நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/கொடுமையும் துன்பமும் சூழ்ந்தது
நபிகள் நாயகம் அவர்களின் பிரச்சாரத்தால், ஆரம்பத்தில் அவர்களைப் பின் பற்றி இஸ்லாத்தில் சேர்ந்த செல்வர்கள் ஒரு சிலரே.
மிகுதியானவர்கள் ஏழைகளே. அவர்கள் ஆடம்பரம் இல்லாதவர்கள். அத்தகைய மக்களைக் கூட்டிக்கொண்டு பெருமானார் அவர்கள் கஃபாவுக்குப் போனால், குறைஷி சமூகச் செல்வந்தர்கள், அவர்களை அலட்சியமாகக் கருதி ஏளனமாக நகைப்பார்கள்.
ஆனால், அவர்கள் ஏழைகளாக இருந்ததால்தான் உண்மை, விசுவாசம், நல்ல கொள்கை-என்னும் செல்வம் அவர்களுக்கு எளிதில் கிட்டியது. அவர்களுடைய உள்ளங்கள் செல்வத்தாலும், மமதையாலும், மற்ற உலகத் தொடர்புகளாலும் மாசு படாமல் பரிசுத்தமாக இருந்ததால்தான் உண்மையின் ஒளியானது அவற்றின் மீது பிரதிபலித்தது.
பெருமானார் அவர்களுக்கு முன்னர், எத்தனையோ தீர்க்கதரிசிகள் தோன்றியுள்ளனர். அவர்களையும் முதன்முதலில் பின்பற்றியவர்கள் ஏழைகளே!
ஹலரத் ஈஸா நபி அவர்களிடம் ஆரம்பத்தில் விசுவாசம் கொண்டவர்கள் செம்படவர்கள் என்னும் மீன் பிடிப்பவர்களே!
ஹலரத் நூஹ் நபி அவர்களையும் முதலில் ஒப்புக் கொண்டவர்கள் ஏழைகளே!
அத்தகைய ஏழை முஸ்லிம்களை, மக்கா வாழ் குறைஷிகள் சொல்ல முடியாத துன்பத்திற்கு ஆளாக்கினார்கள். அவர்கள் செய்த கொடுமைகளுக்கு அளவே இல்லை; விவரிக்க இயலாத தொல்லைகள்.
அத்தகைய கொடுமைகளுக்கு ஆளான ஆண்களும், பெண்களும் பலர். ஆயினும் அவர்கள் துன்பங்களைச் சகித்துக் கொண்டு, கொள்கையில் உறுதியோடு திகழ்ந்தார்கள்.