நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/இரக்கம் உள்ளவர்களை ஆண்டவன் நேசிக்கிறான்
தய்யி என்னும் பெயருடைய ஒரு கூட்டத்தினர், ஏமன் தேசத்தில் செல்வாக்கோடு வாழ்ந்து வந்தார்கள்.
அவர்களின் தூண்டுதலால், இஸ்லாத்துக்கு விரோதமாகக் கலகமும் குழப்பமும் ஏற்பட்டுக் கொண்டிருந்தன.
அந்தக் குழப்பத்தை அடக்குவதற்காகப் பெருமானார் அவர்கள், அலி அவர்களின் தலைமையில் ஒரு சிறிய படையை அங்கே அனுப்பி வைத்தார்கள்.
அப்பொழுது அதீ என்ற கிறிஸ்தவர் அக்கூட்டத்தாருக்குத் தலைவராக இருந்தார். அவர் ஒரு சிற்றரசர் போலவே இருந்தார். அவருடைய தந்தை ஹாத்திம் என்பவர். தயாள சிந்தை உள்ளவர். கொடை வள்ளல் என்று பெயர் பெற்றவர். கொடைக்கு ஓர் உவமானமாக மக்களிடையே சொல்லப்படுபவர். முஸ்லிம் படை ஏமனுக்கு அருகில் வருவதை அறிந்ததும் ஹாத்திம் மகன் அதி பயந்து ஷாம் தேசத்துக்கு ஓடிவிட்டார்.
ஹலரத் அலி அக்கூட்டத்தாரை எளிதில் வெற்றி கொண்டார்கள். அவர்களுடைய பொருள்களைக் கைப்பற்றி பலரைச் சிறைப் படுத்தினார்கள். சிறைப்பட்டவர்களை அன்புடனும் மரியாதையுடனும் நடத்தி மதீனாவுக்குக் கொண்டு வந்தார்கள்.
சிறைப்பட்டவர்களில் ஹாத்திமுடைய மகளும், அதியின் சகோதரியுமான ஸஃப்பானாவும் ஒருவர்.
ஸஃப்பானா பெருமானார் அவர்களைக் கண்டதும், "ஆண்டவனுடைய தூதரே, என்னுடைய தந்தையோ காலமாகி விட்டார். இப்பொழுது எனக்குத் துணையான ஒரே சகோதரனும் முஸ்லிம் படை வருவதை அறிந்து, அஞ்சி ஓடி விட்டான். ஆகையால், என்னை மீட்பதற்கு யாருமே இல்லை. என்னை விடுதலை செய்வதற்காக உங்களுடைய கருணை உள்ளத்திடம் நான் ஆதரவு தேடுகிறேன். என் தந்தையோ புகழ் மிக்கவர்; எங்கள் கூட்டத்தாரில் அரசருக்குச் சமமானவராக அவர் வாழ்ந்தார். சிறை பட்டவர்கள் எத்தனையோ பேரைப் பணம் கொடுத்து என் தந்தை மீட்டிருக்கிறார். பெண்களின் கெளரவத்தைப் பாதுகாத்திருக்கிறார். ஏழைகளை ஆதரித்திருக்கிறார். துன்பத்தில் தோய்ந்தவர்களுக்கு ஆறுதல் அளித்திருக்கிறார். தம்மிடம் வந்து கேட்டவர்களுக்கு இல்லை என்று அவர் சொன்னதே கிடையாது; நான் அத்தகைய ஹாத்திமின் மகள்” என்றாள்.
பெருமானார் அவர்கள் ஸஃப்பானாவிடம், “ஒரு முஸ்லிமிடம் இருக்க வேண்டிய நற்குணங்கள் யாவும் உன்னுடைய தந்தையிடம் இருந்தன. விக்கிரக வணக்கத்தில் காலம் கழித்த ஒருவரின் ஆத்மாவின் மீது, இரக்கம் காட்டுமாறு ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்வதற்கு எனக்கு அனுமதி இருந்தால், ஹாத்திமுடைய ஆத்மாவிடம் கருணை காட்டும்படி நான் ஆண்டவனிடம் பிரார்த்திப்பேன்” என்று கூறிவிட்டு, சுற்றிலுமுள்ள முஸ்லிம்களை நோக்கி, “ஹாத்திமுடைய மகள் சுதந்திரமாகி விட்டாள். அவருடைய தந்தை தயாள சிந்தையும், இரக்கமும் உள்ளவர். ஆண்டவன் இரக்கமுள்ளவர்களை நேசிக்கிறான். அவர்களுக்கு வெகுமதி அளிக்கிறான்” என்று சொன்னார்கள்.
ஸஃப்பானா விடுவிக்கப்பட்டாள். அவள் பெருமானார் அவர்களிடம், “என் குடும்பத்தினரும், என்னைச் சேர்ந்தவர்களும் சிறைபட்டிருப்பதனால், நானும் சிறையில் இருப்பதே முறை. அவர்களைக் கொல்வதற்கு உத்தரவிடுவதானால், முதலில் என்னை வெட்டும் படி உத்தரவிடுங்கள். அவர்கள் எல்லோரும் இறந்து போய், நான் மட்டும் உயிரோடு இருக்கவும் விரும்பவில்லை” என்று பணிவோடு கூறினாள்.
அதைக் கேட்டதும் பெருமானார் அவர்கள், அந்தக் கூட்டத்தார் எல்லோரையும் விடுவித்து, அவர்களுக்குப் போதிய பொருள் கொடுத்து அவர்களைக் கெளரவமாக அனுப்பி வைக்கும்படி கட்டளையிட்டார்கள்.
ஸஃப்பானாவும், அவள் குடும்பத்தினரும் ஊருக்குத் திரும்பினார்கள்.
ஸஃப்பானா தன் சகோதரன் அதீயைத் தேடி, ஷாம் தேசத்துக்குச் சென்றாள். அங்கே அவரைக் கண்டு, “பெருமானார் அவர்கள் முன்னிலையில், நீர் கூடிய விரைவில் செல்ல வேண்டும். நபி என்ற முறையிலும், அரசர் என்ற முறையிலும் எந்த நிலையிலும் அவர்களைக் காண்பது நன்மை தரும்.” என்று கூறியதோடு நடந்தவற்றையும், பெருமானார் அவர்களின் சிறப்பு மிக்க குணங்களையும் விவரமாகக் கூறினாள்.
தன் சகோதரி கூறியதைக் கேட்ட அதீ, அவளையும் உடன் அழைத்துக் கொண்டு, உடனே மதீனாவுக்குப் போய், பெருமானார் அவர்களைக் கண்டு இஸ்லாத்தைத் தழுவினார்.
அதீயின் முயற்சியினால் பிறகு அவருடைய கூட்டத்தார்களும் முஸ்லிம் ஆனார்கள்.