நாடக மேடை நினைவுகள்/அணிந்துரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

முனைவர் ச. சு. இராமர் இளங்கோ
இயக்குநர்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
சென்னை - 600 113

அணிந்துரை

‘தமிழ் நாடகத் தந்தை’ என்றும், ‘நாடகப் பேராசிரியர்’ என்றும், ‘தமிழ் மேடை நாடகத்தின் சேக்சுபியர்’ என்றும் நாடகக் கலைவாணர்களால் போற்றிப் பாராட்டப்பட்டவர் பம்மல் சம்பந்த முதலியார். 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தமிழ் நாடகத்தின் நிலை மிகவும் இரங்கத்தக்கதாக இருந்தது. கற்றவர்களால் நாடகக் கலை வெறுத்து ஒதுக்கப்பட்டது. இத்தகைய காலக் கட்டத்தில் பம்மல் சம்பந்த முதலியார் தமிழ் நாடகத் துறைக்குள் நுழைந்தார். தமிழ் நாடகத்திற்குப் புத்துணர்வும் புதுப்பொலிவும் தந்தார். அவர் இதிகாச நாடகங்களையும், புராண நாடகங்களையும் நடத்தி வந்த தொழில்முறை நாடகக் குழுவினரின் போக்கையும் மாற்றினார். அவர்கள் வரலாறு மற்றும் சமூக நாடகங்கள் நடிக்கத் தூண்டுகோலாக அமைந்தார்.

நாடக நடிகர்களைக் கூத்தாடிகள் என்று அழைக்கப்பட்ட வழக்கத்தை மாற்றி, அவர்களைக் கலைஞர்கள் என்று சிறப்பாகக் குறிப்பிடும் நிலைக்கு உயர்த்தினார். தமிழ் நாடக வரலாற்றில் பம்மல் சம்பந்த முதலியாரின் பங்களிப்பு மிகவும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. ஆங்கில நாடகங்களையும், வடமொழி நாடகங்களையும் தமிழில் மொழி பெயர்த்து, அவற்றை மேடைகளில் நடித்துத் தமிழ் நாடகத்திற்கு ஒரு புது வடிவத்தைத் தந்தார். அவர் காலத்துத் தமிழ் நாடகங்களில் பாடல்கள் அதிகமாக இருந்தன. அத்துடன் பாடல்களின் விளக்க உரையாடல்கள் மிகவும் குறைந்த அளவில் இடம் பெற்றிருந்தன.

பம்மல் சம்பந்த முதலியார் ஆங்கில நாடகங்களின் அமைப்பைப் பின்பற்றி உரைநடையில் நாடகங்களைப் படைத்தார்.

நாடகக் கலையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட பம்மல் சம்பந்த முதலியார் 9.2.1873இல் சென்னையில் பிறந்தார். மாநிலக் கல்லூரியிலும் பின்னர்ச் சட்டக் கல்லூரியிலும் படித்து பி.ஏ., பி.எல். பட்டங்கள் பெற்றார். சில காலம் வழக்கறிஞராகவும், நீதியரசராகவும் பணியாற்றினார். 24.9.1967இல் மறைந்தார்.

பம்மல் சம்பந்த முதலியார், நாடகத்திற்கு ஆற்றிய தொண்டு தமிழர்கள் என்றும் நினைவில் வைக்கத் தக்கது. கற்றவர்களும் நல்ல குடும்பத்தைச் சார்ந்தவர்களும் தமிழ் நாடகத்தைப் பார்க்க மாட்டார்கள் என்ற கருத்து பம்மல் சம்பந்த முதலியார் நாடகங்களால் மாற்றம் பெற்றது. உயர் குடியில் பிறந்தவர்களையும் புகழ் பெற்ற அரசியல்வாதிகளையும், அறிஞர்களையும் பம்மல் சம்பந்த முதலியார் தம்முடைய நாடகங்களில் நடிக்கச் செய்தார். அவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் சர். சி.பி. இராமசாமி அய்யர், தேசிய இயக்கத்தின் தலைவராக விளங்கிய சத்தியமூர்த்தி, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ஆர்.கே. சண்முகம் செட்டியார் முதலியோர் ஆவார்கள். அக்காலத்தில் நீதி மன்றத்தில் நீதியரசராகப் பணியாற்றிய பி.வி. சீனிவாச அய்யங்கார் அவர்கள் பம்மல் சம்பந்தனாரின் நாடகப் பணிக்குத் துணை செய்தார்.

நாடகம் என்பது தெருக்கூத்து என்றும், சிற்றூர் மக்கள் மட்டும் அதனைக் கண்டுகளிப்பர் என்றும் நிலவிய கருத்தை மாற்றி நல்ல மேடை அமைத்து, பலவகை நாடகங்களை நடத்தித் தமிழ் நாடகத்தை மேம்படுத்தினார்.

தற்போதுள்ள போக்குவரத்து வசதிகள் அறவே இல்லாத அக்காலக்கட்டத்தில், பம்மல் சம்பந்த முதலியார் தன்னுடைய நாடகங்களை இந்தியாவில் உள்ள நகரங்களிலும் கடல் கடந்து பர்மா, இலங்கை முதலிய நாடுகளிலும் மேடை ஏற்றினார். இலங்கையில் அவருடைய நாடகங்களைப் பார்த்த கலையரசு சொர்ணலிங்கம் என்பவர், பிற்காலத்தில் ஈழத்துத் தமிழ் நாடக வளர்ச்சிக்குப் பாடுபட்டார். அவர் பம்மல் சம்பந்த முதலியாரைத் தன்னுடைய ஆசான் என்று குறிப்பிட்டுள்ளார்.

அக்காலத்தில் நடத்தப்பட்ட நாடகங்கள் அனைத்தும் இன்பியல் முடிவுடையன. சம்பந்த முதலியார் அந்நிலையை மாற்றி ஆங்கில நாடகங்கள் அமைப்பைப் போன்று, இன்பியலும் துன்பியலும் கலந்து வரும் நாடகங்களைப் படைத்தார். தமிழ் நாடக மேடையில் செய்த பெரிய புரட்சி இதுவாகும்.

ஆங்கில நாடகங்களையும், வடமொழி நாடகங்களையும் அரங்கேற்றும்போது அவற்றைத் தமிழ்ச் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்தார். அதன் விளைவாக வேற்று மொழி நாடகங்கள் தமிழர்களுக்கு அந்நிய நாடகங்களாக ஆகாமல் தடுத்தார்.

வடமொழி, ஆங்கிலம், பிரெஞ்சு, செர்மன், லத்தீன் முதலிய மொழிகளிலிருந்து அரங்கேற்றியதன் மூலம் நாடகம் பற்றிய பரந்த - விரிந்த பார்வையைத் தமிழக மக்களிடம் ஏற்படுத்தினார்.

பம்மல் சம்பந்த முதலியார் ஆங்கிலம், வடமொழி, பிரெஞ்சு, செர்மன், லத்தீன் முதலிய மொழிகளிலிருந்து நாடகங்களைத் தமிழில் மொழி பெயர்த்தார். அவருடைய மொழிபெயர்ப்பு, தமிழ் நாடகக் கலைக்குக் கிடைத்த பெருஞ் செல்வமாகும். “பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழில் மொழி பெயர்க்க வேண்டும்” என்ற மகாகவி பாரதியாரின் கருத்தை மெய்ப்பித்துள்ளார்.

அந்நாட்களில் தமிழ் நாடகங்கள் விடிய விடிய நடக்கும். அந்நிலையை மாற்றித் தமிழ் மேடை நாடகங்களை மூன்று மணி நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என்று காலத்தைச் சுருக்கிய பெருமை சம்பந்த முதலியார் அவர்களையே சாரும். இவ்வாறு நாடகத்திற்குரிய கால எல்லையை வரன்முறை செய்தவர் பம்மல் சம்பந்த முதலியார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடகங்களை எழுதுகின்ற ஆசிரியர்கள் அவர்கள் படைத்துள்ள நாடக மாந்தர்களின் உள்ளுணர்வுப் போராட்டங்களை விவரிக்க வேண்டும். அவ்வாறு விவரிக்கும்போது அந்நாடகங்களைப் பார்க்கின்ற மாந்தர்களுடைய மனங்களும் தூய்மை பெறும் என்று நாடக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பம்மல் சம்பந்த முதலியார் இயற்றிய ‘மனோகரா', ‘இரு நண்பர்கள்’ முதலியவை இவ்வகையைச் சார்ந்தவை.

பம்மல் சம்பந்த முதலியார் 94 நாடகங்கள் எழுதியுள்ளார். அவை பின்வருமாறு : 1. புஷ்பவல்லி 2. சுந்தரி (அல்லது) மெய்க்காதல் 3. இரு சகோதரிகள் (அல்லது) லீலாவதி - சுலோசனா 4. கள்வர் தலைவன் 5. யயாதி 6. மனோகரன் 7. சாரங்கதரன் 8. இரண்டு நண்பர்கள் 9. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் 10. ரத்னாவளி 11. சத்ருஜித் 12. காலவ ரிஷி 13. நற்குலத் தெய்வம் 14, கண்டுபிடித்தல் 15. மார்க்கண்டேயர் 16. விரும்பிய விதமே 17. காதலர் கண்கள் 18. பேயல்ல பெண்மணியே 19. வாணீபுர வணிகன் 20. அமலாதித்யன் 21. சபாபதி - 1 பாகம் 22. சபாபதி துணுக்குகள் 23. சிம்ஹௗநாதன் 24. வேதாள உலகம் 25. மகபதி 26. பொன்விலங்குகள் 27. ஹரிச்சந்திரன் 28. கோனேரி அரசகுமாரன் 29. சிறுத்தொண்டர் 30. சந்தையிற் கூட்டம் 31. ரஜபுத்ர வீரன் 32. சபாபதி - II பாகம் 33. விஜயரங்கம் 34. ஊர்வசி சாபம் 35. புத்த அவதாரம் 36. வள்ளி மணம் 37. சபாபதி - III பாகம் 38. சந்திரஹரி 39. சபாபதி - IV பாகம் 40. தாசிப் பெண் 41. மனைவியால் மீண்டவன் 42. சர்ஜன் ஜெனரல் விதித்த மருந்து 43. விச்சுவின் மனைவி 44. இடைச்சுவர் இருபுறமும் 45. இந்தவிதமும் 46. விபரீதமான முடிவு 47. சுல்தான்பேட்டை சப் அசிஸ்டென்ட் மாஜிஸ்டிரேட் 48. நோக்கத்தின் குறிப்பு 49. இரண்டு ஆத்மாக்கள் 50. சாகுந்தலை 51. சுபத்ரா - அர்ஜுனா 52. விக்ரமோர்வசி 53. மாளவிகாக்னிமித்ரம் 54. கொடையாளி கர்ணன் 55. சஹாதேவனின் சூழ்ச்சி 56. உண்மையான சகோதரன் 57. காளப்பன் கள்ளத்தனம் 58. பிராமணனும் சூத்திரனும் 59. உத்தமபத்தினி 60. குறமகள் 61. வைகுண்ட வைத்தியர் 62. சதி சுலோசனா 63. நல்லதங்காள் 64. ஏமாந்த இரு திருடர்கள் 65. சபாபதி - V பாகம் 66. சோம்பேறி சகுனம் பார்த்தல் 67. கண்டதும் காதல் 68. காவல்காரர்களுக்குக் கட்டளை 69. மன்மதன் சோலை 70. ஸ்திரீ ராஜ்யம் 71. மாண்டவர் மீண்டது 72. அஸ்தினாபுரத்து நாடக சபை 73. சங்கீதப் பைத்தியம் 74. இருவரும் கள்வர்களே 75. கணநாதனும் அவனது அமைச்சர்களும் 76. பாடலிபுரத்துப் பாடகர்கள் 77. புத்திசாலிச் சிறுவன் 78. விருப்பும் வெறுப்பும் 79. ஆலவீரன் 80. பிறந்தவூர் 81. ஜமீன்தாரின் வருகை 82. ஸ்திரீ சாகசம் 83. சபாபதி ஜமீன்தார் 84. மனை ஆட்சி 85. சதிசக்தி 86. கலையோ காதலோ 87. இந்தியனும் ஹிட்லரும் 88. தீயின் சிறு திவலை 89. தீபாவளி வரிசை 90. துவிபாஷி சபாபதி 91. இல்லறமும் துறவறமும் 92. சபாபதி சினிமா 93. நான் குற்றவாளி 94. மனைவியைத் தேர்ந்தெடுத்தல் என்பனவாகும்.

பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய 94 நாடகங்களில் முதன் முதலாக அச்சிடப்பட்ட நாடகம் ‘லீலாவதி - சுலோசனா’ ஆகும். இந் நாடகம் 1895ஆம் ஆண்டு சனவரித் திங்களில் வெளிவந்தது. இந்நாடக நூலுக்குப் பம்மல் சம்பந்தனாரின் உயர்நிலைப் பள்ளி ஆசிரியரான முருகேச முதலியார், மாநிலக் கல்லூரித் தமிழாசிரியர் கிருஷ்ணமாச்சாரி, கிருத்துவக் கல்லூரித் தமிழாசிரியர் பரிதிமாற்கலைஞர், பூவை கல்யாணசுந்தர முதலியார், திருமயிலை வித்துவான் சண்முகம் பிள்ளை, தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதையர், தமிழ்ச்சுவடி பதிப்புத் துறையின் முன்னோடிகளில் ஒருவரான சி.வை. தாமோதரம் பிள்ளை, மனோன்மணீயம் நாடக ஆசிரியர் சுந்தரம் பிள்ளை முதலியோர் சாற்றுக் கவிகள் வழங்கியுள்ளனர்.

பம்மல் சம்பந்தனார் எழுதிய இராமலிங்க சுவாமிகள், விசுவாமித்திரர் எனும் இரு நாடகங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்று நாடக ஆய்வாளர் முனைவர் ஏ.என். பெருமாள் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இவற்றை இதிகாச, புராண நாடகங்கள் என்றும் வரலாற்று நாடகங்கள் என்றும் சமூக நாடகங்கள் என்றும் மொழிபெயர்ப்பு நாடகங்கள் என்றும் பிரிக்கலாம். இந்நாடகங்கள் சுகுண விலாச சபாவில் அரங்கேறின.

சுகுண விலாச சபா நடத்திய அனைத்து நாடகங்களிலும் பம்மல் சம்பந்த முதலியார் நடித்துள்ளார். மனோகரா நாடகத்தில் மனோகரனாகவும், பின்னர்ப் புருடோத்தமனாகவும் நடித்துள்ளார். ‘சபாபதி’ நாடகத்தில் சபாபதி முதலியாராகவும் அவருடைய பணியாளராகவும் நடித்துள்ளார்.

மேலும் ‘சிறுத்தொண்டர்’ நாடகத்தில் சித்திரபுத்திரனாகவும் ‘காலவ ரிஷி’ என்ற நாடகத்தில் நாரதராகவும் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். மேலும் பெண் வேடம் புனைந்தும் நடித்துள்ளார்.

நாடகத்தில் பெரிய பாத்திரங்களில் மட்டுமன்றி இங்ஙனம் சிறிய பாத்திரங்களில் நடித்ததால் அவர் மேலும் புகழ் பெற்றார். நாடகத்தில் தலைவனாக நடித்தவர்கள் மற்றச் சிறிய பாத்திரங்கள் ஏற்று நடிக்க முன்வர மாட்டார்கள் என்ற கருத்தை முறியடித்தார்.

‘இரண்டு நண்பர்கள்’ எனும் நாடகத்தில் சுந்தராதித்யனுக்கு இறுதியில் பைத்தியம் பிடித்துவிடுகிறது. அப்பாத்திரத்தை ஏற்று நடிக்க பம்மல் சம்பந்தனார், மன நோயாளிகளின் செயல்களை இரு திங்கள் மருத்துவமனையில் இருந்து நுணுகி அறிந்த பின்பு அவ்வேடத்தில் நடித்தார்.

சேக்சுபியரின் 'ஹேம்லட்' நாடகத்தில் நடிப்பதற்கு முன்னர் அந்நாடகத்தில் ஆங்கிலத்தில் நடித்த எட்மண்ட் கீன், எட்வின் பூத், கெம்பிள் ஆகியோர் நடிப்பைக் கூர்ந்து ஆராய்ந்து அதன் பின்னரே அப்பாத்திரத்தில் நடித்தார்.

மொழி பெயர்ப்பு நாடகங்களான சாகுந்தலை, மாளவிகாக்னிமித்ரம், விக்ரமோர்வசி, ரத்னாவளி முதலிய வடமொழி நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்த்தார். சேக்சுபியர் ஆங்கிலத்தில் எழுதிய 'Hamlet' என்ற நாடகத்தை அமலாதித்யன் என்றும், 'As you Like it' என்ற நாடகத்தை 'விரும்பிய விதமே' என்ற பெயரிலும் 'Cymlealine' என்ற நாடகத்தை 'சிம்ஹௗநாதன்' என்றும், 'Merchant of Venice' என்ற நாடகத்தை 'வாணீபுரத்து வாணிகன்' என்றும், ‘Macbeth'என்ற நாடகத்தை 'மகபதி' என்றும், பிரஞ்சு மொழியிலுள்ள 'The knavery of Scalphin' என்ற நாடகத்தை 'காளப்பன் கள்ளத்தனம்' என்றும் தமிழில் மொழி பெயர்த்தார்.

சுகுண விலாச சபையின் நிறுவனராகவும், நாடக ஆசிரியராகவும், நடிகராகவும், நாடக இயக்குநராகவும் விளங்கிய பம்மல் சம்பந்த முதலியார், தாம் படைத்த அனைத்து நாடகங்களையும் அச்சிட்டு வெளியிட்டார்.

பம்மல் சம்பந்த முதலியார் பல்துறைப் புலமை மிக்கவர். நாடகங்கள் எழுதியதுடன், ‘பேசும்பட அனுபவங்கள்', ‘தமிழ்ப் பேசும் படக்காஷி', ‘கதம்பம்', ‘தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை', ‘காலக் குறிப்புகள்', ‘சிவாலயங்கள்-இந்தியாவிலும் அப்பாலும்', ‘சிவாலய சிற்பங்கள்', ‘சிவாலய உற்சவங்கள்', ‘சுப்பிரமணிய ஆலயங்கள்', ‘தீட்சிதர் கதைகள்', ‘ஹாஸ்யக் கதைகள்', ‘ஹாஸ்ய வியாசங்கள் ‘முதலிய நூல்களையும் எழுதியுள்ளார்.

சிறுத்தொண்டர் நாடகத்தில் சிறுத்தொண்டர் மகனான சீராளனாகவும், அரிச்சந்திரன் நாடகத்தில் அரிச்சந்திரன் மகனான லோகிதாசனாகவும் யாரும் நடிக்க அக்காலத்தில் முன்வரவில்லை. எனவே பம்மல் சம்பந்த முதலியார் அவருடைய மகனை அவ்விரு பாத்திரங்களையும் ஏற்று நடிக்கச் செய்தார். நாடகத் துறையில் அவருக்கிருந்த மிகுந்த ஈடுபாட்டை இதன்வழி அறியலாம்.

சம்பந்த முதலியார் நாடகக் கலையை வளர்க்கும் முகத்தான் ‘Indian Stage' (இந்திய நாடக மேடை) என்ற ஆங்கில இதழை நடத்தினார். தமிழ் நாடகத் தோற்றத்தை விளக்கும் வகையில் ‘நாடகத் தமிழ்’ என்ற நூலை எழுதினார். ‘நான் கண்ட நாடகக் கலைஞர்கள்', ‘என் சுயசரிதம்', ‘நடிப்புக் கலையில் தேர்ச்சி பெறுவது எப்படி?’ முதலிய நூல்கள் அவருடைய நாடக அனுபவங்களோடு தொடர்புடைய நூற்களாகும்.

பம்மல் சம்பந்த முதலியார் தமக்கு ஏற்பட்ட நாடக அனுபவங்களைத் தொகுத்துப் பிற்காலத் தலைமுறைக்குப் பயன்படும் வகையில் 'நாடக மேடை நினைவுகள்' என்ற நூலை எழுதினார். இந்நூல் ஆறு தொகுதிகளைக் கொண்டது. நாடக மேடை நினைவுகள் முதல் தொகுதி 1932இலும், இரண்டாம் தொகுதி 1933இலும், மூன்றாம் தொகுதி 1935இலும், நான்காம் தொகுதி 1936இலும், ஐந்தாம் தொகுதி அதே ஆண்டிலும், ஆறாம் தொகுதி 1938இலும் வெளிவந்தன.

இவ்வாறு தனித்தனியாக வெளிவந்த ஆறு தொகுதிகளையும் ஒன்றாகத் தொகுத்து வெளியிட வேண்டும் என்பது நாடக ஆர்வலர்களின் விருப்பம். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் முகத்தான் ஆறு தொகுதிகளையும் ஒரே நூலாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறது.

பம்மல் சம்பந்த முதலியார், நாடகக் கலையை வளர்ப்பதை வாழ்வின் நோக்கமாகக் கொண்டார். தன்னுடைய வாழ்க்கையை நாடகத்திற்காக அர்ப்பணித்தவர். அவருடைய நாடக வாழ்க்கை , மகிழ்ச்சியான அனுபவங்களையும் கசப்பான உண்மைகளையும் கொண்டது.

‘நாடக மேடை நினைவுகள்’ என்னும் இந்நூலில் அவருடைய நாடக மேடை அனுபவங்களை நமக்கு எடுத்துக் காட்டுகிறார். நாடகக் கலையை முன்னெடுத்துச் சொல்லும் வகையில் அவர் இந் நூலை எழுதியுள்ளார். அவருடைய 94 நாடகங்களையும் மேடை ஏற்றுகின்ற போது அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களை இந்நூலில் விளக்கியுள்ளார்.

பம்மல் சம்பந்தனார் இளம் வயதில் தமிழ் நாடகங்களை வெறுத்தார். ‘அரிச்சந்திரா’ என்ற நாடகத்தைப் பார்க்க அவருடைய நண்பர் அழைத்தபோது அவர் மறுத்தார்.

1891ஆம் ஆண்டு பெல்லாரியில் இருந்து கிருஷ்ணமாச்சார்லு என்ற புகழ் பெற்ற தெலுங்கு நடிகர் ‘சரச விநோதினி சபா’ என்ற நாடகக் குழுவுடன் சென்னைக்கு வந்து தெலுங்கு நாடகங்களை மேடையேற்றினார். அந்நாடகங்களைக் கண்ணுற்ற பம்மல் சம்பந்தனார் தமிழிலும் அவை போன்ற நாடகங்களை நடத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டார். கிருஷ்ணமாச்சார்லு நடத்திய நாடகங்களில் ஒன்று ‘ஸ்திரீ சாகசம்’ என்பதாகும். இந்நாடகத்தைப் பம்மல் சம்பந்தனார் ‘புஷ்பவல்லி’ என்ற பெயரில் மொழிபெயர்த்தார். ‘சரச விநோதினி சபா’ என்ற அந் நாடகக் குழுவில் கற்றவர்களும், உயர் பதவியில் உள்ளவர்களும், அரசு அலுவலர்களும் பங்கேற்றிருந்தனர். அதே போன்ற நாடகக் குழுவைச் சென்னையில் அமைக்க வேண்டும் என்று பம்மல் சம்பந்தனார் விரும்பினார். அதன் விளைவாக 1-7-1891ஆம் ஆண்டு ‘சுகுண விலாச சபை’ என்ற நாடகக் குழுவை உருவாக்கினார். அக்குழுவில் பம்மல் சம்பந்தானாரும் ஊ. முத்துக்குமார சாமி செட்டியார், வி. வெங்கடகிருஷ்ண நாயுடு, அ. வெங்கடகிருஷ்ண பிள்ளை , த. செயராம் நாயகர், ஜி.இ. சம்பந்து செட்டியார், சுப்பிரமணிய பிள்ளை ஆகிய எழுவர் இடம் பெற்றிருந்தனர். பம்மல் சம்பந்தனார் ‘புஷ்பவல்லி’ என்ற நாடகத்தைத் தொடக்கத்தில் எழுதி இருந்தாலும் சுகுண விலாச சபையின் சார்பாக முதலில் அரங்கேறிய நாடகம் ‘சுந்தரி’ ஆகும்.

பம்மல் சம்பந்தனார் சுகுண விலாச சபையை நிறுவியதுடன் அந் நாடகக் குழுவுக்கு நிதி ஆதாரம் கேட்டு, சென்னையில் புகழ்பெற்ற செல்வந்தர்களை நாடிச் சென்றார். அவர்களுள் ஒருவர் திவான்பகதூர் பாக்கம் இராசரத்தின முதலியார் ஆவார். பம்மல் சம்பந்தனாரும் அவருடைய நாடகக் குழுவைச் சார்ந்தவர்களும் இராசரத்தினம் அவர்களைச் சந்தித்து, தங்களுடைய நாடகக் குழு வளர நிதி உதவி வழங்கும்படி கேட்டு கொண்டனர். திரு. இராசரத்தினம் “ இதுபோன்ற நாடகக் குழுவால் நாட்டிற்கு என்ன பயன்?” என்று கேட்டார். பம்மல் சம்பந்தனார், அதற்குப் பதில் ‘சேக்சுபியர் மகா கவியைக் கேளுங்கள்’ என்று கூறினார். அதன்பின் இராசரத்தினம் ‘சேக்சுபியர் இங்கிலாந்தைச் சார்ந்தவர். அப்படிப்பட்ட நாடக ஆசிரியர் நம் நாட்டில் யார் இருக்கிறார்கள்?’ என்று கேட்டார். பம்மல் சம்பந்தனார் ‘இன்று இல்லாவிட்டாலும் இனிமேல் அவர் போன்ற நாடக ஆசிரியர்கள் நம் நாட்டில் பிறப்பார்கள்’ என்று உறுதியாகப் பதில் அளித்தார்.

பம்மல் சம்பந்தனார் தமிழ் நாடகங்களின்மேல் கொண்டிருந்த ஈடுபாட்டையும், நம்பிக்கையையும் இந் நூலில் காணலாம்.

‘சுகுண விலாச சபா’ என்ற நாடக அமைப்பைச் சென்னையில் உருவாக்கிய பின்னர், இந் நாடகக் குழுவைப் பின்பற்றித் தமிழகத்தில் புதிய நாடகக் குழுக்கள் தோன்றின. அவற்றுள் ஒன்று 'ஓரியன்டல் டிராமேட்டிக் சொசைட்டி' என்பதாகும். இந் நாடகக் குழு சுகுண விலாச சபா தோன்றுவதற்கு முன்னரே உருவாகி, பின்னர்ச் செயலற்று விட்டது. சுகுண விலாச சபாவுக்குப் பின் மீண்டும் செயல்படத் தொடங்கியது. ‘ஓரியன்டல் டிராமேட்டிக் சொசைட்டி’ என்ற இந் நாடகக் குழுவில் பார்ப்பனர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். இந் நாடகக் குழுவினர் பிற சாதியினரைச் சேர்ப்பதில்லை. மேலும் அந் நாடகக் குழு சுகுண விலாச சபையில் நடிகராக இருந்த ரங்கசாமி அய்யங்காரை அவர் பார்ப்பனாராக இருந்ததால் அவர்களுடைய குழுவுக்கு வரும்படி அழைப்பு விடுத்தனர்.

சாதி சமய பேதங்களைக் கடந்த பம்மல் சம்பந்தனார், நாடகக் கலையை வளர்க்கத் தோன்றிய அந் நாடகக்குழு சாதியைப் பாதுகாக்கும் அரணாக மாறியதைக் கண்டு வெகுண்டார். அந் நாடகக் குழுவைக் கடுமையாக இந் நூலில் சாடியுள்ளார்.

அன்றைய தமிழ் நாடகங்களில் உண்மைக்கு மாறாகப் பொருந்தாத நிலையில் உரையாடல்களும், நிகழ்வுகளும் அமைந்திருந்தன. எடுத்துக்காட்டாக அரசன் அவைக்கு வந்தவுடன் அமைச்சரைப் பார்த்து, “மாதம் மும்மாரி மழை பொழிகிறதா? பிராமணர்கள் யாகம் செய்கிறார்களா? சத்திரியர்கள் சரியாகச் சண்டை போடுகிறார்களா? சூத்திரர்கள் வேலை செய்கிறார்களா?” என்று கேட்க, அமைச்சர் அரசனின் ஒவ்வொரு கேள்விக்கும் ஆமாம் என்று பதில் கூறுவார்.

இந் நாடக உரையாடலைக் கேட்ட பம்மல் சம்பந்தனார், இந்த அரசன் ஊரில் மழை பெய்வதைக்கூட அறியாமல் அந்தப்புரத்தில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தானா? என்று கூறி நகைத்ததாக இந் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழில் ஒரு துறையில் நூல்களே இல்லையென்றால் அறிஞர்கள் அத் துறையில் கவனம் செலுத்தி நூல்களைப் படைக்க வேண்டும். அதற்கு மாறாகத் தமிழில் ஒன்றுமே இல்லை என்று எப்போதும் புலம்பிக் கொண்டு இருக்கக்கூடாது. அவ்வாறு கூறுவோர் ‘பெற்ற தாய்க்கு உடை இல்லை’ என்று சொல்வதற்குச் சமமாவர். ‘தாய்க்கு உடை இல்லை’ என்றால் முதலில் வெட்கப்பட வேண்டியவன் மகனாவான். அதற்கு மாறாக அவன் ஊரெல்லாம் சொல்லித் திரிவது இழிந்த செயலாகும். சம்பந்தனார் தமிழில் நல்ல நாடகங்கள் இல்லை என்று வருந்தியதோடு நில்லாமல், நல்ல நாடகங்களைப் படைத்தார். இப்பொருண்மையை விளக்க பம்மல் சம்பந்தனார் இந்நூலில் ஒரு கதையைக் கூறுகிறார். அக் கதை வருமாறு:

தெனாலிராமனிடம் ஒருவன் வந்து உன் தந்தைக்கு நாளை ‘சிரார்த்தம்’ என்று கூற, தெனாலிராமன், ‘அப்படியானால் நீதான் சிரார்த்தம் செய்ய வேண்டும்’ என்று கூறினான். ‘உன்னுடைய தந்தைக்கு நான் ஏன் சிரார்த்தம் செய்ய வேண்டும்?’ என்று கேட்க, அதற்குத் தெனாலிராமன் ‘நீதானே எனக்கு நினைவூட்டினாய்; எனவே நீதான் செய்ய வேண்டும்’ என்று பதில் கூறினான். இவ்வாறு தமிழில் நல்ல நாடகங்கள் இல்லை என்று குறை கூறுவோர், அவ்வாறு கூறுவதை விடுத்து நல்ல நாடகங்களை எழுத முற்பட வேண்டும் என்று பம்மல் சம்பந்தனார் இந் நூலில் கூறியுள்ளார்.

பம்மல் சம்பந்தனார் நாடகக் கதையை எழுதும் முறை ஒரு புதுமையானதாகும். பம்மல் சம்பந்தனார் நாடகக் கதையை மனத்தில் அமைத்துக்கொண்ட பின்னர், நோட்டுத்தாளில் பென்சிலால் ‘ஏ’ என்ற அரசனுக்கு ‘பி’ என்று ஒரு மகன் இருந்தான். ‘சி’ என்ற அரசனுக்கு, ‘டி', ‘இ’ என்று இரு புதல்வியர் இருந்தனர். ‘ஏ’ என்ற அரசன் தன் மகனுக்குத் திருமணம் முடிக்க அமைச்சருடன் ஆலோசனை செய்து முடித்தபின் ‘எஃப்’ என்ற தூதுவனை ‘சி’ எனும் அரசனிடம் அனுப்பினான்.

இவ்வாறு கதை அமைப்பை எழுதிக்கொண்ட பின், புதிதாக ஏதாவது தோன்றினால் கதைப்போக்கை மாற்றி எழுதி விடுவதும் உண்டு. நாடகத்திற்கு ஏற்றவாறு காட்சிகளைப் பிரித்தபின்னர் ஏ, பி, சி, டி, இ, எஃப் முதலிய நாடகப் பாத்திரங்களுக்கு அவரவர் பண்புகளுக்கு ஏற்றவாறு பெயர்களைச் சூட்டுவார்.

பம்மல் சம்பந்தனார் எழுதிய நாடகங்களில் ஒன்று ‘தாசிப்பெண்’. இந் நாடகத்தை எழுதி அரங்கேற்றிய பின் விமர்சகர் ஒருவர், ‘சம்பந்தனாருக்குத் தாசிகளிடம் நிரம்ப அனுபவம் இருக்கும் போலும்; எனவேதான் அவருடைய இந் நாடகத்தில் மிக நுணுக்கமாக தாசிகளைப் பற்றி எழுதியுள்ளார்’ என்று குறிப்பிட்டார்.

பம்மல் சம்பந்தனார், அவருடைய விமர்சனத்தை மறுத்து இந் நூலில் எழுதியுள்ளார்.

ஓர் ஊரில் அரசன் ஒருவன் இருந்தான். அவனுடன் அமைச்சரும் துறவியும் இருந்தனர். அமைச்சருக்குத் துறவிமேல் பொறாமை, எனவே துறவி ஒரு நாள் அரசனிடம் சிற்றின்பம் குறித்து விரிவாகப் பேசிக்கொண்டிருக்கும்போது, அமைச்சர், ‘துறவிக்குச் சிற்றின்பத்தில் அதிக ஈடுபாடு இருக்கும்போலும்’ என்று ஏளனமாகப் பேசினார். துறவி, அமைச்சரின் கருத்துக்கு அப்போது பதில் சொல்லவில்லை.

சில நாள் கழித்துத் துறவி ஏவலரிடம் துருப்பிடித்த வெண்கலப் பாத்திரம் ஒன்றை எடுத்து வரும்படி அரசர் மற்றும் அமைச்சர் முன்னிலையில் சொன்னார். அந்தப் பாத்திரத்தை மலத்துடன் சேர்த்து மண்ணில் புதைத்து வைக்கும்படி கூறினார். சில நாள் கழித்து அரசன் மற்றும் அமைச்சரின் முன் ஏவலாளர் மூலம் அந்தப் பாத்திரத்தை மண்ணில் இருந்து எடுக்கும்படி கூறினார். அப்பாத்திரம் பிரகாசமாயிருப்பதைத் துறவி அரசனிடம் காட்டினார். அருகிலிருந்த அமைச்சர், துறவியிடம், ‘இதிலென்ன புதுமை? மலத்தின் புளிப்பு வெண்கலப் பாத்திரத்தில் இருந்த களிம்பை நீக்கிவிட்டது’ என்று விளக்கிக் கூறிய அமைச்சரை நோக்கி, ‘அமைச்சர் மலத்துடன் அதிக ஈடுபாடு கொண்டு இருப்பார் போலும்’ என்று பதில் உரைத்தார் துறவி.

படைப்பாளர்கள் தங்களுடைய படைப்புகளை அவர்கள் வாழ்வுப் பட்டறிவின் மூலமும், நண்பர்களின் அனுபவங்களின் மூலமும், செவிவழிச் செய்திகளின் மூலமும் படைப்பர். எனவே ‘தாசிப்பெண்’ என்ற நாடகத்தில் பம்மல் சம்பந்தனார் கருத்துப்படி அவர் தாசியோடு தொடர்பு இல்லை என்ற கருத்தை இக்கதையின் வழி அவருக்கு அறிவுறுத்துகிறார்.

பம்மல் சம்பந்தனார் 1891இல் பதினெட்டு வயதில் நாடக மேடை ஏறி நடிக்கத் தொடங்கினார். அத்துடன் நாடகங்களை எழுதவும் தொடங்கினார். அவருடைய பணி அவர் இறக்கும் வரை நீடித்தது. நீண்ட காலம் நாடகத் துறையில் இருந்ததால் அவருடைய நாடக அனுபவங்கள் நமக்கு வழிகாட்டத்தக்கன.

தொடக்கக் காலத்தில் பம்மல் சம்பந்த முதலியாருக்கு நடிப்பில் போதிய பயிற்சி இல்லை என்பதை அவரே இந்நூலில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். பின்பு நடிப்புத் துறையில் தேர்ச்சி பெற்ற விவரத்தையும் விளக்கியுள்ளார்.

பம்மல் சம்பந்தனார் பல்வேறு நாடகங்களை நடத்தியதுடன் மற்ற நாடகக் குழுக்களின் நாடகங்களைப் பார்த்து அவற்றில் வரும் புதிய உத்திகளைத் தன்னுடைய நாடகங்களிலும் கையாண்டார்.

‘மதராஸ் டிராமடிக் சொசைட்டி’ என்னும் பெயரில் அமைந்த நாடகக் குழு நடத்திய நாடகங்களில் காட்சிகளுக்கு ஏற்பவும் இடங்களுக்கு ஏற்பவும் திரைகளைப் (Scenic arrangements) பயன்படுத்தியதைக் கண்ணுற்ற பம்மல் சம்பந்தனார், தன்னுடைய நாடகங்களிலும் அந்த முறையைப் பின்பற்றினார்.

மேலும் பாரசீக நாடகக் குழுவினர் நடத்திய நாடகங்களின் திரைகள், பக்கத் திரைகள் (Side wings), மேல் தொங்கட்டான்கள் (Flies) முதலியவை புதிய முறையில் அமைந்திருந்தன. அவற்றைக் கண்ணுற்ற பம்மல் சம்பந்தனார், அவர்கள் பயன்படுத்தியதைப் போன்ற திரைகளைத் தன்னுடைய நாடகங்களிலும் பயன்படுத்தினார்.

பாரசீக நாடகக் குழுவினர் தமிழ் நாடக மேடை அமைப்பில் ஒரு திருப்பத்தை விளைவித்தனர். இதற்கு முன்னர்த் தமிழ் நாடகங்களில், ஒரு காட்சிக்கும் இன்னொரு காட்சிக்கும் இடையே இடைவெளி விடப்பட்டது. இக்குறை பாரசீக நாடகக் குழுவினர் வருகையால் தமிழ் நாடக மேடையில் களையப்பட்டது.

பாரசீக நாடகக் குழுவினர் பாத்திரங்களுக்கு ஏற்ப உடைகள் அணிந்திருந்தனர். அந்நாட்களில் தமிழ் மேடை நாடகங்களில் வறியவர்களாக நடிப்பவர்கள் செல்வந்தர்கள் போல் உடையணிந்திருந்தனர். அத்தகைய பொருந்தாப் போக்கையும் அந்நாடகக் குழு நீக்கிற்று.

நாடக அரங்கில் இடம்பெறும் ஒவ்வொரு காட்சியும் கதை நிகழ்ச்சிக்கு ஏற்ப உடனடியாக மாறுகின்ற காட்சி அமைப்பையும் (Transformation scenes) பாரசீக நாடகக் குழுவினர் தமிழ் நாடக மேடைக்கு அறிமுகப்படுத்தினார்.

அந்நாளில் தமிழ் நாடக மேடையில் பக்க வாத்திய இசைக் கலைஞர்கள் ஓரத்தில் அமர்ந்திருந்தனர். ஆயின் பாரசீக நாடகக் குழுவினர் பக்க வாத்தியக் கலைஞர்களை நாடக மேடைக்கு முன்னர் அமர வைத்தனர். அதன் விளைவாகப் பக்க வாத்தியக் கலைஞர்கள் தமிழ் நாடக மேடையின் முன்னர் அமர்ந்தனர்.

பம்மல் சம்பந்தனார் ‘ருக்மாங்கதா’ என்ற நாடகத்தை உரையாடல்களும் பாடல்களும் இன்றித் தோற்றக் காட்சிகளின் மூலம் (Tableau vivantes) அமைத்து முதன்முதலில் தமிழில் நாடகத்தை நடத்தினார். இது மௌனக்காட்சி என்ற நாடக வகையைச் சார்ந்தது.

பம்மல் சம்பந்தனார் பல்வேறு ஊர்களில் நாடகங்கள் நடத்தியபோது அவருக்கு ஏற்பட்ட இடையூறுகளால் மனம் நொந்தார். ஆயினும் தமிழ்ச் சான்றோர் பழமொழிகளை நினைவுகூர்ந்து மனவலிமை பெற்றார். நாடகத்தில் நடிக்கும்போது பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளையும் ஒவ்வொரு காட்சிக்கேற்றவாறு வரவேண்டிய பின்னணிக் காட்சிகளையும் நாடக நுணுக்கங்களையும் பிறர் நடத்தும் நாடகங்களுக்குச் சென்று பார்த்து அவற்றுள் கொள்ள வேண்டியவற்றை அவர் நடத்திய நாடகங்களில் பின்பற்றினார் என்பதை ஒளிவு மறைவின்றி இந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.

நாடக மேடையில் அவர் செய்த மாற்றங்களைக் கண்டு முதலில் முகம் சுளித்தவர்கள், பின்னர் அம்மாற்றங்களை முழுமனத்துடன் வரவேற்றனர் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.நாடக நடிகர்கள் மது அருந்தக் கூடாது என்றும், தன்னைக் காட்டிலும் நடிப்பில் சிறந்தவர்கள் இல்லை என்ற ஆணவம் கொள்ளக் கூடாது என்றும், தன்னோடு நடிப்பவர்களுடன் ஒத்த மனப்பான்மையோடு பழக வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். நாடக நடிகர்கள் தீய பழக்கங்களை விட்டுவிட்டு நல்ல பழக்கங்களை மேற்கொண்டால்தான் அவர்கள் வாழ்வு செம்மை பெறும் என்றும், சமூகத்தில் அவர்கள் உயர்வாகக் கருதப்பெறுவர்கள் என்றும் நெறிப்படுத்தியுள்ளார்.

‘சுகுண விலாச சபையில் சேர வரும் நடிகர்கள் முதலில் சிறிய பாத்திரங்களையே ஏற்று நடிப்பர். பின்னரே அவர்கள் பெரிய பாத்திரங்களை ஏற்று நடிப்பர். இந்நிகழ்ச்சியைப் பம்மல் சம்பந்தனார் இந்நூலில் குறிப்பிட்டுள்ளார். மேலும் நாடகத்தில் நடிக்க வருபவர்கள் உடனடியாகத் தலைவனாகவும், தலைவியாகவும் நடிக்க வேண்டும் என்று விரும்புவது தவறு என்பதை, ‘மெத்தையில் படிப்படியாக ஏறுவதை விடுத்து ஒரே மூச்சாக ஏற முற்பட்டால் கால் ஒடிந்து விடும்’ என்று அறிவுறுத்தியுள்ளார்.

நாடகக் கலைஞர், நியாயமான கருத்தைக்கூட பிறர் மனம் கொள்ளக் கனிவாகக் கூறவேண்டும். அதற்கு மாறாக முரட்டுத்தனமாகக் கூறினால் அந்த நியாயமான கருத்துக்கூட வெற்றி பெறாமல் போய்விடும் என்று பம்மல் சம்பந்தனார் இந்நூலில் கூறியுள்ள அறிவுரை எல்லோரும் பின்பற்றத்தக்கதாகும்.

‘நாடகக் கலைஞர்கள் வருவாய்க்கு ஏற்ப வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும்’ என்ற கருத்துடையவர் பம்மல் சம்பந்தனார். ‘ஒருவருக்கு நூறு ரூபாய் வருமானம் என்றால் 99 ரூபாய் 15 அணா செலவு செய்துவிட்டு மீதியைச் சேமிப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.’ அதை விடுத்து நூறு ரூபாய் முழுவதையும் செலவு செய்யக்கூடாது. அவ்வாறு செலவு செய்கின்றவர்கள் வாழ்வில் துன்பப்படுவர் என்று இந்நூலில் குறிப்பிட்டுள்ளார். இது நாடகக் கலைஞர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லோருக்கும் கூறப்படுகின்ற அறிவுரை என்றே கருதலாம்.

நாடக அரங்கேற்றம் என்பது பல்துறைக் கலைஞர்களின் கூட்டு முயற்சியால் உருவாவது. எனவே நடிகர்கள் அனைத்துக் கலைஞர்களையும் மதித்துப் பழகத் தெரிய வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றார்.

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
 உயிரினும் ஓம்பப் படும்

என்ற வள்ளுவர் குறளுக்கு ஏற்ப நடிகர்கள் ஒழுக்கத்துடனும் கட்டுப் பாட்டுடனும் வாழ வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

நாடக அரங்கேற்றம் சிறப்பாக அமைய, அரங்க வடிவமைப்பும் திரைச்சீலை ஒப்பனையும் காட்சிக்குரிய பொருள்களும் பெருந்துணையாக அமைகின்றன. இவற்றின் ஏற்றமுறு பங்கினையும் நடிகர்கள் பேச வேண்டிய, நடிக்க வேண்டிய முறையினையும் சிறப்பான நிலையில் விளக்கியுள்ளார். திரை இழுக்க வேண்டிய முறையினைக்கூட விளக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மனிதருக்குள் ஏற்றத்தாழ்வை உருவாக்கிய சாதி அமைப்பு முறையை எதிர்த்தும் மக்கள் எல்லாரும் ‘ஒரே குலம்’ என்ற கருத்தை வலியுறுத்தியும், சாதிச் சண்டைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் பம்மல் சம்பந்தனார் ‘பிராமணனும் சூத்திரனும்’ என்ற நாடகத்தை அந்நாளிலேயே எழுதியுள்ளார் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

வெள்ளைச் சுவரில் கருப்புப் புள்ளி இருந்தால் பார்ப்பவர்களின் கண்களுக்கு உடனடியாகப் புலப்படுவதுபோல, நாடக அரங்கேற்றத்தின்போது சிறு தவறுகூடப் பார்வையாளர்களுக்குப் பெரிதாகத் தெரியும். எனவே நாடக அரங்கேற்றத்தில் சிறு தவறுகூட நிகழாமல் விழிப்புடன் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பம்மல் சம்பந்தனார் 1891இல் ‘சுகுண விலாச சபா’ என்ற நாடகக் குழு தோற்றம் பெற்றது முதல் 1930ஆம் ஆண்டு வரை அவர் எழுதிய நாடக நூல்கள், அவரோடு நடித்த நடிகர்கள், நாடகத் துறை தொழில் நுட்பக் கலைஞர்கள், பிற நாடகக் குழுவில் பணியாற்றிய கலைஞர்கள், நாடகத் துறையில் ஈடுபாடு கொண்ட அறிஞர்கள் முதலியோரைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் இந்நூல், ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தின் நிகழ்ச்சிகளை வெளிப்படுத்தித் தொகுத்துத் தரும் நாடக வரலாறாக அமைகிறது. தமிழ் நாடக வளர்ச்சிக்குப் பாடுபடுபவர்களுக்கும், நாடக ஆய்வாளர்களுக்கும், நாடகக் கலைஞர்களுக்கும் இந்நூல் மிகவும் பயனுள்ளதாகும்.

இவ்வரிய நூலை மறுபதிப்புச் செய்து வெளியிடுவதற்கு நிதி உதவிய நடுவணரசு நிருவாகத்தில் இயங்கும் சங்கீத நாடக அகாதமிக்கும், இந்நூலை வெளியிடுவதில் தூண்டுகோலாக இருந்த சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத் துறை இணைப் பேராசிரியர் முனைவர் வீ. அரசு அவர்களுக்கும், பம்மல் சம்பந்தனாரின் நூல்களை அச்சிட்டு வெளியிடுவதற்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு உரிமை தந்த பம்மல் சம்பந்தனாரின் குடும்பத்தார்க்கும் நன்றி.

நிறுவன வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் காட்டி வருகின்ற நிறுவனத் தலைவர் மாண்புமிகு தமிழ் ஆட்சி மொழி - பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் முனைவர் மு. தமிழ்க்குடிமகன் அவர்களுக்கும், தமிழ் வளர்ச்சி-பண்பாடு மற்றும் அறநிலையத் துறைச் செயலாளர் திருமிகு. த. இரா. சீனிவாசன் இ.ஆ.ப. அவர்களுக்கும் நன்றி.

மெய்ப்புத் திருத்திய பாரதி அச்சக உரிமையாளர் திரு. தி. நடராசன் அவர்களுக்கும் நன்றி.

இந்நூலினை ஒளிக்கோர்வை செய்து தந்த விக்னேஷ் பிரிண்டர்ஸ் உரிமையாளர்க்கும், கவினுற நூலாக்கம் செய்து தந்த ‘பார்க்கர் கம்ப்யூட்டர்’ உரிமையாளர்க்கும் நன்றி.

இயக்குநர்