர்கள் தான் மனித சமுதாயத்திற்கும் வழிகாட்டிகளாக வாழ்ந்தவர்கள் என்பதை எவராலும் மறக்க முடியாதவர்கள் ஆவர்.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பெவின் என்பவர் இந்தியா விற்கு வருகை தந்தார். அவர் போர்க் காலத்தில் நமது நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் சிலருக்கு, இங்கிலாந்தில், குறுகிய நாட்களில், தொழில் பயிற்சி அளிப்பதற்கு ஒரு திட்டத்தை வகுத்தவர். அவருடைய வாழ்க்கை வரலாற்றைக் கூறுவதானால், நீண்ட நேரமாகும்.

உழைப்பால் உயர்ந்தோர்
வரலாறுகளைப் படியுங்கள்!

அந்த பெவின், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு பெரிய கட்சியின் தலைவராகவும், அந்த நாட்டின் அமைச்சராகவும் இருந்தவர். அவர் தனது பள்ளிப் படிப்பை முடித்ததும், தாமே முயன்று ஓயாமல் உழைத்து முன்னேறினார்.

அமெரிக்கரான ஹென்றி ஃபோர்டு என்பவரும், லூயி பாஸ்டர், கணிதமேதை இராமானுஜம் போன்ற பெரியோர்களின் வாழ்க்கை வரலாற்றை நீங்கள் படிக்க வேண்டும். அவர்கள் கல்லூரியில் கற்காவிட்டாலும், அஞ்சா நெஞ்சமும், உறுதியான உள்ளமும் உடையவர்களாக இருந்தார்கள், வாழ்க்கையில் முன்னேறினார்கள்.

நோபல் பரிசு பெற்ற நமது நாட்டு விஞ்ஞானியான சர்.சி.வி.இராமன், சென்னைப் பல்கலைக் கழகத் துணை வேந்தராகப் பல ஆண்டுகளாக பணிபுரிந்த டாக்டர் இலட்சமன சாமி முதலியார், இந்தியாவின் முதல் நிதியமைச்சராக இருந்த சர்.ஆர்.கே.சண்முகம் செட்டியார், சர்.இ.பி.இராமசாமி ஐயர் போன்றவர்கள் வாழ்க்கையில் முன்னேறியவர்கள் என்றால், அதற்குக் காரணம் அவர்களது இடைவிடாத உழைப்பும், கடமை உணர்ச்சியும், தணியாத ஆர்வமுமே ஆகும். அவர்களைப் பின்பற்றி நீங்களும் முன்னேறி நமது தாயகத்தின் ஒளிபடைத்த தலைவர்களாகத் திகழவேண்டும் என்பதே எனது ஆவல்.

என்னுடைய வாழ்க்கையில் எத்தனையோ நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன.

அவற்றை எல்லாம் இங்கே கூறிட நேரமில்லை இன்று வரை நான் படித்துள்ள புத்தகங்களின் எண்ணிக்கையைப் பற்றி மட்டும் உங்களுக்குக் கூற விரும்புகிறேன்.

விஞ்ஞானம்,பொறியியல் ஆகிய துறைகளைப் பற்றிய 18 ஆயிரம் புத்தகங்களும், உளநூல் தொடர்புடைய 3 ஆயிரம் நூல்களும் எனது நூலக அறையில் இருக்கின்றன. அவற்றை ஆழ்ந்து படித்ததின் மூலம்தான் ஓரளவுக்கு நான் அறிவு பெற்றேன். கோவைக்கு வருகின்ற மாணவர்கள் அவற்றை வந்து பார்க்கலாம். அதனால் நீங்கள் புதிய உற்சாகத்தைப் பெறுவீர்கள்.

மதுரை அமெரிக்கன்
கல்லூரி பேச்சு!

(மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரி வாணிக மன்றத்தில், COMMERCE UNIONனில் 23.2.1953 - ஆம் ஆண்டில் திரு.ஜி.டி.நாயுடு அவர்கள் சொற்பொழிவு ஆற்றிய உரையின் ஒரு பகுதி இது)

"அன்பார்ந்த மாணவ மணிகளே!

கல்லூரியில் என்ன பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன என்பதைப் பற்றியும், மாணவர்கள் எவ்வாறு கல்வி கற்கிறார்கள் என்பதைக் குறித்தும், எனக்குப் பல ஆண்டுகளாக ஒன்றுமே தெரியாமல் இருந்தது. இப்போது கூட இங்கே நீங்கள் என்னென்ன படிக்கிறீர்கள் என்று சரிவரத் தெரியாது.

நமது கல்லூரிகளில் படித்த பழைய மாணவர்கள், இப்போது பெருந்தலைவர்களாகவும், விஞ்ஞானிகளாகவும், நிர்வாகிகளாகவும் இருப்பதைப் பார்க்கிறேன். அவர்கள் மற்ற அயல் நாட்டுத் தலைவர்களுக்குச் சமமாகவும், ஏன் அதற்கும் மேலாகவும் விளங்குவதைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.

ஆனால், இப்பொழுது, சில சமயங்களில் நான் ஒன்றை உணர்கிறேன். அது, கல்வித் தரம் படிப் படியாகக் குறைந்து வருகிறது என்பது தான். அதற்குக் காரணம் நீங்கள் மட்டுமல்லர்: சூழ்நிலைகளும் ஆகும்.

சிறு குழந்தைகளுக்கு கல்வி அறிவூட்டும் சிறந்த பள்ளி இல்லம்தான். உயர்ந்த ஆசிரியர்கள் தாய் தந்தைகளே குழந்தைகள் வளர்கின்ற பொழுது அவர்களுக்கு நல்ல புகலிடம் கல்லூரியும், உணவு விடுதிகளுமே ஆகும். பெரும்பாலான மாணவர்களுக்கு வீட்டில் நல்ல பயிற்சி அளிக்கப்படுவதில்லை. அதற்குக் காரணம். பெற்றோர்கள் கல்வி அறிவற்றவர்களாக இருப்பதுதான்.

மாணவர்கள் கல்லூரிக்கு வரும்போது, தம் பெற்றோரைவிடத் தாங்கள் சிறந்த அறிவாளிகள் எனவும், குடும்பத் தலைவர்கள் எனவும் நினைக்கத் துவங்கி விடுகிறார்கள். அப்பொழுதுதான் கட்டுப்பாடின்மை indiscipline ஏற்படுகிறது. அவர்கள் சுதந்திரமாகத் திரிவதாலும் சூழ்நிலைகள் மேலும் மோசமடைகின்றன.

நன்மை தீமைகளை இளம் உள்ளங்கள் ஆராய்ந்து பாராமல் அப்படியே ஏற்றுக் கொண்டு விடுகின்றன. இன்னும் சொல்வதானால் அவர்கள் எப்படி உண்பது? எப்பொழுது உண்பது? எவ்வளவு உண்பது? எதை உண்பது? எப்பொழுது உறங்குவது? எப்படி உடை அணிவது? எப்படிக் குளிப்பது? எப்படிப் பிறருடன் பழகுவது? எப்படி வேலைகளைச் செய்வது? என்ற ஆரம்பப் பாடம் கூடத் தெரிவதில்லை. அவர்கள் இவற்றை எல்லாம் நாள்தோறும் செய்கிறார்கள், ஆனால் ஒமுங்கற்ற முறையில்!

மாணவர்கள் கல்லூரிக்கு எதற்காக வந்தார்களோ அதை மறந்து, விளையாட்டிலும், திரைப்படங்களிலும், விழாக்களிலும், நாவல்களிலும், நேரத்தை வீணாக்குகிறார்கள்.

மாணவர்கள் தங்களது 15-ஆம் வயது முதல் 25-ஆம் வயது வரையுள்ள 10 ஆண்டுக் காலத்தை எவ்வாறு கழிக்கிறார்கள் என்பதற்கு ஒரு புள்ளிவிவரம் கூறுகிறேன். கேளுங்கள்...

எண் செலவுசெய்த முறைகள் ஆண்டு மாதம் நாட்கள்
1 தூக்கம் 3 4 5
2 உணவு - 7 18
3 கண்ணாடி முன் நின்று அழகு பார்த்தல் - 7 8
4 திரைப்படம், விளையாட்டு,
இசை, நாவல் படித்தல்,
முதலிய வீண் பொழுதுபோக்கு
4 3 4
5 கல்வி 1 1 15

மாணவர்கள் தங்களுடைய இந்தப் பத்தாண்டுக் காலத்தில், படிப்புக்காகச் செலவு செய்யும் காலம் எவ்வளவு தெரியுமா? ஓர் ஆண்டு, ஒரு மாதம், 15 நாட்கள் மட்டும் தான். அதாவது பதின்மூன்றரை மாதங்கள் மட்டுமே. இந்தக் கல்வி கற்கும் காலத்தில் கூட, மானவர்கள் கல்வி மீது கவனம் வைத்துப் படிக்கும் நேரம் பாதிக்கும் குறைவாகும்.

இந்த நிலை மாறவேண்டாமா? உணவுக்கும், தூக்கத்துக்கும், வீணானபொழுது போக்குகளுக்கும் செலவழிக்கும் நேரத்தைக் குறைத்து, அதைப் படிப்புக்காகப் பயன்படுத்தினால், மாணவர்கள் படிக்க வேண்டிய அவசியமில்லையே.

படிப்புக் காலத்தைக் குறைக்கலாம், அதன் வாயிலாக நீங்கள் உங்களுடைய பெற்றோர்க்கும் - கல்லூரி நிர்வாகிகளுக்கும் ஒரு சுமையாக இருப்பதை ஒழிக்க முடியும்.

வாணிகத் துறையைச் சேர்ந்த மாணவர்களாகிய நீங்கள், கல்லூரியில் செலவு செய்யும் நேரத்தைப் பற்றி ஒரு முறையாவது கணக்கிட்டதுண்டா? ஒரு முறையாவது கூட்டி, வகுத்துப் பார்த்ததுண்டா?

உங்களுடைய தந்தையாரின் மாத வருமானம் என்ன? அதிலிருந்து நீங்கள் செய்யும் செலவு, அந்தச் செலவில் உங்களது உடை வகைகள், பூட்சு வகைகள், பற்பசை, தலை எண்ணெய், பிளேடு, மருந்து, பவுடர், சுனோ. வாசனை திரவிய வகைகள். உணவு விடுதிச் செலவுகள் ஆகியவற்றுக்கு ஆகும் தொகை முதலியவற்றைப் பற்றி ஒரு முறையாவது கணக்குப் போட்டுப் பார்த்திருக்கிறீர்களா?

கல்லூரியை விட்டு வெளியே போனதும், நீங்கள் இவ்வளவு காலம் செலவு செய்தற்கு என்ன இலாபம் பெறப் போகிறீர்கள்?

கல்லூரியில், நீங்கள் உங்களது வாழ்க்கை எனும் கட்டிடத்திற்கு அடித்தளம் தானே அமைத்திருக்கிறீர்கள்? இனிமேல் தானே நீங்கள் உங்களது கட்டிடத்திற்கு கூரை வேய வேண்டும்? சன்னல் அமைக்க வேண்டும்? கட்டிடத்தைக் கட்டி முடிக்க வேண்டும்? அப்போதுதானே நீங்கள் உங்களுடைய குடும்பத்தோடு வசதியாக வாழ்க்கையை நடத்த முடியும்?

வெளி உலக வாழ்க்கையில், மாணவர்களே! நீங்கள் இனி மேல் தான் புகப் போகிறீர்கள். அப்பொழுது நீங்கள் கல்லூரியில் கற்ற அறிவைப் பயன்படுத்தி வெற்றி காணவேண்டும்.

வாழ்க்கைக்கு விஞ்ஞானம்,கணக்கு,வாணிகம் போன்றவை பெரிதும் பயன்படும் துறைகளாகும். இவை ஒன்றோடு ஒன்று தொடர்புடையன.

நான் தொழில் துறையில் இலாபம் பெற்றேனென்றால், அதற்கு எனது தொழிலறிவு மட்டுமே காரணமன்று. நான் பஞ்சு வாணிகத்தில் பஞ்சு படாத இன்னல்களை, துன்பங்களைப் பட்டேன். பம்பாய் நகர் வரை கூடப் பறந்தேன். பஞ்சு வாணிகத்தில் நான் பெற்ற அனுபவ அறிவு இது.

ஆனால், பஞ்சு வியாபரத்தில் நான் பட்ட நட்டங்கள்தான். தொழில் துறையில் எனக்கு லாபம் பெற்றுத் தந்தது. அது போலவே நீங்களும் அனுபவத்தின் மூலம் தான் நிறையக் கற்றுக் கொள்ள முடியும்.

மாணவர்களே! நீங்கள் வேலைக்குச் சேரும் இடத்தில் உங்களது உழைப்பாலும், ஆர்வத்தாலும் நல்ல பெயர் எடுக்க வேண்டும். உங்களை வேலைக்கு வைத்திருப்பவர் தானாக முன்வந்து, மனம் விரும்பி, உங்களையும் எனது வியாபாரத்தில் பங்குதாரராகச் சேர்த்துக் கொண்டிருக்கிறேன் என்று அவர் கூறும் வகையில் நீங்கள் பணியாற்ற வேண்டும்.

உங்களுக்கு ஒர் உதாரணம் கூற விரும்புகிறேன். நான் பஸ் போக்குவரத்துத் தொழிலில் புகுந்த பொழுது, எனக்குக் கணக்கு வழக்கு முறைகளைப் பற்றி ஒன்றுமே தெரியாது. ஆனால் மிகக் குறுகிய கால அனுபவத்தின் வாயிலாக ஓர் அருமையான கணக்கு முறையைக் கண்டு பிடித்தேன். அதே முறையைத்தான் 1920 - ஆம் ஆண்டிலிருந்து இன்றும் பின்பற்றி வருகிறேன்.

அந்த கணக்கு முறையையும், அதற்காகப் பயன்படுத்தப் படும் புத்தகங்களையும், இரசீதுகளையும் நீங்கள் வேறு எங்குமே காணமுடியாது. பாடப் புத்தகங்களிலும் பார்க்க முடியாது.

அவை, வியாபாரத்தைத் திறமையாகவும், சிக்கனமாகவும் நடத்துவதற்காகக் கண்டு பிடிக்கப்பட்டவை. அதைப் போலவே நீங்களும் பிற்காலத் தேவைக்கேற்பப் புதியன கண்டு புகழடைய வேண்டுமென நான் உங்களை வாழ்த்துகின்றேன்.

திருச்சி சூசையப்பர் கல்லூரி
விஞ்ஞானக் கழக உரை!

(திருச்சி சூசையப்பர் கல்லூரி விஞ்ஞானக் கழகத்தில் 14.2.1953-ஆம் ஆண்டில், திரு.ஜி.டி.நாயுடு அவர்கள் முழக்கமிட்ட உரையின் ஒரு பகுதிச் சுருக்கம் இது.)

மாணவர்களே மாணவிகளே! அன்பார்ந்த ஆசிரியப்பெருமக்களே!

கலை, வரலாறு முதலிய பாடங்களில் எனக்குச் சரியான பயிற்சி இல்லாததால் நீங்கள் விரும்பும் அளவுக்கு அழகாகச் சொற்பொழிவாற்ற என்னால் முடியாது.

1937-ஆம் ஆண்டுக்கு முன்பு நான் எந்தக் கல்லூரிக் குள்ளும் வேடிக்கைப் பார்க்கக் கூட நுழைந்தது கிடையாது. 1937-ஆம் ஆண்டில் சென்னையில் ஒரு கிறித்துவ மாநாடு நடைபெற்றது. அப்பொழுது நான் அங்கே இருந்தேன்.

ஊர்வலம் மிகப் பெரியதாக இருந்தது. ஆர்வத்தால் உந்தப்பட்டு அந்த நிகழ்ச்சிகளைச் சலனப் படம் பிடித்தேன். மற்றவர்கள் எடுத்தப் படங்களைவிட எனது படம் அருமையாக அமைந்திருந்ததால், சென்னை இலயோலாக் கல்லூரி முதல்வர் திரு. வரீன் என்பவர் அந்தப் படங்களை இலயோலாக் கல்லூரியின் திரையில் போட்டுக் காட்டும்படிக் கேட்டுக் கொண்டார்.

அவரது அழைப்பை ஏற்றுக் கொண்ட நான் கல்லூரிக்குள் சென்றேன். அதுதான் நான் எனது வாழ்க்கையில் கல்லூரிக்குள் நுழைந்த முதல் நிகழ்ச்சியாகும். அன்று நான் அங்கே படம் போட்டுக் காட்டினேன்.

ஆனால், அதற்கு முன் ஒரு விதியினை மாணவர்களை ஒப்புக் கொள்ளும்படி செய்தேன். அதாவது, அவர்கள் விரும்பும் மாநாட்டுப் படத்தை முதலில் போட்டுக் காண்பிப்பேன். அது முடிந்ததும், நான் விரும்பும் சில கல்விப் படங்களும் போட்டுக் காண்பிப்பேன். அதையும் அவர்கள் தொடர்ந்து பார்க்க வேண்டும். படம் முடியும் வரை யாரும் எழுந்து போகக் கூடாது என்று வலியுறுத்திக் கூறினேன்.

ஆசிரியர்களும், மாணவர்களும், எனது விதியை ஏற்றுக் கொண்டார்கள். மாலை 5 மணிக்கு துவங்கிய படக்காட்சி, இரவு ஒரு மணி வரை நடந்தது. இடையில் யாரும் சோறுண்ணக் கூட எழுந்திருக்கவில்லை. படம் தொடர்ந்து ஓடியது.

இரவு ஒரு மணிக்குப் பார்வையாளர் பக்கம் திரும்பிப் பார்த்தேன். கல்லூரி முதல்வரும், ஒன்றிரண்டு மாணவர்களும் தவிர, மற்ற அனைவரும் தமது நாற்காலிகளிலேயே உறங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களை மேலும் நான் சோதிக்க விரும்பாததால், படக் காட்சியை அத்துடன் முடித்துக் கொண்டேன். அன்றுதான் கல்லூரி என்றால் என்ன என்பதை பற்றி நான் முதன் முதலாகத் தெரிந்து கொண்டேன்.

கல்வி என்பது மாணவர்களுக்கு உதவவும், மனித இனத்துக்கு நன்மை பயக்கவும் ஏற்பட்ட ஒரு சாதனமாகும். மாணவர் கள் கல்விக்காகவே இருக்கிறார்கள் என்று எண்ணக் கூடாது.

கல்வி என்பது மாணவர்களுக்கு ஓர் ஊன்றுகோல் ஆகும். புத்தகங்களிலிருந்தும், சொற்பொழிவுகளிலிருந்தும் நீங்கள் பெறும் அறிவும், தேர்வுகளில் வாங்கும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களும், இறுதியில் நீங்கள் பெறும் பட்டமும் உண்மையான கல்வி ஆகாது.

இவையெல்லாம் உங்களது வாழ்க்கை எனும் கல்விக்குரிய வளர்ச்சிப் படிகளாகும். இங்கே நீங்கள் கடமை உணர்ச்சியோடு சிறந்த பயிற்சி பெற வேண்டும். உங்கள் சக்திகளை வீணாக்கக் கூடாது; வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மாணவர்கள் தங்களது பண்புகளை நல்ல அடிப்படையில் உருவாக்கிக் கொள்ள வேண்டும். சமுதாயத்திற்கு நீங்கள் பணியாட்கள் (Servants) என்ற மனப் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளல் வேண்டும். தவறுவீர்களேயானால் நீங்கள் பல உண்மைகளைக் கற்றுக் கொள்ள இயலாமல் போய்விடும்.

நான் ஒரு கொள்கையை உறுதியாகக் கொண்டிருக்கிறேன். அதாவது, நமது வாழ்வின் முதல் 25 ஆண்டுகள் கல்வியும் பயிற்சியும் பெற வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளில் அவற்றைப் பயன்படுத்திப் பொருள் சம்பாதிக்க வேண்டும். இறுதி 25 ஆண்டுகளில் ஈட்டிய பொருளை நல்ல வழிகளில் செலவு செய்து புகழ் அடைய வேண்டும். இந்தக் கொள்கைகளை மாணவர்களும் கடைபிடித்தால் வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். நமது உடலையும், மனத்தையும் கெடுக்கக்கூடிய பல பொருட்கள். இப்பொழுது உலகில் இருக்கின்றன. உதாரணமாக, உணவை எடுத்துக் கொள்ளுங்கள். பொருந்தாத உணவை உண்பதால், உடலும், அதனால் மனமும் கேடு அடைகின்றன.

மக்களில் சிலர் கோபத்துடனும், வேறு சிலர் நல்ல பண்புடனும், மற்றும் சிலர் சூழ்ச்சி மனப்பான்மையுடனும், அடுத்த சிலர் மனேதிடத்திடனும், வேறு சிலர் நோய்வாய்ப்பட்டும் வாழ்கின்றதைப் பார்க்கின்றோம்.

இவை எல்லாம் உணவாலும், தட்ப வெப்பத்தாலும், சூழ்நிலைகளாலுமே ஏற்படுகின்றன. மனம் உறுதியாக இருந்தால் இந்த மாற்றங்களை நாம் பெரும் அளவுக்குத் தடுத்து விடலாம். எனது பேச்சு உங்களுக்கு இப்போது பொருத்தமற்றதுபோல தோன்றலாம். ஆனால், உணவு, உடல், மனம் என்ற மூன்றும் ஒன்றோடொன்று இணைந்தன என்பதற்கு ஒரு சான்று கூறுகின்றேன்.

பாடும் ஒரு கிராமபோன் பெட்டிக்கு முன்னால் ஓர் எக்ஸ்ரே' கருவியைப் பொருத்தி, அதற்கு முன்னால் ஒரு பூனையை நிறுத்தி உணவுக் கொடுத்தால் அந்தப் பூனையின் வயிற்றில் நடைபெறும் மாறுதல்களை எக்ஸ்ரேப் படம் மூலம் காணலாம்.

பூனையின் வயிற்றில் ஒரே அளவாக ஹைடிரோ குளோரிக் அமிலம் சுரப்பதையும், உணவு சரியாகச் செரிப்பதையும் பார்க்கலாம்.

ஆனால், கிராமபோன் கருவியில் பாடும் பாட்டை மாற்றி, நாய் குரைப்பதைப் போன்ற ஒலி எழுப்பும் இசைத் தட்டைப் போட்டால், பூனைக்குப் பயமும், கோபமும் ஏற்படுகின்றன. உடனே அதன் வயிற்றிலும் மாறுதல் ஏற்படுகின்றது; உணவு செரிப்பது தடைபடுகின்றது. அதனால் சோர்வும், நோயும் ஏற்படுகின்றன. இதை நீங்கள் நன்றாக உணர வேண்டும்.

மனித உணர்வுக்கும், உடலுக்கும் உள்ள தொடர்பை நீங்கள் பலமுறை அனுபவித்திருக்கலாம். யாராவது ஒருவருக்குத் திடீரென்று கோபமோ, துக்கமோ வந்தால், உடனே அவரது உடலில் சோர்வு ஏற்படுகின்றது. உடல் முழுவதும் வேர்க்கின்றது. அதற்குக் காரணம் என்ன?

உணவோ, அல்லது மருந்தோ அல்லது தட்ப வெட்டமோ அந்த மாறுதலை ஏற்படுத்தவில்லை. அப்படியானால் அந்த மாறுதலை உண்டாக்கியது எது? மனமல்லவா?

எனவே, மனமும் - உடலும், உணவுகளும் ஒன்றோடொன்று தொடர்புடையன என்பதை நீங்கள் உணர வேண்டும். மூன்றையும் நல்ல நிலையில் வைத்திருக்க வேண்டும்.

அதற்கு மாணவர்கள் தங்கள் சக்தியை வீணாக்காமல் திரட்டி வைக்க வேண்டும். அப்பொழுதுதான் பல செயற்கரும் செயல்களை மாணவர்களால் செய்ய முடியும். எனவே, மாணவ மணிகளே! உங்களுடைய சக்தியை வீணாக்காதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சென்னை, கிண்டியின்
பொறியியல் கல்லூரியில்!

சென்னை நகரில், கிண்டி பகுதியிலே இருக்கும் பொறியியல் கல்லூரியின் இயந்திரப் பிரிவு மன்றம், 25.2.1953-ஆம் ஆண்டில் நடைபெற்ற விழாவில் திரு. ஜி.டி. நாயுடு அவர்கள் ஆற்றிய சொற்பொழிவுச் சுருக்கம் இது :

"பொறியியல் மாணவ மணிகளே!

உங்களிடையே நான் பொறியியல் துறை பற்றி ஒரு சிறிதும் பேச மாட்டேன். அதற்குக் காரணம், நீங்கள் தினந்தோறும் அதைப் பற்றியே படித்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும் சிந்தித்துக் கொண்டும் இருக்கிறீர்கள். இப்படிப்பட்ட உங்களிடம் நான் வேறு பொறியியல் துறை நுணுக்கங்களை எடுத்துரைப்பது, அவ்வளவு உணர்வு பூர்வமான மகிழ்ச்சியைக் கொடுக்காதில்லையா? அதனால் சில அவசியமான அறிவுரைகளை மட்டுமே உங்களுக்கு நான் கூற விரும்புகிறேன்.

முன் நாட்களில் பொறியியல் துறை பட்டதாரிகள் திறமையாளர்களாகவும், உறுதியான உள்ளமுடையவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் படிக்கும்போது மின்சார ரயிலோ, மோட்டார் சைக்கிளோ அல்லது கார்களோ கிடையாது.

அந்த நாளில் மாணவர்கள் உண்ணும்போதும், கல்வி பற்றிய சிந்தனையிலேயே இருந்தார்கள். அதனால், அறிவாற்றல் படைத்தவர்களாக அக்கால மாணவர்கள் கல்லூரிகளை விட்டு வெளியே வந்தார்கள்.

ஆனால், தற்கால மாணவர்களாகிய உங்களுக்கோ கல்வியைப் பற்றி நினைக்கவே நேரமில்லை. உங்களுடைய எண்ணமெல்லாம் களியாட்டங்களையே சுற்றிச் சுற்றி வட்டமிடுகின்றன. அதனால் சக்தி சிதறுகின்றது; உள்ளமும் உடலும் கெடுகின்றன.

கல்லூரியில் நீங்கள் படிக்கும் காலத்தைச் சுருக்கி, அந்த அளவுக்குக் காலத்தை தொழிற்சாலைகளில் செலவிட வேண்டும். அவ்வாறு செய்தால் உங்களுடைய நேரமும் வீணாகாது; சோம்பலும் ஏற்படாது; உழைப்புக்கு ஏற்ற ஊதியமும் கிடைக்கும். உங்களுடைய பெற்றோரின் சுமையும் ஓரளவுக்கு நீங்கும்.

தொழிற்சாலை படிப்புக் காலம் முடிந்ததும் உங்களுடைய பட்டம் தரப்பட வேண்டும். கல்லூரியில் யாருக்கும் இடமில்லை என்பதோ அல்லது வடி கட்டும் தேர்வு முறைகளோ (Selection) கூடாது.

ஏராளமான தொழிற் கல்லூரிகளைத் திறப்பதின் மூலம் இட நெருக்கடிகளைத் தவிர்க்கலாம். அரசாங்கமே புதிய கல்லூரிகளை நிறுவ வேண்டும். அதற்கு அதிகப் பணச் செலவு ஏற்படுமே என்று அஞ்சத் தேவையில்லை.

கல்லூரிகள் எல்லாம் வாணிக முறைப்படி, தொழிற்சாலை களைப் போல் நடத்தப்பட வேண்டும். மாணவர்கள் அங்கு உழைத்துப் பொருளிட்ட வசதிகள் இருக்க வேண்டும்.

கூட்டுறவு முறையில் கல்லூரிகள் இயங்க வேண்டும். உற்பத்தியாகும் பொருட்களின் வருமானத்தைக் கொண்டே கல்லூரியை, அதன் செலவுகளைச் சரி கட்டலாம். இதனால் நாட்டில் தொழில் அறிவும், தொழில் நிலையும், பொருளாதாரமும் உயரும்.

வாணியம்பாடி
இஸ்லாம் கல்லூரி!

தமிழ்நாட்டின் பழைய வட ஆற்காடு மாநிலத்திலும் இன்றைய வேலூர் மாவட்டத்திலும் இருக்கின்ற நகரம் வாணியம் பாடி எனும் நகராட்சி நகர். இங்கே இஸ்லாமியப் பெருமக்கள் பெரும்பான்மையாக வசித்து வருகிறார்கள். அதனால் இசுலாமியர்களுக்கு என்று தனி ஒரு கல்லூரி இந்த நகரத்தில் இயங்கி வருவதால், அக்கல்லூரியின் தமிழ் மன்றத்தில், 11.2.1953-ஆம் ஆண்டில் திரு. ஜி.டி. நாயுடு அவர்கள் இங்லீஷ் மொழியில் பேசினார். அந்தப் பேச்சின் தமிழாக்கப் பகுதி சுருக்கம் இது.

அருமை மாணவர்களே! நான் உங்களுடைய கல்லூரியில், தமிழ் மொழியைப் பற்றி ஆங்கிலத்தில் பேசுகிறேன். அந்த நிலை எனக்கு ஏற்பட்டு விட்டதற்காக நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும்.

நான் தமிழில் பேசினால், நீங்கள் மட்டுமே அறிய முடியும். ஆனால், ஆங்கிலத்தில் நான் பேசினால், பின்னர் இப் பேச்சை வெளிநாட்டாரும் அறிய வாய்ப்பு உண்டாகும்.

நான் இளமைக் காலத்தில் தமிழ்மொழியில் அளவு கடந்த பற்று வைத்திருந்தேன். காலப் போக்கில் எனக்கு அதனோடு தொடர்பு குறைந்தது. தமிழ்தான் உலகத்திலேயே முதன் முதலில் தோன்றிய மொழி. அதுதான் மற்ற எல்லா மொழிகளுக்கும் பிறப்பிடம். அது நல்ல இலக்கிய வளம் உடைய மொழி என்பது எனது அசைக்க முடியாத கருத்து.

இந்தக் கருத்தை நான் அமெரிக்காவில் 1940-ஆம் ஆண்டில் நடந்த பல பொதுக் கூட்டங்களிலே பேசும்போது வலியுறுத்திக் கூறியுள்ளேன். அந்தச் சொற்பொழிவின் சில பகுதிகள் சர்விசஸ் அண்ட் சேல்ஸ் என்ற அமெரிக்கப் பத்திரிக்கையில் 1940-ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் இதழில் வெளி வந்துள்ளன.

ஆனால், தமிழில் உள்ள ஒரே ஒரு குறை. அதில் ஏராளமான ஆபாசக் கருத்துக்கள் கலந்து விட்டன என்பதேயாகும். நீங்கள் தமிழைக் கற்கும்போது, தீயவற்றை நீக்கி - நல்லவற்றையே கற்க வேண்டும். தமிழில் மிகச் சிறந்த அறநூல்கள் இருக்கின்றன. அத்தகைய அற நூல்களை நீங்கள் உலகின் வேறு எந்தமொழியிலும் காண முடியாது.

நான் ஆங்கிலமும், சில வட இந்திய மொழிகளும் பயின்றுள்ளேன். எனக்குத் தெரிந்தவரை, தமிழ், மனித குலத்தின் அறப் பண்பை வளர்க்கும் ஓர் அரிய மொழியாகும். ஆனால், நீங்கள் தமிழோடு அமையாது, ஆங்கிலத்திலும், நல்ல புலமை பெற வேண்டும். விஞ்ஞானம், தொழில் நுட்பம் ஆகியவை ஆங்கிலத்தில் தான் இருக்கின்றன. நான் உங்களுக்குக் கூற விரும்புவது தமிழில் பற்றும், ஆங்கிலத்தில் புலமையும் பெற்று நாட்டை உயர்த்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

காரைக்குடி
அழக்கப்பா கல்லூரி!

காரைக்குடியில் உள்ள அழகப்பா கல்லூரியில் 1955-ஆம் ஆண்டில், வள்ளல் அழகப்பருக்கு முன்னால் மாணவர் பேரவையில் திரு. ஜி.டி. நாயுடு ஆற்றிய சொற்பொழிவின் ஒரு பகுதிச் சுருக்கம் இது.

"இது ஒரு கலைக் கல்லூரி. இங்கு மாணவர்களாகிய நீங்கள் வெறும் ஏட்டுக் கல்வியைப் பெறுகிறீர்கள். இந்தக் கல்வியால் யாருக்கும் எந்தவிதப் பயனுமில்லை. இந்தக் கல்வி தோல்வி அடைவதை இன்னும் 15 ஆண்டுகளில் எல்லோரும் உணர்வீர்கள்.

இந்தக் கல்விக்காக வள்ளல் அழகப்பர் இவ்வளவு பெரிய கட்டடங்களைக் கட்டிப் பணத்தை வீணாக்கி இருக்க வேண்டாம், இதற்குப் பதிலாகத் தொழிற் கல்வியே முக்கியம் என்று ஆரம்பித்திருக்கலாம்.

ஏட்டுக் கல்வியால் வேலை இல்லாத் திண்டாட்டம்தான் பெருகும். தொழிற் கல்வியால் வேலை பெருகும்; நாடும் வளரும். ஆகவே, இப்பொழுது நாட்டில் உள்ள வெறும் ஏட்டுக் கல்விக் கல்லூரிகளை எல்லாம் உடைத்துக் கற்களையும்கூட பொடி பொடியாக்கி விட வேண்டும்.

கலைக் கல்லூரி இருந்த இடமே - அடையாளமே, அடுத்தத் தலைமுறைக்குத் தெரியக் கூடாது. அடையாளம் தெரிந்தால் பிறகு மீண்டும் ஏட்டுக் கல்வி தொடரும் எண்ணமே வரும். ஆகவே, ஏட்டுக் கல்விக் கல்லூரிகளை ஒழித்துத் தொழிற் கல்வி நிலை மாணவர்களை வளர்க்க எல்லோரும் முன் வரவேண்டும். வள்ளல் அழகப்பர் எனது நண்பர் என்னை மன்னிப்பாராக.