நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/கேடயமாக நின்று காத்தனர்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

88. கேடயமாக நின்று காத்தனர்

குறைஷிகள் வீரர்களுள் பெயர் பெற்ற அப்துல்லா இப்னு கமீயா என்பவர் முஸ்லிம் அணிகளை, வாளினால் வெட்டிக் கொண்டே முன்னேறி, நபி பெருமானாரின் சமீபமாக வந்து, கையிலிருந்த வாளை பெருமானாருக்கு எதிராக வீசினார். அந்த வாள் பெருமானார் அவர்களின் கவசத்தில் பட்டுக் கவசம் உடைந்தது. அதன் இரண்டு துண்டுகள் முகத்திற்குள் புகுந்தன. பெருமானார் அவர்கள் தலையிலும் காயம் பட்டு, ஒரு பல்லும் உடைந்தது. அதே சமயம் நாலா பக்கங்களிலிருந்தும் பெருமானாரைக் குறி வைத்து வாள்கள் வீசப்பட்டன. அம்புகள் எய்யப்பட்டன.

அதைக் கண்ட முஸ்லிம் வீரர்கள் பெருமானார் அவர்களைச் சுற்றி வளைத்து நின்று கொண்டார்கள்.

அபூ துஜானா நாயகத்தை மறைத்து நின்று கொண்டு, தம் உடலையே அவர்களுக்குக் கேடயமாக்கிக் கொண்டார். எதிரிகளின் அம்புகள் அவருடைய முதுகிலேயே பட்டுக் கொண்டிருந்தன.

தல்ஹா அவர்கள் எதிரிகளின் வாள் வீச்சுக்களைத் தம் கையினாலேயே தடுத்துக் கொண்டிருந்தனர். அத்னால், அவருடைய ஒரு கை வெட்டப்பட்டுக் கீழே விழுந்தது. இறுதியாக, குறைஷிகளின் பக்கமிருந்து இரண்டு வாள்கள் ஒரே சமயத்தில் அவர்கள் மீது வீசப்படவே, அவர்கள் மூர்ச்சித்துக் கீழே விழுந்தார்கள்.

உடனே அபூபக்கர் அவர்கள் சென்று, முகத்தில் தண்ணீர் தெளித்தார்கள்.

சிறிது நேரத்தில் மூர்ச்சை தெளிந்த தல்ஹா அவர்கள், அபூபக்கர் அவர்களிடம், “நாயகத்தின் நிலைமை எப்படி இருக்கிறது?” என்று கேட்டார்கள்.

“பெருமானார் அவர்கள் நலமாக இருக்கிறார்கள். அவர்களே என்னைத் தங்களிடம் அனுப்பி வைத்தார்கள்” என்று கூறினார்கள் அபூபக்கர் அவர்கள்.  அவ்வார்த்தைகளைக் கேட்டதும் தல்ஹா, “புகழ் எல்லாம் அல்லாஹ்வுக்கே. இந்த நற்செய்திக்குப் பின் எத்தகைய துன்பம் நேரிட்ட போதிலும், எனக்கு அது எளிதாகவே இருக்கும்” என்று முகமலர்ச்சியோடு கூறினார்கள்.

பெருமனாரை நோக்கி, குறைஷிகள் அம்புகளை எய்து கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது பெருமானாரின் திருவாயிலிருந்து “ஆண்டவனே என்னுடைய சமூகத்தார்களை மன்னிப்பாயாக! அவர்கள் அறியாமையில் ஆழ்ந்து கிடக்கிறார்கள்” என்ற சொற்கள்தாம் வந்து கொண்டிருந்தன.

அனஸ் அவர்களின் நெருங்கிய உறவினரான அபூதல்ஹா என்பவர் தம்முடைய கேடயத்தைக் கொண்டு பெருமானார் முகத்தின் முன் பிடித்து. எதிரிகளின் அம்பு தாக்காதவாறு மறைத்துக் கொண்டனர். பெருமானார் அவர்கள் எதிரிகளின் பக்கமாக தங்கள் தலையை உயர்த்திப் பார்த்தார்கள். அப்பொழுது அபூதல்ஹா, பெருமானார் அவர்களிடம் “தாங்கள், தலையை உயர்த்தாமல் இருக்க வேண்டும். உயர்த்தினால் அம்புகள் பாயலாம். என்னுடைய மார்பை உங்களுக்கு முன்னே வைத்திருக்கிறேன்” என்று கூறினார்.