நல்வழிச் சிறுகதைகள்-2/பாரிக்கு நிகரானவன்

விக்கிமூலம் இலிருந்து
பாரிக்கு நிகரானவன்

பாண்டிய மன்னனின் அரசவைக்கு ஒரு புலவர் வந்திருந்தார். அவர் எங்கோ வெளிநாட்டிலிருந்து வந்திருந்தார். பாண்டியனைப் போற்றி அவர் ஒரு கவிதை எழுதிக் கொண்டு வந்து படித்தார்.

அவர் கவிதையின் பொருள் பாண்டியன் மனதைத் தொடவில்லை. அவைப் புலவர் பக்கம் திரும்பினார். கவிதை நன்றாக இல்லை என்று பொருள்படும்படி இரண்டு கைகளையும் விரித்துக் காட்டினார், அவைப் புலவர்.

சிவபிரானே பாண்டியனாகப் பிறந்து இந்த உலகத்தைக் காத்து வருவதாகக் கவிதையில் கூறப்பட்டிருந்தது.

பாண்டியனின் வீரம், கொடை முதலிய பண்பு களைப் போற்றி வாழ்த்திப் பாடப் பெற்றிருந்தது. அந்தச் செய்யுள்.

பாண்டியன் அந்தப் புலவருக்குப் பத்துப் பொன் பரிசு கொடுக்கும்படி கட்டளை பிறப்பித்தான். புலவர் பெருமகிழ்ச்சியுடன் பொன்னை வாங்கிக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்.

அந்தப் புலவர் சென்றபின், அவைப் புலவர் அரசனை நோக்கி, “அரசே, அந்தக் கவிதையில் ஒன்றுமில்லை என்பதற்காகவல்லவா நான் இரண்டு கைகளையும் விரித்துக் காண்பித்தேன். தாங்கள் என் கை விரல்களை எண்ணிக் கொண்டு, பத்துப் பொன் கொடுக்கச் சொன்னிர்களோ?” என்று கேட்டார்.

“அல்ல, அல்ல, கவிதைக்காக நான் பரிசு கொடுக்கவில்லை. அந்தப் புலவரின் வறுமையைப் போக்கவே பரிசு கொடுத்தேன். பாவம், வயிற்றுக் கொடுமையால் அல்லவா என்னையே இறைவனாக்கி விட்டார் !” என்று அறிவிலும் திருவிலும் பெரியவரான அந்தப் புலவருக்காக இரக்கப்பட்டான் பாண்டியன்.

அதைத் தொடர்ந்து வள்ளன்மையைப் பற்றி அவையில் பேச்சு எழுந்தது. பாரி, ஓரி முதலிய கடையெழு வள்ளல்களுக்குப் பின், தமிழ் நாட்டில் வள்ளல்களே பிறக்கவில்லை என்று ஒருவர் கருத்துச் சொன்னார்.

கொடை வழங்குபட்டி என்ற ஊரில் அறம் வென்றான் என்ற வணிகன் ஒருவன் இருப்பதாகவும், அவன் செய்யாத அறம் இல்லையென்றும், அவையில் ஒருவர் கூறினார்.

அறம் வென்றானுடைய பெருமைகளை ஐந்தாறு பேர் பேசத் தொடங்கி விட்டனர். கொடை கொடுப்பதிலும், புலவர்க்குப் பரிசு வழங்குவதிலும், அவன் பாரிக்குச் சளைத்தவனல்லன் என்று ஒருவர் கூறினார்.

பாண்டியனால் இப்பேச்சுகளை நம்ப முடியவில்லை. ஒரு வணிகன் அவ்வளவு அற நோக்கம் கொண்டவனாக இருப்பானா என்பது அவனுக்கு வியப்பாகவே யிருந்தது.

அறம் வென்றான் என்ற வணிகனுடைய வள்ளன்மையை நேரில் அறிந்து வர வேண்டும் என்று பாண்டியன் எண்ணினான்.

மறுநாளே அவன் மாறு வேடத்தில் கொடை வழங்கு பட்டிக்குப் புறப்பட்டான். மன்னன் தலைநகரை விட்டுச் சென்ற செய்தி யாருக்கும் தெரியாது.

கொடை வழங்குபட்டியை நெருங்க நெருங்க, அறம் வென்றானின் புகழ் பாண்டிய மன்னன் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருந்தது. பாணர்களும் விறலியரும் அறம் வென்றானின் புகழ் பாடியாடினர்.புலவர்கள் அறம் வென்றானை வாழ்த்திப் பாடிய பாடல்கள் சிறுவர்களால் பாடப் பெற்றன.

இரவலர்கள் அறம் வென்றானைத் தேடிச் சென்ற வண்ணம் இருந்தனர்.

கடைசியாகப் பாண்டியன் கொடை வழங்குபட்டிக்குப் போய்ச் சேர்ந்துவிட்டான். அவன் அங்கு போய்ச் சேர்ந்தபோது, இருட்டத் தொடங்கி விட்டது.

கொடை வழங்குபட்டியின் ஒரு வீதி வழியாக மாறு வேடத்தில் இருந்த மன்னன் சென்று கொண்டிருந்தான். ஒரு வீட்டில் ஒரு கிழவி பரிதவித்துப் புலம்பிக்கொண்டிருந்த ஒலி கேட்டது. மன்னன் அந்த வீட்டை தெருங்கினான். கதவு அடைத்துக் கிடந்தது. சாவித் துளையின் வழியாக அவன் உள்ளே எட்டிப் பார்த்தான்.

கூடத்தில் ஒரு சிறு விளக்கு மினுக் மினுக்கென்று எரிந்து கொண்டிருந்தது. பாயில் ஒர் இளம் பெண் நோயாகப் படுத்திருந்தாள். எலும்பு வடிவமாகக் களையிழந்து கிடந்த அந்தப் பெண்ணின் கதி எப்படி முடியுமோ என்று கலங்கிக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள் கிழவி.

பாண்டியன் கதவைத் தட்டினான். கிழவி எழுந்து வந்து கதவைத் திறந்தாள்.

முன் பின் அறியாத ஒரு மனிதனைக் கண்ட தும், அவள், என்ன வேண்டும் ?” என்று கேட்டாள்.

“அம்மா, நான் வெளியூரைச் சேர்ந்தவன். வீதி வழியாய்ப் போய்க் கொண்டிருக்கும் போது, இங்கு அழுகுரல் கேட்டது. என்ன என்று தெரிந்து கொள்ளவே வந்தேன்,” என்றான் மாறு வேடத்து மன்னன்.

“ஐயா, என் மகள் படுத்த படுக்கையாய்க் கிடக்கிறாள். இந்த ஊர் மருத்துவரோ பணமில்லாமல் கை பார்க்க மாட்டார். எங்களிடம் பணம் இல்லை. நாளுக்கு நாள் அணு அனுவாகச் செத்துக் கொண்டிருக்கும் அவளைப் பார்க்கப் பார்க்க எனக்கு அழுகை அழுகையாக வருகிறது!” என்று கிழவி மீண்டும் அழத் தொடங்கி விட்டாள்.

"அம்மா, ஆக வேண்டியதைச் செய்யாமல், அழுது கொண்டிருந்தால் என்ன பயன்?” என்று கேட்டான் மன்னன்.

“ஐயா, நான் கிழவி! என்னால் என்ன முடியும் ?” என்று கேட்டாள் கிழவி.

“அம்மா, நான் உங்கள் மகளைப் பார்க்கலாமா?’ என்று கேட்டான் அரசன்.

கிழவி உள்ளே கூட்டிச் சென்று, தன் மகளைக் காட்டினாள்.

பாண்டியன் அப்பெண்ணைக் கூர்ந்து நோக்கினான். அன்றே ஏதாவது செய்யாவிட்டால், மறுநாள் நம்ப முடியாது என்று தோன்றியது.

“அம்மா, இந்த ஊரில் இருந்து கொண்டே இப்படி நோயை வளரவிட்டு விட்டீர்களே! வணிகர் அறம் வென்றானிடம் சென்று ஏதாவது உதவி கேட்டு வாருங்கள். நான் அதுவரை உங்கள் மகளைப் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்,” என்றான் மன்னன்.

“அப்பா ! நீ நன்றாயிருப்பாய் ! எல்லோரும் அறம் வென்றானைப் பற்றிப் புகழ்ந்து பேசுகிறார்கள். இருந்தாலும் எனக்கு இதுவரை இந்த எண்ணம் வரவேயில்லை. இப்போதே நான் போய் வருகிறேன்,” என்று சேலையை இடுப்பில் வரிந்து கட்டிக் கொண்டு, கிழவி விரைந்து நடந்தாள்.

சிறிது நேரம் சென்ற பின், கிழவி திரும்பி வந்தாள். ஆனால், சென்றபோது இருந்த களை அப்போது அவள் முகத்தில் இல்லை. முன்னிலும் வாடித் தளர்ந்த முகத்துடன் அவள் திரும்பி வந்தாள்.

“என்ன ஆச்சு?” என்று கேட்டான் பாண்டியன்.

“அவனா அறம் செய்கிறான் ? எல்லாம் வெளிப் பகட்டு. இரவிலே யாருக்கும் எதுவும் கொடுக்க மாட்டானாம். பகலிலேதான் கொடுப்பானாம் ; அதுவும் வீட்டிலே கொடுப்பதே வழக்கம் இல்லையாம் ! கோயில் வாசலிலேதான் கொடுப்பானாம் !” என்று கூறிச் சலித்துக் கொண்டே உட்கார்ந்து சுவரில் சாய்ந்து கொண்டாள் கிழவி.

அவள் மூச்சு விடும் வேகத்தை விட, இதயம் அதிக வேகமாகத் துடித்தது.

உடனே அந்தப் பெண்ணை மருத்துவர் வீட்டுக்குக் கொண்டு போக வேண்டும். “அம்மா, சிறிது நேரம் இருங்கள். எங்காவது போய் வண்டி கிடைக்கிறதா என்று பார்த்து வருகிறேன்,” என்று கூறிவிட்டுக் கிழவியின் பதிலுக்குக் காத்திராமலே வெளியில் வந்தான் மன்னன்.

அதே நேரம், அந்தத் தெரு வழியாக ஒர் இரட்டை மாட்டு வண்டி வந்து கொண்டிருந்தது. பாண்டியன் அந்த வண்டிக்காரனை நிறுத்தினான்.

"ஐயா, இங்கே ஒரு பெண் நோயுற்றுக் கிடக்கிறாள். அவளை மருத்துவர் வீட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். நாங்கள் ஏழைகள்! வண்டிக்குக் கூலி தர இயலாது!” என்று கூறினான் பாண்டியன்.

“ஐயா, கூலி தரா விட்டால் ஒன்றும் கெட்டுப் போகப் போவதில்லை. ஆனால், மருத்துவச் கூலியில்லாமல் மருந்து கொடுக்க மாட்டாரே “ என்றான் வண்டிக்காரன்.

“அதெல்லாம் அங்கே போய்ப் பார்த்துக் கொள்ளலாம். முதலில் அவளை மருத்துவர் வீட்டுக்குக் கொண்டு போய்ச் சேர்ப்போம்!” என்றான் பாண்டியன்.

பாண்டியனும் அந்த வண்டிக்காரனும் அந்தப் பெண்ணைப் படுக்கையோடு அப்படியே தூக்கிக் கொண்டு வந்து வண்டியில் கிடத்தினார்கள். கிழவியும் ஏறிக் கொண்டாள்.

வண்டிக்காரன் முன்னால் ஏறி உட்கார்ந்து கொண்டு, மிக மெதுவாக வண்டியை ஒட்டிச் சென்றான். பாண்டியன் வண்டிக்குப் பக்கத்திலேயே நடந்து சென்றான்.

வழியில் பாண்டியன் அந்த வண்டிக்காரனோடு பேச்சுக் கொடுத்து அவனைப் பற்றி நன்றாக விசாரித்து தெரிந்து கொண்டான். அவன் பெயர் பொன்னன் என்று தெரிந்து கொண்டான்.

“பொன்னையா, நீங்கள் உள்ளுtக்காரராச்சே, அந்த மருத்துவரிடம் சொல்லி இந்த ஏழைப் பெண்ணுக்கு இலவசமாக மருத்துவம் செய்யும்படி கேட்டுக் கொள்ளக் கூடாதா?” என்று பாண்டியன் கேட்டான்.

“கேட்கிறேன். ஆனால், அந்த மருத்துவன் மிகுந்த பண ஆசை கொண்டவன். இருந்தாலும் நான் எப்படியும் இலவச மருத்துவம் பார்க்கச் செய்து விடுகிறேன் !” என்று உறுதிக் குரலில் கூறினான் பொன்னன்.

“அவ்வாறு செய்தால், பொன்னையா ! உங்களுக்குக் கோடிப் புண்ணியம் உண்டு!” என்றான் பாண்டியன்.

“புண்ணியத்தை விட்டுத் தள்ளுங்கள். ஒருவருக் கொருவர் இரக்கப்படா விட்டால், அது என்ன மனிதத் தன்மையா?” என்று கேட்டான் பொன்னன்.

மருத்துவர் வீடு வந்து விட்டது. மருத்துவர் வீட்டுத் திண்ணையில் அந்தப் பெண்ணை இறக்கிப் படுக்க வைத்தார்கள்.

பொன்னன் கதவைத் தட்டினான். மருத்துவர், “யாரது இந்த இருட்டு நேரத்தில்?” என்று கடிந்து கொண்டே, கதவைத் திறந்தார். வந்திருந்தவர்கள் அத்தனை பேருடைய ஏழைக் கோலத்தையும் கண்டு, அவருக்கு எரிச்சல்தான் வந்தது.

“பணம் கொண்டு வந்திருக்கிறீர்களா ? அவசர மருத்துவ உதவிக்கு இரட்டிப்புக் கூலி தர வேண்டும் !” என்றார்.

"ஐயா,என்னைத் தெரியவில்லையா ? பொன்னன் !"என்று கூறினான் வண்டிக்காரன்.

“பொன்னனாயிருந்தாலும் கண்ணனாயிருந்தாலும் கூலி வேண்டும் முதலில்.”

மருத்துவரின் கண்டிப்பான பேச்சைக் கேட்டவுடன்,பொன்னன் ஆத்திரங் கொண்டான். ஆனால், அதை அடக்கிக் கொண்டு பேசத் தொடங்கினான்.

“ஐயா, மருத்துவரே ! செய்த உதவியைச் சொல்லிக் காட்டுவது சிறப்பல்ல. ஆனால், காலம் அவ்வாறு சொல்ல என்னை ஏவுகிறது. அன்றொரு நாள் காட்டு வழியில் கள்வர்கள் கையில் சிக்கி உயிரிழக்க இருந்த உங்களை நான் காப்பாற்றினேன். அதற்கு நீங்கள் நன்றி சொன்னீர்கள். அந்த நன்றியைச் செயலில் காட்ட வேண்டுகிறேன். அன்று உங்கள் உயிரை மீட்டதற்கு நன்றியாக இந்தப் பெண் உயிரைக் காப்பாற்ற வேண்டுகிறேன்!” என்று பொன்னன் கூறியவுடன், மருத்துவர் மனம் மாறியது.

அவர் அந்தப் பெண்ணின் கையைப் பார்த்தார். மருந்து கொடுத்தார். ஒரு வாரம் வரை தன் வீட்டிலேயே வைத்து மருந்து கொடுத்துக் காப்பாற்றுவதாக வாக்களித்தார்.

அதன் பின், பொன்னனும், பாண்டியனும் அங்கிருந்து புறப்பட்டனர்.

பொன்னன் வீடிருக்கும் தெருவைக் கேட்டுக் கொண்டு, அவனைப் பிரிந்த பாண்டியன், ஊருக்கு வெளியில் வந்தான். அங்குள்ள ஒரு மரத்தடியில் கட்டிக் கிடந்த தன் குதிரை மீது ஏறி மதுரை வந்து சேர்ந்தான்.

மறுமுறை அரசவையில் அறம் வென்றானைப் பற்றிப் பேச்சு வந்தபோது, பாண்டியன் இந்த நிகழ்ச்சியைச் சொல்லி, “அறம் வென்றான் பாரியின் கால் தூசுக்குக் கூடக் காணாதவன். அவனிடம் அற உணர்வேயில்லை. எல்லாம் வெளிப்பகட்டு. பொன்னனை வேண்டுமானால் பாரிக்கு நிகராகச் சொல்லலாம்.பாரியிடம் இருந்த செல்வம் பொன்னனிடம் இல்லையே தவிர, பாரியின் கருணையுள்ளம் அவனிடம் பொருந்தியிருக்கிறது!” என்று சொன்னான்.

பாண்டியன் வாழ்த்துக்கு ஆளான பொன்னன், பின்னால் பல நலங்கள் பெற்று வாழ்ந்தான்.

கருத்துரை :- நல்ல மனத்தோடு செய்யும் அன்பான உதவிகளே அறமாகும் ; மற்றவையெல்லாம் வெறும் வெளிப் பகட்டேயாம்.