நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/அடிமையை விடுவித்த உயர் பண்பு
செல்வந்தன்-ஏழை, முதலாளி-அடிமை என்ற வேறுபாடின்றி எல்லோரிடமும் அன்பும், சமத்துவமும் கொண்ட இயல்பு உடையவர்களாகப் பெருமானார் விளங்கினார்கள்.
இந்தச் சமத்துவ இயல்பினால், பெருமானார் உலகத்துக்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தார்கள்.
போரில் சிறை பட்டவர்களை, அடிமைகளாக்கி, அவர்களைப் பண்டமாற்றுப் பொருள்களைப் போல் விற்பனை செய்வது அரபு நாட்டில் அந்தக் காலத்தின் வழக்கமாயிருந்தது.
ஒரு சமயம், சிறை பிடித்து, அடிமையான ஜைதுப்னு ஹாரிதா என்பவரை விற்பனை செய்வதற்காகச் சந்தைக்குக் கொண்டு சென்றனர். அவரை, ஹக்கீம் இப்னு ஹஸ்லாம் என்பவர் விலைக்கு வாங்கி, தம் தந்தையின் சகோதரி கதீஜா நாயகியாருக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார்.
கதீஜா நாயகியாரோ, அந்த அடிமையைப் பெருமானாருக்குக் கொடுத்துவிட்டார்கள்.
பெருமானார் அவர்கள், உடனே ஜைதை அடிமையிலிருந்து விடுவித்து, "நீர் இங்கே இருக்க விரும்பினால் இருக்கலாம்: அல்லது உம் விருப்பம் போல் சுதந்திரமாக எங்கே வேண்டுமானாலும் போகலாம்” என்று கூறினார்கள். அவர்களுடைய உயர் பண்பால் உள்ளம் நெகிழ்ந்த ஜைது, பெருமானார் அவர்களை விட்டுப் பிரிய மனம் இல்லாதவராய், அவர்களின் காலடியிலே என்றும் இருந்துவிட்டார்.
ஜைது அடிமையான செய்தியை அறிந்த அவருடைய தந்தை, மகனை விடுவித்து அழைத்துப் போவதற்காகத் தேவையான பொருளை எடுத்துக் கொண்டு, தேடி வந்தார்.
அவர் மக்கா வந்ததும், தம் மகன் விடுதலை அடைந்த தகவல் தெரிய வந்தது. மகனைத் தம்மோடு வீட்டுக்கு வருமாறு அழைத்தார்.
“அருமைத் தந்தையே! நான் விற்கவும் வாங்கவும் முடியாதபடி, பெருமானார் அவர்களின் அடிமையாகி விட்டேன். மேலும், அவர்களின் மேன்மைக் குணங்கள், பெற்றோரின் அன்பையும், சொந்த வீட்டின் சுகத்தையும் மறக்கச் செய்து விட்டன!” என்று உள்ளம் கனியக் கூறி, தந்தையை அனுப்பி விட்டார் ஜைது.
அடிமையாயிருந்த ஜைதை, சுதந்திர மனிதனாக்கியதோடு அல்லாமல், தம் சொந்த மாமி மகள் ஜைனப் நாச்சியாரையும், அவருக்குத் திருமணம் செய்து வைத்தார்கள் பெருமானார்.