உள்ளடக்கத்துக்குச் செல்

நவகாளி யாத்திரை/இருளும் குளிரும்

விக்கிமூலம் இலிருந்து
429261நவகாளி யாத்திரை — இருளும் குளிரும்சாவி

இருளும் குளிரும்

சூரியன் மேற்குத் திசையில் மறைந்தபோது மகாத்மாவும் தமது குடிசைக்குள் மறைந்துவிட்டார்.

அஸ்தமித்ததும் கொஞ்சம் கொஞ்சமாகக் குளிர ஆரம்பித்தது. நவகாளி ஜில்லாவில் இருளும் குளிரும் சேர்ந்து ஆட்சி புரிவதைப்போல் நான் எங்குமே கண்டதில்லை. குளிருக்குத் தெரியாமல், அந்தக் கன்னங் கரிய இருட்டில், மெதுவாக என்னுடைய நீண்ட கம்பளிக் கோட்டை எடுத்துப் போட்டுக் கொண்டேன். பொல்லாத குளிர் அதை எப்படியோ கண்டுபிடித்து விட்டதுடன், மெதுவாக என் கையை வந்து சில்லென்று கவ்வியது. சட்டென்று கையைச் சட்டைப் பைக்குள்ளே போட்டுக் கொண்டேன. அடுத்த கணம் சில்லென்று காலில் ஏதோ உறைத்தது. காலைப் போர்த்துக் கொண்டேன். முகத்திலே ஜிலுஜிலுப்புத் தட்டியது. 'மப்ளரை' எடுத்துக் கட்டினேன். அந்தப் பொல்லாத குளிர் என்னை விடவில்லை. கோட்டுக்குள்ளே எப்படியோ புகுந்து உடம்பைக் குலுக்கிக் குலுக்கி எடுத்தது.

பாவம், காந்திஜி இந்தக் குளிரை எப்படித்தான் தாங்குகிறார் என்று பார்ப்பதற்காக அவர் தங்கியிருந்த குடிசைக்குள் எட்டிப் பார்த்தேன். மகாத்மாஜியை அங்குக் காணவில்லை. நாலா மூலைகளிலும் தேடிப் பார்த்தேன். ஊஹூம்; காணவேயில்லை. அப்புறம் விசாரித்ததில் 'காந்திஜி ஒரு கம்பளிப் போர்வைக்குள் புகுந்துகொண்டு நன்றாக உறங்கிக் கொண்டிருப்பார்' என்று சொன்னார்கள். விடியற்காலம் சென்று பார்த்ததில் நிஜமாகவே மகாத்மாஜி ஒரு கம்பளிக்குள்ளேதான் உறங்கிக் கொண்டிருந்தார்!