நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/எவ்வித இடையூறும் நேரிடாது
பெருமானார் அவர்கள் ஆண்டவனுடைய தூதர் என்பதை முதன் முதலாக ஒப்புக்கொண்டவர்கள் கதீஜா நாயகியார்தாம்! ஆண்டவன் கட்டளைகளில் விசுவாசம் கொண்டு, விக்கிரக வணக்கத்தைக் கைவிட்டு, ஒரே ஆண்டவனுடைய வணக்கத்தில் பெருமானார் அவர்களுடன் முதன்முதலில் சேர்ந்தவரும் அவர்களே!
நபி பெருமானார், தங்களுக்கு அறிவிக்கப்பட்ட செய்திகளை ஆரம்பத்தில், மிகவும் நெருங்கிப் பழகியவர்களிடம் மட்டுமே அறிவித்தார்கள்.
பெருமானார் அவர்கள் தீர்க்கதரிசி என்பதை முதன்முதலில் ஏற்றுக்கொண்ட இருவர் கதீஜா நாயகியாரும், அதன்பின், பெருமானாரின் பெரிய தந்தை அபூதாலிப் அவர்களின் குமாரரான பத்து வயதுள்ள அலி அவர்களும் ஆவார்கள்.
பெருமானார் அவர்கள் கதீஜா நாயகியாருடனும், அலி அவர்களுடனும் தொழுவார்கள்.
இவ்வாறு, அவர்கள் தொழுகையில் ஈடுபட்டிருக்கும் போது, அபூதாலிப் தற்செயலாக அங்கே வந்துவிட்டனர். அவர்களின் புதுவிதத் தொழுகையைக் கண்டு, பெருமானார் அவர்களிடம், “என் அருமைச் சகோதரரின் குமாரரே! நீர் எந்த மதத்தைப் பின்பற்றுகிறீர்?” என்று கேட்டார்.
“இதுவே இறைவனின் மார்க்கம். அவனுடைய தேவ தூதர்கள், அவனுடைய தீர்க்கதரிசிகள், நம்முடைய மூதாதையான ஹலரத் இப்ராஹீம் ஆகியோர் முதலான எல்லோருக்கும் உரித்தான மார்க்கமாக இருக்கும். உண்மையில், என் பக்கம் மக்களை அழைத்துச் செல்வதற்காக, ஆண்டவன் என்னை அவனுடைய அடியார்களுக்கு மத்தியிலே அனுப்பியிருக்கிறான். என் அருமைப் பெரிய தந்தையே! இப்படி சத்தியத்தின் பால் அழைக்கப் படுவதற்குத் தாங்களும் தகுதியானவர்களே. தங்களையும் சன்மார்க்கத்துக்கு அழைக்க வேண்டியது அவசியம். தாங்கள் இம்மார்க்கத்தைப் பின்பற்றி, இது பரவுவதற்கு வேண்டிய உதவிகளை அளிக்க வேண்டும்” என்று பெருமானார் அவர்கள் கூறினார்கள்.
அபூதாலிப் அவர்கள், “என்னுடைய மூதாதையர் தழுவி வந்த மதத்தைக் கைவிட எனக்குப் பிரியம் இல்லை; என்றாலும் இறைவன் பெயரில் சத்தியமாக, நான் உயிருடன் இருக்கும் வரை, உமக்கு எவ்வித இடையூறும் நேரிடாமல் பார்த்துக் கொள்வேன்” என்று கூறினார்.
பிறகு, அலி அவர்களை நோக்கி, "அலியே! நீர் எம் மதத்தைத் தழுவியிருக்கிறீர்?” என்று கேட்டார்.
“நான் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் உண்மையாய் நம்புகிறேன். நான் நாயகத்துடனேயே இருப்பேன்” என்று சொன்னார்.
அதைக்கேட்டதும் அபூதாலிப் “நீர் அவருடனேயே இரும். உம்மை அவர் நேர் வழியில் செலுத்துவார்” என்று கூறிப் போய் விட்டார்.