நவகாளி யாத்திரை/'அச்சா குத்தா!'

விக்கிமூலம் இலிருந்து

'அச்சா குத்தா!'

மகாத்மாஜி தங்கியிருந்த குடிலுக்கு அருகில் போய் அந்த மகானுடைய புறப்பாடுக்காகக் காத்திருந்தோம். வாசலில் சுவான மண்டலம் போட்டுப் படுத்திருந்த ஒரு கறுப்பு நாய் எழுந்து நின்று உடம்பைச் சிலுப்பிக் கொண்டது.

"இது ஏது, இந்த நாய்?" என்று கேட்டேன்.

இதற்குள் மகாத்மாஜி தடியை ஊன்றிக்கொண்டு வெளியே புறப்பட்டு விட்டார். வாசலில் நின்ற நாய் அவரை அணுகிச் சென்றது. 'அச்சா குத்தா!' என்று சொல்லி காந்திஜி சிரித்துக்கொண்டே குனிந்து அதை அன்புடன் தடவிக் கொடுத்தார். பிரார்த்தனைக்குப் போகும் வழியில் நண்பர் மாணிக்கவாசகம் அந்த நாயைப்பற்றிய மயிர்க்கூச்செறியும் பயங்கரச் சம்பவம் ஒன்றை எனக்கு விவரமாகக் கூறினார்.

"நவகாளி ஜில்லாவிலுள்ள நோவாகாலா என்ற ஒரு சிறு கிராமத்தில் பெரிய ஹிந்துக் குடும்பம் ஒன்று இருந்தது. அந்தக் குடும்பத்தில் ஆண் பெண் அடங்கலாக ஒன்பது பேர் இருந்தனர். அந்த ஒன்பது பேரும் வெறிகொண்ட காலிக் கூட்டத்தினரின் வாளுக்குப் பலியாகிக் கூண்டோடு கைலாசமாக யமலோகத்துக்கு அனுப்பப்பட்டார்கள். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த நாய்தான் இது" என்றார்.

"உந்த நாய் இங்கே எப்படி வந்தது?" அதிசயத்துடன் விசாரித்தேன்.

"மகாத்மாஜி மேற்படி கிராமத்துக்குப் போயிருந்த சமயம் இந்த நாய் அவரைப் பார்த்துவிட்டு ஓடி வந்து அவரைச் சுற்றிச் சுற்றி வந்தது. பிறகு, தன்னுடைய குடும்பத்தார் வெட்டிப் புதைக்கப்பட்டிருந்த இடத்துக்கு மகாத்மாஜியை அழைத்துச் சென்றது. அங்கே சென்றதும் புதைக்கப்பட்ட இடத்தை மோப்பம் பிடித்துப் பிடித்துக் காட்டியது. காந்திஜி மேற்படி நாயின் நன்றி விசுவாசத்தையும், எஜமான பக்தியையும், அபூர்வ அறிவையும் பார்த்து ஆச்சரியப் பட்டுப் போனார். அன்றுமுதல் இந்த நாய் மகாத்மாஜி செல்லும் இடங்களுக்கெல்லாம் பின்தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது" என்று கூறினார் மாணிக்க வாசகம்.