நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/பெருமானார் அவர்களின் பிரிவு

விக்கிமூலம் இலிருந்து

206. பெருமானார் அவர்களின் பிரிவு

பெருமானார் அவர்களுக்கு நோய் மிகுந்தும் குறைந்தும் காணப்பட்டது. -

ஹிஜ்ரி பதினோராவது வருடம் ரபீயுல் அவ்வல் மாதம் பன்னிரண்டாம் தேதி திங்கட்கிழமை காலையில் பெருமானார் அவர்களுக்கு வெளித் தோற்றத்தில் உடல் நலமுடன் இருப்பதாகத் தெரிந்தது. பள்ளிவாசலும், பெருமானார் அவர்கள் இருக்கும் இடமும் ஒன்று சேர்ந்து இருந்ததால், பெருமானார் அவர்கள், திரையை விலகிப் பார்த்தார்கள். அங்கே மக்கள் காலைத் தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். அந்தக் காட்சியைப் பார்த்ததும் பெருமானார் அவர்களுக்கு மகிழ்ச்சி உண்டாகி, புன்முறுவல் செய்தார்கள்.

அப்போது, பெருமானார் அவர்கள் பள்ளிவாசலுக்கு வரப் போவதாக எண்ணி, தொழுது கொண்டிருந்த மக்கள் தங்கள் இடத்திலிருந்து விலகிச் செல்ல நினைத்தார்கள். தொழுகையை நடத்திக் கொண்டிருந்த அபூபக்கர் அவர்களும் பின்னடையக் கருதினார்கள். பெருமானார் அவர்கள் சமிக்ஞையினால் அவர்களைத் தடுத்து, திரையைப் போட்டுக் கொண்டார்கள்.

அன்று பகலில், பெருமானார் அவர்களுக்கு மயக்கம் உண்டாவதும், பிறகு தெளிவதுமாக இருந்தது.

அடிக்கடி திருக்குர்ஆன் வசனங்களைப் பெருமானார் அவர்கள் கூறிக் கொண்டிருந்தார்கள்.

அன்று பகல், அபூபக்கர் அவர்களின் மகன் அப்துர் ரஹ்மான் பெருமானார் அவர்களைக் காண வந்தார். அவர் கையில் பல் விளக்கும் குச்சி ஒன்று இருந்தது. பெருமானார் அவர்கள் அதைக் கூர்ந்து பார்த்தார்கள். அவர்களுடைய பார்வையிலிருந்து, அவர்கள் பல் விளக்க விரும்புவதாகத் தெரிந்தது. உடனே ஆயிஷா நாச்சியார் அவர்கள், தம் சகோதரரிடமிருந்து அக்குச்சியை வாங்கி, அதன் நுனியை மெதுவாக்கிப் பெருமானார் அவர்களிடம் கொடுத்தார்கள். பெருமானார் அவர்கள் அதைக் கொண்டு பல் விளக்கினார்கள். அப்பொழுது பிற்பகல் நேரம். “தொழுகையை ஒழுங்காக நடத்த வேண்டியது. பெண்களிடம்- அடிமைகளிடம் கருணையோடு இருக்க வேண்டும்” என்ற சொற்கள் அவர்களின் வாயிலிருந்து வெளி வந்தன.

அவர்கள் அருகில் தண்ணீர் பாத்திரம் இருந்தது. அதில் அடிக்கடி கையை இட்டு, முகத்தில் தடவிக் கொண்டிருந்தார்கள். பிறகு கைகளை உயர்த்தி, “ஆண்டவனே மேலான தோழன்!” என மூன்று முறை சொன்னார்கள். அவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கும் போது, அவர்களின் கைகள் இரண்டு பக்கங்களிலும் ஒழுங்காய் அமைந்திருந்தன. கண்கள் மூடின. அவர்கள் உயிர் உலகை விட்டு நீங்கிப் பரிசுத்த உலகுக்குச் சென்று விட்டது.

(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்)