நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/தூதர் கொண்டுவந்த செய்தி
பெருமானார் அவர்கள், மக்காவுக்கு இருபத்தைந்து மைல் தொலைவிலுள்ள ஹுதைபிய்யா என்ற இடத்தில் தங்கள் கூட்டத்தாருடன் தங்கினார்கள்.
அங்கே ஒரே ஒரு சிறிய கிணறு மட்டுமே இருந்தது. அதிலும் நீர் இல்லாமல் வறண்டிருந்தது.
பெருமானாரின் காலடி பட்ட சிறப்பால், எல்லோருக்கும் போதுமான தண்ணீர், அந்தக் கிணற்றிலிருந்து பொங்கியது.
மக்காவில் இருந்த குஸா கோத்திரத்தார் அப்பொழுது இஸ்லாத்தைத் தழுவவில்லை. எனினும், அவர்கள் முஸ்லிம்களுடன் நட்புடனேயே இருந்தார்கள்.
இஸ்லாத்துக்கு விரோதமாகக் குறைஷிகளும், மற்றவர்களும் செய்யும் சூழ்ச்சிகளை குஸா கோத்திரத்தார் அவ்வப்போது முஸ்லிம்களுக்கு அறிவித்துக் கொண்டிருந்தார்கள்.
பெருமானார் அவர்கள் மக்காவுக்கு அருகில் வந்திருக்கும் செய்தி அறிந்த குஸா கூட்டத்தின் தலைவர் புதைலுப்னு வர்கா பெருமானார் அவர்களிடம் சென்று “குறைஷிகள் படை திரண்டு உங்களுக்கு எதிராக வந்து கொண்டிருக்கின்றனர். கஃபாவுக்குள் உங்களை நுழைய விடாமல் அவர்கள் தடுப்பார்கள்” என்று தெரிவித்தார்.
அதற்குப் பெருமானார் “நாங்கள் உம்ராவுக்காக வந்திருக்கிறோமே அன்றி, சண்டை செய்யும் நோக்கத்தோடு வரவில்லை. சண்டையானது குறைஷிகளை விழுங்கி விட்டது. அதனால், அவர்களுக்குப் பெருத்த நஷ்டமும் ஏற்பட்டது. என்னையும், அரபுகளையும் எங்கள் வழியாகப் போக விட்டால் இவர்களுக்கு என்ன இழப்பு வந்துவிடும்? என்னைக் கொன்று விடுவது அவர்கள் விருப்பம்; ஆனால் எனக்கு இறைவன் வெற்றியைக் கொடுத்தால் இவர்களே அணி அணியாக இஸ்லாத்துக்கு வருவார்கள். இறைவன் மீது சத்தியமாகச் சொல்லுகிறேன். அவன் ள்ன்னிடம் ஒப்படைத்திருக்கும் இப்பணியில் வெற்றி பெறும் வரை அல்லது நான் அழியும் வரை ஒயமாட்டேன்" என்றார்கள்.
அதைக் கேட்ட புதைல், குறைஷிகளிடம் சென்று “நான் முஹம்மதிடமிருந்து தூது வந்திருக்கிறேன். நீங்கள் அனுமதித்தால் தெரிவிக்கிறேன்” என்றார்.
சில விஷமிகள், “தூதுச் செய்தி எதுவும் எங்களுக்குத் தேவை இல்லை” என்று கூறி விட்டனர்.
அறிவுடையோர் சிலர், “அந்தச் செய்தியை தெரிவிக்கும்படி" கேட்டுக் கொண்டார்கள்.
தூது வந்த புதைல், பெருமானார் அவர்கள் கூறியவற்றை அவர்களிடம் விவரமாகச் சொன்னார்.
அதன்பின், குறைஷிகளின் பிரமுகர் உர்வத்துப்னு மஸ்ஊத் என்பவர், “குறைஷிகளே! நான் உங்களுக்கெல்லாம் தந்தையைப் போன்றவன்; என்னிடம் உங்களுக்கு எத்தகைய சந்தேகமும் இல்லை அல்லவா? நீங்கள் எனக்கு அனுமதி அளித்தால், நான் போய் முடிவு செய்து வருகிறேன். முஹம்மது நியாயமான நிபந்தனைகளையே சொல்லி அனுப்பியுள்ளார்” என்று கூறினார்.
பிறகு, குறைஷிகளின் அனுமதி பெற்று, உர்வத் பெருமானார் அவர்களிடம் சென்று, குறைஷிகளின் கட்சியை எடுத்துக் கூறி விட்டு, இறுதியில், "உங்களுடைய இனத்தாராகிய குறைஷிகளை அழிப்பதற்காகவே, நீங்கள் இப்பொழுது கூட்டத்தோடு வந்திருக்கிறீர்கள் போலிருக்கிறது. குறைஷிகள் ஆயுதபாணிகளாக வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களைத் தடுப்பதற்கு உங்கள் கூட்டத்தினருக்கு வலிமையில்லை. இவர்கள் எல்லோரும் உங்களைக் கை விட்டுவிட்டு, தூசியைப் போல் பறந்து போகும்படிச் செய்து விடுவோம்” என சற்றுக் கடுமையாகக் கூறினார்.
அதைக் கேட்டதும் ஹலரத் அபூபக்கருக்கு மிகுந்த கோபம் உண்டாயிற்று. உர்வத்தை மிகவும் வன்மையாகக் கண்டித்து, “நாங்கள் நாயகம் (ஸல்) அவர்களைக் கை விட்டு ஓடி விடுவோம் என்றா, நீர் நினைக்கிறீர்” என்று கேட்டார்கள்.
உர்வத் உடனே, “அவர் யார்?” என்று கேட்டார்.
“அபூபக்கர்” என்று பெருமானார் பதிலளித்தார்கள்.
“அவருடைய கடுமையான சொற்களுக்கு நான் தக்க பதில் சொல்லியிருப்பேன். ஆனால், முன்னர், அவர் எனக்குச் செய்த ஓர் உதவிக்காகக் கடமைப்பட்டிருக்கிறேன்; இப்போது அந்தக் கடப்பாடு தீர்ந்துவிட்டது” என்றார் உர்வத்.
இறுதியில், எவ்வித முடிவும் இல்லாமல், உர்வத் குறைஷிகளிடம் திரும்பிச் சென்றார்.
பெருமானார் அவர்களிடம் தோழர்கள் வைத்திருக்கும் அளவற்ற அன்பும் விசுவாசமும் அவருக்கு வியப்பை உண்டாக்கிற்று.
“ரோமாபுரிச் சக்கரவர்த்தி, பாரசீக அரசர், அபீசீனிய மன்னர் ஆகியோரின் அரசவைகளை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், இத்தகைய பணிவையும், பற்றுதலையும் நான் எங்கேயும் காணவில்லை. முஹம்மது பேசும் பொழுது, அவருடன் இருப்பவர்கள் மிகவும் பணிவோடு மெளனமாகக் கவனித்துக் கொண்டு இருக்கின்றனர். அவர் ஒலுச் செய்யும் போது சிந்தும், தண்ணீரைக் கூடச் சேர்த்து வைக்கின்றார்கள்!” என்றுரைத்தார் உர்வத்.