நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/மதீனா நகர நிலைமை

விக்கிமூலம் இலிருந்து

62. மதீன நகர நிலைமை

மதீனா நகரம், முன்னர் யத்ரிப் என்னும் பெயரால் வழங்கி வந்தது.

பெருமானார் அவர்கள் அந்த நகரத்துக்கு வந்து தங்கியது முதல், அதன் பெயர் மதீனத்துன் நபி (தீர்க்கதரிசியின் நகரம்) என்று ஏற்பட்டு, நாளடைவில் மதீனா என்று வழங்கலாயிற்று.

வெகு காலத்துக்கு முன்னர், அந்த நகரத்தில் யூதர்கள் வந்து குடியேறி இருந்தனர். நாளடைவில் அவர்களுடைய எண்ணிக்கை அதிகரித்தது. ஆகையால், சுற்றுப்புறங்களில் எல்லாம் அவர்கள் குடியேறலானார்கள். சிறிய கோட்டைகளைக் கட்டிக் கொண்டு நிலையாக அங்கேயே இருந்து வந்தனர்.

எனினும், யத்ரிப் என்று வழங்கப்பட்ட மதீனாவில் ஒளஸ், கஸ்ரஜ் என்ற இரு கோத்திரத்தைச் சேர்ந்தவர்களே அவர்களில் பெரும்பாலோர். அவர்கள் மதீனாவுக்கு வந்த போது, யூதர்களின் ஆட்சியும் செல்வாக்கும் மிகுதியாயிருந்தன. அவர்களிடமிருந்த செல்வத்துக்கு அளவே இல்லை. இருபது கிளைகள் வரையிலும் பெருகி, அவர்களின் சந்ததியினர் சுற்றுப்புறங்களிலும், தொலைவான இடங்கள் வரையிலும் குடியேறி இருந்தார்கள்.

அன்சாரிகளின் முன்னோர்கள் இங்கே குடியேறிய சில நாட்கள் வரை ஒதுங்கியே இருந்து வந்தனர். இறுதியில் யூதர்களின் செல்வாக்கைக் கண்டு அவர்களோடு நட்புறவோடு இருப்பதாக உடன்படிக்கை செய்து கொண்டனர். ஆனால், நாளடைவில் அன்சாரிகளின் குடும்பங்கள் பெருகி, செல்வாக்கும் அதிகரித்து வரவே, தங்களுக்கு அதனால் தீங்கு நேரிடும் என்று கருதி, சில நாட்களுக்குப் பிறகு யூதர்கள் உடன்படிக்கையை ரத்து செய்து விட்டார்கள். யூதர்களின் தலைவனான பித்யூன் என்பவன் ஏற்படுத்திய இழிவான ஒரு பழக்கத்தினால், மாலிக் இப்னு அஜ்லான் தம் குடும்ப கெளரவத்தைக் காப்பாற்றுவதற்காக, அவனைக் கொன்று விட்டு, ஸிரியாவுக்குத் தப்பிச் சென்றார். அங்கிருந்து, அந்நாட்டு அரசருடைய உதவியினால், ஒரு பெரும்படையுடன் வந்து யூதர்களைக் கீழ் அடக்கினார். அதிலிருந்து யூதர்களின் செல்வாக்குத் தேயலாயிற்று.

ஒளஸ், கஸ்ரஜ் என்னும் அன்சாரிக் குடும்பத்தினரிடையே சில நாட்களுக்குப் பிறகு, அரபு நாட்டு வழக்கப்படி சில்லரைச் சச்சரவுகள் உண்டாகின. பிறகு பெரிய சண்டைகளாய் மூண்டன. ஓய்வின்றி, சண்டை வெகு காலம் வரை நீடித்தது. அவற்றில் இறுதியாக நடை பெற்ற புஆது என்னும் சண்டை மிக உக்கிரமமாக நடந்தது. அதனால், இரண்டு குடும்பத்தினரிடையே இருந்த பிரமுகர்கள் பெரும்பாலும் மாண்டு விட்டனர். எனவே அவர்கள் மிகவும் நலிவடைந்து விட்டனர்.

அன்சாரிகள் இஸ்லாத்தில் சேருவதற்கு முன், விக்கிரக ஆராதனைக்காரர்களாக இருந்தனர்.

அன்சாரிகள் என்றால், உதவி செய்பவர்கள் என்று பொருள். பெருமானார் அவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் உதவி செய்தமையால் அன்சாரி என்று அழைக்கப்படுகின்றனர். [1]


  1. குறிப்பு:-மதினா நகரம் நபிகளாருக்காகவே ஹிந்துஸ்தானத்து மன்னர் ஒருவரால் நிர்மாணிக்கப்பட்டது என்ற வரலாறு உண்டு. அது தனியாகக் காண வேண்டிய ஒன்று.