நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/கொள்கையில் தளராத உறுதி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

27. கொள்கையில் தளராத உறுதி

விக்கிரக வணக்கத்தைப் பற்றி பெருமானார் அவர்கள் பகிரங்கமாகக் கண்டனம் செய்வது, குறைஷிகளுக்கு மிகுந்த கோபத்தையும், வருத்தத்தையும் உண்டாக்கிற்று.

மக்காவிலுள்ள கஃபாவை குறைஷிகள் மிகவும் புனிதத் தலமாகக் கொண்டாடி வந்தார்கள். அதன் மேற்பார்வை அவர்களிடம் இருந்ததால், அரேபியா முழுதும் மிகுந்த கெளரவமும் மதிப்பும் அவர்களுக்கு ஏற்பட்டிருந்தது. விக்கிரக வணக்கம் இருந்தால்தான், தங்களுக்கு அந்தக் கெளரவம் நிலைத்திருக்கும் என்று குறைஷிகள் கருதினார்கள்.

மேலும், வெகு காலமாகவே விக்கிரக வணக்கத்திலே அவர்கள் ஈடுபட்டு வந்ததால், அவர்கள் மனத்திலே அது ஆழமாகப் பதிந்து விட்டது. அதைக் கைவிட்டு விட்டால், தங்களுக்கு மிகுந்த தீமை உண்டாகும் என்ற அச்சமும் அவர்களிடையே இருந்தது.

இக்காரணங்களினால், பெருமானார் அவர்கள், விக்கிரக வணக்கத்தைக் கண்டித்துப் பேசுவதை அவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

அவர்கள் அனைவரும் ஒன்று கூடி, பெருமானார் அவர்களின் பெரிய தந்தை அபூதாலிப் அவர்களிடம் சென்று:

“உங்கள் வயதுக்கும், கெளரவத்துக்கும் நாங்கள் மதிப்பு வைத்துள்ளோம். ஆனால், அதற்கும் ஓர் எல்லை உண்டு. உங்கள் தம்பியின் குமாரர் நம்முடைய தெய்வங்களை வெறுக்கிறார். நம் முன்னோர்களை இகழ்ந்து பழிக்கிறார். அவற்றை நாங்கள் பொறுத்துக் கொள்ள இயலாது இனி மேலும் அவர் அவ்வாறு செய்யாமல் தடுத்து நிறுத்துங்கள். அல்லது அவருடன் நீங்களும் சேர்ந்து கொள்ளுங்கள். அவ்வாறு சேர்ந்தால், உங்கள் இருவருடனும் போரிட்டு நம் இரு கட்சிகளில் ஒரு கட்சி அழியும் வரை நாங்கள் ஓய மாட்டோம்” எனக் கூறிச் சென்றனர்.

அபூதாலிபுக்கு இது மிகவும் கவலையை உண்டாக்கிற்று. சமூகத்தாரைப் பகைத்துக் கொள்ளவும் விரும்பவில்லை. அதே சமயம் பெருமானார் அவர்களைக் கை விடவும் மனம் இல்லை.

இந்நிலையில் பெருமானாரை அழைத்து, குறைஷிகள் கூறியதை விவரித்து,"உம்முடைய புதிய கொள்கைகளைக் கைவிட்டு விட்டு, உம் உயிரையும் காப்பாற்றிக் கொள்ளும்; என் உயிரையும் காப்பாற்றும்!" என வேண்டிக்கொண்டார்.

“என் அருமைப் பெரிய தந்தையே, நீங்கள் எனக்கு உதவியாயிருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, எனக்கு உண்டான இம் முக்கிய கடமையை நான் ஒருபோதும் கைவிட இயலாது. என்னைப் படைத்து, பாதுகாத்து, நபித்துவம் அருளிய ஆண்டவன் இட்ட கட்டளைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்வேன். அவர்கள் வணங்கும் விக்கிரகங்களை நான் ஏற்க மாட்டேன். அவற்றுக்கு எல்வித சக்தியும் இல்லை, என்ற உண்மையை அவர்களுக்கு விளக்கிக் கூறுவேன். அவர்கள் விருப்பம் போல் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்.

“பெரிய தந்தையே! என்னுடைய வலது கையில் சூரியனையும், இடது கையில் சந்திரனையும் வைத்து, இந்தப் பணியை விட்டு விடும்படி அவர்கள் கோரிய போதிலும், நான் ஒரு போதும் கை விடுவதாயில்லை ஆண்டவன் தன்னுடைய அற்புத ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும். அல்லது நான் இம்முயற்சியில் உயிர் துறக்க வேண்டும். அதுவரை நான், என் கொள்கையை விடுவதாயில்லை. எந்த ஆண்டவனுடைய கட்டளையை, நான் நிறைவேற்றுகிறேனோ, அவன் எனக்கு நிச்சயமாக உதவி புரிவான். அவர்களுடைய தீமைகளிலிருந்து என்னைக் காப்பாற்றுவான் என்ற முழு நம்பிக்கை எனக்கு உண்டு” என்று கூறினார்கள்.

அதைக் கேட்ட அபூதாலிப்;"என் அருமைச் சகோதரர் குமாரரே! நீர் எதற்கும் அஞ்சவேண்டாம். உம்முடைய பணியைத் தொடர்ந்து செய்யும்; எவ்விதத்திலும் உமக்குத் தீங்கு நேரிடுவதை நான் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன். நீர் உண்மையே உருவானவர்! ஆண்டவனுடைய முழு நம்பிக்கைக்கு உரித்தானவர்! உம்முடைய கொள்கையானது இதர கொள்கைகளைக் காட்டிலும் சிறப்பாக இருக்கிறது” என்று கூறினார்.

அதன் பின்னர், நாயகப் பெருந்தகை முன்னிலும் பன்மடங்கு, பகிரங்கமாக மக்களுக்குப் போதனை செய்யலானார்கள்.