நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/சந்தேகம் தெளிதல்
பனூ ஸஃது என்னும் முக்கியமான கோத்திரத்தார் தங்களுடைய பிரதிநிதியாக, லிமாமுப்னு தஃலபா என்பவரைப் பெருமானார் அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள்.
லிமாம் மதீனாவிலுள்ள பள்ளிவாசலுக்கு வந்து, அங்கு கூடியிருந்தவர்களிடம், “உங்களில் யார் அப்துல் முத்தலிப் வம்சத்தவர்?”, என்று கேட்டார்.
அங்கு இருந்தவர்கள், பெருமானார் அவர்களைச் சுட்டிக் காட்டினார்கள்.
பெருமானார் அவர்கள் முன்னே அவர் வந்து, “நான் உங்களிடம் கடுமையானதொரு கேள்வி கேட்பேன். அதைத் தாங்கள் தவறாக எண்ணக் கூடாது” என்று கூறினார்.
அதற்குப் பெருமானார் அவர்கள், “அவ்வாறு எண்ண மாட்டேன். கேளும்” என்றார்கள்.
அவர், “உலகம் முழுவதற்கும் உங்களை நபியாக ஆண்டவன் அனுப்பியிருக்கிறான் என்பதை ஆண்டவன் மீது சத்தியமாகச் சொல்ல முடியுமோ?” என்று கேட்டார்.
பெருமானார் அவர்கள் “ஆம்” என்றார்கள்.
அதன்பின் லிமாம், "ஐந்து நேரம் தொழ வேண்டும் என்று ஆண்டவன் உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறானோ?” என்று கேட்டார்.
அதற்கும் பெருமானார் அவர்கள் “ஆம்” என்றார்கள்.
அதைப் போலவே,நோன்பு, ஜகாத், ஹஜ் சம்பந்தமாகவும் லிமாம் கேட்டார்.
பெருமானார் அவர்கள், கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் விடையாக 'ஆம்’ என்று சொல்லிக் கொண்டே வந்தார்கள். இஸ்லாம் சம்பந்தமான சட்டங்களை விவரமாகக் கேட்டார். அதன் பின்னர், அவர், “'ஆண்டவன் ஒருவனே; அவனுடைய திருத்தூதர் முஹம்மது ஆவார்கள்' என்று நான் சாட்சி கூறுகிறேன். நான் இப்பொழுது திரும்பிச் செல்கிறேன். தாங்கள் எனக்குப் போதித்த விஷயங்களைச் சிறிதும் கூடுதலாகவோ, குறைவாகவோ கூற மாட்டேன்” என்று சொல்லி விட்டு அவர் புறப்பட்டார்.
அவர் சென்ற பின், பெருமானார் அவர்கள், அங்கே இருந்தவர்களிடம் “அவர் சொல்வது உண்மையாயிருந்தால், அவர் சுவர்க்கம் அடைவார்” என்று சொன்னார்கள்.
லிமாம் தம் ஊருக்குத் திரும்பிச் சென்று, கூட்டத்தாரிடம் (லாத், உஸ்ஸா என்னும் விக்கிரகங்களின் பெயரைக் குறிப்பிட்டு) "அவை ஒன்றுக்கும் உதவாதவை” என்றார்.
அக்கூட்டத்தார், “நீர் என்ன சொல்கிறீர்? உமக்குப் பைத்தியமாவது, தொழு நோயாவது வந்து விடக் கூடாதே” என்று சொன்னார்கள்.
அதற்கு லிமாம், “ஆண்டவன் பெயரில் சத்தியமாக, விக்கிரகங்களால் எனக்கு நன்மை செய்யவும் முடியாது; தீமை செய்யவும் முடியாது; நானோ ஆண்டவன் மீதும், முஹம்மதுர் ரஸுல் (ஸல்) அவர்கள் மீதும் விசுவாசம் கொள்கிறேன்” என்று கூறினார்.
அவர் கூறிய உண்மையான சொற்களைக் கேட்டதும் அன்று மாலைக்குள்ளாக, ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக அக்கோத்திரத்தார் அனைவரும் இஸ்லாத்தில் சேர்ந்து விட்டனர்.