நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/மதீனாவுக்குச் செல்ல உடன்பாடு

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

52. மதீனாவுக்குச் செல்ல உடன்பாடு

மறு வருடம் ஹஜ் நாளில், எழுபத்து மூன்று புதிய முஸ்லிம்களும், முஸ்லிம் ஆகாத வேறு சிலரும் யத்ரிபிலிருந்து மக்காவுக்கு வந்தனர். முன்பு உடன்பாடு நிகழ்ந்த அதே இடத்தில், புதிதாக வந்தவர்கள் ஒரு நள்ளிரவில் கூடினார்கள். அந்த இடத்துக்கு நபி பெருமானாரும் அவர்களின் பெரிய தந்தையான அப்பாஸ் அவர்களும் போயிருந்தனர்.

அப்பாஸ் அவர்கள் அப்பொழுது இஸ்லாத்தில் சேரவில்லை.

அவர்கள் யத்ரிபிலிருந்து வந்தவர்களை நோக்கி, "கஸ்ரஜ் குழுவினர்களே! முஹம்மது அவர்களின் மதிப்பும், கெளரவமும் எங்களிடையே எவ்வளவு உயர்ந்தது என்பது உங்களுக்குத் தெரியும், அவர்களுடைய பகைவர்களுக்கு எதிரில் எங்கள் மார்பைக் கேடயமாகக்கொண்டு அவர்களைப் பாதுகாத்து வருகிறோம். இப்பொழுது அவர்கள் உங்களிடம் வருவதற்கு விரும்புகிறார்கள். அவர்களை நீங்கள் தக்க முறையில் பாதுகாத்து, உதவி புரிவதானால், இந்தப்பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். அவ்வாறு இயலாது என்றால் இப்பொழுதே கூறி விடுங்கள். யோசித்து இப்பொழுதே முடிவான கருத்தைக் கூறி விடுங்கள்” என்றார்.

யத்ரிப் வாசிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து, “நீங்கள் கூறியதைச் செவிமடுத்தோம்; நபிகள் பெருமானாரே! ஆண்டவனுக்கும், உங்களுக்கும் உகந்ததை நீங்களே தேர்ந்து சொல்லுங்கள்” என்றனர்.

உடனே பெருமானார் அவர்கள், திருக்குர் ஆனிலிருந்து வசனங்களை அவர்களுக்கு எடுத்துக் கூறிய பின்னர் அவர்களை நோக்கி, “ஆண்டவனுடைய உடன்பாடு இதுதான். நீங்கள் அவனை வழிபடுங்கள். அவனுடன் எதனையும், எவரையும் இணையாக்காதீர்கள். என்னுடைய உடன்பாடர்வது என்னுடைய பணிக்கு உதவி புரியுங்கள். நான் பரப்பிக் கொண்டிருக்கும் சிறந்த மார்க்கத்துக்கு இடையூறாக இருப்பவர்களின் கொடுமைகள் என்னை அணுகாதபடி காத்துக் கொள்ளுங்கள். நான் கூறுவது போல் நடந்து கொள்ளுங்கள். வறுமையிலும், செல்வத்திலும் இம்மார்க்கம் பரவுவதற்காக ஆண்டவனுடைய வழியில் உங்கள் செல்வத்தை சக்திக்கு ஏற்றவாறு செலவிடுங்கள். தீய செயல்களை விட்டு விலகி, எப்பொழுதும் நல்லனவற்றையே நாடுங்கள். மற்றவர்கள் கூறும் அவதூறுகளுக்கு அஞ்சாதீர்கள். என்னை உங்கள் குடும்பத்தில் ஒருவராகக் கருதி எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்” என்று கூறினார்கள்.

அப்போது, “இறைவனின் தூதரே! நீங்கள் கூறியவை அனைத்தையும் அப்படியே ஏற்றுக் கொள்கிறோம். ஒன்று எங்களுக்குத் தெரிய வேண்டும். ஆண்டவனுடைய உதவியால் உங்களுடைய பகைவர்களை எல்லாம் வென்று, உங்கள் நோக்கம் நிறைவேறிய பின், நீங்கள் எங்களை எங்கள் எதிரிகளிடம் விட்டு விட்டு, மக்காவுக்குத் திரும்பி வந்து விடுவீர்களா?” என்று வந்த தலைவர்களில் ஒருவரான அபுல் ஹைதம் என்பவர் கேட்டார்.

“அவ்வாறு ஒருக்காலும் நடவாது. நான் உங்களுடையவன். நீங்கள் என்னுடையவர்கள். நான் உயிரோடு இருப்பதும், இறப்பதும் உங்களுடன்தான்.

நீங்கள் சமாதானமாக இருப்பவர்களுடன், நானும் சமாதானமாக இருப்பேன். உங்களுடைய பகைவர்கள் எனக்கும் பகைவர்களே!” என்று பெருமானார் கூறினார்கள்.

உடனே அவர்கள் அனைவரும், பெருமானார் அவர்களின் திருக்கரத்தை நீட்டச் சொல்லி, ஒவ்வொருவராக அவர்கள் கரத்தோடு இணைத்து, “ஆண்டவனுக்கும், தங்களுக்கும் உண்மையானவர்களாய் இருப்போம்” எனப் பிரமாணம் செய்தனர்.

அதன்பின், அவர்களிலிருந்து பொறுப்பான பன்னிரு தலைவர்களைத் தேர்ந்தெடுக்கச் சொன்னார்கள், இரு கோத்திரங்களிலிருந்தும் பன்னிருவர் தேர்ந்தெடுக்கப்பட்டதும், “நீங்கள் தாம் உங்கள் மக்களின் செயல்களுக்குப் பொறுப்பாவீர்கள்!” என்று அறிவுறுத்தி அவர்களை நபி பெருமானார் அனுப்பி வைத்தார்கள்.