நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/ஆறுதலுக்காக வாய்த்த துணை
பிரமுகரான துபைல் தங்களோடு சேர்ந்த நிகழ்ச்சி, முஸ்லிம்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளித்ததோடு, துன்பத்தினால் வாடிப் போயிருந்த அவர்களுடைய உள்ளத்துக்குத் தெம்பை ஊட்டியது.
ஆனால், குறைஷிகளுக்கோ பொறாமைக் கனல் மூண்டெழுந்தது. விரோதமும், கோபமும் அதிகரித்துக் கொண்டிருந்தன.
பல வழிகளிலும் துன்பங்களை உண்டாக்கிக் கொண்டிருந்தனர். இடைவிடாமல் குறைஷிகள் இழைக்கும் இன்னல்களையும் உண்மைக்கு விரோதமாக, மக்கள் பிடிவாதத்தோடு இருப்பதையும் எண்ணி, எண்ணி பெருமானார் அவர்கள் வருந்துவார்கள். அவ்வாறு அவர்கள் வருந்தும்போது ஆறுதல் கூற அவர்களுக்கு, வாழ்க்கைத் துணையும் இல்லை.
எனினும், வீட்டுக்கு வந்தால் சிறிது ஆறுதல் உண்டாகும்.
பெருமானார் அவர்களின் மகள் பாத்திமா பீவி சிறு வயதினர். தங்களின் தந்தையை மக்கள் கொடுமைப் படுத்துவதை அறிந்து அழுவார்கள். மகள் அழுவதைக் காண மனம் பொறாத பெருமானார் அவர்களும் கவலையுறுவார்கள்.
ஆனால் ஆண்டவன் மீதுள்ள நம்பிக்கை அதிகரித்துக் கொண்டே இருந்தது.
இவ்வாறு இருக்கும் போது, பெருமானார் அவர்களின் நலத்தையே பெரிதாகக் கருதும் நெருங்கிய தோழர் அபூபக்கர் அவர்கள், பெருமானார் அவர்கள் தனிமையாயிருப்பதை உத்தேசித்துத் தம்முடைய மகள் ஆயிஷாவைத் திருமணம் செய்து கொள்ளும்படி பெருமானார் அவர்களை வேண்டிக் கொண்டார்கள்.
பெருமானார் அவர்களும் அதற்கு இசைந்தார்கள். திருமணம் நிறைவேறியது. ஆயிஷா அவர்கள் மிகச் சிறு வயதினர்.
இந்த நிகழ்ச்சியினால், அபூபக்கர் அவர்களுக்கும் பெருமானார் அவர்களுக்கும் இருந்த இயல்பான தோழமை மேலும் உறுதியான நிலையை அடைந்தது.