நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/உண்மைக்குக் கிடைத்த வெற்றி
பெருமானார் அவர்களுக்கு, ஆண்டவன் முன் அறிவித்தபடி, மகத்தான இவ்வெற்றிக்காக தொழுவதற்கு உடனே கஃபாவுக்குச் சென்று, ஏழுமுறை “தவாபு" செய்து இடம் சுற்றி வந்தார்கள்.
கஃபாவைச் சுற்றிலும் வைக்கப்பட்டிருந்த முந்நூற்று அறுபது விக்கிரகங்களையும், ஒவ்வொன்றாகத் தங்கள் கையிலிருந்த கம்பால் கீழே தள்ளிச் சாய்த்தார்கள்.
“உண்மை வந்தது, பொய் அழிந்து போயிற்று. நிச்சயமாக பொய் அழியக் கூடியதுதான்” என்ற கருத்து மிக்க திருக்குர்ஆன் வாக்கியத்தைக் கூறியவாறே அவற்றைத் தட்டினார்கள்.
அங்கே இருந்த விக்கிரங்கள் அனைத்திலும் 'ஹுபல்' என்பது மிகப் பெரியது. மக்களுக்கு அதனிடம் மிகுந்த நம்பிக்கை உண்டு. அந்த விக்கிரகம் உயரமான ஓர் இடத்தில் அமைக்கப்பட்டிருந்தது. பெருமானார் அவர்களின் கைக் கம்புக்கு எட்டாத தூரத்தில் அது இருந்ததால், அலீ அவர்கள் உயரத்தில் ஏறி நின்று, அதைக் கீழே சாய்த்தார்கள்.
கஃபாவின் சுவர் முழுவதும் நபிமார்கள், வானவர்கள் ஆகியோரின் உருவச் சித்திரங்கள் வரையப்பட்டிருந்தன. அவற்றையெல்லாம் அழித்துக் கழுவுமாறு பெருமானார் அவர்கள் கட்டளையிட்டார்கள்.
ஒரே ஆண்டவனுடைய வணக்கத்துக்காக ஹலரத் இப்ராகிம் நபி அவர்கள் ஏற்படுத்தியிருந்தவாறு, கஃபாவைத் தூய்மையுடயதாக ஆக்கச் செய்தார்கள்.
ஹலரத் பிலால் கஃபாவின் உச்சியில் ஏறி, பாங்கு (தொழுகைக்கு அழைத்தல்) சொன்னார்கள்.
அதன் பின், கஃபாவிலிருந்து முப்பது அடி தொலைவிலுள்ள மகாமே இப்ராஹீம் என்னும் இடத்தில் நின்று பெருமானார் இரண்டு முறை தொழுதார்கள்.
கஃபாவின் மீது ஏறி நின்று கொண்டு, “அல்லாஹூ அக்பர்” என இன்று முழங்கிய அந்தக் கறுப்பு பிலாலை (ரலி) முன்பு குறைஷிகள் என்ன பாடுபடுத்தினார்கள்!
இப்பொழுது அவர் கஃபாவின் மீது ஏறியதைக் கண்டதும், குறைஷிகளுக்கு உள்ளுற உண்டான வருத்தத்துக்கு அளவில்லை.