நந்தீசுரர் பூசா விதி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

சித்தர் பாடல்கள்

நூல் வரிசை எண் 22

நந்தீசுரர் பூசா விதி / (நந்தீஸ்வரர் பூஜா விதி)

பக்கம் 323

1-6[தொகு]

எண்சீர் விருத்தம்

1

கேளப்பா ஓம்ஸ்ரீ கங்கு என்றும் தான்

கெடியாக மூலத்தில் கும்பித் தக்கால்

வாளப்பா பழம் தெங்கு அவல் வடைகள் தோசை

வளமாவிக் கினர்க்குப் புட்ப பரிமளங்கள்

நாளப்பா மனம் அடங்கித் தோத்ரம் செய்து

நலமான விக்கினரைப் பூசித் தக்கால்

ஆளப்பா ஆசிர் வாதங்கள் ஈவார்

அப்பனே விக்கினரைப் பூசை செய்யே

2

செய்யப்பா விக்கினர் தம் பூசை சொன்னேன்

செயமான சண்முகவன் பூசை கேளு

வையப்பா சங்வங்மங் சரவணாய

வளமாக அனாகதத்தில் பூசை பண்ணு

வையப்பா புட்பரி மளங்கள் கொண்டு

மைந்தனே தூப நைவேத்யம் காட்டி

கையப்பா கனகசபை யதிலே பூசிக்

கண்மணியே சண்முகத்தை வரங்கள் கேளே

3

காணப்பா ஆசார பூசை சொன்னேன்

கண்மணியே சிவபூசை சொல்லக் கேளு

வாணப்பா நம சிவய கிம் ஆம் என்று

வளமாகப் பூரணத்தில் இருத்திக் கொண்டே

ஆனப்பா தூப தீப நைவேத் யத்தோடு

அப்பனே சதாசிவத்தைத் தோத்திரம் செய்

மாணப்பா நீ கேட்டது எல்லாம் ஈவார்

மைந்தனே சிவத்தினுடைய மகிமை தானே

4

தானான சிவத்தினுடைப் பூசை சொன்னேன்

தன்மையுள்ள சக்தியுடைப் பூசை கேளு

வானான இம்மென்றும் கும்பகத்தில்

வட்டி வளமாக ஒருமனமாய் நின்று

ஆனான கதம்ப கத்தூரி புட்பம்

அப்பனே பால் பழங்கள் வைத்து வைத்து

மானான தேவியைத் தான் தோத்திரித்து

மைந்தனே சாட்டாங்கச் சரணம் பண்ணே

5

பண்ணப்பா என்னவம்மா என்று கேளு

பலவிதமாய் நீ தொடுத்தது எல்லாம் மெய்யாம்

அண்ணப்பா என்றவளே சொன்னால் போதும்

அப்பனே அட்சரத்தில் பலிக்கும் பாரு

வன்னப்பா சத்தியுடைப் பூசை சொன்னேன்

வளமான சிவத்தினுடைப் பூசை சொன்னேன்

கண்ணப்பா விண்ணு பூசை சொல்லக் கேளு

கண்மணியே மங்நங்சிங் என்றே ஏத்தே

6

ஏத்தப்பா புட்பரி மளங்கள் சார்த்தி

என் மகனே கதம்பம் கத்தூரி சாத்து

வாத்தப்பா சங்கீதத் துடனே பூசி

வளமான விண்ணுவுக்குப் பூசி பூசி

போற்றப்பா மனம் அடங்கிப் பத்தியாகப்

போற்றவே விண்ணுவவர் கேட்டது ஈவார்

ஆற்றப்பா விட்டுணுவின் பூசை சொன்னேன்

அகார கெசமுகவன் பூசை கேளே

இரேசக பூசை[தொகு]

7

பாரப்பா ரேசகத்தின் பூசை கேளு

பண்பான ரேசகத்தின் ஆமென்று ஏத்தி

ஆரப்பா நைவேத்யம் கும்பகம் செய்

அப்பனே ரேசகத்தில் மனத்தை நாட்டு

வாரப்பா மனமது ரேசகமே யாச்சு

வளமான ரேசகந்தான் வசியம் ஆச்சு

நாரப்பா ரேசகத்தின் பூசை சொன்னேன்

நலமான பூரகத்தின் பூசை கேளே

பூரக பூசை[தொகு]

8

கேளப்பா மணிப் பூரகத்தில் மைந்தா

கெடியாக இம்மென்று கும்பித்து ஏத்து

வாளப்பா வகையாக நின்று கொண்டு

வளமான பூரகத்தில் தோத்ரம் பண்ணி

வாளப்பா வேண்டியவாம் வரங்கள் கேளு

வளமாக விண்ணுவரம் ஈவார் பாரு

ஆளப்பா பூரகத்தின் பூசை சொன்னேன்

அப்பனே கும்பகத்தின் பூசையாமே

கும்பக பூசை[தொகு]

9

ஆமப்பா கும்பகத்தின் உம்மென் நாடி

அப்பனே மனத்தைக் கும்பகத்தில் வைத்து

வாமப்பா பூசை நைவேத்யம் செய்து

வளமான கும்பகத்தை மனத்தால் வேண்டிக்

காமப்பா கும்பகத்தை வரங்கள் கேளு

கண்மணியே வேண்டு வரம் ஈவார் ஐயா

நாமப்பா சூரியன் தன் பூசை கேளு

நலமாக மங்குசிங் என்று சொல்லே

சூரிய பூசை[தொகு]

10

சொல்லப்பா சூரிய கும்பகமே செய்து

சொற்பெரிய பூசை நைவேத்யம் செய்தே

அல்லப்பா சாட்டாங்க சரணம் செய்தே

அப்பனே தோத்திரம் செய் கும்பகத்தை

மல்லப்பா அட்ட சவுபாக்யம் ஈவார்

அகத்தியர் தாம் கும்பகத்தில் வரங்கள் ஈவார்

வல்லப்பா சூரியன் தன் பூசை சொன்னேன்

வளமான சந்திரன் தன் பூசை கேளே

சந்திர பூசை[தொகு]

11

கேளப்பா யங் நங் என்று கும்பி

கெடியாகப் பால் பழம்பா வாசம் வைத்தே

ஆளப்பா தூபதீப நைவேத்யம் செய்

அப்பனே சந்திரனைத் தோத்திரித்து

வாளப்பா சோடச் சந்திரனில் நின்று

வளமான சந்திரனை வரங்கள் கேளு

நாளப்பா வேணவரம் ஈவார் ஐயா

நலமான சந்திரன் தன் மகிமை பாரே

சனி பூசை[தொகு]

12

பாரப்பா சனி பூசை சொல்லக் கேளு

பண்பான வங்கென்றும் சங்கென்றும் தான்

நாரப்பா மேருவிலே குந்திக் கொண்டு

நலமாகத் தோத்தரித்துப் பூசைசெய்நீ

வாரப்பா தூப நைவேத்யத் தோடு

வளமாகத் தோத்தரித்துப் பானம் செய்து

ஆரப்பா வேணவரம் கேட்டுக் கொண்டே

அப்பனே அட்சணத்தில் ஈவார் காணே
      • நூல் முற்றும்
"https://ta.wikisource.org/w/index.php?title=நந்தீசுரர்_பூசா_விதி&oldid=976086" இருந்து மீள்விக்கப்பட்டது