நல்வழிச் சிறுகதைகள்-2/வாதுக்கு வந்த புலவர்

விக்கிமூலம் இலிருந்து

வாதுக்கு வந்த புலவர்

பாண்டிய நாட்டுக்கு ஒரு சமயம் ஒரு பெரிய மனிதர் வந்திருந்தார். அந்தப் பெரியவரின் பெயர் அரிசங்கரர் என்று கூறினார்கள். அவர் வடக்கேயுள்ள காசியைச் சேர்ந்தவர். நான்கு வேதம், ஆறு சாத்திரம், பதினெட்டுப் புராணம், இதிகாசம் எல்லா வற்றிலும் நல்ல தேர்ச்சியும் திறமையும் மிக்க அந்தப் பெரிய மனிதர், தம்முடைய அறிவைத் தாமே பெரிதாகப் போற்றிக் கொண்டார்.

தம்முடைய கல்வித் திறமையை நிலைநாட்டி எல்லா நாடுகளிலும் புகழ்க் கொடி நாட்டிக் கொள்ள வேண்டும் என்று அவர் எண்ணினார். இமயம் முதல் குமரி வரை தமக்கு எவரும் இணையில்லை என்று பெயரெடுக்க அவர் விரும்பினார்.

பரத கண்டத்தில் அக்காலத்தில் ஐம்பத்தாறு நாடுகள் இருந்தன. ஒவ்வொரு நாட்டுக்கும் சென்று, அங்குள்ள கற்றறிந்த புலவர்கள், சமய ஆசிரியர்கள் எல்லோரையும் வாதில் வென்று புகழ்க் கொடி நாட்டினார்.

ஒவ்வொரு நாட்டிலும் தாம் அடைந்த வெற்றியை நினைக்க நினைக்க, அவருக்குத் தற்பெருமை மிகுந்தது. தனக்கு மிஞ்சிய அறிவாளி இந்த உலகத்திலேயே இல்லை என்று எண்ணிக் கொண்டார். இந்த எண்ணம் வலுப்பெற்ற பின், அவர் மற்றவர்களை மதிக்காமல் நடந்து கொள்ளத் தொடங்கினார்.

சோழ நாட்டில் வாதியற்றி வென்ற பின், பாண்டிய நாடு வந்திருந்தார். பாண்டிய நாட்டுக்குப் பின் சேர நாட்டுக்குச் சென்று, தம் வெற்றியை நிலைநாட்டி விட்டுக் கன்னியாகுமரியில் கடலாடித் திரும்புவதென்று முடிவு கட்டியிருந்தார்.

மதுரை நகருக்கு அவர் வந்து சேர்ந்தபோது, நகரெங்கும் அவரைப் பற்றியே பேச்சாக இருந்தது. ``பரத கண்டத்துப் பேரறிஞர்; பல்கலையும் வல்ல புலவர் : காசித் தலத்துக் கவிஞர் ; அறிஞர் அரிசங்கரர் வந்திருக்கிறார் ! அவரை வாதில் வெல்லயாராலும் முடியாதாம். சங்கத்திலே தங்கத் தமிழாயும் சிங்கப் புலவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் ? என்றெல்லாம் மக்கள் பேசிக் கொண்டார்கள்.

புலவர்களுக்குச் சிறப்பளித்து வரவேற்கும் பாண்டிய மன்னன், அரிசங்கரரை வரவேற்றுப் பெருமைப்படுத்தினான். அரசவைக்கு வந்த அரிசங்கரர், தம் பெருமைகளை அரசனுக்கு எடுத்துக் கூறினார். தாம் நாடு தோறும் சுற்றிவரும் காரணத்தை விளக்கிச் சொன்னார். தம்முடன் வாதிட யாரும் வரலாம் என்று சவால் விடவும் அவர் தயங்கவில்லை.

அரசவையிலே நாற்பத்தொன்பது தமிழ்ப் புலவர்கள் இருந்தார்கள். இந்த நாற்பத்தொன்பது பேரும் நாற்பத்தொன்பது திருவிளக்குகளைப் போன்றவர்கள். அறிவுச் சுடர் ஒளிவிட்டு வீசும் திருமுகமும், குன்றென நிமிர்ந்த தோற்றமும், சிங்கத்தின் பெருமிதப் பார்வையும், அத்தனைக்கும் மேலே அடக்கம் நிறைந்த நெஞ்சும் உடைய அறிஞர்கள் அவர்கள்.

அரிசங்கரர் நெடிய உருவமும், நிமிர்ந்த தோற்றமும், தம்மை மிஞ்சிய புலவர் எவரும் இல்லை என்ற அகம்பாவ எண்ணமும், அந்த எண்ணத்தினால் ஏற்பட்ட அலட்சியப் பார்வையும் கொண்டு, பெருமதயானை போன்று, அவையிலே வீற்றிருந்தார்.

அரசவையிலே, புலவர்களின் அறிவுத் திறனை ஆராயும் அந்தப் போட்டியைக் காண மக்கள் வெள்ளம் போல் திரண்டிருந்தார்கள்.

பாண்டிய மன்னன் சங்கத்துப் புலவர்களை நோக்கிப் பேசினான். காசிப்பெரும் புலவர் அரிசங்கரர் வந்திருக்கிறார். வாதிட்டுப் புகழிட்ட நாடு தோறும் சென்று வந்துள்ளார். இதுவரை சென்றுள்ள நாடுகளனைத்திலும் அவர் வெற்றி பெற்றிருக்கிறார் நம் பாண்டிய நாட்டிலும் தம் பெருமையையும் திறமையையும் நிலை நாட்டிச் செல்ல அவர் எண்ணியுள்ளார். புலவர்களே, உங்களில் யாராவது அவருடன் வாதிட விரும்புகிறீர் ளா ?” என்று கேட்டார் பாண்டிய மன்னர்.

ஆன்றவிந்தடங்கிய சான்றோர்களாகிய சங்கப் புலவர்கள் அனைவரும் வாய் திறவாது அமைதியாக வீற்றிருந்தார்கள். அவர்களில் முதுபெரும் புலவராக வீற்றிருந்த சாத்தனார் பாண்டித் திருதாடனை நோக்கிச் சில மொழிகள் புகன்றார்.

“மன்னவா ! உன்னைப் போன்ற அரசர்கள் ஒருவரை யொருவர் போரிட்டு வென்று புகழ் நாட்டலாம். ஆனால், புலவர்கள் தம் புகழை நிலைநாட்ட, வாதிட்டுப் போராட வேண்டியதில்லை. சங்கப் புலவர்கள் இதுநாள்வரை யாருடனும் வாதிட்ட தில்லை. ஏன் ? வாது வழி தீது என்பதால்தான் ! வென்றவர் எக்களிக்கவும், வெல்லப்பட்டவர் துக்க மிக்குறவும் செய்யும் வாதுக்குத் தமிழ்ப் புலவர்கள் எக்காலத்தும் ஒப்பியதில்லை. சூதும் வாதும் வேதனை செய்யும். அறிவுக்கு எல்லையில்லை. ஒருவர்க்கு ஒன்று எளிதாகவும், ஒன்று கடிதாகவும் இருக்கும். எதைக் கொண்டு அறிவை அசைக்க முடியும்?”

“திருவள்ளுவரை உலகம் உச்சி மீது வைத்துக் கொண்டாடுகிறது. அவர் யாருடன் வாதிட்டு இப் பெரும் புகழைப் பெற்றார் ? இரண்டு பேரிதிகாசங்களை இயற்றிய வான்மீகரும் வியாசரும் எங்கே போய் வாதிட்டார்கள் ?”

சாத்தனாரின் இந்தத் தெளிவுரைகளை அரிசங்கரர் என்ற அந்தப் புலவர் ஏற்றுக் கொள்ளவில்லை.

"அச்சம் மேலிட்டதால் தமிழ்ப் புலவர்கள் வாதிட முன் வரவில்லை. வாதுக்குத் தப்ப, சாத்தனார் சரியான வழி கண்டுபிடித்து விட்டார்!’ என்று ஏளனமாகக் கூறினார்.

தமிழ்ப் புலவர்கள் அமைதியாக இருந்தனர். ஆனால், பெருமக்களை எங்கிருந்தோ வந்த அவர் அலட்சியப்படுத்திப் பேசியதைக் கேட்டுக் குடிமக்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

அங்கு புலவர்களின் அருகில் நின்று கொண்டிருந்த இளைஞன் ஒருவனுக்கு மனம் துடித்தது. மதிவாணன் என்ற அவ்விளைஞன் மன்னனை நோக்கிக் கூறினான்.

‘மன்னர் பெருமானே ! சான்றோரை மதியாத தருக்காளராகவுள்ள இப்புலவர், வாதிட்டுத்தான் ஆக வேண்டுமென்று சாதிப்பாரேயானால், அதற்கு நான் முன் வருகிறேன். என்னுடன் வாதிக்கட்டும்.”

இவ்வீர உரைகளைக் கேட்ட அரிசங்கரர் குறுநகை புரிந்தார்.

“மிகச் சிறியவன் இப்பையன். இவனா என்னோடு வாதிட முடியும்?” என்றார்.

“சிறியவனானால் என்ன? சீறி வரும் சிங்கக் குட்டிபோல் நிற்கிறானே !! வாது தொடங்கட்டும் !” என்றார் பாண்டியர்.

அரிசங்கரர் கூறினார் : முதலில் நான் மூன்று கேள்விகள் கேட்கிறேன். அதற்கு அச்சிறுவன் பதில் கூறட்டும். பின்னர் அவன் கேட்கும் மூன்று கேள்விகட்கு நான் பதில் சொல்கிறேன். இப்பதில்களைக் கொண்டு வெற்றி தோல்வியை முடிவு கட்டலாம்.”

இவ்வாறு கூறிவிட்டு,அரிசங்கரர் மதிவாணனை நோக்கிக் கேள்விகள் கேட்டார். அவன் அவர் கேள்விகட்குச் சட்டுச் சட்டென்று பதில் கூறினான்.

“இந்த உலகத்தை விடப் பெரியது எது?” என்றார், அரிசங்கரர்.

“உலகத்தைச் சூழ்ந்திருக்கும் வானம்!” என்றான், மதிவாணன்.

தத்துவ நோக்கத்தோடு கேள்வி கேட்ட அரிசங்கரர் இந்தப் பதிலை எதிர்பார்க்கவில்லை. ஆனால், அது தவறான பதிலென்று சொல்ல முடியவில்லை.

“மனிதனைச் சிறப்புப்படுத்துவன இரண்டு. அவை என்ன?” என்று கேட்டார் அரிசங்கரர்.

‘மதி நுட்பம்; மன அடக்கம்!” என்று பதிலளித்தான் மதிவாணன்.

சமய நூல் கருத்துக்களின்படி பதில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார் அரிசங்கரர். ஆனால், மதிவாணனுடைய பதிலை அவரால் மறுத்துரைக்க முடியவில்லை.

"பொருள்கள் புலனாவது எப்படி?” என்று மூன்றாவது கேள்வியையும் கேட்டு முடித்தார் அரிசங்கரர்.

“கண்ணொளியும் விண்ணொளியும் கலந்து!” என்று பதிலளித்தான் மதிவாணன்.

சிறுவன் ஏதாவது ஒன்றைத்தான் சொல்லுவான்; அகப்பட்டுக் கொள்வான் என்று எதிர்பார்த்தார் அவர். ஆனால், மதிவாணன் அவர் எண்ணத்தைத் தவிடு பொடியாக்கி விட்டான்.

அடுத்து மதிவாணன் கேள்வி கேட்க வேண்டிய கட்டம் வந்தது.

“நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டான் மதிவாணன்.

வேதாந்தத்தில் இந்தக் கேள்விக்கு யாரும் விடையளித்ததே கிடையாது. சிறுவன் சரியான ஆளாக இருக்கிறான் என்று நினைத்துக் கொண்ட அரிசங்கரர், தனக்கு இக்கேள்விக்கு விடை கூறத் தெரியாது என்று சொல்லி விட்டார்.

“நீங்கள் எங்கு செல்லப் போகிறீர்கள்?” என்று கேட்டான் மதிவாணன்.

இறந்தவர்கள் சொர்க்கத்துக்கோ நரகத்துக்கோ போவார்கள் என்பது சமயக் கொள்கை. தான் போக வேண்டிய இடத்தைத் தீர்மானிக்க வேண்டியது ஆண்டவனே தவிரத் தானல்ல என்று எண்ணிய அரிசங்கரர் இக்கேள்விக்குத் தன்னால் விடை கூற இயலவில்லை என்று கூறி விட்டார்.

"உங்கள் மனத்தில் என்ன இருந்தது ? என்ன இல்லை ?” என்று கேட்டான் மதிவாணன்.

இதற்கு என்ன பதில் சொல்வதென்றே அவருக்குப் புரியவில்லை. திருதிருவென்று விழித்தார்.

மன்னர் இளைஞனை நோக்கி, “மதிவானா, உன் கேள்விகளுக்கு நீயே விடை சொல்,” என்று ஆணையிட்டார்.

“புலவர் அரிசங்கரர் சோழ நாட்டிலிருந்து வருகிறார். சேர நாட்டுக்குப் போவோம் என்று நினைத்துக் கொண்டு பாண்டிய நாட்டுக்கு வந்தார். ஆனால், இங்கு தோல்வியடைந்து விட்டதால், சேரநாடு செல்லாமல் காசிக்கே திரும்பப் போகிறார். இதுவரை தன்னை மிஞ்சிய ஆளில்லை என்ற தற்பெருமை அவர் மனத்தில் இருந்தது ; இப்போது அது இல்லை!” என்று தன் மூன்று கேள்விகளுக்கும் உரிய விடைகளைத் தொகுத்துக் கூறினான் மதிவாணன்.

புலவர் அரிசங்கரர் எதிர்பாராத விதமாகத் தாம் அந்த இளைஞனிடம் ஏமாந்து போனதை எண்ணித் தலை குனிந்தார். கூடி நின்ற மக்களோ, இவ்வளவு எளிய பதில்களே சொல்லத் தெரியாத இவர் எப்படி ஐம்பத்து நான்கு நாடுகளிலும் வாதில் வெற்றி பெற்றார் என்று வியப்படைந்தார்கள்.

பாண்டியன் அவரைப் பத்திரமாகக் காசிக்கு அனுப்பி வைத்தான்.

கருத்துரை:- உருவத்தால் சிறியவர் என்று எண்ணி ஒருவர் திறமையைக் குறைவாக மதிப்பிட்டு விடக் கூடாது.