நவகாளி யாத்திரை/மயானக் காட்சி

விக்கிமூலம் இலிருந்து

மயானக் காட்சி

தர்மாபூருக்குச் சமீபத்தில் பல பயங்கரச் சம்பவங்கள் நடந்திருந்தன. அத்தகைய பயங்கரப் பிரதேசம் ஒன்றுக்கு மகாத்மாஜி நேரில் வந்து பார்க்க வேண்டும் என்று மகாத்மாவை அங்கே அழைத்துச் சென்றார்கள். கிராமவாசிகளின் வேண்டுகோளுக்கு இணங்கி காந்தி மகானும் அந்த இடத்துக்கு அவர்களோடு நடந்தே சென்றார். பத்திரிகைப் பிரதிநிதிகளும் மற்றும் சிலரும் மகாத்மா காந்தியுடன் சென்றிருந்தோம்.

அங்கே போனபோது மயானத்துக்குள் காலடி வைப்பது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது. சுற்று முற்றும் எரிந்து விழுந்த கொள்ளிக் கட்டைகளும், சாம்பல் குவியல்களும், பச்சை மரங்கள் தீப்பட்டு பொசுங்கிப் போயிருந்த கோரக் காட்சியும், அருவருப்பையும், அச்சத்தையும் உண்டாக்கின.

அந்த மயானக் காட்சிகளுக்கு இடையே ஓர் இடத்தில் மண்டை ஓடுகளும், எலும்புக் கூடுகளும் கும்பலாய்க் குவிக்கப்பட்டிருந்தன.

மேற்படி கோரக் காட்சியைக் கண்ட காந்தி மகானுடைய உள்ளத் துடிப்பை அவருடைய நிர்மலமான முகம் பிரதிபலித்துக் காட்டியது.

சாந்த சொரூபியான காந்தி மகாத்மா சற்று நேரம் மோன நிலையில் ஆழ்ந்து போனார். பிறகு கண்களைக் கெட்டியாக மூடிக் கொண்டார். கைக்கோலை எடுத்து அந்த மண்டை ஓடுகளின் மேல் ஊன்றி நிறுத்தினார். நீண்ட பெருமூச்சுடனே ஆகாயத்தை நோக்கிப் பிரார்த்தனையில் ஈடுபட்டார். அகால மரணமடைந்த அந்த மண்டையோட்டுக்கு உடையவர்களின் ஆத்ம சாந்திக்காகவே காந்திஜி பிரார்த்தனை செய்திருக்க வேண்டும். இந்த மெய்சிலிர்க்கும் தெய்வ வடிவக் காட்சியைக் கண்டபோது எங்களுக்கெல்லாம் விவரிக்க இயலாத ஓர் உணர்ச்சி உண்டாயிற்று.

காந்தி மகான் தம்முடைய அஹிம்சா யாத்திரையில் இதுவரை சுமார் நாற்பத்தேழு கிராமங்களுக்கு விஜயம் செய்து, அங்குள்ள ஹிந்து முஸ்லிம்களின் சமரசத்துக்காக மகத்தான பல முயற்சிகளில் ஈடுபட்டு ஒரளவு வெற்றியும் கண்டிருக்கிறார்.

"காந்தி மகான் நவகாளியில் என்னத்தைச் சாதித்து விட்டார்?" என்று சில அதிசயப் பிரகிருதிகள் சந்தேகப்பட்டுக் கேள்வி கேட்கிறார்கள்.

உயர்ந்த லட்சியத்தை உள்ளத்திலே கொண்டு காந்தி மகான் உலகம் உய்ய உழைத்து வருகிறார். அவருடைய உன்னதத் தொண்டு காரணமாக துவேஷமும், பீதியும் சூழ்ந்திருந்த இருண்ட வனாந்தரப் பிரதேசமான நவகாளி ஜில்லாவில் சாந்தமும், சமரஸமும் ஏற்பட்டு வருகின்றன.

நவகாளியில் அகதிகளுக்கு இழந்த வீடுகளைக் கட்டிக் கொடுப்பதிலும், பாழடைந்த வீடுகளைப் புதுப்பித்துக் கொடுப்பதிலும் மகாத்மா தம்முடைய கவனத்தைச் செலுத்தவில்லை. மகாத்மா அங்கே கட்டுவது வெறும் மண் வீடல்ல; அன்பின் ஆலயத்தையே நிர்மாணித்திருக்கிறார். அந்த மகத்தான ஆலயத்துக்கு அஹிம்சை, சத்தியம், சாந்தம், சகோதரத்துவம், சமத்துவம் முதலியவையே அஸ்திவாரமாக அமைந்திருக்கின்றன. வகுப்புக் குமுறல்களையும், கடும் புயல்களையும் என்றென்றும் எதிர்த்து நிற்கக் கூடிய சக்தி மகாத்மா கட்டும் அந்த மாபெரும் ஆலயத்துக்குத்தான் உண்டு.