நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்/நபிகள் நாயகம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


நபிகள் நாயகம்

அவைத்தலைவர் அவர்களே! மெளல்விமார்களே! தாய்மார்களே! பெரியோர்களே! அன்பர்களே! உங்கள் அனைவருக்கும் இந்த மாலைப் பொழுதில் என்னுடைய தாழ்மையான வணக்கம்.

கும்பகோணத்தில் கூடியுள்ள பெருமக்களாகிய உங்கள் முன்பு, இன்றைய தினம் அகில இந்திய மீலாத் விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த விழாவிலே பங்கு பெறுகின்ற பேறு எனக்கும் கிடைத்தமை பற்றி அதிக மகிழ்ச்சி அடைகிறேன். நாயகம் அவர்களுடைய பிறந்த நாள் விழா நடப்பது குறித்து 45 ஆண்டுகளுக்கு முன்னே மாறுபட்ட கருத்தும் தோன்றியதுண்டு. மெளல்விமார்கள் அன்று அதை மறுத்தார்கள் பண்டிகைகளைப் போல இவ்விழாவைக் கொண்டாடக் கூடாது என்று.

முதன் முதலாக இந்த விழாவைக் கொண்டாடியது திருச்சிராப்பள்ளியில், 45 ஆண்டுகளுக்கு முன்னே. திருச்சிராப்பள்ளியில் பெரிய கடை வீதியில் பேகம் பள்ளி வாசலில் முதன் முதலாகக் கொண்டாடப்பெற்ற விழாவில், பங்கு பெற்ற நான், இந்த விழாவிலும் பங்கு பெறுவது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். நாயகம் அவர்களுக்குப் பிறந்த நாள் விழாவா? என்ற ஒரு கேள்வியும் கிளம்பியது அன்று. நாயகம் அவர்களுக்கும் பிறந்தநாள் விழாவா என்றால், அவர் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடக் கூடாது என்ற பொருளில் கேட்கப்பட்ட கேள்வி அது.

அவர்கட்கு அன்று நாங்கள் பதில் சொன்னோம். பிள்ளைகள் பிறந்த நாளைப் பெற்றோர்கள் கொண்டாடுவது ஒரு மரபு. பெற்றோர்களுடைய பிறந்த நாளைப் பிள்ளைகள் கொண்டாடுவது ஒரு வழக்கம். ஒரு நாட்டுத் தலைவன் பிறந்த நாளை அந்த நாட்டு மக்கள் கொண்டாடுவது ஒரு பழக்கம். ஒரு சமயத் தலைவர் பிறந்த நாளை அந்தச் சமயத்தைச் சார்ந்த மக்கள் எல்லாரும் கொண்டாடுவது ஒரு வழக்கம். ஒரு சேனைத் தலைவன் பிறந்த நாளை அச்சேனையைச் சார்ந்த போர் வீரர்கள் எல்லாரும் கொண்டாடுவது ஒரு பழக்கம். ஒன்றிற் சிறந்த ஒரு காரணத்திற்காக ஒருவருக்குப் பிறந்த நாள் விழாக் கொண்டாடுவது சரியாக இருக்குமானால், ஒரே ஒருவர் நாட்டின் தலைவராகவும், சமயத்தின் தலைவராகவும், சமூகத்தின் தலைவராகவும், அரசியல் தலைவராகவும், போர்வீரர்கள் தலைவராகவும் இருந்த நாயகம் அவர்கட்கு விழாக் கொண்டாடாமல் வேறு யாருக்கு விழாக் கொண்டாடுவது? என்று அன்று முழக்கினோம். எதிர்ப்பு ஒழிந்தது. நாம் மட்டும் இங்கு விழாக் கொண்டாடவில்லை. இன்று உலகம் முழுதும் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. கொண்டாடுவதின் நோக்கம் உத்தமன் பிறந்த நாள், உலகம் சிறந்த நாள் என்பதே.