நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/கொடுமையான உடன்படிக்கை

விக்கிமூலம் இலிருந்து

39. கொடுமையான உடன்படிக்கை

வீரத் தன்மையும், அறிவுக் கூர்மையும் நிறைந்த உமர் அவர்களும், குறைஷிகளின் மதிப்பைப் பெற்றிருந்த வீரர் ஹம்ஸா அவர்களும் இஸ்லாத்தைத் தழுவியது, மக்காவில் இருந்த குறைஷிகளுக்கு இடி விழுந்தது போலாயிற்று.

மேலும், பலர் இஸ்லாத்தைத் தழுவினார்கள். இஸ்லாம் வளர்ந்து கொண்டே வந்தது. முஸ்லிம்களின் தொகையோ நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருந்தது.

இவற்றைக் கண்ட குறைஷிகளுக்கு மனம் பொறுக்கவில்லை. அவர்கள் கைக்கொண்ட முயற்சிகள் யாவும் வீணாயின.

எனினும், பெருமானார் அவர்கள் குடும்பத்தாரில் பலர் இஸ்லாத்தைத் தழுவவில்லை. ஆனாலும் அவர்கள் பெருமானார் அவர்களிடம் அபிமானம் கொண்டு உதவி புரிந்து வந்தார்கள். அதுவே தங்களுடைய நோக்கம் நிறைவேறாததற்குக் காரணம் என்பதைக் குறைஷிகள் உணர்ந்தார்கள்.

எனவே, பெருமானார் அவர்களின் குடும்பத்தினரைக் கட்டுப்படுத்தி வைத்துவிட்டால், தங்களுடைய நோக்கம் ஈடேறும் என்று குறைஷிகள் கருதினார்கள்.

எல்லோரும் ஒன்று கூடி, ஓர் உடன்படிக்கை செய்தார்கள்.

அந்த உடன்படிக்கை கீழ்க் கண்டவாறு:

“முஹம்மதைக் கொலை செய்யப்படுவதற்காக, அவருடைய குடும்பத்தாரான பனூ ஹாஷிம்கள், அவரை நம்மிடம் ஒப்படைக்க வேண்டும், அவ்வாறு செய்யாவிடில், பனூ ஹாஷிம் குடும்பத்தினரோடு குறைஷிகள் எவரும் நட்புறவு வைத்துக் கொள்ளக் கூடாது. அவர்களிடமிருந்து எதையும் வாங்கவோ, கொடுக்கவோ கூடாது. அவர்களுடன் சேரவும் கூடாது. அவர்களுக்கு உணவுப் பொருள்கள் கிடைப்பதற்கு இடம் கொடுக்கவும் கூடாது”.

இவ்வாறு எழுதி கஃபாவின் முன் தொங்க விட்டனர். அதை அறிந்த அபூதாலிப் அவர்கள், வேறு வழி இல்லாமல் தங்கள் குடும்பத்தினர் அனைவரையும் கூட்டிக் கொண்டு, மக்காவுக்கு அருகில் உள்ள தமக்குச் சொந்தமான பள்ளத்தாக்கில் தங்கினார்கள்.

அங்கே உணவு கிடைக்காமல் இலை, தழை, குழைகளை உண்டார்கள். பசியினால் குழந்தைகள் வீறிட்டு அழுதன. அந்த அழுகையை வெளியேயிருந்து கேட்டுக் குறைஷிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.