நாடக மேடை நினைவுகள்/பதினெட்டாவது அத்தியாயம்

விக்கிமூலம் இலிருந்து



பதினெட்டாவது அத்தியாயம்

1907ஆம் வருஷத்தின் முதலில், இலங்கையிலிருந்து ஹானரபில், பி. ராமநாதம் என்பவர் சென்னைக்கு வர அவரது வரவேற்கையாக விக்டோரியா ஹாலில், ‘அமலாதித்யன்’ நாடகத்திலிருந்து சில காட்சிகளும், ‘விரும்பிய விதமே’ என்பதினின்றும் சில காட்சிகளும், சகுந்தலை நாடகத்தைத் தோற்றக் காட்சிகளாகவும் ஆடினோம். தமிழில் மிகுந்த விற்பத்தியுடைய அச்சீமான் நாடகத்தின் முடிவில், மேடையின் பேரில் வந்து, ஆக்டர்களையெல்லாம் மிகவும் புகழ்ந்து, எங்கள் சபையை இலங்கைக்கு வரும்படியாகக் கோரினார்.

அன்றியும் இவ்வருஷ முதலில் சென்னையின் பழைய கவர்னராகிய லார்ட் வென்லாக் என்பவர், சென்னைக்கு மறுபடியும் வர, சென்னைவாசிகள் ராவ்பகதூர் அனந்தாச் சார்லு தோட்டத்தில் அவருக்கு ஒரு உபசார விருந்தளிக்க, அச்சமயம் அக்கமிட்டியார் வேண்டுகோளின்படி எங்கள் சபையார், ‘விரும்பிய விதமே’ நாடகத்திலிருந்து சில காட்சிகளையாடி, நந்தனார் சரித்திரத்தைத் தோற்றக் காட்சிகளாகக் காட்டினோம். நாடக முடிவில், எங்கள் சபையின் பேட்ரன் (Patron) ஆகவிருந்த சர். சுப்பிரமணிய ஐயர் அவர்கள், ஆக்டர்களாகிய எங்களையெல்லாம் இன்னின்னாரென லார்ட் வென்லாக்குக்குத் தெரியப்படுத்தினார். அச்சமயம் என்னைப் பற்றியும், ஷேக்ஸ்பியர் நாடகங்களை நான் தமிழில் அமைத்ததைப் பற்றியும் அவரிடம் புகழ்ந்து பேசினார். அப்போது லார்ட் வென்லாக் குடன் நான் சம்பாஷித்தபொழுது நடந்த ஒரு சிறு விஷயம் எனக்கு ஞாபகமிருக்கிறது; எங்கள் சபையைப் பற்றிப் பலவிஷயங்கள் கேட்டு வரும்பொழுது, முடிவில், ‘உங்கள் சபையில் எத்தனை அங்கத்தினர் இருக்கிறார்கள்?’ என்று (இங்கிலீஷில்) கேட்டார். அதற்கு நான் ‘முன்னூறு பெயரிருக்கிறோம்!’ என்று பதில் சொல்ல; ஒரு நாடக சபைக்கு இத்தனை அங்கத்தினரா?’ என்று ஆச்சர்யப் பட்டவராய், “முன்னூறு மெம்பர்களா? முன்னூறு மெம்பர்களா?’ என்று பன்னிக் கேட்டார். சில வருஷங்களுக்குப் பின் எங்கள் சபையில் 2100 மெம்பர்களிலிருந்தபொழுது, அதை அறிந்திருப்பாராயின் இவர் என்ன சொல்லியிருப்பாரோ?

இவ்வருஷக் கடைசியில், சென்னைக்கு அச்சமயம் விஜயம் செய்த மைசூர் மகாராஜா அவர்கள் முன்னிலையில் எங்கள் சபையார், தெலுங்கில் ஹரிச்சந்திர நாடகத்தை நடத்தினார்கள்.

இவ்வருஷம் நான் ஒரு நூதன நாடகமும் எழுதியதாக ஞாபகமில்லை . ஆயினும் எனது நண்பர் அ. கிருஷ்ணசாமி ஐயர் ‘சபலை’ என்னும் ஒரு நாடகத்தை எழுதினார். இது ஆங்கிலத்தில் ஹென்ரி உட் (Henry Wood) துரைசானி அவர்கள் ஈஸ்ட்லின் (East Lynne) என்னும் பெயர் வைத்து எழுதிய நவீனத்தின் தமிழ் நாடக அமைப்பாகும். இது எங்கள் சபையோரால் இவ்வருஷம் ஆடப்பட்டது. கிரந்தகர்த்தாவாகிய கிருஷ்ணசாமி ஐயர், நாடகத் தலைவியாகிய சபலை வேடம் பூண்டு, மிகவும் நன்றாய் நடித்தார். இது ஒரு துக்ககரமான நாடகம்; இதில் வந்திருந்தவர்களின் மனத்தையெல்லாம் உருக்கும்படி மிகவும் விமரிசையாக நடித்தார். இவர் நடித்திருக்கும் பெண் வேடங்களில் இது ஒரு முக்கியமானதாகும். இம்முறை இந் நாடகத்தில், எனதாருயிர் நண்பரும் சி. ரங்கவடிவேலுவும், நானும் ஒன்றும் எடுத்துக்கொள்ளவில்லை. ஆயினும் இதே நாடகம் பிறகு ஆடியபொழுது, ரங்கவடிவேலு, வேலைக்காரியாகிய விஜயையாக நடித்திருக்கிறார். நானும் பன்முறை இந்நாடகத்தில் சுவர்ணகிரி ஜமீன்தாராக நடித்திருக்கிறேன்.

இவ் வருஷக் கடைசியில் எங்கள் சபையின் மற்றொரு அங்கத்தினராகிய சரசலோசன செட்டியார் என்பவர் எழுதிய “சரசாங்கி” என்னும் நாடகமும் ஆடப்பட்டது. இது ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவி ஆங்கிலத்தில் எழுதிய சிம்பலின் (Cymbeline) என்னும் நாடகத்தைத் தழுவித் தமிழில் எழுதப்பட்டது. இந்நூலாசிரியர் கதையைக் கொஞ்சம் மாற்றியும் எழுதியுள்ளார்; இவர் தமிழ் நன்றாகப் படித்தவர்; கவனம் செய்யும் சக்தியும் இவருக்குண்டு. இவர் இரண்டொரு வருஷத்திற்குள்ளாக மிகவும் சிறு வயதில் மரித்தது எல்லோருக்கும் விசனிக்கத்தக்க விஷயம். 1908ஆம் வருஷத்தில், சென்ற வருஷம் அ. கிருஷ்ண சாமி ஐயர் தமிழ் சப் கண்டக்டராகயிருந்தது மாறி, சி. ரங்கவடிவேலு தமிழ் சப் கண்டக்டராக நியமிக்கப்பட்டார். இவ்வருஷத்தில் நடந்தேறிய பல விஷயங்களை நான் குறிக்க வேண்டியவனாயிருக்கிறேன்.

இவ் வருஷம் எங்கள் சபையின் நூறாவது நாடகம் நடத்தப்பட்டது. இந்த நூறாவது நாடகம் நடத்த 17 வருஷங்கள் பிடித்தன. நூறாவது நாடகமாக ‘அமலாதித்யன்’ நாடகத்தை நடத்தினோம். அதனால் வந்த மொத்த வரும்படி 652 ரூபாயை விக்டோரியா பப்ளிக் ஹால் என்கிற பெயரை உடைய இடத்தில் விக்டோரியா மகாராணியின் படமில்லாதிருந்த குறையைத் தீர்க்கச் செலவழித்து அப் படத்தை ஹாலில் ஸ்தாபித்தோம். இவ் வருஷம் என்னால் எழுதப்பட்ட இரண்டு புதிய தமிழ் நாடகங்கள் ஆடப்பட்டன. முதலாவது ‘சிம்ஹௗ நாதன்’ என்பதாம். இது ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவி ஆங்கிலத்தில் சிம்பலின் எனும் பெயர் வைத்து எழுதிய நாடகத்தின் தமிழ் அமைப்பாம். இதற்கு முன் வருஷம் இக் கதையை “சரசாங்கி” என்னும் பெயர் வைத்து நாடக ரூபமாய் எழுதினதை எங்கள் சபையார் ஆடினபொழுது, ஷேக்ஸ்பியர் மகாகவி எழுதியதை மிகவும் மாற்றி எழுதியது என் மனத்திற்குப் பிடிக்கவில்லை. சாதாரணக் கதைகளை எப்படி வேண்டுமென்றாலும் மாற்றி நாடக ரூபமாய் எழுதி விடலாம்; பெரியோர்கள் கையாண்ட கதைகளை அவ்வாறு மாற்றுவது உசிதமன்று என்பது என் துணிபு. என்னாருயிர் நண்பர் சி. ரங்கவடிவேலுவும், அக்கதையில் தான் கதாநாயகியின் பாகத்தை ஆட விரும்புவதாகத் தெரிவிக்கவே, சரிதான் என்று ஒப்புக்கொண்டு இதை விரைவில் எழுதி முடித்தேன். இந்நாடகமானது இவ்வருஷம் எங்கள் சபையோரால் ஆகஸ்டு மாதம் 28ஆம் தேதி ஆடப்பட்டது. இதில் எனதாருயிர் நண்பர், கதாநாயகியாகிய மோகினி (Imogen) வேடம் பூண்டனர். அதன்பேரில் மோகினியின் கணவனாகிய பாசதாமன் (Posthumus) வேடம் நான் பூண நேரிட்டது. இப் பாசதாமன் பாத்திரம் முக்கியமானதா யில்லாவிட்டாலும், எனது நண்பர் மற்றெவருடனும் நாடக மேடையில் ஆடமாட்டேன் என்கிற கொள்கையுடைய இதை நான் எடுத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. இக்கொள்கையினின்றும் எனதாருயிர் நண்பர் எங்கள் சபையைச் சேர்ந்த 1895ஆம் வருடம் முதல் 1923ஆம் வருஷம் அவர் தேகவியோகமான வரையில் மாறவில்லை என்று எனது நண்பர்கள் அனைவரும் அறிந்த விஷயமே. இந்நாடகத்தில் மோகினியின் சகோதரர்களாக, கிரிதரன், ஆர்வராகன் என்னும் இரண்டு பாத்திரங்கள் எங்கள் சபையைப் புதிதாய்ச் சேர்ந்த டி.சி.வடிவேலு நாயகரும், ம. ராமகிருஷ்ண ஐயரும் எடுத்துக்கொண்டு மிகவும் நன்றாய் நடித்தார்கள். இவர்களிருவரையும் பற்றி இங்குச் சற்று விவரமாய் எழுத விரும்புகிறேன். இவர்கள் இருவரும் பால்ய சினேகிதர்கள். இருவரும் இதற்கு முன்பாக ஏதோ ஒரு சபையில் கொஞ்சம் ஆடிப் பழகினவர்கள். இருவரும் எங்கள் சபையில் ஒன்றாய்ச் சேர்ந்தார்கள். தற்காலம் ராமகிருஷ்ண ஐயர் சற்றுப் பருமனாக இருந்தபோதிலும், அக்காலத்தில் வடிவேலு நாயகரைப் போலவே ஒல்லியாயிருந்தார். இவர்களிருவரும் ஏறக்குறைய ரங்கவடிவேலுவின் உயரமிருந்தபடியால், இம்மூவரும், அண்ணன், தம்பி, தங்கையாக நடித்தது அழகாயிருந்தது. இவர்களிருவரும் இந்த ஆண் வேடங்களில் நன்றாய் நடித்த போதிலும் இவர்கள் ஸ்திரீவேடங்களுக்கே ஏற்றவர்கள் என்று கண்டவனாய், பெரும்பாலும் இவர்களுக்கு ஸ்திரீ வேடமே கொடுத்து வந்தேன். இவர்களிருரிடமும் சில முக்கியமான நற்குணங்கள் இருந்தன. இருவரும் எந்த வேஷத்தை எடுத்துக்கொள்ளச் சொன்ன போதிலும், மனம் கோணாது எடுத்துக்கொள்வார்கள்; அதுதான் வேண்டும், இதுதான் வேண்டும் என்று கண்டக்டர்களுக்குச் சிரமம் கொடுப்பதில்லை; இருவர்களும் தங்கள் பாடங்களைச் சரியாகச் சடுதியில் படித்து விடுவார்கள்; இருவருக்கும் நல்ல ஞாபகசக்தியுண்டு; நாடக மேடையின்மீது கைசரக்கு அதிகமாக உபயோகிக்க மாட்டார்கள்; இது ஆக்டர்களுக் குரிய ஒரு முக்கியமான குணமாம். அன்றியும் இவ்விருவர் களும், ஒத்திகைகளுக்குச் சரியாக வந்து தங்கள் பாடங்களை ஒப்புவிப்பார்கள். இத்தனைப் பொருத்தங்கள் இவ்விரு வருக்கும் இருந்த போதிலும், சில - வித்தியாசங்களும் இருந்தன. அவற்றுள் முக்கியமானது, வடிவேலு நாயகர் நன்றாய்ப் பாடுவார்; ராமகிருஷ்ண ஐயருக்கும் சங்கீதத்திற்கும், எயிரோபிளேனி (aeroplane) னாலும் ஒரு நாளில் கடக்கக் கூடாத தூரம்! ராமகிருஷ்ண ஐயர் சிவப்பாயிருப்பார்; வடிவேலு நாயகர் கருநிறமுடையவர். கருநிறமுடையவராயினும், ஸ்திரீ வேஷம் தரித்தால் அழகாய்த் தோற்றுவார்.

வடிவேலு நாயகர், அ. கிருஷ்ணசாமி ஐயர் கொஞ்சம் வயோதிகரான பிறகு, அவர் ஆடிவந்த பாகங்களில் அநேகம் ஆடியிருக்கிறார். லீலாவதி, சந்தியாவளி, சௌமாலினி, ரத்னாங்கி முதலிய முக்கியமான ஸ்திரீ வேடங்களில், அவருக்குப் பிறகு, மிகவும் நன்றாய் நடித்துப் பெயரெடுத்திருக்கிறார். தற்காலம் லீலாவதி வேஷத்தில் இவருக்கு நிகரில்லையென்றே நான் கூறவேண்டும். கிருஷ்ணசாமி ஐயரைப்போல் அவ்வளவு திவ்யமான சாரீரமுடையவராயில்லா விட்டாலும், குறைவில்லாச் சாதகத்தினால் தன் குரலைச் சரிப்படுத்தி, சபையோர் மெச்சும்படியாகப் பாடுபவர். மேற்குறித்த நாடகப் பாத்திரங்களன்றி, எனது மனோஹரன் நாடகத்தில் இவருக்குச் சமானமாக வசந்தசேனையாக யாரும் நடித்ததிலர் என்று நான் உறுதியாய்க்கூறக் கூடும். அன்றியும் சோக பாகங்களில், கிருஷ்ணசாமி ஐயருக்குப் பிறகு, இவர்தான் தற்காலம் சிறந்த ஆக்டர் என்று சொல்ல வேண்டும். தற்காலம் ஹரிச்சந்திர நாடகம் எங்கள் சபையில் போடும்போதெல்லாம் இவர்தான் சந்திரமதியாக வெகு விமரிசையாக நடித்து வருகிறார். அன்றியும் கிருஷ்ணசாமி ஐயரைப் போல் தெலுங்கு நாடகங்களிலும் சிலவற்றுள் இவர் முக்கிய ஸ்திரீ வேஷம் பூண்டிருக்கிறார். மேலும் இவரிடமுள்ள இன்னொரு முக்கியமான சிறப்பு. என்னவென்றால், அழகிய ராஜஸ் திரீகள் வேடம் பூணுவதை விட்டுச் சாதாரண ஸ்திரீகளின் வேஷம் பூணுவதிலும் இவர் மிகவும் சமர்த்தர். சிறுத் தொண்டர் நாடகத்தில் சந்தன நங்கையாகவும், புத்த சரித்திரத்தில் கிருசகௌதமியாகவும், சபாபதியில் சபாபதி முதலியாரின் தாயாராகவும், இன்னும் இப்படிப்பட்ட பல வேடங்களில் பெயர் பெற்றிருக்கிறார். எந்த வேடத்தில் வந்தாலும் சரிகைப் புடவையும், ரவை அட்டிகையும் கட்டிக்கொள்ள வேண்டுமென்று விரும்பும் சில ஆக்டர்களைப் போலல்லாமல், அந்தந்த வேஷத்திற்குத் தக்கபடியே ஆடையாபரணங்களை அணிவார். தெற்கத்திய ஸ்திரீயாக வந்தாலும், இடைச்சியாக வந்தாலும் தாய்க்கிழ வியாக வந்தாலும், கிறிஸ்தவப் பெண்ணாக வந்தாலும் தத்ரூபமாயிருக்கும்.

இவர் தமிழ் நன்றாய்க் கற்றுணர்ந்தவர்; தமிழில் வள்ளி மணம் என்கிற ஒரு நாடகத்தையும் எழுதியிருக்கிறார். அது எங்கள் சபையோரால் ஒரு முறை ஆடவும் பட்டிருக்கிறது. அன்றியும் தமிழ்ப் பாட்டுகள் எழுதுவதில் மிகவும் வல்லமை வாய்ந்தவர். தனக்கு வேண்டிய வர்ணமெட்டுகளிலெல்லாம் தானாகப் பாட்டுகள் கட்டிக்கொள்வார்; பிறருக்கும் கட்டிக் கொடுப்பார்.

இவரது நண்பராகிய ராமகிருஷ்ண ஐயர் சில சமயங்களில் வசந்தசேனை, ரத்னாவளி முதலிய உயர்குல ஸ்திரீ வேடங்கள் தரித்தபோதிலும், இவர் முக்கியமாக நாடக மேடையில் பெயர் பெற்றது “சில்லர” வேஷங்கள் என்று சொல்லப்பட்ட தாழ்குலத்து ஸ்திரீ வேடங்களிலேயாம். வடிவேலு நாயகரைப் போலவே இவரும் இப்படிப்பட்ட வேஷங்கள் தரிக்கும்பொழுது, அவ் வேஷங்களுக்குத் தக்கபடியே ஆடை ஆபரணங்கள் அணிவார். இவர் வண்ணாத்தியாக வேடம் பூண்டால், அச்சம் வண்ணாத்தியைப் போலவே நடிப்பார்; ஆதிதிராவிட ஸ்திரீயாக வேடம் பூண்டால் எல்லோரும் ஆதி திராவிட மாதுதான் என்று சொல்வார்கள்; குயத்தியாக வேடம் பூண்டால், வாஸ்தவமாகிய ஸ்திரீகளுக்கும் இவருக்கும் வித்தியாசம் கண்டுபிடிப்பது கடினமாம். எந்த வேடம் பூண்டாலும் அதற்கிசைய நடிப்பதுதான் மேன்மை - என்று அர்த்தம் கொள்ளும்படியாக ஒரு ஆங்கிலக் கவி எழுதியிருக்கிறார். அதற்கிசைய நடிப்பவர் இவராவர். ‘பொன் விலங்குகள்’ என்னும் எனது நாடகத்தில் மங்கைத் தாயாகவும், இடைச்சுவர் இருபுறமும் என்னும் தமிழ் நாடகத்தில் அம்மாயி என்னும் வேலைக்காரியாகவும் இவர் நடித்தது சபையோரால் மெச்சப்பட்டதை நான் மறக்கற்பாலதன்று. இவ்வாறு தாழ்குல ஸ்திரீகள் வேஷங்களில் பெயர் பெற்றதும், அரிச்சந்திர விலாசத்தில் காலகண்டியாகவோ அல்லது நந்தனார் சரித்திரத்தில் வேதியர் மனைவியாகவேர், பிராம்மண ஸ்திரீயாக வரும் பொழுது அசல் பிராமண ஸ்திரீயைப்போலவே இருப்பார். இது நாடக மேடையில் ஒரு மிகவும் மெச்சத்தக்க குணமாம்.

இவரைப்பற்றி இன்னொரு விஷயம் இங்கு எழுத விரும்புகிறேன். இவர் என்னிடம், “என்ன வாத்தியார்! எப்பொழுது பார்த்தாலும், மங்கைத்தாய் வேஷமும், அலமேலு வேஷமும்தான் எனக்குக் கொடுக்கிறீர்கள்? பெரிய நாடகப் பாத்திரமாக நடிக்கவேண்டுமென்று எனக்கு ஒரு விருப்பமிருக்கிறது. ஏதாவது ஒன்றைக் கொடுத்து, என்னைப் பாருங்கள்!” என்று பன்முறை கேட்டிருந்தார். அதன்மீது ஒரு முறை மனோஹரன் நாடகம் எங்கள் சபையார் ஆடத் தீர்மானித்திருந்தபொழுது இவருக்குப் பத்மாவதி பாத்திரம் கொடுத்தேன். மற்ற ஆக்டர்களெல்லாம் இவரால் பத்மாவதி சரியாக ஆட முடியாதென்று கூறினர்; ஆயினும் பார்ப்போம் என்று, என்னாலியன்ற அளவு அவருக்கு அப்பாத்திரத்தை இப்படி இப்படி ஆட வேண்டுமென்று சொல்லிக் கொடுத்தேன்; அவரும் மிகுந்த சிரத்தையெடுத்துக் கொண்டு கற்று வந்தார். இவருக்கோ கிருஷ்ணசாமி ஐயரைப் போல் பாடத் தெரியாது; பத்மநாபராவைப் போல் கம்பீரமான உருவமும் கிடையாது; மிகவும் குட்டையாக உருவம் உடையவர். இப்படி இருந்தும் நாடக தினம், பத்மாவதியாக நடித்தபொழுது முன்பு ஏளனம் செய்த அநேகர், இவ்வளவு நன்றாக நடிப்பார் என்று நாங்கள் நினைக்கவில்லை என்று ஒப்புக்கொண்டனர். எனக்கும் இவர் என்னுடன் நடித்தது திருப்திகரமாயிருந்தது. இதை இவ்விடம் ஏன் எடுத்துக் கூறுகிறேன் என்றால், நம்மால் அசாத்தியமான காரியமான போதிலும், மனமார முயற்சி செய்தால் அதன் பலன் நமக்குக் கிட்டாமற் போகாது என்பதுதாம்; இதைப்பற்றித் தெய்வப் புலமைத் திருவள்ளுவர் கூறியதை எனது நண்பர்கள் கவனிப்பார்களாக.

அன்றியும் இவ்வருஷம் நாங்கள் நடத்திய இந்தச் சிம்ஹௗநாதன் நாடகத்தில் எனக்கு ஞாபகம் இருக்கும் வரையில், டி. வி. கோபாலசாமி முதலியார் என்பார் முதன் முறை வேடம் தரித்தனர். இவர் தற்காலம் சென்னை கவர்ன்மெண்ட் மந்திரிகளில் ஒருவராயிருக்கும் ஹானரபில் ராஜன் என்பவரின் மாமனார்; எனக்கு இது முதல் தன் ஆயுசுபர்யந்தம் அத்யந்த நண்பராயிருந்தவர். இவர் தான் நாடக மேடையில் வர வேண்டுமென்று இச்சையிருப்பதாக எனக்குத் தெரிவிக்க, அவர் உருவத்திற்குத் தக்க வேடம் கொடுக்க வேண்டுமென்று யோசித்தவனாய், மோகினி, ஆர்வராகன், கிரிதரன், இவர்களுடைய வளர்ப்புத் தந்தை யாகிய பாலராயன் (Balarius) பாத்திரம் இவருக்குக் கொடுத்தேன். இவர் எங்கள் நாடக மேடையில் வருவது இதுதான் முதல் முறையாயிருந்த போதிலும், கொஞ்சமும் கூச்சமின்றி மிகவும் நன்றாய் நடித்தார். இவரிடமிருந்த மற்ற அரிய குணங்களுடன், நாடக மேடையைச் சேர்ந்த ஓர் அரிய குணம் என்னவென்றால், தனக்குரிய பாடத்தில், தானும் ஒரு எழுத்து விட மாட்டார்; தன்னுடன் வரும் இதர நாடகப் பாத்திரங்களும் ஓர் எழுத்து விட்டுவிடச் சம்மதியார்; ஒத்திகைகளில் தன்னுடன் வரும் யாராவது ஆக்டர், எதை விட்டபோதிலும், அதை அவருக்கு ஞாபகப்படுத்தி, அவர் அதைச் சரியாக ஒப்புவிக்கும் வரையில் விட மாட்டார்! இவ்வாறு தன் பாடத்தைப் படிப்பதுமன்றித் தன்னுடன் வரும் மற்ற ஆக்டர்களின் பாடத்தையும் படித்து வைப்பார்! இவர் எங்கள் சபையில், இது முதல் பன்முறை வேடங்கள் தரித்து ஆடியிருக்கின்றனர். இவருக்கு ‘பிஸ்தாக் கொட்டை சாமியார்’ என்று எங்கள் சபையில் பெயர் வந்ததற்குக் காரணம் பிறகு எழுதுகிறேன்.

இவர், படித்தவர்கள் அநேகரைக் கொள்ளை கொள்ளும் நீர் வியாதியால், நடுவயதில் அகால மரணமடைந்தார். இவர் மரணத்தினால் எங்கள் சபை ஒரு நல்ல ஆக்டரையும், நான் எனது அத்யந்த நண்பர்களில் ஒருவரையும் இழந்தேன். எங்கள் நட்பைப்பற்றி ஒரு சிறு விஷயம் இங்கெழுத அனுமதி கேட்கிறேன். இவரை நான் அறிவதன் முன்னர், சிற்றுண்டிக்காவது, விருந்திற்காவது எங்கு சென்ற போதிலும், நானும் எனதாருயிர் நண்பர் சி. ரங்கவடி வேலுவும் ஒன்றாய் உட்கார்ந்து உண்போம். இவரைத் தெரிந்த பிறகு, நாங்கள் மூவரும் ஒன்றாய்ச் சேர்ந்துண் பவர்களானோம். எந்தப் பார்ட்டிக்காவது விருந்துக்காவது போனபோதிலும், நாங்கள் எங்கிருக்கிறோமென்று அவர் எங்களைத் தேடி வந்து எங்களுடன் உட்காருவார்; நாங்களும் அவர் எங்கிருக்கிறார் என்று தேடி அவரிடம் செல்வோம். இத்தகைய நண்பனைச் சில வருடங்களுக்குள் இழந்தது எனது பூர்வபாபவி பாகம் என்றே கருதுகிறேன்.

இந் நாடகத்தில் டாக்டர் டி. ஸ்ரீவாசராகவாச்சாரி ஈயாகாமன் (lachimo) வேடம் பூண்டனர். இவர் 12 வருடங்களுக்கு முன் இரண்டு நண்பர்கள் எனும் நாடகத்தில் கமலினி வேஷம் தரித்த பிறகு, இடைக் காலத்தில் எங்கள் சபையைவிட்டு நீங்கியிருந்து, மறுபடியும் இச் சமயம் வந்து சேர்ந்தார். இந் நாடகத்தில் நடித்த மற்ற ஆக்டர்களைப்பற்றி நான் இங்கெழுதத்தக்க விசேஷம் எனக்கொன்றும் ஞாபகமில்லை .

இந் நாடகமானது, இச்சமயம், சீக்கிரம் ஆடவேண்டுமென்று ஒருவாறு அவசரத்தில் எழுதி முடிக்கப்பட்டது. பிறகு சாவகாசமாக முற்றிலும் திருத்தி எழுதி 1914ஆம் வருஷம்தான் இதை அச்சிட்டேன். அச்சிடும் பொழுது, ஷேக்ஸ்பியர் காலத்தில் அநுசிதமாக மதிக்கப் படாவிட்டாலும், தற்காலம் அவ்வாறு மதிக்கப்படும் என்று நான் எண்ணிய சில வாக்கியங்களை மாற்றியுள்ளேன். அன்றியும் இதில் 5ஆம் அங்கத்தில், பாசதாமனது காட்சியில், அம் மகா நாடகக் கவி எழுதாது மற்றவர்களால் கோர்க்கப்பட்டது என்று அறிஞர்களால் மதிக்கப்படும் பாகத்தையெல்லாம், நான் அச்சிட்டிருக்கும் புஸ்தகத்தில் அகற்றியுள்ளேன்.

அந்நாடகமானது, எங்கள் சபையால் இரண்டு மூன்று முறைதான் ஆடப்பட்டது; இலங்கை சுபோத விலாச சபையாரால் நான்கைந்து முறை ஆடப்பட்டிருக்கிறது; மற்றச் சபையார் இதை எக்காரணத்தினாலோ அதிகமாக ஆடவில்லை .

இந்தச் சிம்ஹளநாதன் அன்றி, இவ்வருஷம் எங்கள் சபையார் நடித்த எனது மற்றொரு நாடகம் “வேதாள உலகம்” என்பதாம். இந்நாடகத்தை இதற்கு ஒரு வருஷத்திற்கு முன்பாகவே நான் எழுதி முடித்தபோதிலும் இவ்வருஷம்தான் எங்கள் சபையோரால் ஆடப்பட்டது. இவ்வாறு இந்நாடகம் ஒரு வருஷமாய் ஆடாமல் நின்றதற்கு ஒரு முக்கியக் காரணம் உண்டு. இந்நாடகத்தில் கதாநாயகன் ராஜஸிம்ஹன் எனும் அரசகுமாரனாயினும், அவனைவிட முக்கியமான பாத்திரம் ‘தத்தன்’ என்னும் அவனுடைய தோழனுடையதாம். இதை இந்நாடகத்தை வாசித்திருக்கும் என் நண்பர்கள் நன்றாயறிவார்கள். ஒருவிதத்தில் இந்தத் தத்தனையே கதாநாயகனெனவும் கூறலாம். அவ்வளவு முக்கியமான பாத்திரம் அது; இதை எனது நண்பர் எஸ். ராஜகணபதி முதலியாருக்கென்றே எழுதினேன். நான் இதை எழுதி முடித்து, அவர் தன் பாகத்தை யெல்லாம் எழுதிக்கொண்டவுடன், (அப்பொழுது இந்நாடகம் அச்சிடப்படவில்லை) அவருடைய ஆபீசுக்காரர்கள் அவரை திடீரென்று ரங்கூனுக்கு மாற்றி விட்டார்கள். அதன் பேரில் அவர் திரும்பிப் பட்டணம் வந்து சேர்ந்து இந்நாடகத்தில் நடிக்கும் வரையில், வேறு மற்றவர்களைக் கொண்டு இந்நாடகத்தை நடிப்பதில்லை என்று தீர்மானித்தவனாய், ஒரு வருஷ காலத்துக்குமேல் அவர் வரவை எதிர்பார்த்து, இதை ஆடாது விட்டுவைத்தேன், இவ்வாறு அவருக்காக இதை நிறுத்தி வைத்ததற்காக என்னைக் கடிந்து கொண்ட எனது நண்பர்களும், அவர் திரும்பி வந்து இவ்வருஷம் இந்நாடகத்தில் தத்தனாக நடித்ததைக் கண்ட பிறகு, நான் செய்தது சரியென ஒப்புக்கொண்டனர். அவ்வளவு நன்றாக நடித்தார் அவர். இந்நாடகமானது, அதே சபையாரால் (பால நாடக சபைகள் உள்பட) பன்முறை ஆடப்பட்டிருப்பதாலும், நான் எழுதிய நாடகங்களைப் படிப்பவர்களால் அதிகமாகக் கொண்டாடப்பட்டிருப்பதாலும், இந்நாடகக் கதையைப் பற்றிச் சில விஷயங்கள் இதை வாசிக்கும் எனது நண்பர்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன்.

இந்த நாடகக் கதை என் மனத்தில் உதிக்குமுன், இதன் பெயர், ‘வேதாள உலகம்’என்பது என் மனத்தில் உதித்தது! சாதாரணமாக, ஒரு நாடகத்தை எழுதி முடித்த பிறகுதான் அதற்கு என்ன ஏற்ற பெயர் வைக்கலாம் என்று பெரும்பாலும் நாடகாசிரியர்கள் யோசிப்பது வழக்கமாம். இதிலோ பெயரை முன்பு தீர்மானித்து, அப்பெயருக் கேற்றபடி, நாடகக் கதையை எழுதலானேன்! இப்பெயர் என் மனத்தில் உதித்ததற்கு ஒரு விநோதமான காரணம் உண்டு. இதற்கு முன்னால் சென்னைக்கு ஒரு புதிய பாரசீகக் கம்பெனியார் வந்து, ஹிந்துஸ்தானி பாஷையில் பல நாடகங்களை ஆடியதைப்பற்றி எனது நண்பர்களுக்குத் தெரிவித்திருக்கிறேன். அவர்கள் முதன் முதல் ஆடிய நாடகத்திற்கு “பஹாரி பரிஸ்தான்” (Bhari Paristan) என்று பெயர். எப்படி எங்கள் சுகுண விலாச சபையார், மற்ற ஊர்களுக்குப் போகும் பொழுதெல்லாம்,“லீலாவதி-சுலோசனை”யை முதல் நாடகமாகப் பல வருஷங்கள் நடத்தி வந்தார்களோ அப்படியே இப்பாரசீகக் கம்பெனியார், எந்த ஊரில் போய் ஆட ஆரம்பித்த போதிலும், இந்த “பஹாரி பரிஸ்தான்” என்பதையே தங்கள் முதல் நாடகமாக ஆடுவதாக வழக்கமுடையவராயிருந்தனர்.

இவர்கள் முதன்முறை இதை ஆடியபொழுது நான் போய்ப் பார்க்கவில்லை. இரண்டாம் முறை ஆடியபொழுது இதைப்போய்ப் பார்த்தேன். இதில் முக்கியமாக வினோதமாக ஜோடிக்கப்பட்ட காட்சிகள் பல இருந்தனவேயொழிய, ஆக்ட் செய்வதில் அத்தனை விசேஷமாக இல்லை என்று என் புத்தியிற் பட்டபோதிலும், ஒரு காட்சி மாத்திரம் என் மனத்தில் நன்றாய் வேர் கொண்டது. அதாவது, கதா நாயகனான ஒரு வாலிப ராஜகுமாரன், தன் தோழனுடன் காட்டில் உழன்றபொழுது, ஒரு குளிகையைப் பெற்று, அங்கு தோன்றிய ஒரு குகைக்கெதிரில் போய் அக் குளிகையைக் காண்பிக்க, அக்குகை வெடித்து, தான் நெடுநாளாகப் பார்க்க வேண்டுமென்று விரும்பியிருந்த பரிஸ்தான், அல்லது பரிகள் உலகம் என்பதைக் காண்கிறான். பரிஸ்தான் என்பதற்குப் பரிகள் அல்லது அப்சரக் கன்னிகைகள் வசிக்கும் உலகம் என்று பொருள் கூறலாம். இக்காட்சியை அமைத்துத் தமிழில் ஒரு நாடகம் நாம் எழுதவேண்டும் என்று மனத்திற்பட்டது. உடனே, மந்திரத்தைச் சரியாக உச்சரிக்கக் குகை வெடித்து ராஜ குமாரனை அப்சரக் கன்னிகைகள் அப்சரலோகத்துக் அழைத்துக் கொண்டு போவது போலவும், அக்குகை மூடிக் கொள்ள மந்திரத்தைச் சரியாக உச்சரிக்காது தவறாகச் சொல்ல, அவன் தோழனை, குகை வெடித்து வந்த வேதாளங்கள் தூக்கிக்கொண்டு போவதுபோலவும் எழுதினால் மிகவும் வேடிக்கையாயிருக்குமென்று என் புத்தியிற்பட்டது. உடனே நான் எழுதப் போகிற நாடகத்திற்கு “வேதாள உலகம்” என்று பெயர் வைத்தால் நலமாயிருக்கு மெனத் தீர்மானித்தேன். இவ்வாறு நாடகத்தின் பெயரை முன்பு தீர்மானித்து, பிறகு அதற்கேற்றபடி நாடகக் கதையைக் கோர்த்துக் கொண்டேன். அரண்மனையில் ரகசியமாய் வைத்திருந்த ஒரு சித்திரப் படத்தைக் கண்டு கதாநாயகியின்மீது ராஜகுமாரன் காதல் கொண்டதற்கு அஸ்திவாரமாயிருந்தது, நான் சிறு வயதில் படித்த தக்காணத்துப் பூர்வ கதைகளுள் ஒன்றாம். தத்தனுடைய பாத்திரம் என் மனத்தில் உதித்ததற்கு, ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவி எழுதிய பால்ஸ்டாப் (Falstaff) பாத்திரமென்று ஒருவாறு கூறலாம். ஆயினும் உருவத்திலும், அகட விடகத்திலும் அந்த பால்ஸ்டாப்பை தத்தர் ஒத்திருந்தபோதிலும், இந் நாடகத்தின் முதற்காட்சி, ஷேக்ஸ்பியர் நான்காம் ஹென்ரி (Henry IV) என்னும் நாடகத்தில் எழுதியுள்ள ஒரு காட்சியை ஒத்திருந்தபோதிலும், பிறகு வரும் காட்சிகளில் அவரெழுதியுள்ள நாடகத்திற்கும் நான் எழுதியுள்ள நாடகத்திற்கும் சிறிதும் சம்பந்தமில்லை . மேலுக்கு விகடனாகத் தோன்றிய போதிலும், இத் தத்தனிடம், அவனது நண்பனாகிய ராஜகுமாரன்மேல் அவன் பொருட்டுத் தன் உயிரையும் கொடுக்கத் துணியும் படியான பேரன்புண்டு என்பதை, இதை வாசிப்பவர்கள் கவனிப்பார்களாக. நான் எனது சிற்றறிவைக் கொண்டு நிர்மித்த நாடகப் பாத்திரங்களுக்குள் இந்தத் தத்தன் பாத்திரம் ஒரு முக்கியமானது என்று நினைக்கிறேன். இந்நாடகமானது நடிக்கப்படும்பொழுது பார்த்த அல்லது இதை வாசித்துப் பார்த்த, அநேகம் ஆக்டர்கள், தாங்களும் இந்தத் தத்தன் வேடம் பூண வேண்டுமென்று விரும்பி எனக்குத் தெரிவித்திருக்கிறார்கள். இதுதான், நான் எழுதியுள்ள எல்லா நாடகங்களைப் பார்க்கிலும் மற்ற அநேக சபையார்களால் இந்நாடகம் அதிகமாக ஆடப்பட்டதற்குக் காரணம் என்று தோன்றுகிறது. ஹாஸ்ய பாகத்தில் நான் எழுதியவற்றுள் இது மிகச் சிறந்தது என்று எனது நண்பர்கள் பலர் கூறக் கேட்டிருக்கிறேன்.

இந்தத் தத்தன் பாகம், அவருக்கென்றே எழுதப்பட்டபடியால் எனது நண்பர் எஸ். ராஜகணபதி முதலியார் இதில் எளிதில் பெரும் பெயர் பெற்றார். இவருக்குப் பிறகு இப்பாத்திரத்தில் பெயர் பெற்றவர் எனது நண்பர் எம். துரைசாமி ஐயங்காரே. இந்தப் பாத்திரத்தை எங்கள், சபையில் ஆக்ட் செய்த மற்ற ஆக்டர்கள், தாமோதர முதலியார், கே. வரதாசாரியார் முதலியோர். இன்னும் நான் மேலே குறித்தபடி இதர சபைகளில் அநேகர் இதை நடித்ததைப் பார்த்திருக்கிறேன். இதை நடிக்க விரும்பும் என் இளைய நண்பர்களுக்கு ஒன்று கூற விரும்புகிறேன். இந்தப் பாகத்தை நடிக்க விரும்புவோர் எஸ். ராஜகணபதி முதலியாரைப் போல் பெரும் உடலை உடையவராயிருத்தல் வேண்டும்; அல்லது அப்படி இயற்கையில் இல்லாவிட்டால் செயற்கையினாலாவது பெருத்த உடலை உடையவராகத் தோன்றவேண்டும். எங்கள் சபையில் எம். துரைசாமி ஐயங்கார் இதை நடித்தபொழுது, அவர் தேகம் அதிக ஸ்தூலமாயில்லாதபடியால், அவருக்குச் சற்று ஸ்தூல தேகமுடையவராய் நாடக மேடையில் தோன்றும் படியாக, பஞ்சு வைத்து மெத்தையைப் போன்ற உள்ளே தரிக்கும்படியான சட்டை, நிஜார் எல்லாம் தைத்து அதன்மீது தொப்பைக்காக ஓர் ஏற்பாடு செய்து, அதன்மீது அவர் அணிய வேண்டிய உடையை அணியச் செய்தோம். மெல்லிய தேகமுடையவர்கள் இவ்வாறு செய்தாலொழிய இப்பாத்திரத்தை ஆடுவது ரசாபாசமாம். இதற்கோர் உதாரணத்தை என் கண்ணாரக் கண்டேன். ஒரு சபையார் (அவர்களின் பெயரை இங்கெழுத எனக்கிஷ்டமில்லை) இந்நாடகத்தை நடித்த பொழுது, என்னை வரும்படியாகக் கேட்டிருந்தனர்; அதன்படி நான் போய்ப் பார்க்க, முதல் காட்சியானவுடன்; என் பக்கத்திலிருந்த நண்பரை, இந்தக் காட்சியில் ஆடியவர்களில் ‘யார் தத்தன், யார் ராஜசிம்ஹன்?’ என்று வேடிக்கையாக் கேட்டேன்; ஏனெனில் தத்தன் இருக்கவேண்டியதைபோல் ராஜசிம்ஹன் வேஷம் பூண்டவர், மிகவும் பெருத்த சரீரமும் வயிரும் உடையவராயிருந்தார்; தத்தன் வேடம் பூண்டவர், உடலில் எலும்புகளெல்லாம் வெளியில் தோன்றக்கூடிய ஸ்திதியிலிருந்தார்! இந்நாடகத்தை ஆட விரும்பும் ஆக்டர்கள் இதை முக்கியமாகக் கவனிப்பார்களாக. அன்றியும் ஸ்தூல தேகமில்லாதவர் இந்தத் தத்தன் வேடம் பூணுவதென்றால், வயிற்றிற்கு மாத்திரம் தொப்பைப்யை போல், துணியைக் கட்டிக் கொண்டு வருவதைக் கண்டிருக்கிறேன். இதைப் பார்க்கும் பொழுது சூனாவயறு என்னும் வியாதியையுடைவன் போல் தோன்றுகிறது; ஆகவே மெல்லிய தேகமுடையவர்கள் இப்பாத்திரத்தை ஆட விரும்பினால், உடல் முழுவதும் பெருத்திருப்பது போல் காட்டும்படியான (எம். துரைசாமி ஐயங்கார் செய்தபடி) ஏற்பாடு செய்ய வேண்டும்.

இந்நாடகமானது இதுவரையில் என் அனுமதியின்மீது, என்னிடமுள்ள கணக்கின்படி 257 முறை ஆடப்பட்டிருக்கிறது.இந்த நாடகத்தை ஆடுவது அவ்வளவு கஷ்டமில்லை. ஆகவே புதிதாய் நியமிக்கப்பட்ட சபைகள் இதை எளிதில் ஆடலாம். இதை நடிக்கக் கற்பதும் கஷ்டமல்ல. எழுதியுள்ள வார்த்தைகளைச் சரியாகச் சொன்னாலே போதுமானது. நகைப்பை உண்டாக்கத்தக்க பல சந்தர்ப்பங்கள் இதில் இருப்பதால், எளிதில் சபையோரைச் சந்தோஷப்படச் செய்யக்கூடும். இந்நாடகத்தில் சில இடங்களில், ஜனங்கள் கைகொட்டிச் சிரிக்கும்பொழுது எனது நண்பர் தாமோதர முதலியார், ‘இந்தக் கரகோஷம் உங்களுடையது என்று நினைத்து விடாதீர்கள். இது வேறொருவருக்குச் சார்ந்தது’ என்று வேடிக்கையாகச் சொல்லுவார்.

இந்நாடகத்தில், மூன்றாம் அங்கத்தில் மூன்றாம் காட்சியை நடிக்கும் பொழுது அநேகம் சபையோர்கள் ஒரு தப்பிதம் செய்கிறார்கள். அன்றியும் அநேகம் பேர்கள் இதை எப்படி நடிப்பது என்று கேட்டிருக்கிறார்கள். ஆகவே இதைப்பற்றி இங்குத் தெளிவாய் எழுதுகிறேன். இக்காட்சியில், இரண்டு குகைகள் இருக்கின்றன. வலது புறம் குகையில் ராஜ குமாரன் அடைப்பட்டிருக்கிறான்; இடது புறம் குகையில் தத்தன் அடைக்கப்பட்டிருக்கிறான். மோகன வல்லியை மோசம் செய்யும் பொருட்டு, ராஜீவாட்சி, குகைக்குத் தன் முதுகைக் காட்டி நின்று, வலதுபுறம் குகையில் ராஜகுமாரனிருப்பதாகவும், இடது புறம் குகையில் தத்தனிருப்பதாகவும் சொல்லுகிறாள். இவளுக்கு எதிராக நிற்கும் மோகனவல்லிக்கு வலது புறம், ராஜகுமாரிக்கு இடதுபுறமாகும். அவளது இடது புறம், இவளுக்கு வலது புறமாகும். ஆகவே இக்காட்சியில் இவர்கள் இருவரும் பேசும்பொழுது, ராஜீவாட்சி குகைக்குத் தன் முதுகைக் காட்டி நிற்க வேண்டும்; மோகனவல்லி, சபையோருக்குச் சற்று முதுகைக் காட்டி நிற்க வேண்டும். இப்படிச் செய்யாவிட்டால் சபையோருக்கு இந்தச் சூட்சமம் அர்த்தமாகாது. இவ் வருஷம் எங்கள் சபைக்கு ஒரு புஸ்தகசாலை (Library) ஏற்படுத்தினோம்; நான். அதுவரையில் சேகரித்து வைத்த தமிழ் நாடகப் புஸ்தகங்களையெல்லாம் கொடுத்து, மற்ற அங்கத்தினர்களிடமிருந்தும், இலவசமாக, அநேக நாடக புஸ்தகங்களைச் சேர்த்து, ஒரு சிறு புஸ்தகசாலையாக்கி, இவ் வருஷம் தசராக் கொண்டாட்டத்தின் கடைசியில் விஜயதசமியன்று, இதை வி. கிருஷ்ணசாமி ஐயரைக் கொண்டு திறந்து வைத்தோம். அப்பொழுது 180 புஸ்தகங்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. தற்காலம் 1670 புஸ்தகங்கள் அடங்கியதாயிருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்னும் நான்கு திராவிட பாஷைகளிலுமுள்ள நாடகங்களை யெல்லாம் இதில் சேர்த்து வைக்கவேண்டுமென்பது எங்கள் கருத்து. இதை வாசிக்கும் எனது நண்பர்களிடம் அப்படிப்பட்ட புஸ்தகங்களிருக்கு மாயின், அவற்றை அவர்கள் இப் புஸ்தக சபைக்கு உதவுவார்களானால், எங்கள் சபை அவர்களுக்கு நன்றி பாராட்டும்.

அன்றியும் இவ் வருஷம் எங்கள் சபையின் அங்கத்தினர் 500 பெயர் ஆனார்கள். 500ஆவது அங்கத்தினர் ஹைகோர்ட்டில் அட்வகேட் ஜெனரலாயிருந்த, எஸ். ஸ்ரீனிவாச ஐயங்கார் அவர்கள். அவர் எங்கள் சபையின் வழக்கப்படி, இவ் வருஷம் நவம்பர் மாசம் 15ஆம் தேதி ஒரு பெரும் விருந்தளித்தார். அதில் சபையின் சரித்திரத்தைச் சார்ந்த துணுக்குகளை (Tit-bits) யெல்லாம் சேர்த்து ஒரு காட்சியாகக் காட்டினேன். சபை ஆரம்பித்து, 17 வருஷங்கள் பொறுத்துத்தான் 500 அங்கத்தினர் களானோம்.

மேற்கூறிய இரண்டு நாடகங்களன்றி, நான் இவ் வருஷம் தசராவின் முதல் நாள் ஆட வேண்டியதற்காக, “காமோத்யானம்” (The Garden of Love) என்கிற ஒரு சிறு நாடிகையை எழுதினேன். அதை இன்னும் நான் அச்சிடவில்லை . இவ் வருஷம் அதையும், நான் பிறகு எழுதியுள்ள இன்னும் சில சிறு காட்சிகளையும் சேர்த்து, “விடுதிப் புஷ்பங்கள்” என்று பெயர் வைத்து அச்சிடலா மென்றிருக்கிறேன். அன்றியும் ‘சபாபதி முதலியார், ஒரு வருடம் பொறுத்து’ என்று ஒரு காட்சி தசராவுக்காக எழுதினேன். இதையும் சென்ற வருஷம் நடத்திய ‘சபாபதி காட்சியையும் சேர்த்து “சபாபதி” முதல் பாகம் என்று அச்சிட்டிருக்கிறேன்.