நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/ஒத்துழைப்பும் நட்புறவும்

விக்கிமூலம் இலிருந்து

70. ஒத்துழைப்பும் நட்புறவும்

விரோதிகளுக்கு மத்தியில் முஸ்லிம்கள் வாழ்ந்து வருவதால், உள்நாட்டில் சமாதானத்தை நிலை நிறுத்தவும், குறைஷிகள் மற்றும் அயல் நாட்டினர் மதீனாவைக் கைப்பற்றாமல் பாதுகாக்கவும் வேண்டிய பொறுப்பு பெருமானார் அவர்களுக்கு இருந்தது.

மிகுந்த தீர்க்க தரிசனத்தோடும் மதிநுட்பத்தோடும் பெருமானார் அவர்கள் மதீனாவில் உள்ள எல்லாப் பிரிவினரையும் ஓர் உடன்படிக்கையின் மூலம் கட்டுப்பாடு செய்தார்கள். அதன் சுருக்கம்:

அருளாளனும் அன்புடையோனுமாகிய ஆண்டவன் திருப்பெயரை முன்னிட்டு, முஹம்மது நபி (ஸல்) அவர்களால், முஸ்லிம்களுக்கும், முஸ்லிம்களோடு ஒத்துழைக்க விரும்புகின்ற மற்ற எல்லா மக்களுக்கும் இடையேயுள்ள உடன்படிக்கையாவது:

மேலே குறிப்பிட்ட எல்லோரும் ஒரே நாட்டினராகக் கருதப் படுவார்கள். யூதர்கள் தங்கள் மதத்தைப் பின்பற்றுவதில் அவர்களுக்கு முழுச் சுதந்திரம் உண்டு. அவர்களுடைய மத சம்பந்தமான விஷயங்களில் எவ்விதத் தடையும் ஏற்படாது. யூதர்களும், முஸ்லிம்களும் நட்புறவோடு இருந்து வர வேண்டும். யூதர்களுடனோ, முஸ்லிம்களுடனோ அந்நியர்கள் சண்டையிட முற்பட்டால், இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் உதவி புரிய வேண்டும். மதீனாவை அந்நியர்கள் தாக்க முற்படுவார்களே ஆனால், இரு கட்சியினரும் ஒன்று சேர்ந்து கொள்ள வேண்டும். சமாதானம் அல்லது சண்டை எதுவானாலும் எல்லோரும் சேர்ந்தே செய்ய வேண்டும். நம்முடன் சேர்ந்து ஒற்றுமையோடு இருக்க விரும்புகின்ற யூதர்களின் உடைமைகளைக் காப்பாற்றவும், அந்நியர்கள் அவர்களைத் தாக்காதபடி, பாதுகாக்கவும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம். யூதர்கள் சகல விதமான நிந்தனைகளிலிருந்து காப்பாற்றப் படுவார்கள். நம் மக்களைப் போலவே, அவர்களுக்கு நம்முடைய உதவியைப் பெற சம உரிமை உண்டு. யூதர்களின் பாதுகாப்பில் இருக்கின்ற மற்ற மக்களின் உடைமைகளும் பாதுகாக்கப்படும். குற்றம் புரிந்தோர் யூதராயிருந்தாலும், முஸ்லிமாயிருந்தாலும் தண்டனைக்கு உட்படுவார். குற்றவாளி செல்வரானாலும், ஏழையானாலும் தண்டனை ஒரே மாதிரியாகவே அளிக்கப்படும். குற்றம் புரிந்தவர்களை, அவர்களுடைய நெருங்கிய உறவினர்கள் ஆதரிக்கக் கூடாது. இந்த உடன்படிக்கையின் மூலம் முன்னிருந்த விரோதங்கள் எல்லாம் நீங்கிவிட்டதாகக் கருதப்படும். மதீனாவுக்குள் நுழைகின்ற ஒவ்வொருவருக்கும் இந்த உடன்படிக்கையில் உரிமை உண்டு”.

மேலே கண்ட நிபந்தனைகளைத் தவிர, உள்நாட்டு ஒழுங்கு முறை பற்றிச் சில பிரிவுகளைக் குறிப்பிட்டு விட்டு, இறுதியில் குறிப்பிடுவதாவது: இநத உடன்படிக்கையை ஏற்றுக் கொள்பவர்களுக்குள் ஏற்படும் ஆட்சேபணைகள், ஆண்டவனுக்குப் பின் நபி அவர்களின் தீர்மானத்துக்கு விடப்படும். இந்தச் சாசனத்தை, முஸ்லிம்களின் விரோதிகள் உட்பட மதீனாவில் இருக்கின்ற அனைவரும் ஒப்புக் கொண்டனர்.

இதற்கு முன்னர், அரேபியர்களுக்குள் நியாய விசாரணை என்பதே இல்லாமல் இருந்தது. ஒருவருக்குப் பிறரால் கஷ்ட நஷ்டம் உண்டானால், அவர் தம் வலிமையால் அல்லது தம் உறவினர்களின் பலத்தால் மட்டும் அதைத் தீர்த்துக் கொள்ள வேண்டியதாயிருந்தது. இந்த உடன்படிக்கையினால், அந்த வழக்கம் அடியோடு மறைந்தது. அதனால் பெருமானார் அவர்கள் நபி என்ற முறையினாலும், மக்களுக்கும் அவர்களுக்கும் ஏற்பட்ட உடன்பாட்டிலும், மேலான நீதிபதியாகவும் ஆனார்கள்.