நமச்சிவாயத் திருப்பதிகம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

வழித்துணை நன்றாக அமைய நமச்சிவாயத் திருப்பதிகம் பாடப்படுகிறது.

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே


பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக்கு அருங்கலம் அரனஞ் சாடுதல்
கோவினுக்கு அருங்கலம் கோட்டமில்லது
நாவினுக்கு அருங்கலம் நமச்சி வாயவே


விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே


இடுக்கண்பட் டிருக்கினும் இரந்து யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினும் அருளின் நாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே


வெந்தநீறு அருங்கலம் விரதி கட்கெலாம்
அந்தணர்க்கு அருங்கலம் அருமறை யாறங்கலம்
திங்களுக்கு அருங்கலம் திகழு நீள்முடி
நங்களுக்கு அருங்கலம் நமச்சி வாயவே


சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
நலமிலன் நாடொறும் நல்குவான் நலன்
குலமில ராகிலும் குலத்துக் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே


வீடினா ருலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினா ரந்நெறி கூடிச் சென்றலும்
ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும்
நாடினேன் நாடிற்று நமச்சி வாயவே


இல்லக விளக்கது இருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே


முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறி யேசர ணாதல் திண்ணமே
அந்நெறி யேசென் றடைந்த வர்க் கெலாம்
நன்னெறி யாவது நமச்சி வாயவே


மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்து
ஏத்தவல் லார்தமக்கு இடுக்க னில்லையே